TNPSC Thervupettagam

மெளனமே சிறந்த மொழி

March 15 , 2024 301 days 522 0
  • மனிதன் ஒரு சமூக விலங்கு என்று அழைக்கப்படுகின்றான். அவன் அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு காரணத்திற்காக குடும்ப உறுப்பினர்களுடனும், நண்பர்களுடனும் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது.
  • சில எதிர்வினைகள் சிக்கலை தீர்க்கும் என்று எண்ணுவோம். ஆனால், அவை இருக்கும் சிக்கலை மேலும் பெரியதாக்கி விடும். அவ்வாறான நேரங்களில் மௌனமே சிறந்த எதிர்வினை என்பதை நாம் அனுபவத்தால் உணர்கிறோம்.
  • வார்த்தைகளால் பேச முடியாத போது மெளனம் பேசுகிறது. மெளனம் நாம் நினைப்பதை விட அதிகம் கூறுகிறது. மெளனம் முட்டாள்களைக் கூட புத்திசாலியாக காட்டும். மெளனம் அழகானது, அமைதியானது. சிந்திக்க நேரம் கொடுத்து, பிரச்னையை அலசி ஆராய வைக்கிறது. நம் தவறுகளை நமக்கு உணர்த்துகிறது.
  • மெளன மொழி மகத்தான சக்தியை உள்ளடக்கியது. முக்கியமான நபர்களைக் கையாளும்போது அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்வது நல்லது. அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை விட, இது அதிக நன்மை பயக்கும். வாயை மூடிக்கொண்டு கேட்பது ஞானத்தின் அடையாளமே. அது பலவீனம் அல்ல, பலமே.
  • மெளனம் ஒரு சிறந்த ஆசிரியர். அது நமது கண்களை அற்புதமான விஷயங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. மெளனம் நமது படைப்பாற்றலைக் கொண்டு செயல்படவும், நமக்கு இசைவான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்ளவும் மிகவும் உதவுகிறது.
  • மற்றவர்களுடன் தொடர்புகளில் நாம் சிக்கிக் கொள்ளும் போதும், குழப்பத்தில் இருக்கும்போதும் மௌனம் நமக்கு மகத்தான நுண்ணறிவினைத் தருகிறது. நாம் அமைதியாக இருக்கும்போது, சக்திவாய்ந்தவராக உருவெடுக்கிறோம். மக்கள் ஒருபோதும் அமைதியை எதிர்ப்பதில்லை.
  • மெளனத்தை அனுபவிக்கும் போது, நமது உண்மையான பலத்தையும், பலவீனத்தையும் உணர்கிறோம். புத்திசாலிகள், பேசுவதா அல்லது அமைதியாக இருப்பதா என்பதில் ஐயமிருந்தால், மெளனமாய் இருப்பதையே விரும்புகிறார்கள். மெளனம் உண்மையில் சிறந்த தகவல் தொடர்பு ஆயுதமாகும்.
  • மெளனம் எந்த ஆளுமையும் நம்மைத் தொந்தரவு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. மெளனமே துரோகம் செய்யாத நண்பன். அது பலத்தின் ஆதாரம். மெளனமே மகிழ்ச்சியின் சிறந்த திறவுகோல். நாம் மெளனமாக இருந்துவிட்டால், நமக்கு எதிரில் உள்ளவர், நம்மைப் பற்றி, எந்தக் கருத்தும் கூற முடியாதவராகி விடுகிறார்.
  • நமக்கு நெருக்கமான உறவினர்கள் நம்மைப் பற்றி, தவறான கருத்து கூறும் போது, அதற்கு உரிய விளக்கத்தை தராமல், உடனே அங்கிருந்து எழுந்து மெளனமாக சென்று விடுவது நல்லது.
  • அப்படி செய்வதால் அந்த சம்பவத்தை நாம் மறந்து விடுகிறோம். ஆனால் அவர் ஏன் இப்படி விலகிச்சென்றார் என்று குழப்பம் அடைகிறார். அடுத்த முறை நம்மைப் பார்க்கும் பொழுது, அவர் நம்மை மரியாதையாக நடத்தக்கூடும்.
