TNPSC Thervupettagam

மூன்று குற்றவியல் சட்டங்கள் நீதி வழங்கலை சீர்திருத்துமா?

July 14 , 2024 181 days 178 0
  • இந்திய தண்டனைச் சட்டம் 1860, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகிய மூன்றும் திருத்தப்பட்டு புதிய காலகட்டத்தில் ஜூலை 1 முதல் அடியெடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. புதிய சட்டங்கள் ‘பாரதிய நியாய சம்ஹிதை’ 2023 (பிஎன்எஸ்), ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதை’ 2023 (பிஎன்எஸ்எஸ்), ‘பாரதிய சாக்ஷிய அதிநியாயம்’ 2023 (பிஎஸ்ஏ) என்ற பெயரில் நடைமுறைக்கு வந்துள்ளன.
  • நீதி வழங்கலை நவீனப்படுத்தவும், நடப்பு காலத்தில் இந்த வழக்குகளைக் கையாள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், நீதித் துறை நடைமுறைகளை மேலும் சீர்படுத்தவும் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

புதிய சட்டங்கள் மூலம் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைச் சுருக்கமாகக் காண்போம்:

ஐபிசிக்கு பதிலாக பிஎன்ஸ்

  • இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவில், அரசுக்கு எதிரான செயல்களைக் குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரியது என்பது நீக்கப்பட்டுள்ளது. பிஎன்எஸ்ஸின் 150வது பிரிவு, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு எதிரான செயல்களைக் குற்றமாகக் கருதும் வகையில் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது, தேச விரோதச் செயல்களுக்கு எதிராக முன்பிருந்த சட்டத்தில் இடம்பெற்றவையும் இதில் இடம்பெறுகின்றன.
  • பிஎன்எஸ் சட்டத்தில், திட்டமிட்டு பெரிய கும்பலாக அல்லது அமைப்பாக சேர்ந்து செய்யும் குற்றச் செயல்களும் (பிரிவு 109), சிறிய அளவிலான குற்றச் செயல்களும் (பிரிவு 110) தண்டனைக்குரியவையாக சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் சில மாநிலங்களில் மட்டும் அமலில் இருக்கும் - திட்டமிட்டுச் செய்யும் குற்றச் செயல்களும் பயங்கரவாதச் செயல்களும், பிரிவு 111(1)இல் சேர்க்கப்பட்டுள்ளன. பயங்கரவாதச் செயல்கள் எவை என்ற விளக்கம் சேர்க்கப்பட்டிருக்கிறது. பாலியல் தொழில் உள்ளிட்ட குற்றங்களுக்காக பெண்கள் – குழந்தைகளைக் கடத்துவது, போதை மருந்துகளைக் கடத்துவது – விற்பது, சைபர் குற்றங்கள் என்றழைக்கப்படும் இணையவழி மோசடிகள், குற்றங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன; திருட்டு, சூதாடுதல் போன்ற சிறிய குற்றங்களைத் திட்டமிட்டு சிறிய அளவிலான கும்பல்கள் செய்வது, திட்டமிட்ட குற்றச் செயல்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • கும்பலாக சேர்ந்துகொண்டு யாரையாவது அடித்துக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாக பிஎன்எஸ்ஸில் சேர்க்கப்பட்டுள்ளது. இனம், சாதி, பாலினம், பிறந்த ஊர் அல்லது நாடு, மொழி அல்லது வேறு காரணங்களுக்காக எவரையாவது ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி அடிப்பது அல்லது அடித்துக் கொல்வது இந்தச் சட்டப்படி தண்டனைக்குரியது. இத்தகைய குற்றவாளிகளுக்குக் குறைந்தபட்சம் ஏழாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை அளிக்கப்படும், மிக மோசமான செயலாக இருந்தால் மரண தண்டனைகூட வழங்கப்படும்.
  • பாலின அடிப்படையில் செய்யப்படும் குற்றங்கள் ஆண் – பெண் ஆகிய இருவருக்குமே ஒரே மாதிரியாக கருதப்படும். பாலினம் எதுவாக இருந்தாலும் வேறுபாடில்லாமல் சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும். இப்போது பாலினம் என்பதில் ஆண் – பெண் ஆகியவற்றுடன் மூன்றாம் பாலினமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் அனைத்துப் பிரிவினருக்கும் ஒருங்கிணைந்த சட்டப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதிசெய்கிறது.
  • 18 வயதுக்கும் குறைவானவர்களைப் பாலியல் வல்லுறவு கொண்டால், மரண தண்டனை உள்ளிட்டவை வழங்கப்பட சட்டத் திருத்தம் வகை செய்கிறது. இவ்வகை குற்றங்கள் அதிகரித்துவருவதை அடுத்து தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
  • பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பாக தனி அத்தியாயமே சேர்க்கப்பட்டிருக்கிறது. பாலியல் தொழிலுக்காகவும் அடிமை வியாபாரத்துக்காகவும் குழந்தைகளை விலைக்கு வாங்குவது - விற்பது ஆகியவையும் 18 வயது நிரம்பாத ஆண் – பெண் சிறார்களைப் பாலியல் வல்லுறவுக்கு ஆள்படுத்துவதும் கடுமையாக தண்டிக்கபடவுள்ளது, அதிகபட்சமாக மரண தண்டனைகூட விதிக்க திருத்தம் வழிசெய்கிறது.
  • திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஏமாற்றி உடலுறவு கொள்வது உள்பட அனைத்து வகை முறை தவறிய உடலுறவுக் குற்றங்களையும் தண்டனைக்குரியதாக பிரிவு 69 அறிவிக்கிறது. இந்தக் குற்றங்களுக்கு ரொக்க அபராதத்துடன் அதிகபட்சம் 10 ஆண்டுகள்கூட சிறைத் தண்டனை விதிக்கப்படும். உண்மைகளை மறைத்து காதலிப்பதுபோல் நடிப்பது, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி உடலுறவு கொள்வது ஆகியவற்றைத் தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்தப் பிரிவு, விருப்பப்பட்டு உடலுறவில் பெண் ஈடுபட்டாலும் பிறகு ஆணைத் தண்டிக்க வழிசெய்துவிடும் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
  • பிரிவு 304(1) வழிப்பறி மற்றும் அதுபோன்றவற்றை தனிக் குற்றமாக – திருட்டிலிருந்து பிரித்துள்ளது. இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

