TNPSC Thervupettagam

முற்றுப்புள்ளியல்ல காற்புள்ளி

October 13 , 2022 667 days 372 0
  • எந்தவித பரபரப்போ, ஆரவாரமோ இல்லாமல் கடந்த மாதம் இந்திய - சீன துருப்புகள் எல்லையின் சில பகுதிகளில் தத்தம் முகாம்களுக்குத் திரும்பியிருக்கின்றன. கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்க் மோதல் பகுதியில் இருதரப்பும் படைகளை விலக்கியிருப்பதை பலரும் வியப்புடன் பார்க்கிறார்கள்.
  • எல்லைப் பகுதிகளில் சமாதானம் நிலவும் வகையில், கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்க் கண்காணிப்பு மையம் 15 பகுதியில் படைகளை விலக்கியிருப்பது குறித்து இருதரப்பும் ஒருவரி செய்திக் குறிப்பு வழங்கியிருக்கின்றன. 16-ஆவது இருதரப்பு கமாண்டர் நிலை
  • அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 2021 ஆகஸ்ட் மாதம் 12-ஆவது சுற்று கமாண்டர் நிலை அதிகாரிகள் கூட்டத்திற்குப் பின், கண்காணிப்பு மையம் 17ஏ பகுதியில் துருப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. அதன் பிறகு இப்போதுதான் துருப்பு வாபஸ் நடந்திருக்கிறது.
  • 2020 மே மாதம் இந்திய - சீன துருப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் தொடங்கின. கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள கண்காணிப்பு மையம் 14-இல் இருந்து ஜூன் 2020-லும், பாங்காங் சோ ஏரியின் வடக்கு - தெற்குக் கரைகளில் இருந்து பிப்ரவரி 2021-லும், கோக்ரா கண்காணிப்பு மையத்திலிருந்து ஆகஸ்ட் 2021-லும் இருதரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
  • இப்போதும் முற்றிலுமாக எல்லையில் பதற்றம் தணிந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய சில முக்கிய பகுதிகளில் இருதரப்பும் சுமார் 50,000 முதல் 60,000 துருப்புகளை நிறுத்தி வைத்திருக்கின்றன. காக்ரா - ஹாட்ஸ்பிரிங்க் பகுதியில் நேருக்கு நேர் தயார் நிலையில் இருந்ததுபோய், தற்போதைய ஒப்பந்தத்தின்படி, துருப்புகள் தங்களது எல்லையையொட்டி முகாம்களுக்கு திரும்பியிருக்கின்றன. இன்னும்கூட டெஸ்பாங்கிலிலுள்ள "வை' சந்திப்பிலும், டெம்சாக்கிலுள்ள சார்டிங் நிலாங் நல்லாவிலும் இருதரப்பும் ஒருவரையொருவர் எதிர்கொள்ள தயார்நிலையில் துருப்புகளை நிறுத்தி வைத்திருக்கின்றன.
  • இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை முறையாக வகுக்கப்படவில்லை. 1962-இல் சீன படையெடுப்பிற்குப் பிறகான இருதரப்பு நிலைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் இப்போதைய எல்லை கட்டுப்பாட்டுக் கோடு.
  • 3,488 கி.மீ. நீளமுள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை பல பகுதிகளாகப் பிரிக்கலாம். கிழக்கு - மேற்கு லடாக்; உத்தரகண்ட - ஹிமாசல பிரதேசம் மாநிலங்களை ஒட்டிய மத்திய பகுதி; சிக்கிம் - அருணாச்சல பிரதேசப் பகுதிகளை ஒட்டிய கிழக்கு பகுதி; தற்போது மோதலில் இருக்கும் 832 கி.மீ. நீளமுள்ள கிழக்கு லடாக் பகுதி என்று எல்லை கட்டுப்பாட்டுக் கோடு ராணுவத்தினரால் பிரிக்கப்பட்டிருக்கிறது.
  • லடாக், ஜம்மு, காஷ்மீர், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களைக் கொண்ட இந்திய - சீன எல்லையில் முறையான ஒப்பந்தம் இல்லாததால் தொடர்ந்து ஆங்காங்கே பதற்றம் ஏற்படுவதும், தணிவதுமாக இந்திய - சீனப் போரைத் தொடர்ந்து கடந்த 60 ஆண்டுகளாக பதற்றச் சூழல் காணப்படுகிறது. கிழக்கு லடாக்கில் மட்டும் 65 கண்காணிப்பு மையங்கள் இருக்கின்றன. கரகோரம் கணவாயில் தொடங்கி, டெம்சாக் வரை அமைக்கப்பட்டிருக்கும் இந்த கண்காணிப்பு மையங்களில் எல்லாம் இந்தியத் துருப்புகள் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கின்றன.
  • முக்கியமான மோதல் பகுதிகள் என்று சிலவற்றை அடையாளம் காண முடியும். கல்வான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள 120 கி.மீ. பகுதியில் ஐந்து இடங்களில் அடிக்கடி பதற்றம் ஏற்படுகிறது. பாங்காங் ஏரியின் வடக்குப் பகுதியில் உள்ள சோக்ஷா லா; தெற்குப் பகுதியில் உள்ள ரெச்சின் லா, ரெஜாங் லா; சமர்லுங்பா, சார்டிங் நல்லா, கெங்கா லா, பாங்காங் சோ, சஜ்ஜும் சிகரம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க மோதல் பகுதிகள்.
  • 2013 முதல் டெஸ்பாங் பிரச்னைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. இந்தியாவின் விமான தளம் இருக்கும் தெளலத் ஓல்டியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள "வை' சந்திப்பை சீனத் துருப்புகள் கைப்பற்றியிருக்கின்றன. டெம்சாக் பகுதியில் 2015 முதல் சார்டிங் நிலும் நல்லா பகுதியில் மூன்று இடங்களில் சீனா முகாம் அமைத்து கைப்பற்றியிருக்கிறது. அவை குறித்து சீனா பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இல்லை.
  • தற்போது கிழக்கு லடாக்கில் கண்காணிப்பு மையம் 15-இல் இருந்து துருப்புகளை சீனா விலக்கிக் கொண்டிருப்பதால் ஒரேயடியாக நாம் மகிழ்ந்துவிடக் கூடாது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. ஏப்ரல் 2020-இல் சட்டவிரோதமாக இந்தியத் துருப்புகள் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டியதால் ஏற்பட்டிருக்கும் மோதலின் விளைவாகத்தான் பதற்றம் ஏற்பட்டது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டிருப்பதும், இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருப்பதும் சீன அரசின் நிலைப்பாடுதான் என்று கொள்ள வேண்டும்.
  • கிழக்கு லடாக்கில் அதிகாரபூர்வமாக துருப்புகள் விலக்கப்பட்டுவிட்டாலும், இதற்கு முன்பு இந்திய வீரர்கள் கண்காணிப்பு ரோந்து நடத்திய இடங்களில் முன்புபோல இயங்க சீன ராணுவம் அனுமதிப்பதில்லை. துருப்புகள் முகாம்களுக்குத் திரும்பியிருக்கின்றன என்றாலும், எல்லையில் இருதரப்புப் படைகளின் மோதல் மனநிலையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

நன்றி: தினமணி (1310– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்