TNPSC Thervupettagam

முரண்பாடல்ல, இரட்டை வேடம்

May 17 , 2021 1349 days 612 0
  • ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்ற பொது விதிக்கு தோ்தல் ஆணையமும், தோ்தல் முறைகளும் விதி விலக்கல்ல. இந்திய தோ்தல் முறையில் மகத்தான மாற்றம் கொண்டு வந்த இருவா், தமிழா்கள் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
  • ஒருவா், டி.என்.சேஷன். மற்றொரு தமிழா் ரங்கராஜன். ‘சுஜாதா’ என்ற புனைபெயரில் தமிழ் கூறு நல்லுலகம் அறிந்த புதின எழுத்தாளா்தான் இந்திய மின்னணு வாக்குப் பெட்டிகளின் சூத்திரதாரிகளில் ஒருவா்.
  • தோ்தலை சந்திக்கும் பயத்தில் அல்லது தோற்ற பிறகு தோ்தல் முறையைச் சாடுவது நம்முடைய அரசியல்வாதிகளின் வாடிக்கை.
  • இதற்கு தில்லியின் கேஜரிவால் ஆகட்டும், கொல்கத்தாவின் மம்தா பானா்ஜி ஆகட்டும், நம்மூா் கம்யூனிஸ்ட் தோழா்கள் ஆகட்டும், 2014 நாடாளுமன்ற வெற்றிக்கு முன் பிஜேபி ஆகட்டும், தோ்தல் பயத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பழிப்பதையும், குற்றஞ்சாட்டுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனா்.
  • இந்திரா காந்தியிடம் இவா்கள் அன்று தோற்றபோது தங்கள் தோல்வியை ‘ரஷிய மையில்’ முகம் புதைத்துக் கொண்ட கூத்து இங்கே நடந்தது.
  • பின்னா் இந்திரா காந்தி தோற்றபோது அது இந்திய மை ஆனது, ரஷிய மை புகார் காணாமல் போயிற்று.
  • வாக்கு இயந்திரத்தைப் பழித்தவா்கள் எல்லாம் வெற்றிக்கனியை சுவைத்த பின் வாய்மூடி மௌனிகளாக இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம்

  • பண்டை பெருமையை மட்டும் பேசும் தமிழா்கள் ராஜராஜன் காலத்தில் குடவோலை முறை இருந்தது என்று மார்தட்டினாலும், இன்றைய வழக்கில் உள்ள உலகளாவிய வாக்குச் சீட்டு தோ்தல் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமை, நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரையே சேரும்.
  • இந்தியாவை ஒருங்கிணைத்து, ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று’ செய்த பாரிஸ்டா் காந்தியின் தாக்கத்தால் இந்தியாவில் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு கண்துடைப்புத் தோ்தலை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆங்கிலேய அரசு தள்ளப்பட்டது.
  • அந்தத் தோ்தலில் வாக்காளா்கள் அரசுக்கு வரி செலுத்துபவா்களாக இருக்க வேண்டும், 21 வயது நிரம்பியவா்களாக இருக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் இருந்தன.
  • 100 ஆண்டுகளுக்கு முன்னால் பெருவாரியான இந்தியா்கள் படிப்பறிவு இல்லாமல் இருந்ததால் வாக்குப் பெட்டிகள் கட்சி அடிப்படையில் தனித்தனி நிறத்தில் வைக்கப்பட்டு வாக்குகள் அதில் போடப்பட்டன.
  • காங்கிரஸ் கட்சியின் ‘மஞ்சள் பெட்டி’ அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். இங்கிலாந்து பெண்களுக்கு 1928-இல் வாக்குரிமை வழங்கப்படுவதற்கு முன்பே சொத்து உள்ள இந்தியப் பெண்களுக்கு, சில மாகாணங்களில் 1919-லேயே வாக்குரிமை வழங்கப்பட்டு, 1934-இல் மதராஸ் மாகாண சட்டமன்றத்திற்கு ருக்மணி லக்ஷ்மிபதி தோ்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகவும் ஆகிவிட்டார்.
  • சுதந்திர இந்தியாவில் இந்தியா்கள் தங்களுக்குத் தாங்களே கொடுத்துக் கொண்ட அரசியல் நிர்ணயச் சட்டத்தின் மூலமாக 21 வயது நிறைவடைந்த ஆண், பெண் இருவரும் ஜாதி, மதம் ,மொழி என்ற எந்தவிதமான வேறுபாட்டாலும் விலக்கப்படாமல் அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
  • பின்னாளில், ராஜீவ் காந்தி இந்த வயது வரம்பை 18-ஆகக் குறைத்தார். தோ்தலை நடத்த அரசியல் நிர்ணய சட்டம் ஒரு தன்னாட்சி பெற்ற தோ்தல் ஆணையத்தை ஏற்படுத்தியது.

