TNPSC Thervupettagam

மூன்றாவது அலைக்கு நடுவே உள்ளாட்சித் தேர்தல்: விபரீதமாகிவிடக் கூடாது

September 10 , 2021 1057 days 448 0
  • ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குத் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தயாராகிவிட்டன. புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில், செப்டம்பர் 15-க்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மாநிலத் தேர்தல் ஆணையமும் அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
  • தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஆறு மாத காலம் அவகாசம் கோரியுள்ள நிலையிலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
  • சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஆளுங்கட்சி, உடனடியாக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கருதலாம்.
  • கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு, அதிக வாக்குச் சாவடிகளை அமைக்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுகவின் கருத்தாக உள்ளது.
  • கரோனா பெருந்தொற்று இன்னும் முழுதாக நீங்காத நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது மற்றொரு அலையை உருவாக்குவதாக அமைந்துவிடக் கூடாது.
  • நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ‘கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கண்காணிக்கத் தவறிய தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
  • ஆனால், பெருந்தொற்றுக்கும் தேர்தலுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து நீதிமன்றங்களுக்கு இடையிலும் மாறுபட்ட கருத்துகள் நிலவின.
  • உத்தர பிரதேசத்தில் பெருந்தொற்றின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்க அம்மாநில அரசு விரும்பினாலும், அலகாபாத் உயர் நீதிமன்றம் கால வரம்பைத் தீர்மானித்துத் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.
  • கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் உத்தர பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்கு அங்கு நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலும் முக்கியமானதொரு காரணம்.
  • புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் வாக்களிப்பதற்காக ஒரே நேரத்தில் ஊருக்குத் திரும்பியது தொற்று பரவக் காரணமாகியது.
  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின்போதே தனிநபர் இடைவெளி, முகக் கவசம் போன்ற அடிப்படையான நோய்ப்பரவல் தடுப்பு முறைகள் பின்பற்றப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று வாக்குகள் சேகரிப்பார்கள்.
  • ஊரகங்கள் தினந்தோறும் திருவிழாமயமாகக் காட்சியளிக்கும். ஒருபக்கம் நோய்ப் பரவலைக் காரணம்காட்டி, மத ஊர்வலங்களுக்குத் தடைவிதிக்கும் மாநில அரசு, அதை விடவும் அதிகப் பரவல் வாய்ப்புள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் முனைப்புக் காட்டுவது முரணானது.
  • மூன்றாவது அலை குறித்து மக்களிடையே அச்சமும் பதற்றமும் நிலவிவருகிறது. இந்நிலையில், ஏற்கெனவே தாமதப்படுத்தப்பட்டுவிட்ட உள்ளாட்சித் தேர்தலை மேலும் சில மாதங்களுக்குத் தள்ளிவைக்க உச்ச நீதிமன்றத்தைக் கோருவதே சரியானது.
  • தேர்தலை நடத்தி முடிக்க அரசியல் கட்சிகள் விரும்பும்பட்சத்தில், தொற்றுப் பரவலைத் தடுக்கக் கடுமையான விதிமுறைகளை உருவாக்கவும் பின்பற்றவும் வேண்டும்.
  • நேர்மையான முறையில் மட்டுமின்றி பாதுகாப்பான வகையிலும் தேர்தல் நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

நன்றி: இந்து தமிழ் திசை (10 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்