TNPSC Thervupettagam

மே தினச் சிறப்புகள்

May 5 , 2023 429 days 258 0

உழைப்பாளர் சிலையும் ராய் சவுத்ரியும்

  • சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை. உழைப்பாளர்களின் உழைப்பைப் போற்றும் வகையிலும் மே நாளின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்ட சிலை இது. மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 1959இல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டது.
  • சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1923 மே மாத மாலைப் பொழுதில்தான், பொதுவுடைமைவாதியான சிங்காரவேலர் முன்னெடுப்பில் இந்தியாவில் முதன்முதலாக மே நாள் இதே மெரினாவில் கொண்டாடப் பட்டது. மே நாள் கொண்டாட்டத்தில் மெரினா பிரிக்க முடியாததாக இருந்ததாலேயே, உழைப்பாளர் சிலை அங்கு வைக்கப்பட்டது.
  • கடினமான பாறையை 4 தொழிலாளர்கள் சேர்ந்து நகர்த்துவதைப் போன்ற உழைப்பாளர் சிலையை உருவாக்கியவர், தேவி பிரசாத் ராய் சவுத்ரி. சிறந்த ஓவியர், சிற்பி. 1954இல் சென்னை லலித் கலா அகாடமி நிறுவப்பட்டபோது, அதன் முதல் தலைவராக இருந்தவர் இவர். சென்னைக் கவின் கலைக் கல்லூரியின் மாணவராக இருந்தவர். அதன் முதல் இந்திய முதல்வராகவும் பணியாற்றியவர். லலித் கலா அகாடமியில் பணியாற்றிய காவலாளி, மாணவர் உள்ளிட்ட நால்வரை மாதிரியாகக் கொண்டு, இந்தச் சிலையை ராய் சவுத்ரி உருவாக்கினார்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மார்க்சியம் விளைவித்த மாற்றங்கள்

  • மார்க்சியம் அல்லது கம்யூனிசம் ஆகிய சொற்கள் உணர்த்த வருவதை முழுமையாக அறியாத பலரும், அவற்றின்மீது ஒருவித அசூயையை வெளிப்படுத்துவதையும், அனைத்தையும் சமமாகப் பாவிக்கத் தேவையில்லை, பகிர்ந்துகொள்ள அவசியமில்லை என நினைப்பவர்கள் இந்தக் கொள்கைகளை வெறுப்பதையும் பொதுவாகப் பார்க்கலாம்.
  • முதலாளிகளாக இருப்பவர்களைத் தாண்டி, மறைமுகமாக முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும் மார்க்ஸை எதிர்ப்பதற்கு அடிப்படைக் காரணம், ஒன்று முதலாளித்துவத்தைக் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே ஏற்பது அல்லது அதற்கு அடிபணிந்து போக விரும்புவதே.
  • ஆனால், கம்யூனிசத்தை வெறுப்பவர்களும் விலகி ஒதுங்குபவர்களும், அந்தக் கொள்கைகளால் அவர்கள் அடைந்துள்ள பலன்களை, சாதகமான மாற்றங்களைப் புறந்தள்ளிவிட்டுப் பேசுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
  • அன்றைய பிரஷ்யாவில் 205 ஆண்டுகளுக்கு முன் பிறந்த மார்க்ஸ், கம்யூனிசம் என்கிற சித்தாந்தத்தை முன்மொழிந்தார். அதற்குப் பிறகுதான் பொருள்முதல் வாதிகள், மார்க்சியம், சோஷலிசம், லெனினிசம், மாவோயிஸம், பிடலிஸம் போன்ற கொள்கைகள் உருவாகின. அவை பரவலாகத் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.
  • மார்க்ஸோ, மார்க்சியமோ உருவாகியிருக்காவிட்டால் பொருளாதாரத் துறை, யதார்த்தவாத இலக்கியம், மக்கள் கலைகள், வரலாற்றுப் பார்வை, சமூக மேம்பாடு, கல்வி பரவலாதல், மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைத்தல், தொழில் துறை – வேளாண் வளர்ச்சி, தொழிற்சங்க உரிமை, மக்கள் புரட்சியால் ஆட்சி மாற்றம் எனப் பல்வேறு விஷயங்களில் இன்றைக்கு எட்டப்பட்டுள்ள வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்காது.
  • தொழிலாளர்களுக்கு வேலை நேரம் நிர்ணயிப்பு, ஓய்வூதியம், சம்பளத்துடன் விடுமுறை, தங்கள் உரிமைகளை வலியுறுத்திப் பெறுவதற்குத் தொழிற் சங்கமாகக் கூடுதல், சமூகப் பாதுகாப்பு எனப் பல்வேறு விஷயங்களுக்கு மார்க்ஸும் அவர் வகுத்தளித்த கொள்கை அடிப்படையிலான தொடர் போராட்டங்களுமே ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளன.
  • உலகில் உள்ள அனைவரும் உடல் உழைப்பு, அறிவு உழைப்பு என ஏதோ ஒரு வகையில் உழைப்பைச் செலுத்தித்தான் சம்பாதிக்கிறோம், வாழ்கிறோம். இந்த உழைப்பாளிகளுக்கான அடிப்படை உரிமைகள் நிலவுடைமை சமுதாயக் காலத்திலும் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய முதலாளித்துவக் காலத்திலும் மதிக்கப்படாமலே இருந்துவந்தன. அடிமைத் தொழிலாளியாக வாழ்தல், ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்கு உழைத்தல், விடுமுறை இல்லா உழைப்பு எனப் பல்வேறு கொடூரங்கள் தொடர்ந்துகொண்டிருந்தன.
  • இப்படி உழைப்பால் உலகை உய்வித்துவரும் தொழிலாளிகள் தங்கள் உரிமைகளை உணரவும், அந்த உரிமைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடவும் வழியமைத்துத் தந்தது மார்க்ஸும் அவர் வகுத்தளித்த கொள்கையுமே என்பதை மறந்துவிடக் கூடாது.