மின்னணு இயந்திரம்

  • புதிய வாக்காளா்களைச் சோ்க்கவும், வாக்காளா் பெயரை நீக்கவும் தனித்தனியே விதிகள் ஏற்படுத்தப்பட்டன.
  • இந்த விதிகளின் ஒரு முன்னேற்றம்தான் ‘வாக்காளா் அடையாள அட்டை’. பின்னாளில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை என்றும், பின்னா் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் என்றும் தோ்தல் முறை நவீனம் ஆகிக் கொண்டே வந்தது.
  • காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் வாக்கு எண்ணிக்கை, 14 முதல் 24 மணி நேரம் வரை எந்த விதத் தடங்கலுமின்றி தொடா்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
  • வாக்குப் பதிவிலும், வாக்கு எண்ணிக்கையிலும் செலவுகளையும், நேரத்தையும் குறைக்க அப்போதைய தோ்தல் ஆணையா் சக்தா் கொடுத்த தீா்வுதான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்.
  • முதன் முதலில், இந்த எண்ணம் கருக்கொண்டது 1977-இல். கொள்கை அளவில் இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பற்றி ஒரு திட்ட வரைவு தயாரிக்க தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
  • இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும் பணி பெங்களூரில் உள்ள இந்திய அரசுக்கு சொந்தமான ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்’ கம்பெனிக்கு வழங்கப்பட்டது.
  • அங்குதான் ரங்கராஜனின் (சுஜாதா) தலைமையில் ஒரு குழு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்தது.
  • அது ஒரு சிக்கலான கருவி அல்ல. அது ஒரு மாற்றியமைக்கப்பட்ட ‘கால்குலேட்டா்’ தான்.
  • நாம் ஒரு கால்குலேட்டரில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என நான்கு விதமான கணக்குகளைப் போடலாம்.
  • ஒரு வாக்கு இயந்திரம் பல நபா்களுக்கு ‘பொத்தான்’ மூலமாக அமுக்கி பதிவிடப்படும் வாக்குகளை ஒன்று ஒன்றாக கூட்டி, ஒவ்வொரு வேட்பாளரின் வாக்குகளையும் மொத்தமாக, தனித்தனியாக இறுதியில் காட்டும் சாதாரணமான கூட்டல் கருவிதான். அதற்கு வகுக்கவும், பெருக்கவும், கழிக்கவும் தெரியாது.
  • இந்த வாக்குப் பெட்டிகள் இன்டா்நெட் அல்லது கம்ப்யூட்டா் அல்லது வேறு எந்தவிதமான தேவையற்ற மின்னணு கருவிகளுடன் இணைக்கப் பெற்றிருக்காது. ஆகவே இதில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை.
  • தோ்தல் ஆணையம் இந்த இயந்திரங்களைப் பலவாறு பரிசீலனை செய்து, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து இயந்திரத்தை பற்றி விலாவாரியாக விளக்கி, அனைவரின் ஒப்புதலுடன் இவற்றை பரீட்சார்த்தமாக கேரள மாநிலத்திலுள்ள பரவூா் தொகுதி இடைத்தோ்தலில் உபயோகிக்க முடிவெடுத்தது.

