TNPSC Thervupettagam

மையப்படுத்தப்படும் உறுப்பு மாற்றுத் திட்டம்: வரமா - சாபமா?

September 8 , 2024 129 days 140 0

மையப்படுத்தப்படும் உறுப்பு மாற்றுத் திட்டம்: வரமா - சாபமா?

  • அண்மையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கூடுதல் செயலர் சங்ஸான், “உறுப்பு தானம் என்பது நம் சமூகத்தில் மிகவும் சகஜமான ஒன்றாக மாற வேண்டும். அந்த இலக்கை நாம் அடைய வேண்டுமானால், தொழில்நுட்பம், விதிமுறைகள், சட்டங்கள் முதலியவற்றில் புதிய சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும்” என தனது உரையைத் தொடங்கினார். இது மிகவும் வரவேற்கத்தக்க நோக்கமாகும். ஏனெனில், உறுப்பு தானம் என்பது இன்னும் நம் சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிராத ஒரு கருதுகோள். அவரது இந்த அவதானிப்பு மிகச் சரியான ஒன்றாகும்.
  • ஆனால், அந்த இலக்கை அடைய அவர் முன்வைத்த செயல்திட்டம்தான் பொதுச் சுகாதாரத் துறை வல்லுநர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. ‘ஒரு நாடு ஒரே செயல்திட்டம்’ என்பதுதான் அது.
  • உறுப்பு மாற்றம் என்பது, உயிருடனோ அல்லது மூளைச்சாவு அடைந்த ஒரு மனிதரின் உடலில் இருந்தோ, நன்றாகச் செயல்படும் ஒரு மனித உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அந்த உறுப்பு பழுதடைந்த இன்னொரு மனிதருக்குப் பொருத்துவதாகும். இதனால், உறுப்பு பழுதடைந்து மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் மனிதருக்குப் புத்துயிர் கிடைக்கிறது.
  • மனித சமூகத்துக்குப் பெரும்பயன் தரக்கூடிய இந்தச் சிகிச்சை முறைக்கு சட்டப்பூர்வமான அனுமதி தேவைப்படுகிறது. மேலும் மூளைச்சாவு என்பது இன்னும் நம் சட்டத்தில் முறையாக வரையறுக்கப்படாமல் உள்ளதால், மூளைச்சாவு என்பது சட்டப்பூர்வமாக வரையறுக்கப்படுவது மிக அவசரமான தேவையாக உள்ளது.

