TNPSC Thervupettagam

மெத்தனம் தகாது!|கரோனா நோய்த்தொற்று குறித்த தலையங்கம்

March 9 , 2020 1773 days 768 0
  • தமிழகத்துக்கும் வந்து சேர்ந்துவிட்டது கரோனா நோய்த்தொற்று. இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் இப்போதைய எண்ணிக்கை 39. உலகளாவிய அளவில் 103 நாடுகளில்1,06,465 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,600 என்றால் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 60,228. நோய்த்தொற்று மேலும் பரவிவிடாமல் இருப்பதற்காக ஈரான் தனது சிறைச்சாலைகளில் உள்ள 54,000 கைதிகளைத் தற்காலிகமாக விடுதலை செய்திருக்கிறது. இத்தாலியோ எல்லா கால்பந்தாட்டப் போட்டிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த முடிவெடுத்திருக்கிறது. 

கரோனா நோய்த் தொற்று

  • ஈரானுடனான தனது எல்லையை ரஷியா மூடிவிட்டது. மேக்ஸôர் என்கிற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டிருக்கும் விண்வெளிக்கோள் புகைப்படம், மெக்காவிலிருந்து பெய்ஜிங் வரை உலகில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் கூட்டம் குறைந்துவிட்டிருப்பதைக் காட்டுகிறது.
  • பிரதமர் நரேந்திர மோடி தனது வழக்கமான ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கு விடை கொடுத்திருக்கிறார். சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது அறையை விட்டு வெளிவராமல் முகக் கவசங்களுடன் இருக்கிறார்; அரசின் கூட்டங்களில் பிரதமர் லீ கெகியாங்தான் கலந்துகொள்கிறார். உலகின் பல நாட்டுத் தலைவர்கள் பாதுகாப்புக் கருதி யாரையும் சந்திப்பதில்லை. பல தலைவர்கள் தினந்தோறும் மூன்றுமுறை உடல் பரிசோதனை செய்துகொள்கிறார்கள். இவையெல்லாம் அச்சத்தின் வெளிப்பாடு என்று ஒதுக்கிவிட முடியாது. உண்மையிலேயே உலகம் ஒரு மிகப் பெரிய சோதனையை எதிர்கொள்கிறது. 
  • உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, தங்களையும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் பாதுகாக்க மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் மாதந்தோறும் 8.09 கோடி முகக் கவசங்கள், 3 கோடி பாதுகாப்பு உடைகள், 16 லட்சம் கருப்புக் கண்ணாடிகள், 7.06 கோடி கையுறைகள், 29 லட்சம் லிட்டர் கைகளைச் சுத்தம் செய்யும் கிருமிநாசினிகள் (ஹேண்ட் சானிட்டைஸர்கள்) தேவைப்படுகின்றன. உலகம் முழுவதும் இவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
  • கரோனா நோய்த்தொற்று என்பது ஃப்ளூ காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளிலிருந்து வேறுபடுகிறது. அவையெல்லாம் இரண்டு மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரம் வரைதான் பொதுவெளியில் தாக்குப்பிடிக்க முடியுமென்றால், கரோனா நோய்த்தொற்றின் உள்வளர் காலம் (இன்குபேஷன் பீரியட்) 14 நாள்கள். கடினமான சுற்றுச்சூழலைத் தாக்குப்பிடிக்கும் சக்தி கரோனா நோய்த்தொற்றுக்கு உண்டு. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட எந்தவித அறிகுறிகளும் இல்லாமலேகூட 14 நாள்கள் பாதிப்பு தொடரக்கூடும். நோய்த்தொற்று அதிகரிக்க அதிகரிக்கத்தான் பாதிப்புகள் தெரியத் தொடங்கும். அதனால் விமான நிலையங்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளைப் பரிசோதிப்பதால் மட்டும் கரோனா பரவுவதைத் தடுத்துவிட முடியாது. 

சர்வதேச அளவில்...

  • வூஹானில் தொடங்கிய நோய்த்தொற்று சர்வதேச நோய்த்தொற்றாக மாறுவதற்கு மிக முக்கியமான காரணம், ஆரம்பத்தில் சீனா இது குறித்து ரகசியம் காத்ததுதான். கைமீறிப் போனபோதுதான் விவரம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. அதேபோன்ற தவறை இந்திய அரசும் செய்ய முற்பட்டிருக்கிறது. பீதி பரவக்கூடாது என்பதற்காக, மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகம் மருத்துவமனை ஊழியர்களை நோய்த்தொற்று குறித்த பரிசோதனை, சிகிச்சை, பாதிப்பு குறித்து வெளியில் சொல்வதற்குத் தடை விதித்திருக்கிறது. இது தவறான அணுகுமுறை.
  • வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களைப் பகிர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களை வலியுறுத்துவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். 
  • ரகசியம் காப்பது தேவையில்லாத, தவறான வதந்திகளை உருவாக்கி பீதியைத்தான் அதிகரிக்கும். ஏனைய நாடுகளைப்போல இந்தியாவிலும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட வேண்டும். திரையரங்குகள் உள்பட பொதுமக்கள் கூடும் நிகழ்வுகள் தடை செய்யப்பட வேண்டும்.
  • பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். பொது இடங்களில் கூடுவதற்கு அனுமதி தரக்கூடாது. பள்ளி, கல்லூரிகளில் கட்டாயமாக முகக் கவசம் வலியுறுத்தப்படுவதுடன், கை குலுக்கல், தழுவி வரவேற்கும் முறைகளுக்கு விடை கொடுத்தாக வேண்டும். 

மருத்துவமனைகளில்...

  • கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள, ஆதாரமில்லாத பல தகவல்கள் சமூக ஊடகங்களில்  பரப்பப்படுகின்றன. ஆளுக்குஆள் மருத்துவம் கூறுகிறார்கள்.
  • பொது மருத்துவமனைகளின் அவசியத்தையும், மருத்துவம் தனியார்மயமாக்கப்படுவதன் ஆபத்தையும் இப்போதாவது ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
  • மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறோம் என்பதை ஒவ்வோர் இந்தியனும் உணர வேண்டும். வரும்முன் காக்காவிட்டாலும், வந்துவிட்ட பிறகாவது சுதாரித்துக் கொள்வோம்.

நன்றி: தினமணி (09-03-2020) 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்