TNPSC Thervupettagam

மூன்றாவது அலை அச்சம்!

September 4 , 2021 1063 days 467 0
  • கொவைட் 19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் விடுத்திருக்கும் எச்சரிக்கையைப் புறந்தள்ளிவிட முடியாது.
  • தீநுண்மியின் டெல்டா உருமாற்றம் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது என்றும், பல நாடுகள் மூன்றாவது அலையின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கின்றன என்றும் அவா் தெரிவித்திருக்கிறார்.
  • பல ஐரோப்பிய, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தீநுண்மியின் உருமாற்றம் வேகமாகப் பரவும் தன்மையைப் பெற்றிருப்பதை உணர முடிகிறது.
  • அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.
  • செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் கொவைட் 19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலை இந்தியாவைத் தாக்கக்கூடும் என்கிற பரவலான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
  • இந்தியாவிலுள்ள 67 மாவட்டங்களில் காணப்படும் நோய்த்தொற்று அதிகரிப்பு, மூன்றாவது அலையின் முன்னறிவிப்பாக இருக்கலாம்.
  • முதல் இரண்டு அலைகளைவிட அதிவேகமாக நோய்த்தொற்று பரவுவதால், உடனடியாக எச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படாவிட்டால் நிலைமை கைமீறி போய்விடக் கூடும்.

கொவைட் 19 மூன்றாவது அலை

  • இப்போதைக்கு வடகிழக்கு மாநிலங்களிலும், கேரளத்திலும்தான் அதிகமான நோய்த் தொற்று தெரிய வந்திருக்கிறது.
  • நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 45,352 புதிய பாதிப்புகளும், 366 உயிரிழப்புகளும் பதிவாகி இருக்கின்றன. இதுவரை இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,29,03,259 என்றால், மொத்த உயிரிழப்பு 4,39,895. கடந்த 24 மணி நேரத்தில் அதிக உயிரிழப்பை சந்தித்த மாநிலங்கள் கேரளம் (188), மகாராஷ்டிரம் (55), கா்நாடகம் (22). தேசிய அளவில் இறப்பு விகிதம் 1.34%.
  • இந்தியாவின் இப்போதைய புதிய பாதிப்புகளில் மூன்றில் இரு பங்கிற்கும் மேலான பாதிப்பு கேரள மாநிலத்தில் காணப்படுகிறது.
  • அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பொதுமுடக்க நடவடிக்கைகளில் தளா்வு, அனைவருக்குமாக அல்லாமல் அறிகுறி உள்ளவா்களுக்கு மட்டும் பரிசோதனை நடத்துவது போன்றவை சுட்டிக்காட்டப்படுகின்றன.
  • ‘நோய்த்தொற்றுக்கான எதிர்ப்பு சக்தி காணப்படுவது, தொற்றுப் பரவுவதையும் மரண விகிதத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதனால், சுகாதாரக் கட்டமைப்பு அழுத்தத்துக்கு உள்ளாகாமல் இருக்கிறது’ என்பது கேரள சுகாதார அமைச்சகத்தின் கருத்தாக இருக்கிறது.
  • அதிகரித்து வரும் நோய்த்தொற்று காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்திருக்கிறது என்றாலும், போதுமான அளவிலான முன்னெச்சரிக்கை சோதனைகளும், நோய்ப் பரவல் தடுப்பு முயற்சிகளும் குறைவாகவே இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
  • கடந்த முறை நோய்த்தொற்றுப் பரவலின்போது கேரள மாநிலம் முன்மாதிரியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அடித்தட்டு அளவில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
  • அதேபோன்ற முனைப்பு இப்போதும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிறார்கள் சுகாதாரத் துறையினா். கேரளத்துக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் அந்த அணுகுமுறை தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை.
  • அதேபோல இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கான்பூா் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், நீதி ஆயோக் ஆகியவை தனித்தனியாக ஆய்வுகளை நடத்தி, அடுத்த கட்ட நோய்த்தொற்று அலை குறித்த விவரங்களைத் திரட்டுகின்றன.
  • மத்திய சுகாதார அமைச்சகம், இந்த எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால்தான் ஒன்றுக்கொன்று முரணான ஆய்வுகளும், முன்வைக்கப்படும் தீா்வுகளும் தவிர்க்கப்படும். அனைத்து மாநிலங்களுக்கும் சரியான அணுகுமுறையை சுகாதார அமைச்சகத்தால் எடுத்தியம்ப முடியும்.
  • உலகிலேயே மிக விரைவாகவும், அதிகமான மக்கள்தொகையினருக்கும் தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை படைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. நேற்று வரையிலான 229 நாள்களில் 66,17,38,647 தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.
  • இதுவரை ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளா்களில் 1,03,59,284 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 84,12,633 பேருக்கு இரண்டாவது தவனை தடுப்பூசியும் போடப்பட்டிருக்கின்றன.
  • அதேபோல, முன்களப் பணியாளா்களில் 1,83,25,480 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,33,12,134 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டிருக்கின்றன.
  • நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், கடுமையான பாதிப்பு, மருத்துவமனை சோ்க்கை, உயிரிழப்பு ஆகியவற்றிலிருந்தும் பாதுகாப்பை வழங்குகிறது தடுப்பூசி என்பது அனுபவபூா்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
  • நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவா்களுக்கு ஏற்படும் எதிர்ப்பு சக்தியைவிட, தடுப்பூசி போடப்படுவதால் மூன்று மடங்கு அதிக எதிர்ப்பு சக்தி ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • அதனால், மூன்றாவது அலை நோய்த்தொற்றைத் தடுப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் தடுப்பூசி திட்டம் அனைவரையும் முழுமையாகச் சென்றடைவதுதான் தீா்வு.
  • கொள்ளை நோய்த்தொற்றின் கடந்த இரண்டு அலைகளால் கிடைத்திருக்கும் அனுபவங்களின் அடிப்படையில், கண்காணிப்பையும், பரிசோதனைகளையும் முறைப்படுத்தினால், மூன்றாவது அலையும் கடந்துபோகும்!

நன்றி: தினமணி  (04 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்