TNPSC Thervupettagam

மூத்த குடிமக்களுக்குப் பயன் தருமா ஆயுஷ்மான் பாரத்?

December 7 , 2024 33 days 68 0

மூத்த குடிமக்களுக்குப் பயன் தருமா ஆயுஷ்மான் பாரத்?

  • எழுபது வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன ஆரோக்கிய திட்டம் (ஏபி பிஎம்- ஜெய்) என்ற இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்திய அரசு 2024 அக்டோபர் 29-இல் தொடங்கி இருக்கிறது. இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நிறை, குறைகளை இங்கே பரிசீலிப்போம்.
  • அரசின் எந்த ஒரு மக்கள்நலத் திட்டமும் அதனை உண்மையாகத் தேவைப்படுவோருக்கு மட்டுமே கொண்டு சேர்க்க கடுமையான விதிமுறைகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவையே திட்டத்தின் எதிர்மறை அம்சங்களாக மாறி விடுகின்றன. அதனால்தான், மக்கள் நலத்திட்டங்கள் பாதியளவிற்கும் கூட பயனளிக்காதது மட்டுமல்ல, தேவைப்படுவோர் பலரையும் புறக்கணிப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. எனவேதான், முழுமையான சுகாதாரம், கல்வி, பொது விநியோகத்திற்கான திட்டங்கள் அரசு செலவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன.
  • மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், உணவுப் பாதுகாப்பு சட்டம், அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம், அரசு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்தாலும், அவை அரைமனதுடன் செய்தவையாகவே தோற்றமளிக்கின்றன. திட்டங்களில் காணப்படும் முரண்பாடுகள், குறைபாடுகளால் அவை முழுமையான பலன்களை அளிப்பதில்லை.
  • அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், முழுமையான பயன்களைத் தரும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டிருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. எனினும் இதில் பல குறைபாடுகள் காணப்படுவது, திட்டத்தின் நம்பகத்தன்மையைப் பாதிக்கின்றன.
  • இந்தத் திட்டம், 2018- இல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (பிஎம்-ஜெய்) நீட்டிப்பே ஆகும். அத்திட்டம், நாட்டிலுள்ள பரம ஏழைகளில் 40 சதவீதம் பேருக்கு, அதாவது 12 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் வெற்றி குறித்து, மத்திய அரசு புள்ளிவிவரங்களுடன் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது. அதன்படி, கடந்த நவம்பர் 1 வரை, நாடு முழுவதிலும் பிஎம்-ஜெய் திட்டத்தின்கீழ் 8.20 கோடி பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
  • ஆனால், அந்தத் திட்டத்தால் அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடையவில்லை என்பதே உண்மை. நோயாளிகளின் தேவைகளைப் பூரணமாகப் பூர்த்தி செய்வதாக அந்தத் திட்டம் இல்லை. அதாவது, சிகிச்சை பெறத் தேர்வு செய்யப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியல் அனைத்து நோயாளிகளுக்கும் ஏற்றதாகவும் பயனளிப்பதாகவும் இல்லை. மேலும், மருத்துவமனைகளில் சில நோய்களுக்கு காப்பீட்டுச் சிகிச்சை இல்லை என்று கூறி விடுகின்றனர். மக்களின் தேவைக்கேற்ப அந்தத் திட்டம் இல்லாதது மட்டுமல்ல, பட்டியலிலுள்ள மருத்துவமனைகள் கடும் நிபந்தனைகளை விதிப்பதும் ஏமாற்றம் அளிக்கிறது.
  • பிஎம்-ஜெய் திட்டம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏழை மக்களுக்கான சிகிச்சையில் ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனம். சுகாதார சேவைகள் நாளுக்கு நாள் வணிகமயமாகி வருகின்றன. இது மக்களின் சுகாதாரச் செலவினங்களை மேலும் அதிகரிக்கிறது. நீதி ஆயோக் அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, அதிகரிக்கும் சுகாதாரச் செலவினங்களால் ஆண்டுதோறும் 7 % மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே (சுமார் 10 கோடி பேர்) தள்ளப்படுகின்றனர்.
  • தற்போதைய "ஏபி பிஎம்-ஜெய்' எனும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பாக இருப்பதாகத் தெரியவில்லை. இத்திட்டம் மூத்த குடிமக்களாக 70 வயதானோர் மற்றும் அதற்கு மேற்பட்டோரை மட்டுமே கருதுகிறது. ஆனால் நாட்டில் 60 வயது தான் முதியோரின் அடிப்படை வயதாக இருந்து வருகிறது. 2007-ஆம் வருடத்திய மூத்த குடிமக்கள் சட்டத்தின்படி, 60 வயதை எட்டியவர்கள் அனைவரும் மூத்த குடிமக்களே. அதன்படிதான் பல மாநில அரசுகள் முதியோர் ஓய்வூதியத்தை 60 வயதானோருக்கு வழங்கி வருகின்றன.
  • எனவே மூத்த குடிமக்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் 60 வயதானோரையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக எழுப்பப்படுகிறது. அவ்வாறு செய்தால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதும் உண்மை. தற்போது இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசின் 60 % பங்களிப்பில் முதல் தவணையாக ரூ.3,437 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாநில அரசுகள் மீதமுள்ள 40 % நிதியை வழங்க வேண்டும்.
