TNPSC Thervupettagam

மூன்றாம் தவணை தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?

January 25 , 2022 923 days 407 0
  • ‘தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் மீண்டும் கரோனா வருகிறதே, பிறகேன் தடுப்பூசி?’ என்ற கருத்தைத் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும்போது பலரும் குழம்பிப் போகின்றனர்!
  • கரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை நாடு முழுவதிலும் அதிதீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு இந்தியாவில் மூன்று லட்சத்துக்கு அதிகமானோரும், தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கு அதிகமானோரும் புதிதாகத் தொற்றுப் பாதிப்பு அடைகின்றனர்.
  • இந்த எண்ணிக்கை இரண்டாம் அலையைவிடப் பன்மடங்கு அதிகமென்றாலும், மூன்றாம் அலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருப்பதும், ஆக்ஸிஜன் தேவை அவ்வளவாக அதிகரிக்கவில்லை என்பதும் சற்றே ஆறுதல் தரும் விஷயங்கள்.
  • அதேசமயம், அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோரில் வயதானவர்கள், இணைநோய் உள்ளவர்கள்… இவர்களில் குறிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்தான் அதிகம்.
  • நாடுதழுவிய இந்தத் தடுப்பூசித் திட்டத்தின் ஆரம்பம் தொடங்கி முன்களப் பணியாளர்களுக்கு அடுத்ததாக முதியவர்களுக்கும் இணைநோய் உள்ளவர்களுக்கும்தான் முன்னுரிமை வழங்கப்பட்டது.
  • என்றாலும், பல்வேறு காரணங்களால் இவர்கள் இன்னமும் முழுமையாகத் தடுப்பூசித் தவணைகளைச் செலுத்திக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்.
  • ஜனவரி 17-ம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 88.62% பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 64.23% பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
  • ஜனவரி 7-ம் தேதி நிலவரப்படி 15 – 18 வயதுக்கு உட்பட்ட 33.4 லட்சம் குழந்தைகளில் 21 லட்சம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  • ஆனாலும், முதியோருக்குத் தடுப்பூசி செலுத்தப்படுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதுதான் இப்போதைய பிரச்சினை.
  • மாநிலத்தில் ஜனவரி 16-ம் தேதி நிலவரப்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 62% பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 48% பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
  • தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்தச் சதவீதம் குறைவுதான்.
  • ஜனவரி 10-ம் தேதி முதல் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி எனும் மூன்றாம் தவணைத் தடுப்பூசியும் தமிழ்நாட்டில் செலுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 9 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கும், 5.6 லட்சம் சுகாதாரத் துறைப் பணியாளர்களுக்கும், 20 லட்சம் மூத்த குடிமக்களுக்கும் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி செலுத்தப்படவிருக்கிறது.
  • இவர்களில் மூத்த குடிமக்களுக்கு இன்னமும் முதல் இரண்டு தவணைகளே செலுத்தி முடிக்காமல் இருப்பதால், மூன்றாம் தவணையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தி முடிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறது மாநில நலவாழ்வுத் துறை.

மூத்தவர்களே முக்கியமானவர்கள்

  • உலகளவில் கிடைத்துள்ள தரவுகளின்படி, மூன்றாம் அலையின் வீரியம் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணமே தடுப்பூசிதான்.
  • இப்போது தமிழ்நாட்டில் இறந்தவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தால், இறப்பைத் தவிர்த்திருக்க முடியும். இயற்கையிலேயே, மூத்த குடிமக்களுக்கு உடலில் நோய்த் தடுப்பாற்றல் குறைந்திருக்கும் அல்லது அவர்களிடம் காணப்படும் இணைநோய்கள் அவர்களின் தடுப்பாற்றலைக் குறைத்திருக்கும்.
  • இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களுக்குக்கூட 6 - 9 மாதங்களில் தடுப்பாற்றல் குறைந்திருக்க வாய்ப்புண்டு.
  • அது தொற்றுப் பாதிப்புக்கு உடனே இடம்கொடுப்பதோடு நோய் நிலைமையைத் தீவிரமாக்கி விடும்.
  • ஆகவே, மூத்த குடிமக்கள் கரோனாவிடமிருந்து முழுமையாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி உட்பட மூன்று தவணைத் தடுப்பூசிகளும் செலுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம்.
  • ஆனால், நடைமுறையில் இவர்கள் ‘வீட்டில்தானே இருக்கிறோம். வெளியில் செல்வதில்லையே.. பிறகு எதற்குத் தடுப்பூசி?’ என்று நினைத்துக்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
  • வீட்டில் உள்ளவர்கள் மூலம் இவர்களுக்குத் தொற்று பரவ அதிக வாய்ப்புண்டு. வீட்டில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தாலும், அவர்கள் வெளியில் சென்று வருவதால், அவர்களிடம் அறிகுறிகளற்ற கரோனா தொற்று இருக்கலாம்.
  • அது வீட்டிலுள்ள மூத்த குடிமக்களுக்குத் தொற்றும்போது அவர்களுக்கு அறிகுறிகளோடு நோய் தோன்றலாம். அது உயிராபத்தில் முடியலாம். அப்படியே தொற்றிலிருந்து மீண்டுவிட்டாலும், ‘லாங் கோவிட்’ எனும் நோய்ப் பின்தாக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.
  • ஆகவே, மூத்த குடிமக்கள் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தாமாக முன்வந்து தடுப்பூசி  செலுத்திக்கொள்ள வேண்டும். அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

