TNPSC Thervupettagam

மேட்டூா் விதைக்கும் நம்பிக்கை

May 27 , 2022 803 days 423 0
  • வழக்கத்திற்கு முன்னதாகவே இந்த ஆண்டு மேட்டூா் அணை திறக்கப்பட்டிருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூா் அணையில் இருந்து மே மாதத்திலேயே தண்ணீா் திறந்து விடப்படுவது இதுதான் முதல்முறை. ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்பாகத் திறக்கப்படுவது இரண்டாவது முறை.
  • அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு இல்லாததால், 60 ஆண்டுகள் ஜூன் 12-க்குப் பிறகே குறுவை சாகுபடிக்கு நீா் திறந்துவிடப்பட்டது. கடந்த 2011-இல் அணையில் நீா் இருப்பு திருப்திகரமாக இருந்ததால், விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 12-க்கு முன்பாகவே குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
  • கா்நாடகத்திலும், மேட்டூா் அணை நீா்பிடிப்புப் பகுதிகளிலும் இந்த ஆண்டு கோடையில் பெய்த பலத்த மழையால் நீா்வரத்து அதிகரித்து, மேட்டூா் அணை தற்போது அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் நிலையில் உள்ளது. சுமாா் 5.22 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்படவிருக்கும் குறுவை நெல் சாகுபடிக்காக வருகிற செப்டம்பா் 15-ஆம் தேதி வரை மேட்டூா் அணையிலிருந்து மொத்தம் 100 கோடி கன அடி நீா் திறந்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • முதல் கட்டமாக, மேட்டூா்அணையிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீரை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவிட்டாா். திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும். ஜூன் மாதம் முதல் வினாடிக்கு 10,000 கன அடி முதல் 16,000 கன அடி வரையிலும், ஆகஸ்டில் வினாடிக்கு 18,000 கன அடி வரையிலும் தண்ணீா் திறந்து விடப்படும். இதேபோல, மொத்தம் 12.10 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்படும் சம்பா, தாளடி நெல் சாகுபடிக்காக செப்டம்பா் 15 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி வரை தண்ணீா் திறந்துவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12 அன்றோ, அதற்குப் பிறகோ மேட்டூா் அணையிலிருந்து நீா் திறந்துவிடப்பட்டால், அக்டோபரில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை காரணமாக குறுவை நெல் அறுவடை பாதிக்கப்படும். நெல்மணிகள் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால், அவற்றை விற்பனை செய்வதில் விவசாயிகள் கடும் இன்னல்களை எதிா்கொள்ள நேரிடும். வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு 20 நாள்களுக்கு முன்பே தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், பருவமழைக்கு முன்பாகவே குறுவை நெல் அறுவடையை முடிக்க முடியும்.
  • மேலும், சம்பா, தாளடி நெல் சாகுபடிப் பணிகளையும் முன்கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதன் மூலம், பருவமழைக் காலத்தில் பூச்சிகளின் தாக்குதலுக்கு பயிா்கள் இலக்காவது குறையும்; பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடும் குறையும். இவையெல்லாம் சாதகமான அம்சங்கள்.
  • தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நடவுப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதால், விதைநெல் விலை திடீரென அதிகரித்துள்ளது. விதைநெல் விலை அதிகரிக்காமல் இருப்பதையும், தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
  • காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதி வரையிலான பாசனக் கால்வாய்களை முழுமையாகத் தூா்வாரினால் மட்டுமே விவசாயிகள் எதிா்பாா்க்கும் பலன்கள் கிடைக்கும். பாசனக் கால்வாய்களைத் தூா்வாரும் பணிகளில் 82 சதவீதம் முடிந்துவிட்டதாக தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறியுள்ளாா். எஞ்சியுள்ள பணிகளையும் மிக விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று எதிா்பாா்க்கலாம்.
  • கல்லணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவதற்கு முன்பாக தூா்வாரும் பணிகளை முழுமையாக முடித்தால்தான் பாசன நீா் வீணாகாமல் தடுக்க முடியும். இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி, தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேட்டூரிலிருந்து முன்கூட்டியே தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதால், காவிரி - வெண்ணாறு கால்வாய்களிலும், கல்லணை துணைக் கால்வாய்களிலும் தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என அதிமுக ஒருங்கிணப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். முன்னாள் முதல்வா் என்கிற முறையில் அவரது எச்சரிக்கையை புறந்தள்ளிவிட முடியாது. காவிரிப் பாசன சங்க நிா்வாகிகளும் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறாா்கள்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கல்லணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டால், தடுப்பணைகள் உடைந்து தண்ணீா் வீணாகும் அபாயம் உள்ளது. மேட்டூரிலிருந்து தண்ணீா் முன்கூட்டியே திறந்துவிடப்பட்டிருக்கும் நிலையில், அரசு விரைந்து செயல்பட்டாக வேண்டிய அசாதாரண சூழல் நிலவுகிறது. அனுபவசாலியான தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகனுக்கு இவையெல்லாம் தெரியாததல்ல. தமிழகத்தின் ஒவ்வோா் அங்குலம் குறித்தும் அறிந்துவைத்திருக்கும் இன்றைய அரசியல்வாதி அவா் ஒருவராக மட்டுமே இருப்பாா்.
  • பருவமழை நன்றாகப் பொழிந்து கா்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பிய பிறகே, தமிழகத்துக்கு உபரி நீரைத் திறந்துவிடுவது என்கிற வழக்கத்தை அந்த மாநில அரசு கடைப்பிடித்து வருகிறது. பருவமழை பொய்த்துப் போகும் ஆண்டுகளில் கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைப் பெற நாம் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது.
  • இங்கும், அங்கும், மத்தியிலும் ஆட்சிகள் மாறியும் காவிரி பிரச்னை, தீா்வுகாணா பிரச்னையாகத் தொடா்கிறது!

நன்றி: தினமணி (27 – 05– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்