- மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும் என்பதோடு இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையுமாகும். இது தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதியில் நுழையும் இடத்தில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ளது.
- இந்த அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி ஆகும்.
- இந்த அணைக்குக் கர்நாடகாவில் அமைந்துள்ள அதன் சொந்த நீர்ப்பிடிப்புப் பகுதியான கபினி அணை மற்றும் கிருஷ்ண ராஜ சாகர அணைகளில் இருந்து நீர் வருகிறது.
- இந்த அணையின் அடிவாரத்தில் தமிழ்நாடு பொதுப் பணித்துறையால் பராமரிக்கப்படும் எல்லிஸ் பூங்கா என்ற பூங்கா உள்ளது.
- இது தமிழ்நாட்டின் 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் வசதிகளை வழங்குகிறது, எனவே தமிழ்நாட்டின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் கொடுக்கும் சொத்தாக /மூலாதாரமாக இது போற்றப் படுகிறது.
வரலாறு
- இத்திட்டத்தின் தலைமைப் பொறியாளராக இருந்த அயர்லாந்து நாட்டுப் பொறியாளரான வின்சென்ட் ஹார்ட்டின் மேற்பார்வையின் கீழ் இது கட்டப் பட்டது.
- இந்த அணைக் கட்டுமானத் திட்டமானது 17,000 பேரின் முயற்சியால் ஒன்பது ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிந்தது.
- இந்தக் கட்டுமானம் முடிந்த பிறகு காவேரியின் மீது கட்டப்பட்ட இந்த மேட்டூர் அணையானது உலகின் மிகப்பெரிய அணையாக உள்ளது.
- மெட்ராஸ் பிரசிடென்சியில் வசூலிக்கப்பட்ட வரியில் இருந்து இதற்கு நிதி வழங்கப் பட்டது.
- வருவாய்க் குழுத் தலைவரான சர்.சி.பி. ராமசுவாமி ஐயர் இந்த அணையின் கட்டுமானத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- இதனால் அணை கட்டப்பட்டிருந்த நயம்பாடி மற்றும் சில கிராமங்களைச் சேர்ந்த மக்களை அணை அதிகாரிகள் வெளியேற்றினர்.
- இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறையும் போது, இப்போதும் நயம்பாடியின் பழைய கிறிஸ்தவ தேவாலயமும், பிற கிராமங்களில் உள்ள சில இந்துக் கோயில்களும் அதிலிருந்துத் தெரிகிறது.
- நயம்பாடியில் இருந்து இடம்பெயர்ந்த அந்த மக்கள் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகால் தாலுகாவில் உள்ள மார்டல்லி, கவுடல்லி மற்றும் அதற்கு அருகிலுள்ள பிற கிராமங்களில் குடியேறியுள்ளனர்.
திறன்
- இந்த அணையின் மொத்த நீளம் 1,700 மீட்டர் (5,600 அடி) ஆகும்.
- இந்த அணை ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது.
- மேலும் மேட்டூர் நீர் மின் திட்டம் என்பது ஒரு மிகப் பெரியத் திட்டமாகும்.
- இந்த அணை, பூங்கா, முக்கிய நீர்மின் நிலையங்கள் மற்றும் அனைத்துப் பக்கங்களிலும் உள்ள மலைகள் ஆகியவை மேட்டூரை ஒரு சுற்றுலாத் தலமாக்குகின்றன.
- இந்த அணையிலிருந்து மேல்நோக்கிய திசையில் ஒகேனக்கல் அருவி வருகிறது.
- இந்த அணையின் அதிகபட்ச மட்டம் 120 அடி (37 மீ) மற்றும் அதிகபட்ச கொள்ளளவு 93.47 டிஎம்சி கன அடி ஆகும்.
- இந்த நீர்த்தேக்கத்தின் பரப்பளவு 42.5 சதுர கிலோமீட்டராகும்.
- அதன் கொள்ளளவு 93.4 பில்லியன் கனஅடி (2.64 கிமீ3) என்ற நிலையில், அது கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது .
- கேஆர்எஸ் அணை 1911 ஆம் ஆண்டு சர் எம் விஸ்வேஸ்வரய்யாவால் வடிவமைக்கப்பட்டு மைசூர் அருகே 1931 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப் பட்டது. இந்த வடிவமைப்பின் அடிப்படையில் மேட்டூர் அணையும் கட்டப் பட்டுள்ளது.
சர்ச்சையின் பின்னணி
- தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பிரச்சனை காரணமாக மேட்டூர் அணை சமீபகாலமாக அடிக்கடி செய்திகளில் அடிபடுகின்றது.
- கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கபினி அணை உள்ளிட்ட அணைகள் கட்டப் பட்டதால், மேட்டூர் அணைக்குப் பருவமழை காலங்களில் போதிய தண்ணீர் வருவதில்லை.
