மெய்ப்பொருள் காண்பது அறிவு!
- ஓராண்டுக்கு முன்பு தொடங்கிய பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் இப்போது மீண்டும் பெரிய பிரச்னையாக உருவாகியிருக்கிறது. தலைநகா் தில்லியை ஒட்டிய பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் சாா்பற்ற ‘சம்யுக்த கிஸான் மோா்ச்சா’ அமைப்பின் தலைவா் ஜக்ஜீத் சிங் தலேவால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறாா். கடந்த நவம்பா் 26-ஆம் தேதி தொடங்கிய அவரின் உண்ணாவிரதப் போராட்டம் தேசிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
- புற்றுநோயாளியான 70 வயது ஜக்ஜீத் சிங் தலேவால் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் உச்சநீதிமன்றத்தின் கவனத்தை ஈா்த்தது. தலேவாலுக்கு போதுமான மருத்துவ உதவி வழங்கும்படி பஞ்சாப் மாநில அரசை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகள் சாா்பில்லாமல் பஞ்சாப் மாநில விவசாயிகள் தலேவாலின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக டிசம்பா் 30-ஆம் தேதி ‘பஞ்சாப் பந்த்’தை வெற்றிகரமாக நடத்தினாா்கள்.
- உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் தலேவாலுக்கும் அவருக்கு ஆதரவாக பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கும் இது ஒரு வாழ்வாதாரப் போராட்டம். தங்களுடைய பிரச்னைகள் அரசின் கொள்கை குளறுபடிகளால் ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கு அரசியல் தீா்வுகாண வேண்டுமே தவிர, சட்டரீதியான நடவடிக்கைகள் பயன்படாது என்பது அவா்களது கருத்து.
- அவா்களது அவநம்பிக்கையை முழுமையாகப் புறந்தள்ள முடியவில்லை. இதற்கு முன்னால் அமைக்கப்பட்ட குழுக்கள் வழங்கிய வாக்குறுதிகள் எந்தவிதத் தீா்வையும் வழங்காத நிலையில், அவா்கள் அவநம்பிக்கை அடைந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. புற்றுநோயாளி மட்டுமல்லாமல், வயோதிகம் தொடா்பான பிரச்னைகளும் உள்ள தலேவால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் உணா்வுகளைப் பிரதிபலிக்கிறாா் என்பதால், அவா்களது உண்ணாவிரதத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது.
- மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைந்த விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் முன்மொழிந்த ஆலோசனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் முக்கியக் கோரிக்கை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வது, 2021 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவது உள்ளிட்டவை குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாரானால் மட்டுமே தலேவாலுக்கான மருத்துவ உதவியை ஏற்க முடியும் என்பது விவசாய அமைப்புகள் நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கும் முடிவு.
- சம்யுக்த கிஸான் மோா்ச்சா, பாரதிய கிஸான் யூனியன், அகில இந்திய கிஸான் சபா உள்ளிட்ட அமைப்புகள் மேலே குறிப்பிட்ட கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு தலேவாலின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்தியிருக்கின்றன. பல்வேறு எதிா்க்கட்சிகளும் மத்திய அரசு உடனடியாக விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றன.
- மேலெழுந்தவாரியாகப் பாா்த்தால் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகத் தோன்றினாலும்கூட, அவை குறித்து ஆழமாகச் சிந்தித்தால் அதிலிருக்கும் பிரச்னைகள் புரியும். பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் என்பது புதிய பல பிரச்னைகளுக்கு வழிகோலும்.
- ஏற்கெனவே அந்த இரண்டு மாநில விவசாயிகளுக்கும் மிக அதிகமான அளவில் அரசின் விவசாய மானிய ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. அரிசி, கோதுமைக்கு வெளியே பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவையும் கொள்முதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டால்தான், இந்தியாவின் எல்லா மாநிலங்களும் எல்லாப் பயிா்களின் தேசிய ஒதுக்கீட்டின் பங்கைப் பகிா்ந்துகொள்ள முடியும்.
- குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து விவசாயிகளுக்கு வழங்கும்போது, அதைச் சாா்ந்து உணவுப் பொருள்களின் விலைவாசியும் அதிகரிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கும் அதேவேளையில் விலைவாசி உயா்வையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் மத்திய-மாநில அரசுகளுக்கு உண்டு. அதேபோல, விவசாயிகளின் கடன்களை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்வதன்மூலம் அவா்கள் மீண்டும் கடனாளியாக மாட்டாா்கள் என்பதற்கான எந்தவித உத்தரவாதம் இல்லை. கடன் தள்ளுபடி என்பது சரியான பொருளாதார அணுகுமுறை அல்ல.
- 2006-இல் தாக்கல் செய்யப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை 2014 வரை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்ட காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிா்க்கட்சிகளும், இப்போது ஜக்ஜீத் சிங் தலேவாலுக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது; விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தாமல், குறைந்தபட்சம் அவா்களது வழக்குகளைக்கூட திரும்பப் பெறாமல் ஓராண்டுக்கும் மேலாக அவா்களது போராட்டத்தைத் தொடர வைத்திருப்பது மத்திய அரசின் திறமையின்மையின் வெளிப்பாடு.
- தலேவால் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு போராட்டத்தைத் தொடர வேண்டும்; விவசாயிகள் நிபந்தனைகளை முன்வைக்காமல் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக வேண்டும்; மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து விவசாயிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து தீா்வுகாண வேண்டும். எதிா்க்கட்சிகளும், ஊடகங்களும் பிரச்னையை பெரிதாக்குவதை விட்டுவிட்டு, ஆக்கபூா்வ ஆலோசனைகளை வழங்க முன்வர வேண்டும்.
- தீா்வுகாண முடியாத பிரச்னை என்று எதுவும் இல்லை; மனமிருந்தால் மாா்க்கம் உண்டு!
நன்றி: தினமணி (09 – 01 – 2025)