TNPSC Thervupettagam

மெஸ்ஸி செலுத்திய அஞ்சலி

December 21 , 2022 599 days 292 0
  • ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரான்ஸ் - குரோஷியா இறுதி ஆட்டத்தைப் பார்த்தவர்கள் 112 கோடி பேர் என்றால், ஆர்ஜென்டீனாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே கத்தாரில் நடந்த இறுதி ஆட்டத்தை உலகம் முழுவதும் 150 கோடி ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர்.
  • இறுதி ஆட்டத்தை கத்தாரின் லுசாயில் மைதானத்தில் பார்த்தவர்கள் 88,966 பேர். நவம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி இறுதி ஆட்டம்வரை, அந்தச் சிறிய வளைகுடா நாட்டுக்கு வந்த ரசிகர்களின் எண்ணிக்கை 7.6 லட்சம்.
  • பிரான்ஸ் இந்த முறை தனது கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளுமா, இல்லை லயோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி கோப்பையை வெல்லுமா என்கிற கேள்வியுடன் ஞாயிற்றுக்கிழமை கத்தாரின் லுசாயில் மைதானத்தில் ஆட்டம் தொடங்கியது. முதல் பாதி முடியும் வரை இரண்டு கோல்களுடன் ஆர்ஜென்டீனா அணி ஆடிய அபார ஆட்டம், கடைசி பத்தே நிமிஷங்களில் பிரான்ஸ் அணியின் இரண்டு கோல்களால் சமன் செய்யப்பட்டபோது, முன்னெப்போதும் இல்லாத பேரார்வத்துடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.
  • ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் ஆர்ஜென்டீனா அடித்த கோலை பிரான்ஸ் சமன் செய்ய, பெனால்ட்டி ஷூட் அவுட்டில் வெற்றியை முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆர்ஜென்டீனா 4-2 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் பெனால்ட்டி ஷூட் அவுட்டில் முடிவு நிர்ணயிக்கப்பட்டிருப்பது இது மூன்றாவது முறை. 1994-இல் பிரேஸில் இத்தாலியையும், 2006-இல் இத்தாலி பிரான்ஸையும் பெனால்ட்டி ஷூட் அவுட்டில்தான் தோற்கடித்தன.
  • 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்ஜென்டீனா உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. 2002-இல் பிரேஸிலுக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் தென் அமெரிக்க நாடு ஆர்ஜென்டீனா.
  • டீகோ மாரடோனாவால் மீண்டும் சாதிக்க முடியாத அந்த வெற்றியை, அவர் மறைந்து இரண்டாண்டுகள் கழித்து, தனது வாரிசு என்று அவரால் அறிவிக்கப்பட்ட லயோனல் மெஸ்ஸி சாதித்து, மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
  • 32 அணிகள் மோதிய 2022 உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் குழு நிலை, 16 அணிகளின் நிலை, காலிறுதி ஆட்டம், அரை இறுதி ஆட்டம், இறுதி ஆட்டம் என்று அனைத்திலும் கோல் போட்ட முதல் வீரராக சாதனை புரிந்திருக்கிறார் ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி. ஜெர்மனியின் லோதார் மேத்யூஸை பின்னுக்குத் தள்ளி, உலகக்கோப்பை போட்டிகளில் மிக அதிகமான ஆட்டங்களில் (26) விளையாடிய சாதனையாளராக அவர் உயர்ந்திருக்கிறார். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 2 கோல்கள், 13 உலகக் கோப்பை போட்டி கோல்கள், இந்த போட்டியில் மட்டும் ஆர்ஜென்டீனாவுக்காக 7 கோல்கள், இதுவரையில் அவரது அணிக்காக 98 கோல்கள் என்று மெஸ்ஸி படைத்த சாதனைகள் அவரை உலகின் தலைசிறந்த வீரராக உயர்த்தி இருக்கிறது.
  • கடந்த 92 ஆண்டுகளில் பிரேஸில், ஜெர்மனி, இத்தாலி, உருகுவே, பிரான்ஸ், ஆர்ஜென்டீனா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டும்தான் உலகக் கோப்பையை வென்றிருக்கின்றன. அதிலும் ஒருமுறைக்கும் அதிகமாகக் கோப்பையை வென்ற நாடுகள் பிரேஸில் (5), ஜெர்மனி (4), இத்தாலி (4), ஆர்ஜென்டீனா (3), பிரான்ஸ் (2), உருகுவே (2) ஆகியவைதான்.
  • 1958, 1962 ஆண்டுகளின் போட்டிகளில் பிரேஸில் தொடர்ந்து வெற்றி பெற்றதுபோல இந்த முறை வெற்றி பெற விழைந்த பிரான்ஸின் கனவு தகர்ந்தது. அதுமட்டுமல்ல, 2006-இல் இத்தாலியிடமும், இப்போது ஆர்ஜென்டீனாவிடமும் பிரான்ஸ் தோற்றிருப்பது நேரடி மோதலில் அல்ல, பெனாலிட்டி ஷூட் அவுட்டில் என்பதுதான் மிகப் பெரிய சோகம்.
  • முதன்முறையாக உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி ஆசியாவை நோக்கி நகர்ந்திருக்கும் வேளையில், சில ஆசிய அணிகள் வருங்காலத்தில் கோப்பையை வெல்லப் போவதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கி இருக்கின்றன. ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் சவூதி அரேபிய அணி 2 - 1 என்கிற வெற்றியை ஈட்டியதும், நான்கு முறை உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணியை ஜப்பான் வீழ்த்தியதும் அதற்கான எடுத்துக்காட்டுகள்.
  • தென்கொரியா, போர்ச்சுகலை வீழ்த்தியதை யாருமே எதிர்பார்க்கவில்லை. உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி மொராக்கோ. உலகின் 22-ஆவது இடத்தில் உள்ள ஆப்பிரிக்க நாடான மொராக்கோ, ஸ்பெயின், போர்ச்சுகல், பெல்ஜியம் அணிகளை தோற்கடித்தபோது கத்தாரில் கூடியிருந்த ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
  • லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர், பெபெ போன்ற பிரபலங்கள் ஒருபுறம் இருக்கட்டும், கத்தாரில் நடந்து முடிந்திருக்கும் 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி சில புதிய நம்பிக்கை நட்சந்திரங்களை அடையாளம் காட்டியிருக்கிறது. இங்கிலாந்தின் புகாயோ சகா, ஜூட் பெலிங்கம், நெதர்லாந்தின் கோடி கப்கோ, போர்ச்சுகலின் கொன்ஸாலோ ரமோஸ், ஆர்ஜென்டீனாவின் ஜுலியன் அல்வாரெஸ், குரோஷியாவின் ஜோஸ்கோ குவார்டியோல் போன்ற வீரர்கள் அடுத்த உலகக் கோப்பையில் சாதனை படைக்கக்கூடும்.
  • அடுத்த உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ மூன்று நாடுகளும் இணைந்து 2026-இல் வட அமெரிக்காவில் நடத்த இருக்கின்றன. அதற்காக ரசிகர்கள் இப்போதிருந்தே காத்திருக்கத் தொடங்கிவிட்டார்கள்.

நன்றி: தினமணி (21 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்