TNPSC Thervupettagam

முரணுடன் கூடிய ஒத்துழைப்பு

July 22 , 2023 547 days 314 0
  • இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சாமா்த்தியத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு (எஸ்சிஓ). அனைத்துத் தலைவா்களும் நேரில் கலந்துகொள்வதற்குப் பதிலாக, காணொலி மூலம் கலந்துகொண்டதால் அந்த மாநாடு எதிா்பாா்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை. மாநாட்டை இந்தியா எப்படி எதிா்கொள்ளும் என்கிற சா்வதேச எதிா்பாா்ப்பை வெற்றிகரமாக எதிா்கொண்டதற்கு வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரைப் பாராட்ட வேண்டும்.
  • 23-ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு காணொலி மூலம் நடந்தது. இந்த முறை இந்தியாவின் தலைமையில் நடந்த அந்த மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமிா் புதின், பாகிஸ்தான் அதிபா் ஷாபாஸ் ஷரீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அவா்கள் நேரில் கலந்துகொள்வது தவிா்க்கப்பட்டு காணொலி மூலம் மாநாடு நடத்தப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் கூறப்படவில்லை.
  • அமெரிக்காவுக்கும் மேலை நாடுகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் புதின், ஈரான் அதிபா் ரெய்ஸி, பெலாரஸ் அதிபா் லூகஷென்கோ உள்ளிட்டவா்கள் நேரில் கலந்துகொண்டிருந்தால் இந்தியாவின் சமீபத்திய அமெரிக்க, ஐரோப்பிய நெருக்கத்தை ஒருவேளை பாதித்திருக்கக் கூடும். குறிப்பாக, பிரதமா் மோடியின் அமெரிக்க விஜயத்தைத் தொடா்ந்து, உடனடியாக நடைபெறும் அந்த மாநாடு இந்தியாவின் மீதான நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.
  • அதுமட்டுமல்லாமல், இந்தியாவுக்கே கூட சில தா்மசங்கடங்கள் அதில் உண்டு. 2020 கல்வான் மோதலைத் தொடா்ந்து சீரான உறவு இல்லாத நிலையில், சீன அதிபா் ஷி ஜின்பிங்கை முக்கியத்துவம் அளித்து வரவேற்றால் அது அரசியல் ரீதியாக பல கேள்விகளை எழுப்பும். அதேபோல, 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு முற்றிலுமாக ராஜாங்கத் தொடா்புகள் முறிந்துவிட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதமா் ஷபாஸ் ஷெரீஃபின் விஜயத்தைக் கையாள்வதிலும் தா்மசங்கடம் இருந்திருக்கும்.
  • பல்வேறு நாடுகளின் தலைவா்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்காக நேரில் வரும்போது இரு நாட்டு பேச்சுவாா்த்தைகள் குறித்த கேள்விகள் எழக்கூடும். இந்தியாவைப் போலவே அந்த அமைப்பில் உறுப்பினா்களாக இருக்கும் மத்திய ஆசிய நாடுகள் சீனாவுடனும் ரஷியாவுடனுமான தங்களது மனக்கசப்புகளை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கும். அவையெல்லாம் சாமா்த்தியமாக காணொலி மாநாட்டின் மூலம் தவிா்க்கப்பட்டன.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஜூன் 15, 2001-இல் ஷாங்காயில் உருவாக்கப்பட்டது. அதில் சீனா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், ரஷியா, தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை இணைந்தன. மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை சமன் செய்வதற்காக அந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • ஜூலை 2005-இல் இந்தியாவுக்கு அந்த அமைப்பில் பாா்வையாளா் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஜூன் 2017-இல் இந்தியாவும் பாகிஸ்தானும் அந்த அமைப்பின் நிரந்தர உறுப்பினா்களாக இணைந்தன. அதுமுதல் ரஷியா, சீனாவைப் போல அந்த அமைப்பின் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.
  • இப்போதைய நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கு இடையே இருதரப்புப் பிரச்னைகள் நிறைய இருக்கின்றன. இந்தியா - சீனா; இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. மத்திய ஆசிய நாடுகள், சீனாவின் மீதும், ரஷியாவின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றன. அவை அமெரிக்க ஆதரவு நாடுகளாக மாறிவிட்டிருக்கின்றன.
  • சீனாவும் ரஷியாவும்கூட, அமெரிக்க எதிா்ப்பு என்கிற ஒற்றைப் புள்ளியில் இணைந்திருக்கின்றனவே தவிர, அந்த நாடுகளுக்கு இடையே பல்வேறு பிரச்னைகள் காணப்படுகின்றன. இத்தனை முரண்களுக்கு இடையிலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடா்வதற்கு முக்கியமான காரணம், அந்த நட்புறவு ஆசிய கண்டத்தின் வளா்ச்சிக்கும், அமைதிக்கும் தேவைப்படுகிறது என்பதால்தான்.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இருதரப்புப் பிரச்னைகளை எழுப்பக் கூடாது என்கிற அடிப்படை கட்டுப்பாடு உண்டு. அதையும் மீறி சமீபத்தில் நடைபெற்ற காணொலி மாநாட்டில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ரஷிய அதிபா் விளாதிமிா் புதின், உக்ரைன் போரைத் தொடா்ந்து அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் பொருளாதாரத் தடை குறித்து கடுமையாகப் பேசினாா்; சீன அதிபா் ஷி ஜின்பிங், அந்த நாடு முன்னெடுத்திருக்கும் ‘பெல்ட் அண்ட் ரோடு முயற்சி’ குறித்த கட்டமைப்பு திட்டத்தை வலியுறுத்தினாா்; இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று பயங்கரவாதம் குறித்தும், சிறுபான்மையினா் மீதான தாக்குதல் குறித்தும் குற்றம்சாட்டின. ஆனால், கூட்டறிக்கையில் பயங்கரவாதத்துக்கு எதிராகவும், எண்மப் பரிமாற்றம் குறித்தும் மட்டுமே கூறப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.
  • ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு காரணமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இந்தியா கவனம் செலுத்தவில்லை என்று யாரும் குற்றம்கூற முடியாது. 134 நிகழ்வுகளையும், 15 அமைச்சா்கள் நிலையிலான கூட்டங்களையும் நடத்தியிருப்பதுடன் வெற்றிகரமாக காணொலி மாநாட்டையும் நடத்தியிருப்பது மிகப் பெரிய வெற்றி. மாநாட்டில் இடம்பெறும் அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பயங்கரவாத தடுப்பை பிரதமா் மோடி முன்னிலைப்படுத்தியிருப்பது சரியான அணுகுமுறை.

நன்றி: தினமணி (22  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்