பிஎன்எஸ்எஸ் சட்டத்தில் மாற்றங்கள்

  • போலீஸ் காவலில் அதிகபட்சம் ஒருவரை வழக்கு விசாரணைக்காக 15 நாள்கள் மட்டுமே வைத்திருக்கலாம் என்பது, வழக்கின் தீவிரத்தன்மை கருதி 90 நாள்கள் (மூன்று மாதங்கள்) வரைகூட வைத்திருக்க நீட்டிக்கப்படுகிறது. காவல் துறையினர் இந்தப் பிரிவை தவறாகப் பயன்படுத்தவும் கைதானவரைச் சித்திரவதை செய்யவும் துணை பிரியும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • முதல் தகவல் அறிக்கையின் நகல், காவல் துறை அறிக்கை, குற்றப் பத்திரிகை, வாக்குமூலங்கள், இதர ஆவணங்கள் ஆகியவை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் அவை பதிவான 14 நாள்களுக்குள் தரப்பட வேண்டும் என்பதை பிஎன்எஸ்எஸ் கட்டாயமாக்குகிறது.
  • குற்றச் செயல் குறித்து, காவல் நிலையத்துக்கு நேரில் செல்லாமலேயே மின்னணு தகவல்தொடர்பு வசதிகள் மூலம் (கைப்பேசி – கணினி) இனி யாரும் புகார் அளிக்கலாம்.
  • ஒரு குற்றம் தொடர்பாக அருகில் உள்ள எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யலாம். பிறகு அந்த முதல் தகவல் அறிக்கை ‘உரிய காவல் நிலையத்’துக்கு மேல் விசாரணைக்காக மாற்றப்படும். இந்தப் பிரிவு, அவசரத் தேவையைக் கருதி, குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய கொண்டுவரப்படுகிறது.
  • வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அழைப்பாணைகளை மின்னணு சாதனங்கள் மூலமும் வழங்க சட்டத் திருத்தம் வழிசெய்கிறது. இது நீதித் துறை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உதவும். காகிதங்களின் பயன்பாடும் குறைக்கப்படும், அத்துடன் வழக்கு தொடர்பாக துரிதமான தகவல் பரிமாற்றங்களுக்கு வழிசெய்யும்.
  • கைதுசெய்யப்பட நேரிட்டால், அப்படிக் கைதுக்கு உள்ளாகிறவர் உடனடியாக தனக்கு வேண்டிய ஒருவருக்கு அது பற்றித் தகவல் தெரிவிக்கவும், தேவைப்படும் சட்ட உதவிகளைப் பெறவும் உரிமை வழங்கப்படுகிறது.
  • கைதுசெய்யப்பட்டவுடன் யார், எதற்காக கைதுசெய்யப்பட்டார் என்ற தகவலை காவல் நிலைய எல்லைக்குள்ளும் மாவட்ட காவல் துறைத் தலைமையகத்திலும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடுவதற்கு திருத்தம் வழிசெய்கிறது. இதனால் கைதானவரின் நண்பர்கள், உறவினர்கள் அதை அறிந்து உதவிகளை அளிக்க முடியும்.
  • பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் பெண்ணின் வாக்கு மூலத்தை, பெண் மாஜிஸ்திரேட் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். அப்படிப் பெண் மாஜிஸ்திரேட் இல்லாத பட்சத்தில், ஆண் மாஜிஸ்திரேட் அந்த வாக்குமூலத்தை - இன்னொரு பெண் முன்னிலையில் - பதிவுசெய்துகொள்ளலாம். வழக்கு நேர்மையாக நடக்கவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையைக் கருதியும் இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது.
  • புதிய சட்டங்களின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குப் பதிவுக்கு ஆளாகிறவர், வழக்கு விசாரணை எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை 90 நாள்களுக்கு (மூன்று மாதங்கள்) ஒருமுறை அறியும் உரிமை தரப்பட்டுள்ளது.
  • குற்றச் செயல்களால் பாதிக்கப்படும் பெண்களும் குழந்தைகளும் அருகில் உள்ள எல்லா மருத்துவமனைகளிலும் இலவசமாக முதல் உதவி அல்லது தேவைப்படும் சிகிச்சைகளைப் பெற புதிய சட்டங்கள் வழிசெய்கின்றன.
  • மிகத் தீவிரமான குற்றங்களில், குற்றம் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. அப்படித் தடயங்கள் சேகரிக்கப்படுவது காணொலியில் பதிவுசெய்யப்படுவதும் கட்டாயம். தடயங்களைச் சேகரிப்பதில் எந்த முறைகேடும் நடந்துவிடக் கூடாது என்று இந்த நிபந்தனை சேர்க்கப்பட்டிருக்கிறது.
  • பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் வழக்கு நடைமுறைகள் வெளிப்படையாக இருக்கவும், அவர் அளிக்கும் வாக்குமூலம் ஒலி நாடாவிலும் காணொலியிலும் ஒரே சமயத்தில் இனிப் பதிவுசெய்யப்படும்.
  • பெண்கள், 15 வயதுக்குக் குறைவான குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், தீவிரமாக நோய் பாதிப்பில் இருப்பவர்கள் இனி காவல் நிலையம் சென்று புகார்செய்ய வேண்டியதில்லை, அருகில் உள்ள காவல் நிலையத்தாரே அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று புகார்களைப் பதிவுசெய்வார்கள்.
  • மிக அற்பமானதும் அதித தீவிரம் இல்லாததுமான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவது கட்டாயமாக்கப்படுகிறது. வழக்குகளின் நிலுவை எண்ணிக்கையைக் குறைக்க இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது.
  • குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நேரில் வராத பட்சத்தில்கூட விசாரணையை நடத்தி தண்டிக்க பிஎன்எஸ்எஸ் வழிசெய்கிறது. இது நீதி வழங்கலில் தவறுகளை இழைக்கவும் அநீதி வழங்கவும்கூட வழிசெய்துவிடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
  • மூன்றாண்டுகள் முதல் ஏழாண்டுகள் வரையில் சிறைத் தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றங்களில், பூர்வாங்க விசாரணை நடத்தும் முறையை பிஎன்எஸ்எஸ் அறிமுகப்படுத்துகிறது. வேண்டுமென்றே அற்பமாக கூறப்படும் புகார்களைக் கண்டறிய இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது. ஆனால், இப்படிச் செய்வது முதல் தகவல் அறிக்கை தாக்கலை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதுடன், புகார்தாரருக்கு அதிக சுமைகளையும் மன உளைச்சலையும் ஏற்படுத்திவிடும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • பார்த்த மாத்திரத்திலேயே தவறு என்று தீர்மானிக்கக்கூடிய (சாட்சியம் தேவைப்படாத) சிறு குற்றங்களைச் செய்தவர்கள் (பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது போன்ற) காவல் துறையின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட மறுத்தால், அவர்களைக் கைதுசெய்ய பிஎன்எஸ்எஸ்ஸின் பிரிவு 172 வழிசெய்கிறது. அப்படிக் கைதுசெய்யப்படுகிறவர்களுடைய உரிமைகளைக் காக்கும் வகையில், கைதுசெய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவர்களை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திவிட வேண்டும் என்ற நிபந்தனையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
  • சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் இட நெருக்கடியைக் குறைக்கவும், கைதிகள் சீர்திருந்த வாய்ப்பு அளிக்கவும் சில வகை குற்றங்களைச் செய்வோருக்கு ‘சமுதாயப் பணி’ செய்யுமாறு தண்டனை வழங்கி, வெளியிலேயே இருக்கச் செய்துவிடலாம் என்ற பிரிவு பிஎன்எஸ்எஸ்ஸில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தண்டனை மட்டும்தான் தீர்வு என்று இல்லாமல், வேறு வகையிலும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் திருந்தவும் இது வாய்ப்பாக அமையக்கூடும்.
  • எல்லா மாநில அரசுகளும் முக்கியமான வழக்குகளில் சாட்சிகளாக இருப்பவர்களைத் தொடர்ந்து (காவல் துறை மூலம்) பாதுகாக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய பாதுகாப்புக்காகவும் வழக்கு விசாரணைகளில் அவர்கள் தொடர்ந்து ஒத்துழைக்கவும் இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

