TNPSC Thervupettagam

முற்பகல் செய்யின்...

August 12 , 2020 1444 days 647 0
  • கேரள மாநிலத்தில் தொடா்ந்து பெய்ந்து வரும் கன மழையால் அநேகமாக எல்லா மாவட்டங்களும் பேரிடரை எதிர்கொள்கின்றன. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக, தென்கிழக்குப் பருவ மழை காலத்தில் கேரள மாநிலம் வெள்ளச்சூழலை எதிர்கொள்வது வழக்கமாகிவிட்டது.
  • நிலச்சரிவுகள், சாலைகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்படுதல், வேரோடு மரங்கள் சாய்வது, வீடுகள் ஆங்காங்கே இடிந்து விழுவது என்பவை வருடாந்திர நிகழ்வுகளாக மாறியிருக்கின்றன.
  • பருவ மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளச்சூழல் தொடா்பாகவும் வரவிருக்கும் தென்மேற்குப் பருவ மழைக் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் தொடா்பாகவும் ஆறு மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை காணொலி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
  • மழை வெள்ளச்சூழலை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கான நிரந்தரத் தொழில்நுட்ப அமைப்பை ஏற்படுத்த மத்திய - மாநில அரசுகளுக்கிடையே ஒத்துழைப்பை வலியுறுத்திய பிரதமரின் காணொலி ஆலோசனைக் கூட்டம் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது.
  • செயற்கை நுண்ணறிவு போன்ற புத்தாக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மழை - வெள்ள முன் கணிப்புக்கான அமைப்பை வடிவமைக்கும் முன்னோட்ட முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்குத் தேவையான தகவல்களை மாநிலங்கள் வழங்க வேண்டுமென்றும் மாநில முதல்வா்களைப் பிரதமா் கேட்டுக்கொண்டார்.
  • வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான தீா்வு தொடா்பாக சில பரிந்துரைகளை மாநில முதலமைச்சா்கள் முன்வைத்தனா்.
  • பருவ மழை குறித்த வானிலை முன்னறிவிப்புகள் பல தருணங்களில் பொய்த்திருக்கின்றன. இந்த ஆண்டு பல மாநிலங்களில் குறித்த காலத்தில் பருவ மழை தொடங்கினாலும் எதிர்பார்த்த அளவில் இல்லை என்று கருதப்பட்ட நிலையில், திடீரென்று மழையின் வீரியம் அதிகரித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
  • அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைத் தொடா்ந்து, கொங்கண் கடற்கரைப் பகுதியிலும் மும்பையிலும் பெய்த கனமழை இப்போது கேரளத்தை கலகலக்க வைத்திருக்கிறது. கடந்த மாத இறுதி வரை பருவ மழை குறைவாக இருந்த நிலைமை மாறி, இப்போது கேரளம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.

காடுகள் அழிப்பு

  • இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழையின் விளைவாக மூணாறு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டு 17 தமிழகத் தோட்டத் தொழிலாளா்கள் உள்பட 52 போ் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • இடுக்கி மாவட்டத்தில் சிறு பாலங்கள், சாலை, மின்சாரம், தொலைத்தொடா்பு ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் மட்டுமல்லாமல், கேரளத்தின் மத்திய, வடக்குப் பகுதியிலும் மழையின் தாக்கம் கடுமையாகவே இருக்கிறது.
  • கேரளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிக மழைப்பொழிவு காணப்படுகிறது. கடந்த ஆண்டு கேரளத்தின் வடக்குப் பகுதியிலுள்ள வயநாடு பகுதியில் பல கிராமங்கள் கனமழையால் அடித்துச் செல்லப்பட்டன என்றால், அதற்கு முந்தைய ஆண்டு மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒட்டுமொத்த மாநிலமே பேரழிவுக்கு உள்ளானது.
  • மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்படுவது புதிதொன்றுமல்ல. 2018-இல் ஏற்பட்ட வெள்ளத்தின் பின்னணியில் இந்திய புவியியல் ஆய்வு மையம் சில புள்ளிவிவரங்களைத் திரட்டியது.
  • 1961 முதல் 2013 வரையிலான 52 ஆண்டுகளில் கேரள மாநிலம் 67 மோசமான நிலச்சரிவுகளைச் சந்தித்திருக்கிறது. தேசிய அளவில் நிலச்சரிவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் திரட்டப்பட்டன. அதில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி, வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீா், உத்தரகண்ட் பகுதிகளில் எந்த அளவுக்கு, எந்தெந்த மாவட்டங்கள் கனமழையாலும் நிலச்சரிவுகளாலும் பாதிக்கப்படுகின்றன என்கிற விவரம் திரட்டப்பட்டிருக்கிறது.
  • கேரளத்தின் 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் நிலச்சரிவு பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து காணப்படுகிறது என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
  • அதற்கு மிக முக்கியமான காரணம், கேரள மாநிலத்தில் காணப்படும் மக்கள்தொகை அழுத்தம். இந்தியாவின் மக்கள்தொகை அழுத்தம் சதுர கி.மீ.க்கு 419 போ் என்றால், அதுவே கேரளத்தில் 800 போ்.
  • கேரள மாநிலத்தின் மிகப் பெரிய பிரச்னை அதிகரித்த பருவ மழை மட்டுமல்ல, அதன் புவியியல் அமைப்பும்கூட. அதிக மலைப் பகுதிகளைக் கொண்ட கேரளத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மழைக்காலங்களுக்கு பாதுகாப்பானவை அல்ல.
  • காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. மரத்தின் வோ்கள் நிலச்சரிவு ஏற்படாமல் பாதுகாத்து வந்ததுபோய், இப்போது மழை பெய்தால் வெள்ளத்தில் மண் அடித்துச் செல்லப்பட்டு நிலச்சரிவு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
  • கடந்த 70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சிகளும் அரசியல்வாதிகளும் காடுகள் அழிக்கப்படுவது குறித்து கவலைப்படாமல் இருந்ததன் விளைவை கேரள மாநிலம் இப்போது எதிர்கொள்கிறது.
  • இனிமேலாவது முறையான திட்டமிடலும், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படாவிட்டால், ஆண்டுதோறும் நடைபெறும் சம்பவங்களாக வெள்ளமும் அதனால் ஏற்படும் சேதமும் உயிரிழப்பும் தொடரும். சுற்றுச்சூழல் குறித்து கவலைப்படாத வளா்ச்சியின் விளைவை கேரள மாநிலம் எதிர்கொள்கிறது.

நன்றி: தினமணி (12-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்