எப்போது செலுத்திக்கொள்வது?

  • ‘தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் மீண்டும் கரோனா வருகிறதே, பிறகேன் தடுப்பூசி?’ என்ற கருத்தைத் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும்போது பலரும் குழம்பிப் போகின்றனர்.
  • தொற்றின் கடுமையைக் குறைத்து, உயிரிழப்பைத் தடுப்பதுதான் கரோனா தடுப்பூசியின் முக்கிய நோக்கம். ஆகவே, தகுதியுடையவர்கள் அனைவரும் 3 தவணைத் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.
  • இரண்டாம் தவணையைச் செலுத்திக்கொண்ட 9 மாதங்களுக்குப் பிறகு – மிகச் சரியாகச் சொன்னால் 273 நாட்களுக்குப் பிறகு - மூன்றாம் தவணை செலுத்திக்கொள்ள வேண்டும்.
  • இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்ட பிறகு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தால், உறுதி செய்யப்பட்ட அந்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குப் பிறகு மூன்றாம் தவணை செலுத்திக்கொள்ளலாம்.
  • அதேபோல், முதல் தவணை மட்டும் செலுத்திக்கொண்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தால், அந்த நாளிலிருந்து 3 மாதங்கள் கழித்து இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம்.
  • அடுத்ததாக, முன்னெச்சரிக்கைத் தடுப்பூசித் திட்டம் செயலுக்கு வந்ததிலிருந்து இப்போது வரை தமிழ்நாட்டில் கரோனா அறிகுறிகள் தொடர்பான சில அறிகுறிகளுடன் வீட்டுக்கு வீடு தொற்றாளர்கள் இருப்பதைக் காண முடிகிறது.
  • இந்தத் தொற்று ஒரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடுவதால், அநேகரும் பரிசோதனை செய்திருக்க மாட்டார்கள். மக்கள் நல்வாழ்வுத் துறையும் தற்போது எல்லாத் தொற்றாளர்களுக்கும் பரிசோதனை தேவையில்லை என்றே பரிந்துரை செய்துள்ளது.
  • இவர்களில் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்களும் இருக்கலாம். இவர்கள் எப்போது அவற்றைச் செலுத்திக்கொள்வது எனும் கேள்வி எழுகிறது.
  • ஒருவருக்குக் காணப்படும் அறிகுறிகளை வைத்து அது கரோனா பாதிப்பா, இல்லையா என்பதைக் கணிக்க முடியாது. காரணம், ஏற்கெனவே இங்கு இருந்த டெல்டா வைரஸுடன் இப்போது புதிதாக வந்திருக்கும் ஒமைக்ரானும் சேர்ந்துகொண்டு மூன்றாம் அலையைத் தீவிரப்படுத்துகிறது.
  • அத்தோடு, பனிக்கால ஃபுளூவும் சேர்ந்துகொண்டது. டெங்குவும் பரவுகிறது. இவற்றில் கரோனா தொற்று உறுதியானவர்களும், பரிசோதனை செய்துகொள்ளாதவர்களும் தொற்றிலிருந்து மீண்ட பிறகு, 3 மாதங்கள் கழித்துச் செலுத்திக்கொள்ளலாம். கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியானவர்கள் உடனேகூட செலுத்திக் கொள்ளலாம்.
  • இறுதியாக ஒன்று, “மூன்றாம் அலைதான் கரோனாவின் கடைசி அலை என்று சொல்ல முடியாது; இன்னும் பல அலைகள் வரலாம்” என்றே வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
  • கரோனா மீண்டும் உருமாறி வருவது நமக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் அளவைப் பொறுத்தே இருக்கிறது என்கின்றனர்.
  • ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நம்மையும், நம் உறவுகளையும், முக்கியமாக முதியவர்களையும் கரோனாவின் பிடியிலிருந்து பாதுகாக்கத் தடுப்பூசிகளை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 - 01 - 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்