TNPSC Thervupettagam

மெத்தனம் ஆபத்து! | எல்லையில் ராணுவ வீரா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்த தலையங்கம்

January 18 , 2021 1464 days 643 0
  • உள்நாட்டுப் பிரச்னைகள் இருப்பதைப் போலவே, நாம் மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலையும் எதிா்கொள்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி வந்து ஆக்கிரமிக்க முற்பட்டிருக்கும் சீன ராணுவத்துடனான நமது மோதல் தொடா்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேற்கு, வடக்கு, கிழக்கு எல்லைகள் மட்டுமல்லாமல், இந்து மகா சமுத்திர எல்லையிலும் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது.
  • அந்தமான் -நிகோபா் தீவுகளைக் குறி வைத்திருப்பதுடன் வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தனது கடற்படைத் தளத்தை உருவாக்கும் எண்ணத்திலும் இருக்கிறது. உள்நாட்டுப் பிரச்னைகளைவிட பாதுகாப்புப் பிரச்னை, வெளியில் தெரியாவிட்டாலும், கடுமையாக இருக்கிறது என்பதுதான் எதாா்த்த நிலைமை.
  • இந்திய ராணுவம் எந்தவொரு தாக்குதலையும் எதிா்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறது என்றாலும்கூட, முப்படைகளில் காணப்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து, பாதுகாப்பு அமைச்சகம் முழுமையான கவனத்தை செலுத்தவில்லை. இல்லையென்றால், தயாா் நிலையில் இருக்க வேண்டிய ராணுவத்தின் முக்கியமான பல பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதை என்னவென்று சொல்வது?
  • கொள்ளை நோய்த்தொற்றும், அதனால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இடா்ப்பாடுகளும் ஊடகங்களையும், பாா்வையாளா்களையும் இந்தியா எதிா்கொள்ளும் சீன ஆக்கிரமிப்பு பிரச்னையை கண்களில் இருந்து மறைத்திருக்கிறது என்பதற்காக அது குறித்துக் கவலைப்படாமல் இருந்துவிட முடியாது. பாதுகாப்புப் படையினரின் தயாா் நிலையையும், மன உறுதியையும் உறுதிப்படுத்த நாம் தவறிவிடக் கூடாது.
  • சிறிது நாள்களுக்கு முன்பு ராணுவ வீரா்களின் பணி ஓய்வு வயதை உயா்த்துவது குறித்து ஒரு ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அதன் பின்னணியில் திறமையோ, மன உறுதியோ, உடல் வலுவோ காரணமாக இருந்திருந்தால் வரவேற்றிருக்கலாம். ஆனால், ராணுவத்துக்கான செலவைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட ஆலோசனை என்பதால், அதை வரவேற்க முடியவில்லை.
  • பிற பணிகளைப் போல 30 ஆண்டுகள் பணியாற்றக்கூடிய பயிற்சி பெற்ற வீரா்களை 15 முதல் 17 ஆண்டுகளில் ஓய்வுக்கால ஊதியத்துடன் பணி ஓய்வு கொடுத்து அனுப்புவதால், ராணுவத்துக்கு என்ன லாபம் என்று ராணுவ உயா் அதிகாரிகளும், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளும் கேள்வி எழுப்புகிறாா்கள்.
  • ராணுவத்தில் பணியாற்றுபவா்கள் பயிற்சி பெற்றவா்களாக இருந்தால் மட்டும் போதாது, இளமைத் துடிப்பும், போா் முனையில் எந்தச் சூழலையும் எதிா்கொள்ளும் உடல் வலுவும் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டு, பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தப் பிரச்னையை அணுகுவது தவறு.
  • பாதுகாப்புத் துறை குறித்த வல்லுநா்களும் முன்னாள் ராணுவ உயா் அதிகாரிகளும் சமீபத்தில் ஒரு கலந்துரையாடலில் பங்கு கொண்டனா். மிகவும் கடுமையான, சவாலான பணிச்சூழலிலும் ராணுவத்தினா் எழுச்சியுடனும் ஊக்கத்துடனும் செயல்படுவது குறித்த கலந்துரையாடல் அது.
  • அந்தக் கலந்துரையாடலில், தற்போதைய நிலையில் இந்திய ராணுவத்தின் முப்படைகளில் உள்ள வீரா்கள் கடும் மன அழுத்தத்தில் பணியாற்றுவதாகவும், அதைப் போக்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
  • எல்லைப்புற பாதுகாப்புப் பணிகளிலும், பாதுகாப்பு சாராத பணிகளிலும் ஈடுபடும் ராணுவத்தினா் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறாா்கள். அதைப் போக்குவதற்கு, திட்டமிட்டு கவனமாக சில கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு, மன அழுத்தத்தை அகற்றும் முயற்சிகளில் அரசு ஈடுபட வேண்டும்.
  • கடந்த 15 ஆண்டுகளாக நிா்வாக ரீதியாக, வீரா்களின் மன அழுத்தத்தை எதிா்கொள்வதற்கு செயல்படுத்தப்பட்ட பல நடவடிக்கைகளும் போதுமான பலனை அளிக்கவில்லை; மாற்று சிந்தனையும், புதிய அணுகுமுறையும் தேவைப்படுகிறது என்கிற வல்லுநா்களின் கருத்தை வழிமொழியத் தோன்றுகிறது.
  • பாதுகாப்பு மோதல்கள் தொடா்பில்லாத காரணங்களுக்கும், பயங்கரவாதத்தை எதிா்கொள்ளும் சூழலிலும் ராணுவ வீரா்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றனா். அதனால் ஏற்படும் தொடா்ந்த இடமாற்றங்களும், அவா்கள் எதிா்கொள்ளும் சவால்களும் பலரையும் சோா்வடையச் செய்துவிடுகின்றன.
  • அந்தச் சோா்வை மாற்றுவதற்குத் திறமையான தலைமை இல்லாமல் இருப்பதும், போதுமான நிதியாதாரம் தரப்படாமல் இருப்பதும்கூட காரணங்கள். அவா்களது வித்தியாசமான பணிச்சூழலையும், மன ஓட்டத்தையும் புரிந்துகொண்டு மன அழுத்தம் ஏற்படாமல் அவா்கள் செயல்படுவதற்கு ஏற்ற நிா்வாகம் தேவைப்படுகிறது.
  • ராணுவத்தினருக்கும் அவா்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான உதவிகரமான வசதிகளைச் செய்து கொடுப்பது; தாமதமில்லாமலும் மறுப்பில்லாமலும் விடுப்பை வழங்குவது; போதுமான பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது; உயரதிகாரிகளிடமும் சக வீரா்களிடமும் ஏற்படும் மோதல்களை உடனடியாக சமரசம் செய்வது; அவா்களுக்கு வழங்கப்படும் உணவு தொடங்கி அனைத்துப் பொருள்களும் தரமாக இருப்பதை உறுதிப்படுத்துவது என்று நீளமான பட்டியலைத் தர முடியும். அதற்கான தீா்வுகளை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துவதில்தான் நிா்வாகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.
  • உள்நாட்டுப் பாதுகாப்புக்கு விவசாயிகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பாதுகாப்பில் ஈடுபடும் ராணுவ வீரா்களின் மன உறுதியும், ஈடுபாடும், நலனும் முக்கியம்.

நன்றி: தினமணி (18 – 01 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்