முழுமையானதா புதிய இணையப் பாதுகாப்புக் கொள்கை?
- ‘இணையப் பாதுகாப்புக் கொள்கை 2.0’ என்ற பெயரில் முந்தைய இணையப் பாதுகாப்புக் கொள்கையைப் புதுப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு. காலத்துக்கேற்ப மேம்படுத்த வேண்டியவற்றுள் தொழில்நுட்பமும் ஒன்று. அந்த வகையில், இந்தப் புதிய கொள்கையில் பல வழிகாட்டல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் சாதக பாதகங்களை அலசுவது அவசியம்.
- அடிப்படையில், இந்தக் கொள்கையானது தமிழக அரசின் அனைத்துத் துறையினரின் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டில் கடைப்பிடிக்கப்படும். இதன் மூலம் மக்கள் - அரசின் எண்ணிமத் தரவுகள் (Digital Records) பாதுகாக்கப்படும். இணையத் தாக்குதல்களைத் தடுக்கவும் ஒடுக்கவும் இந்தக் கொள்கையில் விரிவான வழிகாட்டல்கள் உள்ளன.
- தரவு நகல் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்புத் தணிக்கை, பாதுகாப்புச் சோதனைகள், மின்னஞ்சல் பாதுகாப்பு, கடவுச்சொல் கொள்கை, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் எனப் பல அம்சங்களைப் பற்றிய வழிகாட்டல்கள் உள்ளன. துறை சார்ந்த நேரடிப் பயிற்சி, இருமுனை உறுதிப்படுத்துதல், களப்பெயர்களில் மின்னஞ்சல் போன்ற சிறப்பான புதிய வழிகாட்டல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இனியாவது இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- அரசின் தளங்கள் எப்போதும் nic.in அல்லது gov.in என்றுதான் இருக்க வேண்டும். வேறு காரணத்தால் வேறு களப்பெயரை (domain) வாங்கினால், அவற்றை எப்போதும் கைவிடக் கூடாது. அதாவது, புதுப்பிக்காமல் விட்டுவிடக் கூடாது. அவ்வாறு கைவிட்டால், அதை வேறு யாராவது வாங்கி, தவறாகப் பயன்படுத்துவார்கள். அரசுத் தளம்தானே என்று மக்கள் அந்த முகவரிக்குச் சென்று ஏமாறக் கூடும்.
- அத்தகைய தளங்களை இனம் கண்டு மீள்பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் அல்லது அவை குறித்து முறையாகத் துறப்பு அறிவிப்பு வெளியிட வேண்டும். அரசின் அலுவல்பூர்வ மின்னஞ்சல்கள் எப்போதும் தனியார் சேவைகளில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அதுபோல யார் வேண்டுமானாலும் போலியாக உருவாக்கி மக்களை ஏமாற்ற முடியும். பல அரசுத் துறைகளில் இன்னும் ஜிமெயில் முகவரிதான் தொடர்புக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை எல்லாம் gov.in களப்பெயருக்கு மாற்ற வேண்டும். கட்டற்ற மென்பொருள் பயன்பாடு, சர்வதேசப் பொதுச் செந்தரம் (International common standards) போன்ற முக்கிய வழிகாட்டல்களை அனைத்து அரசுத் துறைகளிலும் உறுதிப்படுத்த வேண்டும்.
- 2021 ஜூலையில் பொதுவிநியோகத் திட்டத் தளத்திலிருந்து மக்கள் எண் திருடப்பட்டதாகப் பெரிய சர்ச்சை எழுந்தது. அன்று முதல் பல்வேறு தளங்களில் தகவல் கசிவுப் புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன. இப்படியான சூழலில், புதிய கொள்கையில் தகவல் திருட்டைத் தடுக்கும் தொழில்நுட்ப முறைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. தரவுச் சேமிப்பில் மேலோட்டமான வழிகாட்டல்களே உள்ளன.
- கடந்த ஆண்டு செக்குரின், இவாண்டி நிறுவனங்களின் ஆய்வில் tn.gov.in தளத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 46 அரசுத் தளங்களுக்கு எஸ்.எஸ்.எல். சான்றிதழ் (SSL certificate) இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்தப் புதிய கொள்கையில் எஸ்.எஸ்.எல்.
- சான்றளிப்பை இணைக்கச் சொல்லி வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், கண்காணிப்பு முறைகளில் போதிய வழிகாட்டுதல்கள் இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தச் சான்றளிப்பைப் புதுப்பித்தாக வேண்டும். எனவே, தொடர் கண்காணிப்பு அவசியமானது.
- சமூகத் தளப் பயன்பாட்டுக் கொள்கையில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. போலிக் கணக்குகளை அடையாளம் காண அல்லது உண்மைக் கணக்குகளை உறுதிப்படுத்துவதற்கு வழிகாட்டல்களைச் சேர்த்திருக்கலாம். கடந்த காலத்தில் பெரும்பாலான போலிக் கணக்குகள் அரசு அதிகாரிகளின் பெயரில்தான் உருவாக்கப்பட்டன. அதிகமான இணையவழிக் குற்றங்களைத் தடுக்க இந்தக் கணக்குகளைக் கண்டறிவது ஒரு புறம் என்றாலும், அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வுடன் வழிகாட்டுவதும் அவசியம்.
- சந்தேகத்துக்கு இடமான மின்னஞ்சல்களைத் திறக்காதீர்கள் என்று வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் துறைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் கடைப்பிடிக்கப்படும் இந்த முறை அரசுத் துறைக்குப் பொருத்தமானதல்ல. மக்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து தொடர்புகொள்ள வாய்ப்புள்ளது. எனவே, அரசுத் துறையானது வந்திருக்கும் அஞ்சலை முறையாகக் கூராய்ந்து திறக்க வேண்டும் என்று வழிகாட்டியிருக்கலாம்.
- தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் விதமாக அதன் இணையப் பாதுகாப்பும் வலுவானதாக அமைய வேண்டும். ஆக, புதிய இணையப் பாதுகாப்புக் கொள்கையில், கூடுதல் கவனம் தேவைப்படும் அம்சங்களைக் கவனப்படுத்தி, உரிய முறையில் நடைமுறைப்படுத்தி இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 09 – 2024)