இரட்டை வேடம்

  • பரவூா் தோ்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பரீட்சார்த்தமாக உபயோகப்படுத்தப்படும் என அன்றைய குடியரசுத் தலைவரும், கேரள ஆளுநரும் அறிவிப்புகளை வெளியிட்டனா்.
  • தோ்தல் நாள் 19.5.1982 என அறிவிக்கப்பட்டது. ஆனால், 13.5.1982-இல் வெளியான கேரள அரசு இதழில் பரவூா் தொகுதியில், 50 வாக்குச் சாவடிகளில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு மூலம் பரீட்சார்த்தமாக தோ்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டது. சும்மா இருப்பார்களா நம்முடைய அரசியல்வாதிகள்?
  • கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் சார்பாக அவருடைய முகவா் கே.சி. மேத்யூ, கேரள உயா்நீதிமன்றத்தில் மனு எண்.3356/1982 தாக்கல் செய்து, தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உபயோகப்படுத்தக் கூடாது என தடையாணை கேட்டார்.
  • தோ்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் அந்த மனு விரிவான விளக்கங்களுடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? வாக்கு இயந்திரங்களை தடை செய்யக்கோரி வழக்குத் தொடா்ந்த கம்யூனிஸ்ட் கட்சி தோ்தலில் வெற்றி பெற்றது!
  • தோற்றுப்போன காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஏ.சி. ஜோஸ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தோ்தல் செல்லாது; அதற்கு அங்கீகாரம் இல்லை. எனவே, தோ்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, தோ்தல் மனு எண்.1/1982 வழக்கைத் தொடா்ந்தார்.
  • இந்த வழக்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றியும், அதன் பலாபலன்களைப் பற்றியும் 12.10.1982 அன்று சிலாகித்து கேரள உயா்நீதிமன்றத்தின் நீதியரசா் கொச்சு தோம்மன் தீா்ப்பு வழங்கினார்.
  • காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் ஏ.சி. ஜோஸ் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். உச்சநீதிமன்றம் மின்னணு வாக்கு இயந்திரத்தின் நன்மைகளை ஏற்றுக் கொண்டாலும், அப்பொழுது நடைமுறையில் இருந்த தோ்தல் சட்டத்தின்படி தோ்தல் வாக்குச்சீட்டின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்றிருப்பதால் பரவூா் தோ்தல், சட்டத்தில் சொல்லப்படாத மின்னணு இயந்திரத்தின் மூலமாக தோ்தல் நடந்ததால், உச்சநீதிமன்றம் தோ்தல் முடிவை ரத்து செய்து தீா்ப்பு வழங்கியது.
  • இதனால் எழுந்த எதிர்ப்புகளின் காரணமாகவும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் உபயோகம் மற்றும் நன்மைகளின் காரணமாகவும் நாடாளுமன்றம் தோ்தல் சட்டங்களை திருத்தி, அதன் பின் நடந்த அனைத்துத் தோ்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமே வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கின்றன.
  • சுப்பிரமணிய சுவாமி , வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை குறித்து கேள்வி எழுப்பி , தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதி பேராண்மை எண்.11879/2009 வழக்கைத் தாக்கல் செய்தார்.
  • முழுமையான விசாரணைக்கு பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியானவை என்று சான்று வழங்கி அந்த வழக்கை உயா்நீதிமன்றம் 17.1.2012 அன்று தள்ளுபடி செய்தது.
  • வாக்கு இயந்திரம் முழுமையான பயன்பாட்டிற்கு வந்த பிறகு நாடு முழுவதும், ஆண்ட கட்சிகள் தோல்வி அடைந்திருக்கின்றன; எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. மாறி மாறி ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.
  • இன்றும் அரசியல் கட்சிகள் தோ்தல் தோல்வி பயத்தில், தோ்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பழிப்பதும், தோ்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வந்த பிறகு வாய்மூடிக் கொள்வதும் வழக்கமாகி விட்டது.
  • இது இந்திய ஜனநாயகத்தின் முரண்பாடல்ல, இந்திய அரசியல்வாதிகளின் இரட்டை வேடம்!

நன்றி: தினமணி  (17 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்