மே நாள் பிறந்தது

  • உலக நாடுகள் பலவற்றில் 19ஆம் நூற்றாண்டில், தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 மணி நேரம்வரை வேலைபார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஒரு நாளுக்கான வேலை நேரத்தின் அளவு சட்டபூர்வமாக வரையறுக்கப்படாவிட்டால், தொழிலாளர் வர்க்கத்துக்கு முன்னேற்றம் சாத்தியம் இல்லை என்று கார்ல் மார்க்ஸ் கூறியிருந்தார். அப்போதிலிருந்தே எட்டு மணி நேர வேலை நாள் என்னும் கோரிக்கைக்கான போராட்டங்கள் தொடங்கிவிட்டன.
  • அமெரிக்காவில் இயங்கிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, 1886 மே 1 அன்று ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை என்பதை உறுதிப்படுத்தும் நாள் என்று அறிவித்து, நாடு முழுவதும் அன்றைய நாளில் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. திட்டமிட்டபடி அமெரிக்காவின் பல தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். பேரணிகளை நடத்தினார்கள். பலர் கைதுசெய்யப்பட்டனர். மே 3 அன்று ஒரு தொழிற்சாலையின் வாயிலில் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். அப்போது காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதை எதிர்த்து மே 4 அன்று சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். அப்போது வன்முறை வெடித்தது. பலர் கொல்லப்பட்டனர். இதற்காகத் தொழிலாளர் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் நால்வருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
  • சோஷலிச அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகளும் இடம்பெற்ற இரண்டாம் அகிலத்தின் முதல் மாநாடு, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 1889 ஜூலையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ‘ஹேமார்க்கெட் படுகொலை’யைக் கண்டித்ததுடன், அதற்கு வித்திட்ட போராட்டத்தை நினைவுகூரும் விதமாக 1890 மே 1 அன்று எட்டு மணி நேர வேலை என்கிற கோரிக்கைக்காக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 1891இல் நடந்த இரண்டாம் அகிலத்தின், இரண்டாவது மாநாட்டில், மே முதல் நாளை ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கான நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்டது. இப்படித்தான் மே 1 தொழிலாளர் நாளாக ஆனது. இது ‘மே நாள்’ என்றும் அழைக்கப்படுகிறது.

நன்றி: தி இந்து (05 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்