மேற்கு வங்கத்தில் 50 நாள் வேலை
- மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசுத் துறைகளிலும் கிராமப்புற மக்களுக்கு 50 நாள்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பளிக்கும் திட்டங்களைத் தயாரிக்குமாறு முதல்வர் மம்தா பானர்ஜி அரசு அனைத்து துறை செயலாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டங்களை மாநில அரசின் சொந்த நிதியில் அமல்படுத்துமாறும் கட்டளை இடப்பட்டுள்ளது. வங்காளத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி வழங்கப்படாமல் முடக்கிவைக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
- கடந்த ஓராண்டாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அமல்செய்யப்படாமலிருப்பதால் துயரில் ஆழ்ந்துள்ள கிராமப்புற மக்களுக்கு உதவ, திட்டங்களைத் தயாரித்து வேலைவாய்ப்பு வழங்குமாறு பஞ்சாயத்து துறை அமைச்சக செயலர் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மம்தாவின் திட்டம் என்ன?
- நடப்பு நிதியாண்டில் இதுவரை 40.49 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு 2,152.58 லட்சம் மனித நாள்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் வேலை செய்வதற்கான தகுதி அட்டைகள் 2.56 கோடிப் பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க மக்களின் நலனுக்கு எதிரானது பாஜக என்று காட்டவும், ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டு அணுகுமுறையால் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கடுமையாக தண்டிக்கப்படுவதை உணர்த்தவும், மாநில அரசு இப்படி முடிவு எடுத்திருப்பதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- கிராமப்புற மக்களின் துயரங்களுக்குப் பாஜகதான் காரணம் என்று நடந்து முடிந்த 2024 மக்களவை பொதுத் தேர்தலில் செய்த பிரச்சாரத்தின் விளைவாக, திரிணமூல் காங்கிரஸுக்கு 29 தொகுதிகள் கிடைத்ததால் (2019இல் 22), தொடர்ந்து அதை நிலைநிறுத்த இந்த முடிவை மாநில அரசு எடுத்திருக்கிறது என்று திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கிறார். ஒன்றிய அரசு பணம் தராவிட்டாலும், மாநில அரசு தனது கருவூலத்திலிருந்து 50 நாள் வேலைக்குப் பணம் வழங்கும் என்றும் அவர் கூறினார்.
- கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்று தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் முதல்வர் மம்தா இதை அமல்படுத்துவதாகத் தெரிகிறது. புதிதாக மாநிலச் சாலைகளை அமைக்கும் திட்டங்களுக்கும் புதிய கட்டிடம் கட்டும் திட்டங்களுக்கும் இந்த நிதியும் தொழிலாளர்களும் பயன்படுத்திக்கொள்ளப்படுவார்கள். ஒப்பந்ததாரர் மூலம் பணிகளை அமல்படுத்தினால் அவர்கள் நவீன இயந்திரங்களையும் குறைந்த எண்ணிக்கைத் தொழிலாளர்களையும் கொண்டு வேலைகளைச் செய்வார்கள். எந்த அளவுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்கள் இந்த வேலைகளைச் செய்வார்கள் என்றும் பார்க்க வேண்டும்.
- பொதுப்பணித் துறை, பாசனத் துறை, பொது சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை ஆகியவற்றில் ஏராளமானவர்களை வைத்து வேலைவாங்கவது இயலாது என்று மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். அரசு இதை எப்படி எதிர்கொள்ளும் என்று தெரியவில்லை.
திட்டங்கள் தாமதம்
- வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தாலும், நிதியாண்டின் தொடக்கத்தில் இரண்டு காரணங்களால் அதை அமல்படுத்தவில்லை. முதலாவது, மக்களவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் புதிய அரசு திட்டங்கள் அமல்செய்வது தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அடுத்ததாக மாநில அரசிடம் கையிருப்பில் நிதி போதாமல் இருந்ததாலும் திட்டங்கள் அமலுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இனி நவராத்திரி, தீபாவளிப் பண்டிகைகளும் முடிந்து மக்கள் வீடுகளில் வேலையின்றி இருப்பார்கள் என்பதால் இப்போது திட்டம் அமலுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
- பெண்கள் மட்டுமே குடும்பத் தலைவர்களாக இருக்கும் குடும்பங்கள், பட்டியலினத்தவர், பழங்குடிகள் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
- கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் படுகொலைக்குப் பிறகு நகரங்களில் மக்களிடையே திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்புணர்வு அதிகரித்திருப்பதால், கிராமங்களிலும் அது பரவிவிடக் கூடாது என்று வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது என்று தெரிகிறது.
ரூ.6,911 கோடி நிலுவை
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், மேற்கு வங்க அரசுக்கு ஒன்றிய அரசு ரூ.6,911 கோடி நிலுவை வைத்திருக்கிறது. இதில் ரூ.3,732 கோடி ஊதிய வகையிலும் எஞ்சிய தொகை ஊதியம் அல்லாத வகையிலும் தரப்பட வேண்டும். இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் ஊழல் நடந்திருப்பதாலும், திட்டமிட்டபடி வேலைகளைச் செய்து முடிக்காததாலும் வேறு சில முறைகேடுகளுக்காகவும், ஒன்றிய அரசு தனது உயர் அதிகாரிகள் மூலமான தணிக்கைக்குப் பிறகு மேற்கு வங்கத்துக்குத் தர வேண்டிய தொகையை நிலுவையாக வைத்திருக்கிறது.
- கணக்குகளை முறையாக வழங்குவதுடன் திட்டங்களைச் சரிவர நிறைவேற்றிய பிறகே தொகையை வழங்க முடியும் என்று ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தையும் இதேபோல மாநில அரசு சரியாக நிறைவேற்றாமல் இருப்பதால் அதற்கான திட்ட உதவியும் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
- இந்தத் திட்டங்களைச் சரிவர நிறைவேற்றிய மாநிலங்களுக்கு நிலுவை இல்லாமல் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் எவ்வளவு வேண்டுமானாலும் வேலைவாய்ப்பு அளிக்கலாம், மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய தொகை மட்டுமே இதில் வரம்பு என்று இல்லை என்றும் தேவைப்பட்டால் கூடுதல் நிதி வழங்கவும் அரசு தயார் என்றும் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவிக்கிறார்.
- இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன, என்னென்ன வேலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன, எவ்வளவு வேலை முடிக்கப்பட்டது, எந்தெந்த இனத்துக்கு எவ்வளவு செலவுசெய்யப்பட்டது, செய்யப்பட்ட வேலை முறையாக அளக்கப்பட்டதா, தரவுகள் பதிவேட்டில் உடனுக்குடன் பதிவுசெய்யப்பட்டனவா, ஊதியப் பட்டியல் தயாரிக்கப்பட்டதா, அது சரிபார்க்கப்பட்டதா, ஒன்றிய அரசு அளித்த நிதி பயனாளிகளுக்கு உரிய வகையில் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதா என்பதெல்லாம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவிக்கப்படாததாலும், வேலைவாய்ப்பு உறுதி திட்டமாக எவையெல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுகிறதோ அவையெல்லாம் மீறப்படும்போதும்தான் நிலுவை வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கும் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை.
- இந்தத் திட்டத்தில் வேலைகேட்டு விண்ணப்பித்தவர்களுக்குத் தாமதமாக வேலை வழங்கினால், அந்தத் தாமதத்துக்குக்கூட பயனாளிகளுக்கு இழப்பீடு உண்டு என்றும் சுட்டிக்காட்டுகிறது.
நன்றி: அருஞ்சொல் (20 – 10 – 2024)