  • மனம் நினைவுகளால் கனத்திருக்கும்போதும், எதிர்பார்த்த ஒருவரை எதிர்பாராத இடத்தில் சந்திக்கும்போதும், பதில் சொல்லமுடியாத நிலையில் நாம் இருக்கும் போதும், வெகுநாட்களாக பேசாத ஒருவர் நம்முடன் பேசும் நிலையிலும், நாம் மனதில் எண்ணியதை விருப்பமான ஒருவரிடம் வெளிப்படுத்த தயங்கும் நிலையிலும், நம் முயற்சியில் வெற்றி பெறும்போதும் மெளனம் நம்மை ஊமையாக்கி அழகுபார்க்கும்.
  • உறவினர்களிடம் பூசல் வரும் போதும், நம்முடைய மேலதிகாரி நம்மை காரணமே இன்றி சத்தம் போடும்போதும், திடீரென யாரவது சிக்கலான கேள்வி கேட்கும் போதும், எந்த பதிலும் சிக்கலையே ஏற்படுத்தும் என்று உணரும் போதும், உறவுகள் நம்மிடம் கோபத்தை ஏற்படுத்தும் போதும், நமக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத விவாதம் ஏறபடும் இடங்களிலும் மெளனமே சிறந்த எதிர்வினையாக இருக்க முடியும்.
  • பல விரும்பத்தகாத பின் விளைவுகளை தவிர்க்க மெளனமே சிறந்த மொழியாக இருக்கிறது. பிற்காலத்தில், அன்று நாம் மெளனம் காத்து இருந்தால், இந்த பிரச்னையை தவிர்த்திருக்கலாம் என நினைப்பதை இதன் மூலம் தவிர்க்க முடியும்.
  • நம்மை அலட்சியபடுத்துபவரை, நமது மெளனத்தால் அலட்சியபடுத்த வேண்டும். நமது மெளனம் ஒருபோதும் சோகம் கலந்த மெளனமாக இருக்க கூடாது. நம்மை அவமதிப்பவரை நாம் ஒரு பொருட்டாகவே நினைக்காத போது, அந்த நபர் மிகவும் வெட்கப்பட்டு போவார்.
  • நமது கருத்துக்கு மதிப்பில்லாத இடங்களில் மெளனமாக இருத்தல் நலம். தற்புகழ்ச்சி உடையவர்களிடம் அதிகம் உரையாடாமல் மெளனமாக இருத்தல் நல்லது. நாம் தாழ்ந்த நிலையில் இருக்கும் போது மெளனமே சிறந்தது. தன்னைவிட அறிவு மிகுந்தவரிடம் பேசும் போது, அவரது கூற்றை செவிமடுத்து மெளனம் சாதித்தல் நல்லது. நம் முதுகுக்குப் பின்னால் நம்மை விமர்சிப்பவர்களை வெற்றி கொள்ள நாம் மெளனத்தை கடைபிடிப்பது நல்லது.
  • அதீத சலிப்பு, வெறுப்பு, கோபம், மகிழ்ச்சி ஏற்படும் தருணங்களில் நமக்கு சற்று மெளனம் தேவைப்படும். பிறகு ஆசுவாசப்படுத்தி கொண்டு செயல்படுதல் நல்ல பலன்களைத் தரும்.
  • நமக்கு எதிராக போலித்தனமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் இடங்களில் சிறு புன்னகை உடன் மெளனமாக கடந்து செல்வது நல்லது. வாக்குவாதம் செய்பவர்களுக்கு நம் மௌனமே மிகச் சிறந்த பதிலாக இருக்கும். எதிரியைக்கூட நண்பனாக்கும் அதிசய ஆயுதம் மெளனமே ஆகும்.
  • நாம் பேசும் வார்த்தைகள் நமக்கு எஜமானனாகி விடுகின்றன. ஆனால், நாம் பேசும் வார்த்தைகளை விட, நமது வாழ்வில் பல தருணங்களில் சிறந்த மௌனமே எதிர்வினையாக இருக்க முடியும். இதை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும். இனியாவது மௌனத்தின் பெருமையை உணர்ந்து வாழ்வில் செயல்படுவோம். மகிழ்வுடன் வாழ்வோம்.

நன்றி: தினமணி (15 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்