முறைகேட்டில் ஈடுபடும் பேராசிரியர்கள்: முழுமையான தீர்வு தேவை!
- தமிழ்நாட்டைச் சேர்ந்த சில பேராசிரியர்கள், ஒரே நேரத்தில் வெவ்வேறு பெயர்களில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் பணிபுரிவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உயர் கல்வியில் நிலவும் இந்த அவலம் விரைவில் களையப்பட வேண்டும்.
- அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் ஏறக்குறைய 480 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒரு கல்லூரியில் மட்டும் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவது தெரியவந்திருக்கிறது. ஒரே ஆசிரியர் 32 கல்லூரிகளில் பணியில் இருப்பதாகப் பதிவுசெய்துள்ள அவலம்கூட நடந்துள்ளது.
- 224 தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் இந்த மோசடி நடந்துள்ளதாகவும் அவற்றில் பணிபுரியும் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
- அண்மையில், அறப்போர் இயக்கம் என்கிற தன்னார்வ அமைப்பு எழுப்பிய புகாரை அடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் இப்பிரச்சினை குறித்து முதல் கட்ட ஆய்வுசெய்தது. அதில் பேராசிரியர்கள் இப்படி ஓர் ஊழலில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்பட்டது.
- பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பணிபுரிய முடியாது; அவர் கௌரவப் பேராசிரியராக இருப்பினும்கூட, இத்தனை எண்ணிக்கையிலான இடங்களில் பணிபுரிவது சாத்தியமே இல்லை. இந்நிலையில், குறைந்தபட்சத் தர்க்க வரம்புகூட இன்றி நடந்துள்ள இந்த மோசடி, கல்வி ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
- புகார் வந்ததை அடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் இந்தக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் என்.சுவாமிவேல், தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் டி.ஆபிரகாம், தேசியத் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி - ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் உஷா நடேசன் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- 295 கல்லூரிகள் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள உள்ளன. இம்மோசடியில் ஈடுபட்டதாக 900 பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாழ்நாள் தடை விதித்துள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிமுறைகளின்படி, பொறியியல் கல்லூரிகள் குறிப்பிட்ட தகுதிகளைப் பெற்றிருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்க இயலும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பணிபுரிவதும் அத்தகுதியில் ஒன்று.
- போதுமான ஆசிரியர்களை வேலையில் வைத்திருக்காத கல்லூரிகள், அவர்கள் பணிபுரிவதாக ஆவணங்களில் மட்டும் போலியாகப் பதிவுசெய்து, அரசு விதிமுறைகளைத் தந்திரமாக நிறைவேற்றிக் கொள்கின்றன.
- இன்னொரு கல்லூரியில் பணியிலிருந்தபடி, இக்கல்லூரியில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய முன்வரும் ஆசிரியர்கள் ஏதோ ஒரு வகையில் பலன் பெறுகின்றனர். குறைவான ஊதியம் பெற்று வரும் ஆசிரியர்கள், பல கல்லூரிகளில் ஆசிரியராகப் பதிவுசெய்துகொள்ள முன்வருவதால் கூடுதல் வருமானம் ஈட்ட முடிகிறது.
- அரசியல் தலைவர்கள் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில்கூடப் போலியான ஆசிரியர்கள் பணிபுரிவதாகத் தன்னார்வ இயக்கம் தெரிவித்துள்ளது. அதிக ஊதியத்துக்காக இத்தகைய மோசடிகளைச் செய்யத் துணியும் பேராசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு வழிநடத்துவார்கள்; கடன் வாங்கிப் படிக்க வரும் மாணவர்களுக்கு எப்படி நல்ல கல்வி கிடைக்கும் என்கிற தீவிரமான கேள்விகள் எழுகின்றன.
- ஆசிரியர்கள், குறைவான ஊதியம் பெறுவது இதற்கு ஒரு காரணமாக இருப்பின், அது சரிசெய்யப்பட வேண்டும். இத்தகைய மோசடிகள் உயர் கல்வியின் தரத்தையே அரித்துவிடக்கூடியவை என்பதால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 08 – 2024)