- இதனால் கர்நாடகா மற்றும் தமிழக மாநிலத்தின் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வருடத்தின் சில சமயங்களில் தண்ணீர் மிகவும் தேவைப்படும் போது அணை ஏறக்குறைய வறண்டு போகிறது.
- இது அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே கடும் சர்ச்சையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- காவிரிப் படுகை என்பது கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஒன்றிய பிரதேசம் ஆகியவற்றின் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இது மாநிலங்களுக்கு இடையேயான ஒரு படுகை ஆகும்.
- 1892 ஆம் ஆண்டு மற்றும் 1924 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் மைசூர் சமஸ்தானத்திற்கும் மதராஸ் மாகாணத்திற்கும் இடையில் போடப்பட்ட ஒப்பந்தங்களால் காவிரி நீரின் பயன்பாடு மற்றும் மேம்பாடு ஆகியவை கட்டுப் படுத்தப் பட்டது.
- இந்த ஒப்பந்தத்தில் கேரள மாநிலம் பங்கேற்கவில்லை.
- 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தமானது 50 ஆண்டுகளின் முடிவில் காலாவதியான நிலையில் தமிழ்நாடு அரசு 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்த் தகராறு சட்டம் 1956 என்ற சட்டத்தின் விதிகளின் கீழ் ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதற்காக முறையான ஒரு கோரிக்கையை வைத்தது.
- 1990 ஆம் ஆண்டு மத்திய அரசு காவிரி நதிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு தீர்ப்பாயத்தை அமைத்தது.
- தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட உடனே தமிழகம் கர்நாடகாவிற்குத் தண்ணீர் மற்றும் இன்ன பிற நிவாரணங்களை உடனடியாக விடுவிக்க ஒரு கட்டாயத் தடை உத்தரவை விதிக்க வேண்டும் என்று கோரியது.
- இதைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
- பின்னர் தமிழகம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் மனுவை மறுபரிசீலனை செய்யத் தீர்ப்பாயத்திற்கு உத்தர விட்டது.
- எனவே தீர்ப்பாயம் தமிழகத்தின் மனுவை மறுபரிசீலனை செய்து 1991 ஆம் ஆண்டு ஒரு இடைக் காலத் தீர்ப்பை வழங்கியது.
- கர்நாடகா ஒரு வருடத்தில் தமிழகத்திற்கு 205 பில்லியன் கன அடி தண்ணீரை 10 ஆண்டு காலப் பகுதியின் சராசரியாக வழங்க வேண்டுமென கணக்கிட்டுத் தீர்ப்பாயம் கூறியது.
- மேலும் கர்நாடகா மாநிலம் அதன் பாசன நிலப்பரப்பை அதிகரிக்கக் கூடாது என்றும் தீர்ப்பாயம் உத்தர விட்டது.
- ஆனால் கர்நாடகம் தனது நலன்களுக்கு இது மிகவும் விரோதமானது எனக் கருதி தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ஒரு அவசரச் சட்டத்தை வெளியிட்டது.
- ஆனால் உச்சநீதிமன்றம் அந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்ததால் இடைக்காலத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு கர்நாடகா தள்ளப் பட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலான ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன.
- 1997 ஆம் ஆண்டில் இடைக்கால உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்வதற்காக வேண்டி மிகவும் அதிகபட்ச அதிகாரங்கள் கொண்ட வகையில் காவிரி நதிநீர் ஆணையத்தை அமைக்க அரசு முன்மொழிந்தது.
- ஆனால் இந்தத் திட்டத்திற்குக் கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய அரசு அந்த ஆணையத்தின் அதிகாரங்களில் பல மாற்றங்களை செய்து காவிரி நதிநீர் ஆணையம் (CRA – Cauvery River Authority) மற்றும் காவிரி கண்காணிப்புக் குழு என இரண்டு புதிய அமைப்புகளை அமைக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது.
- 2002 ஆம் ஆண்டு கோடையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் போதிய அளவு பருவமழை பெய்யவில்லை.
- இந்த இரு மாநிலங்களிலும் உள்ள நீர்த்தேக்கங்கள் குறைந்த அளவிற்குச் சரிந்ததோடு, தவிர்க்க முடியாமல் பதட்ட நிலைமைகளும் அதிகரித்தது.
- அந்த இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகா மதித்து தமிழகத்திற்கு வேண்டிய விகிதாசாரப் பங்கை வழங்க வேண்டும் என்று தமிழகம் கோரியது.
- கர்நாடகா தனது சொந்தக் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய நீர்நிலைகளில் நீர் அளவுகள் போதுமானதாக இல்லை என்று கூறி, அப்போதையச் சூழ்நிலையில் எந்த வகையிலும் தண்ணீரையும் விட முடியாது என்று நிராகரித்தது.
- காவிரி நடுவர் மன்றம் 2007 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு 419 பில்லியன் அடிகள் நீர் மற்றும் கர்நாடகாவிற்கு 270 பில்லியன் அடிகள் நீர் என தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது.
