TNPSC Thervupettagam

முற்றிலுமான உறவுத் துண்டிப்பு ராஜதந்திரம் அல்ல

September 9 , 2020 1592 days 684 0
  • பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அக்டோபர் 15-ஐ இறுதிக் கெடுவாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தேர்ந்தெடுத்திருப்பது எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
  • பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் சில பகுதிகளை விரிவாக்கி எழுதும் வகையில் ஒரு சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
  • அந்த ஒப்பந்தமானது பிரிட்டனின் பாகமாக இருக்கும் வடக்கு அயர்லாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஐரிஷ் குடியரசுக்கும் இடையில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட எல்லைப் பகுதி உருவாவதைத் தவிர்க்க முயன்றது.
  • அந்த ஒப்பந்தத்துடன் கையெழுத்திடப்பட்ட வடக்கு அயர்லாந்து நெறிமுறைகளின்படி இந்தப் பிராந்தியமானது ஐரிஷ் குடியரசுடனான வர்த்தகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது பிரிட்டனின் இறையாண்மைக்கு ஆபத்தானது என்று ஜான்ஸனின் அமைச்சரவையிலுள்ள பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
  • தற்போது, அங்கே கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் உள்நாட்டுச் சந்தை மற்றும் நிதி மசோதாவானது பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அல்லாமல் பிரிட்டனின் புதிய சட்டங்களை பிரிட்டன் நீதிமன்றங்கள் பின்பற்றுவதற்கு வழிவகுக்கும். வடக்கு அயர்லாந்து தலைவர்கள் இதை நம்பிக்கை மோசடிஎன்கிறார்கள்.
  • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முறைப்படி வெளியேறினாலும் மாற்றத்தின் காலகட்டம் முடியும் டிசம்பர் வரை அது ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும்.
  • இதிலுள்ள சவால் என்னவென்றால் பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டாக வேண்டும். இல்லையென்றால் அடுத்த ஜனவரியிலிருந்து உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தக விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்.
  • வர்த்தகத்தில் எல்லோருக்கும் சம வாய்ப்பு ஏற்படுவதை உறுதிசெய்யும் வகையில் தனது நெறிமுறைகளுக்கு நெருக்கமாக பிரிட்டன் பின்பற்ற வேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது; ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதன் ஒட்டுமொத்த அர்த்தமே பொதுவான விதிமுறைகளிலிருந்து விடுதலை பெறுவதுதான் என்று பிரிட்டன் அரசு வாதிடுகிறது.
  • வடக்கு அயர்லாந்தைப் பொறுத்தவரை, அந்தப் பிராந்தியத்துக்கு எந்தச் சிறப்பு அந்தஸ்தையும் கொடுப்பதைத் தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் எதிர்க்கிறார்கள்.
  • அயர்லாந்து மீதான தனது நிலைப்பாட்டை அரசு மேலும் தீவிரப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதையே புதிய சட்டம் உணர்த்துகிறது.
  • ஆங்கிலேய தேசிய வெறியால் உந்தப்பட்டிருக்கும் பிரிட்டன் அரசின் தலைமையானது தனது கடுமையான நிலைப்பாட்டால் ஏற்படக்கூடிய மோசமான அரசியல் பின்விளைவுகளைக் காணத் தவறுகிறது.
  • தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் ஐரோப்பாவுக்குள் பிரிட்டனை ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளியிருக்கிறார்கள்.
  • இந்நிலையில் ஒப்பந்தமற்ற வகையில் வெளியேறினால் பிரிட்டனுக்கு அது மிக மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். தவிர, அயர்லாந்து தீவின் அமைதியையும் பிரிட்டன் சீர்குலைக்கப் பார்க்கிறது.
  • ஒப்பந்தத்தைத் தவிர்க்கும் பணயத்தில் ஈடுபடுவது எந்த அளவுக்குச் சரியானது என்று போரிஸ் ஜான்ஸனும் அவரது அமைச்சரவை சகாக்களும் சிந்திக்க வேண்டியது அவசியம். இரண்டு தரப்புகளுமே வர்த்தகம், எதிர்கால உறவுகள் போன்றவற்றில் கருத்தொற்றுமை எட்டுவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர உறவை முற்றிலும் துண்டித்துக்கொள்வதில் அல்ல.

நன்றி:  தி இந்து (09-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்