- மேகேதாட்டு அணை கட்டுவதற்கான தயாரிப்புகள் தொடங்கப்படவேண்டும் என்று கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர்டி.கே.சிவகுமார் பேசியிருப்பது தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.
- காவிரி நதிநீர்ப் பகுதியில் கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட மேகேதாட்டு என்னும் இடத்தில் 67.16 மில்லியன் கன அடி நீரைத் தேக்கிவைப்பதற்கான அணை ஒன்றைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு முயன்றுவருகிறது. 2014இல் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியது. அதற்குப் பிறகு அமைந்த பாஜக அரசும் மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டது.
- பெங்களூருவின் அதிகரித்துவரும் நீர்த்தேவையைச் சமாளிப்பதற்காகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப் படுவதாகவும் இதனால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் கர்நாடக அரசு தொடர்ந்து வாதிட்டுவருகிறது.
- காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018இல் இறுதித் தீர்ப்பை அளித்தது. அந்தத் தீர்ப்பு பெங்களூருவின் அதிகரித்துவரும் நீர்த்தேவையைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம் திறந்துவிட வேண்டிய காவிரி நீரின் அளவை ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. ஆகக் குறைத்தது. அதற்குப் பிறகும் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடுவதற்கான மாதாந்திர அட்டவணையைக் கர்நாடக அரசு முறைப்படி பின்பற்றுவதில்லை. மழை அதிகரிக்கும் காலங்களில் மட்டுமே சாகுபடிக்கு உரிய நேரத்தில் காவிரி நீரைத் தமிழ்நாடு பெற்றுவருகிறது.
- இந்தப் பின்னணியில், இரண்டு மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள நீரைத் தேக்கிவைப்பதற்காகக் கர்நாடக அரசு மேலும் ஒரு அணையைக் கட்டுவதைத் தமிழ்நாடு அரசு தீவிரமாக எதிர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்தப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் நீர், தமிழ்நாட்டின் காவிரிப் படுகை விவசாயத்துக்குப் பயன்பட்டு வருகிறது. மேகேதாட்டு அணை அதையும் தடுத்துவிடக் கூடும் என்ற விவசாயிகளின் அச்சம் நியாயமானதே. இந்த அணை கட்டப்பட்டால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை முன்வைத்து சூழலியல் ஆர்வலர்களும் இதை எதிர்த்து வருகின்றனர்.
- மேகேதாட்டு அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு சமரசமின்றி எதிர்க்கும் என்று தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், கர்நாடகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும் கூட்டணியில் உள்ளன. இதை முன்னிட்டு மேகேதாட்டு அணை விவகாரத்தில் அரசியல் கணக்குகள் சார்ந்த எந்தச் சமரசத்துக்கும் இடமளிக்கப்பட்டு விடக் கூடாது.
- மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் காவிரிப் படுகை விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை மத்திய அரசுக்கு விளக்குவதிலும் உச்ச நீதிமன்றத்தின் மூலம் நீதியைப் பெறுவதிலும் மாநில அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். பிற அரசியல் கட்சிகளும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
- காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக, உறுதியாக நிலைநாட்டப்பட வேண்டும். கர்நாடக அரசின் சுயநலப் போக்கு, தேசிய அரசியல் கட்சிகளின் அரசியல் கணக்குகள், அதிகார மையங்களின் அக்கறையின்மை ஆகியவற்றால் விவசாயிகள் துன்பத்தில் உழல்வதை இனிமேலும் அனுமதிக்க முடியாது.
நன்றி: தி இந்து (05 – 06 – 2023)