  • இத்திட்டத்தால் 4.5 கோடி குடும்பங்களைச் சார்ந்த 6 கோடி பேர் பலன் பெறுவார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. 2022 ஜூலை மாதம் வெளியான ஐ.நா. மக்கள்தொகை நிதி அறிக்கையின்படி, இந்தியாவில் 60 வயதை எட்டியவர்களாக 14.9 கோடி பேர் இருந்தனர். அதாவது, புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 60 வயதை எட்டியவர்கள் சேர்க்கப்பட்டால், கூடுதலாக 8.9 கோடி பேருக்கு இலவச மருத்துவக் காப்பீடு அளிக்க வேண்டியிருக்கும். அதற்கு 150 % கூடுதல் செலவாகும். அதாவது, இந்த ஆண்டின் ஆறு மாதங்களுக்கும் அடுத்த ஆண்டிற்கும் ரூ.5,100 கோடி கூடுதலாகச் செலவிட வேண்டிவரும்.
  • இது மத்திய அரசுக்கு பெரும் சுமைதான் என்பதில் ஐயமில்லை. ஆனால், 8.9 கோடி மூத்த குடிமக்களின் நலவாழ்வுக்கு இது அவசியம். இதுவே அவர்களின் சுகாதாரச் சுமையைக் குறைக்கும். அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இன்னமும் பரவலாக மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே இதன் பயனாளிகள் குறைவாக இருக்கவே வாய்ப்புண்டு. எனவே அரசின் செலவினம் இதனால் குறையக் கூடும். ஒரு கருத்துக் கணிப்பின்படி, சுகாதாரத் திட்டங்கள் குறித்து அத்திட்டங்களின் பயனாளிகள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டவர்களில் 68% பேருக்குத் தெரியவில்லை.
  • அடுத்ததாக, இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கத் தேர்வாகி பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகள், நோயாளிகளை நிராகரிப்பது கவலை அளிக்கிறது. சில நோய்களுக்கு மட்டும் காப்பீட்டில் சிகிச்சை என்று வரையறுப்பது, சில மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்ற கட்டுப்பாடு போன்றவை, அவசரமாக சிகிச்சை தேவைப்படும் முதியோரை அலைக்கழிக்கின்றன.
  • அவசரச் சிகிச்சை தேவைப்படும் நோயாளியை அலைய விடுவதும், சிகிச்சை அளிக்கத் தாமதிப்பதும் அவர்களது உயிருக்கே உலை வைப்பதாக மாறலாம்; அவர்களது உடல்நிலை மேலும் கவலைக்குரியதாக சீரழியலாம். எனவே, எந்த ஒரு பட்டியலிடப்பட்ட மருத்துவமனையும் காப்பீட்டுத் திட்ட விதிகளை கறாராகப் பின்பற்றாமல், நோயாளியின் உயிரைக் காப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அரசிடமிருந்து மருத்துமனைகளுக்கு வர வேண்டிய சிகிச்சைக் கட்டண பாக்கிக்காகவும், நோயாளிகளைச் சிரமப்படுத்தக் கூடாது.
  • அடுத்ததாக, அடிப்படை ஆவணங்களுக்காக சிகிச்சை அளிப்பதை மருத்துவமனைகள் தள்ளிப் போடக் கூடாது என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். சுகாதாரக் காப்பீட்டு அட்டை, விண்ணப்ப நடைமுறைகள், மூத்த குடிமக்கள் என்பதற்கான சான்று ஆகியவற்றை உடனடியாகத் தர வேண்டும் என மருத்துவமனைகள் நிர்பந்திக்கக் கூடாது. நோயாளியின் ஆதார் அட்டை மட்டும் அவரது வயதை அறியப் போதுமானதாக இருக்கும். இதுவே மக்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும். ஆதார் அட்டை மூத்த குடிமக்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுவிட்டால், அவர்கள் இதுவரை பெற்ற மருத்துவக் காப்பீட்டு சிகிச்சைகள் குறித்தும், அவர்களுக்கு நிலுவையிலுள்ள காப்பீட்டு நிதி குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.
  • இத்திட்டத்தில் மேலும் இரு திருத்தங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக, ஒரு குடும்பத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இருவர் இருந்தால், அரசின் மருத்துவக் காப்பீட்டு நிதி (ரூ. 5 லட்சம்) இரண்டாகப் பங்கிடப்படுகிறது. இது அவர்களின் சிகிச்சையைக் கடினமாக்கும். எனவே, நோயாளியின் தேவையைப் பொருத்து காப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட வேண்டுமே ஒழிய, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதனைத் தீர்மானிக்கக் கூடாது. தவிர, இத்திட்டத்தின் பயனாளிகளாக அரசு மதிப்பிடும் 4.5 கோடி குடும்பங்கள் அதாவது 6 கோடி பேர் என்ற எண்ணிக்கையைவிட அதிகமாக நாட்டில் பயனாளிகள் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
  • அடுத்ததாக அனைத்து நோய்களுக்கும் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. எனவே, முதியோர் அதிக அளவில் பாதிக்கப்படும் முக்கியமான நோய்களைப் பட்டியலிட்டு, இத்திட்டத்தின் சிகிச்சைப் பரப்பை விரிவாக்க வேண்டும். பிற அரசு நலத்திட்டங்கள் போல இத்திட்டமும் ஒரு கண்துடைப்புத் திட்டமாக இருந்துவிடக் கூடாது.
  • மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மீளாய்வு செய்வதுடன் மத்திய அரசு நின்றுவிடக் கூடாது. நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும் முழுமையான சுகாதாரக் காப்பீடு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை ஒரு மக்கள்நல அரசுக்கு உண்டு.

நன்றி: தினமணி (07 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்