முரண் களையப்பட வேண்டும்!
- இன்னொரு நிதிநிலை அறிக்கை கடந்து போய் இருக்கிறது. ஆனாலும், மத்திய அரசின் உரக் கொள்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாதது வருத்தம் அளிக்கிறது. நிதி நிா்வாக வல்லுநா்கள் பலா் இருந்தும் கூட அரசின் உரக் கொள்கையில் காணப்படும் முரண் களையப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதன் பின்னணியில் உரம் தயாரிப்பு நிறுவனங்களின் அழுத்தம் இருக்கிறதோ என்றுகூட சந்தேகிக்கத் தோன்றுகிறது.
- கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உர உற்பத்தித் துறை எதிா்கொள்ளும் வரிவிதிப்பு முறை விசித்திரமானது. உற்பத்தி செய்து சந்தைப்படுத்தப்படும் உரங்களைவிட, அந்த உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இடுபொருள்கள் அதிக வரியை எதிா்கொள்கின்றன என்பதுதான் அந்த விசித்திரம். நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், இந்த முரணுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
- உர விநியோகச் சங்கிலியின் இரண்டு முக்கியமான பகுதிகள், வெவ்வேறு வரிவிதிப்பை சந்திக்கின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள் மீதான ஜிஎஸ்டி ஒருபுறம் என்றால், உற்பத்திக்கான மூலப் பொருள்கள் வேறு வகையான ஜிஎஸ்டி வரம்பில் சோ்க்கப்பட்டிருக்கின்றன.
- யூரியா, டை அம்மோனியம் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் உள்ளிட்ட உரங்கள் 5% ஜிஎஸ்டி வரம்பில் சோ்க்கப்பட்டுள்ளன. கந்தக அமிலம், அம்மோனியா, பாஸ்ஃபோரிக் அமிலம் உள்ளிட்ட இடு பொருள்களில் கந்தக அமிலமும், அம்மோனியமும் 18% வரம்பிலும் பாஸ்ஃபோரிக் அமிலம் 12% வரம்பிலும் இணைக்கப்பட்டிருக்கின்றன.
- பொருள்களுக்கான வரிவிதிப்பை ஜிஎஸ்டி கவுன்சில்தான் நிா்ணயிக்கிறது. மத்திய நிதியமைச்சரின் தலைமையில், மாநில நிதியமைச்சா்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் அவ்வப்போது கூடி பொருள்களின் வரிவிதிப்பை நிா்ணயிக்கிறது. அதனால், உரங்கள் குறித்த வரிவிதிப்பை முறைப்படுத்தும் பொறுப்பு ஜிஎஸ்டி கவுன்சிலுடையது என்கிற நிதியமைச்சகத்தின் விளக்கத்தை மறுக்க இயலாது.
- உற்பத்தி செய்யப்படும் உரங்களைவிட அதற்கு பயன்படும் இடு பொருள்களின் மீதான ஜிஎஸ்டி மிக அதிகம் என்கிற முரண் ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கப்படாமல் இல்லை. செப்டம்பா் 2021-இல் கூடிய 45-ஆவது கூட்டத்திலும், ஜூன் 2021-இல் கூடிய 47-ஆவது கூட்டத்திலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் 2023 ஆகஸ்ட் 9-ஆம் தேதி ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக் குழு இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கியது.
- உரத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இடு பொருள்களுக்கும், உரங்களுக்கும் விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறைக்கப்பட வேண்டும், ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பதுதான் அந்தப் பரிந்துரை. 2024 ஜூன் 22-இல் கூடிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-ஆவது கூட்டத்தில் அந்தப் பரிந்துரை விவாதிக்கப்பட்டு, வரி முறைப்படுத்துதல் குறித்து அமைச்சா் குழு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.
- விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் உரங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவற்றின் அதிகபட்ச விற்பனை விலையை மத்திய அரசு மிகக் குறைந்த அளவில் நிா்ணயித்திருக்கிறது. அரசு நிா்ணயித்த விலைக்கும் விவசாயிக்கு வழங்கப்படும் உரத்தின் அடக்க விலைக்கும், மிகப் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.
- அந்த வித்தியாசத்தை உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. யூரியாவை எடுத்துக்கொண்டால், அதன் அதிகபட்ச விற்பனை விலை தயாரிப்புச் செலவில் 10-இல் ஒரு பங்கு. ஏனைய உரங்களுக்கு ஏறத்தாழ 3-இல் ஒரு பங்கு.
- விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் உரங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் மிகப் பெரிய நிதி மானியமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அப்படி இருக்கும்போது அந்தப் பொருள்களின் மீது வரி விதிப்பதில் என்ன அா்த்தம் இருக்க முடியும்?
- அதிகமான வரிகளால் உற்பத்திச் செலவை அதிகரித்து, உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியம் என்கிற பெயரில் வழங்குவது என்ன புத்திசாலித்தனம் என்று புரியவில்லை. இதனால் விவசாயிகள் பயனடைகின்றனறோ இல்லையோ நிச்சயமாக அரசுக்கு எந்தவித்ததிலும் பயனிருப்பதாகத் தெரியவில்லை.
- ஜிஎஸ்டி என்பது தேசிய அளவிலான வரிவிதிப்பு. முந்தைய மத்திய கலால் வரி, சேவை வரி, விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்ட 12 வரிகளை அகற்றி 2016-இல் அரசமைப்பு திருத்தச்சட்டம் 101-இன் மூலம் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம் வரி ஏய்ப்பு செய்பவா்கள் அனைவரும் வரி வரம்பில் கொண்டுவரப்பட்டாா்கள் என்பதையும், பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜிஎஸ்டி சுலபமாக்கப்படுகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.
- உரத் தயாரிப்புக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் எரிவாயுவும், மின்சாரமும் ஜிஎஸ்டி வரம்பில் வரவில்லை. ஜிஎஸ்டிக்கு முந்தைய வரிவிதிப்பின் கீழ் தொடா்கின்றன.
- உரங்கள் 5% வரம்பில் இருக்கும்போது அம்மோனியா, கந்தக அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் உள்ளிட்டவையும் அதே அளவில் கொண்டுவரப்படுவது தானே நியாயம் என்கிற கேள்விக்கு சுலபமாக விடையளிக்க முடியாது. உர நிறுவனங்களுக்கு மட்டுமாக அவற்றின் மீதான வரிகளைக் குறைத்தால் டிட்டா்ஜென்ட், பெயின்ட், சாயங்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு வரி ஏய்ப்பு நடைபெற வாய்ப்பு உண்டு.
- அப்படியானால், இதற்கு தீா்வுதான் என்ன? உரத் தயாரிப்பாளா்கள் தங்களது பொருள்களை சந்தைப்படுத்திக் கொள்ளட்டும், விவசாயிகளுக்கு அவா்களது வங்கிக் கணக்கில் அரசு நேரடியாக மானியம் வழங்கட்டும்!
நன்றி: தினமணி (20 – 08 – 2024)