TNPSC Thervupettagam

மைக்ரேன் தலைவலியிலிருந்து மீள்வது எப்படி

September 9 , 2023 436 days 269 0
  • நம் வாழ்க்கை ஓட்டத் தையே தலைகீழாக மாற்றிவிடும் தன்மை சில தலைவலிகளுக்கு உண்டு. அத்தகைய தலைவலிகளுள் ஒன்றுதான் மைக்ரேன். இதைத் தமிழில் ஒற்றைத் தலைவலி என்று கூறுவோம்.
  • மற்ற தலைவலிகளுடன் ஒப்பிடுகையில் மைக்ரேன் தலைவலி அதிக சிரமத்தை ஏற்படுத்தக் கூடியது. உலகில் ஏழு பேரில் ஒருவர் மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்படுகிறார். இந்தியாவில் மட்டும் ஒரு நாளில் 1,90,000 பேர் மைக்ரேன் தலைவலியால் பாதிப்புக்கு உள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • மைக்ரேன் தலைவலி நரம்பியல் நோயாகவே மருத்துவ உலகில் கருதப் படுகிறது. பொருளாதாரத் தாக்கம் காரணமாக மைக்ரேன் தொடர்பான ஆராய்ச்சிகள் நமது நாட்டில் குறைவாகவே நடத்தப்படுகின்றன என்பது வருத்தமளிக்கக்கூடிய செய்தி. அன்றாட வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும் மைக்ரேன் தலைவலியிலிருந்து மீள்வதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மருத்துவ சிகிச்சைகள் என ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனால் மைக்ரேன் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.

தலைவலிக்கான காரணம்

  • மைக்ரேன் தலைவலிக்கான காரணங்களாக அதிகப்படியான ஒளியும் இரைச்சலும் கூறப் படுகின்றன. தீவிர மன அழுத்தம், உணவுமுறைகூடச் சில நேரம் மைக்ரேன் தலைவலியைத் தூண்டக்கூடும். கார், பஸ் போன்ற பயணங்களின்போது வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படுபவர்களுக்கு மைக்ரேன் தலைவலி ஏற்படக்கூடும்.
  • உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணம். உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, தலைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்களில் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால், அதன் இயக்கத்தில் மாறுபாடு உண்டாகி மைக்ரேன் தலைவலி வரும். சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருந்தாலும், உடலில் வெப்பம் அதிகமாகி தலைவலியை உண்டாக்கும்.
  • துரித உணவு வகைகளும் மைக்ரேன் தலைவலியைத் தூண்டலாம். மரபணுரீதியாகவும் மைக்ரேன் தலைவலி அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படலாம். பெற்றோருக்கு மைக்ரேன் தலைவலி இருந்தால் குழந்தைகளுக்கு மைக்ரேன் தலைவலி வருவதற்கு 75 சதவீதம் சாத்தியமுள்ளது.
  • மைக்ரேன் தலைவலி முதலில் பின் தலையிலிருந்து தொடங்கித் தீவிரமாகும் தன்மை கொண்டது. பெரும்பாலும் வலது பக்கமே வலி ஏற்படும். தலையின் பின்பகுதியில் ஏற்படும் வலியின் தாக்கத்தால் கழுத்து, கை, கால் என உடலின் வலது பகுதி முழுவதும் வலி பரவும்.
  • சிலருக்குத் தலையின் இரண்டு பக்கங்களிலும் வலி ஏற்படலாம். மைக்ரேனால் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் அதற்கான முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்வ தில்லை. முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் மூன்று மணி நேரத்திலிருந்து மூன்று நாள்கள் வரை தலைவலி நீடிக்கலாம்.

பெண்களுக்குக் கூடுதல் பாதிப்பு

  • மைக்ரேன் தலைவலியால் ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர். பெண் குழந்தைகள் பருவமடைந்த பிறகு மைக்ரேன் தலைவலி ஏற்படத் தொடங்குகிறது. இருப்பினும் 35 முதல் 45க்கு இடைப்பட்ட வயது உடைய பெண்கள்தாம் அதிக அளவில் மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாத மைக்ரேன் தலைவலி (Hemiplegic Migraine), கண் நரம்பு மைக்ரேன் தலைவலி (Ophthalmoplegic Migraine), முக நரம்பு மைக்ரேன் தலைவலி (Facioplegic Migraine) என மைக்ரேன் தலைவலியில் பல வகை உண்டு.

சிகிச்சை முறைகள்

  • மைக்ரேன் தலைவலிக்கு இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று, தலைவலியைத் தூண்டும் காரணங்களை முதலில் ஸ்கேனிங் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். தலைவலிக்கான காரணங்களை அறிந்த பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை ஆறு மாதம் முதல் ஒரு வருடம்வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது, வலி வரும் முன் சில அறிகுறிகளை நம்மால் அடையாளம் காண முடியும்.
  • சில பகுதிகள் வட்டமாகப் பார்வைக்குத் தெரியாமல் போவது (Scotoma), கண்ணில் ஒரு பக்கம் மட்டும் தெரியாமல் போவது (Hemianopsia), கண்ணில் பளிச் பளிச்என மின்னுவது (Teichopsia), பார்வையில் வரிவரியாகக் கோடுகள் தெரிவது (Fortification Spectra), கண்ணுக்குள் பூச்சி பறப்பது, கறுப்பான உருவங்கள் தோன்றுவது போன்ற அறிகுறிகள் மூலம் மைக்ரேன் வருவதை முன்கூட்டியே கணிக்கலாம்.
  • இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மைக்ரேன் தடுப்பு மாத்திரைகளை முன்கூட்டியே உட்கொள்வது மைக்ரேன் தலைவலியிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும். இத்துடன் தியானம், உடற்பயிற்சிகளைத் தினமும் சில நிமிடங்களுக்காவது செய்வதன் மூலம் மைக்ரேன் தலைவலியிலிருந்து மீள முடியும்.
  • தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மைக்ரேன் தலைவலிக்கான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. முடிந்தவரை மைக்ரேன் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதே நலம்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்