- ஆனால் இந்தத் தீர்ப்பால் அதிருப்தி அடைந்த கர்நாடக மாநில அரசு இந்தத் தீர்ப்பாயத்தில் மறு ஆய்வு செய்யக் கோரி சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
- 2012 ஆம் ஆண்டில் CRA கூட்டம் நடத்தப் பட்ட நிலையில் அந்த CRA கூட்டத்தில் இருந்து கர்நாடக முதல்வர் வெளிநடப்புச் செய்தார்.
- அப்போது வழக்கானது உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், CRA அதை மறு சீரமைக்காத வரை ஒவ்வொரு நாளும் 1.25 பில்லியன் அடி அளவில் தண்ணீரை விடுவிக்க கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
- இதனால் கர்நாடகம் தண்ணீரை விடுவிக்கத் தொடங்கியது, ஆனால் CRA ஆணையத்தின் மற்றொரு கூட்டம் நடத்தப் படுவதற்கு அது அழுத்தம் கொடுத்தது.
- அடுத்தக் கூட்டத்தில் அம்மாநிலத்தில் காவேரி பாயும் மாவட்டங்களில் ஏற்பட்ட பெரிய அளவிலான போராட்டங்களுக்கு அடி பணிந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்தது.
- அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழகம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியது.
- கர்நாடகா இப்போது சில நாட்களுக்குத் தண்ணீர் திறப்பை மீண்டும் தொடங்கியது, ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் கர்நாடகா தண்ணீர் திறப்பை மீண்டும் நிறுத்தியது. இதனால் ஆபத்தான ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் நிலையில் போராட்டங்கள் அச்சுறுத்தின.
- மத்திய அரசு இதில் தலையிட்டு, கர்நாடகா மாநிலம் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று கூறியது.
- இதற்கிடையில் தமிழகத்தின் மனுவிற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றம் நீர்த் திறப்பு மற்றும் நீர்த் தேக்கங்களில் உள்ள நீர்மட்டம் குறித்த விவரங்களைப் பற்றி சிஆர்ஏவிடம் கேட்டது.
- இதையொட்டி நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்ய CRA உத்தரவிட்டது.
- கர்நாடகாவில் உள்ள நீர்த்தேக்கங்களை CRA ஆய்வு செய்த போது, தமிழகம் தனது நீர்த் தேக்கங்களை ஆய்வு செய்ய அனுமதி வழங்க மறுத்தது.
- செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் CRA அமைப்புடன் ஒத்துழைக்குமாறு தமிழகத்திற்கு உத்தரவிட்ட நிலையில் தமிழகம் அதற்கு ஒத்துழைத்தது.
- 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மனு ஒன்றைத் தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதியன்று CRA அமைப்பின் உத்தரவிற்கு இணங்கத் தவறியதற்காக கர்நாடகா அரசை உச்ச நீதிமன்றம் சாடியது.
- இதனால் வேறு வழியின்றி கர்நாடகா தண்ணீரைத் திறந்து விடத் தொடங்கியது.
- இதனால் கர்நாடகாவில் பெரும் போராட்டமும் வன்முறையும் வெடித்தது.
மேட்டூர் உபரி நீர்த் திட்டம்
- மேட்டூர் உபரி நீர்த் திட்டம் (சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டம் என்றும் இது அழைக்கப் படுகின்றது) என்பது 2019 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் 545 கோடி ரூபாய் செலவில் அறிவிக்கப்பட்டது.
- மேட்டூர் உபரி நீர்த் திட்டம் என்பது மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரைச் சேலம் மாவட்டம் சரபங்கா பகுதியில் உள்ள 100 வறண்ட ஏரிகளில் நிரப்பும் ஒரு திட்டமாகும்.
- இந்தத் திட்டப்படி மேட்டூரில் இருந்து உபரி நீரானது ஒரு கால்வாய் மூலம் திப்பம்பட்டியில் உள்ள நீரேற்றும் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
- திப்பம்பட்டியில் நீரேற்றும் நிலையத்தில் 940 குதிரை திறன் கொண்ட 10 மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு, குழாய்கள் மூலம் 12 கி.மீ தொலைவில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரியிலும், 1080 குதிரை திறன் கொண்ட 6 மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சப் பட்டு குழாய்கள் மூலம் நங்கவள்ளி ஏரியிலும் நீர் நிரப்பப்படும்.
- எம்.காளிப்பட்டி மற்றும் நங்கவள்ளி ஏரிகளில் இருந்து மேற்கொள்ளப் படும் நீர்த் திறப்பின் மூலம் மற்ற ஏரிகள் மற்றும் குட்டைகளில் நீர் நிரப்பப்படும்.
- இந்தத் திட்டத்தால் 4 ஆயிரத்து 240 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியினைப் பெறுவதோடு 38 கிராமங்களின் குடிநீர்த் தேவையும் இதனால் பூர்த்தி செய்யப்படும்.
- இந்தத் திட்டம் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டிற்கு வந்தது.
-------------------------------------