சாட்சியச் சட்டத்தில் மாற்றம்

  • காகிதம் மூலமான ஆவணங்களுக்கு இணையாக, மின்னணு தகவல் பரிமாற்றங்கள், ஆவணங்கள் ஆகியவையும் சாட்சியங்களாக ஏற்கப்பட பிஎஸ்ஏ வழிசெய்கிறது.
  • ‘இரண்டாம் நிலை சாட்சியங்கள்’ என்பதற்கான விளக்கம் விரிவாக்கப்பட்டிருக்கிறது. மூலமான ஆவணங்களிலிருந்து இயந்திரங்கள் மூலம் பெறப்படும் நகல்களும் இரண்டாம் நிலை ஆவண சாட்சியங்களாக ஏற்கப்படும். ஆவணங்களைப் பார்த்தவர்கள் வாய்மொழியாக அளிக்கும் சாட்சியங்களும் இதில் சேரும்.
  • வழக்கு விசாரணைகள் தேவையின்றி தாமதம் ஆவதைத் தடுக்க, நீதிமன்றங்கள் ஒரு வழக்கில் இரண்டு முறை மட்டுமே விசாரணைகளை ஒத்திவைக்கலாம் என்று திருத்தம் கூறுகிறது. குற்றவியல் வழக்குகளில் விசாரணை முடிந்த 45 நாள்களுக்குள் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். முதல் விசாரணை தொடங்கிய 60 நாள்களுக்குள் குற்றங்கள் பட்டியலிடப்பட வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (14 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்