உறுப்பு மாற்றுச் சட்டம்

  • உறுப்பு மாற்று சிகிச்சை முறையை நெறிப்படுத்த, 1994ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம், ஒரு புதிய சட்டத்தை இயற்றியது - (The Transplantation of Human Organs Act 1994). பொதுச் சுகாதாரம் என்பது மாநிலங்களின் கீழ் வரும் ஒரு துறை. அவற்றுக்கான சட்டங்களை இயற்ற ஒன்றிய அரசுக்கு அதிகாரமில்லை. ஆனால், இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் கேட்டுக்கொண்டால், ஒன்றிய அரசு மாநிலங்களின் கீழ் வரும் துறைகளுக்கான சட்டங்களை இயற்ற முடியும். இந்த ஓட்டையைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு மேற்சொன்ன சட்டத்தை இயற்றியது.
  • இதையடுத்து அனைத்து மாநிலங்களும் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டன. இதில் ஆந்திர பிரதேசமும், ஜம்மு காஷ்மீர் மாநிலமும், ஒன்றிய அரசு உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையில், தத்தம் மாநிலத்துக்கான தனித்துவமான சட்டங்களை உருவாக்கிக்கொண்டன. இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு. ஏனெனில், தேவைப்படும்போது அதில் மாற்றங்களை ஒன்றிய அரசின் அனுமதியில்லாமல், மாநிலங்கள் தாமே செய்துகொள்ள முடியும். ஆனால், 70 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில சுயாட்சிக்காகக் குரல் எழுப்பிவரும் தமிழ்நாடு இதைச் செய்யவில்லை. ஒன்றிய அரசின் திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொண்டது. இதனால், திட்டச் செயலாக்கத்தில் மாறுதல்கள் தேவைப்படும்போது, மாநில அரசு தேவையான மாற்றங்களைச் செய்ய முடியாமல்போகிறது. இது பெரும் பிழை.
  • ஒன்றிய அரசின் உறுப்பு மாற்றுச் சட்டத்தின் நோக்கம், ‘மனித உறுப்புகள் அகற்றுவதைக் கட்டுப்படுத்தி, பத்திரமாக பாதுகாத்து, பின்னர் சிகிச்சைகளுக்காக அவற்றை பயன்படுத்துதல்’ மற்றும் ‘உறுப்பு மாற்றுச் செயல்பாடுகளில் வணிக நோக்கத்தைத் தடுப்பதும்’ எனச் சொல்லப்படுகிறது. ஆனால், தானமாகப் பெறப்பட்ட மனித உறுப்புகள், எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பது தொடர்பான வழிகாட்டுதல் அச்சட்டத்தில் இல்லை. விநியோகிப்பதை ஒன்றிய சட்டம் மாநிலத்தின் பொறுப்பிலே விட்டுவிட்டது என எடுத்துக்கொள்ளலாம்.
  • மூளைச்சாவு அடைந்த உடலிலிருந்து, அனுமதி பெற்று எடுக்கப்படும் உடல் உறுப்புகள் அனைத்தும் சமூகத்தின் சொத்து ஆகும். சுகாதாரத் துறை மாநிலப் பட்டியலில் வருவதால், அந்த உறுப்புகள் மாநிலத்தின் சொத்தாகின்றன. எனவே, அவற்றை விநியோகிக்கும் உரிமையும் மாநிலத்துக்கே உள்ளது. சமத்துவம், அனைவருக்குமான சுகாதார உரிமை போன்ற விழுமியங்களின் அடிப்படையில், ஏழை, பணக்காரர் என்னும் வேற்றுமைகள் இல்லாமல், முதலில் பதிவுசெய்த நோயாளிகளுக்கு முதல் உரிமை என்னும் வகையில் உறுப்புகள் அளிக்கப்படுவதே சரி.
  • இந்தச் சட்டம் 1995ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. ஆனால், 1995 முதல் 2008 வரை மூளைச்சாவு அடைந்த உடல்களிலிருந்து உறுப்பு தானம் பெறும் திட்டம் பெரிதாக வெற்றிபெறவில்லை. காரணம், மூளைச்சாவு அடைந்த உடல்களிலிருந்து உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்கும் வழிகளைச் சொன்னதே தவிர, அந்த உறுப்புகளை யாரெல்லாம் பெற முடியும் என்பதைத் தெளிவாக வரையறுக்கவில்லை.

முன்னோடியான தமிழ்நாடு

  • தமிழ்நாடு அரசு 2008ஆம் ஆண்டு, மூளைச்சாவு அடைந்த உடல்களிலிருந்து, உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று, தேவைப்படும் நோயாளிகளுக்குப் பொருத்தும் (Cadaver Transplant Plan - CTP) என்றொரு திட்டத்தை வகுத்து, அதைச் செயல்படுத்த பல தொடர் அரசாணைகளை வெளியிட்டது. உடல் உறுப்பு தான வரலாற்றில் தமிழ்நாடுதான் முதன்முதலாக தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்புகளை எப்படி விநியோகிப்பது என்பது தொடர்பாக தெளிவான வழிமுறைகளை வகுத்த மாநிலம் ஆகும். அந்த முன்னோடி அரசாணைகள் அன்றைய அரசின் நிர்வாகச் செயல்திறனை பறைசாற்றும் ஒன்று எனச் சந்தேகமின்றிச் சொல்லலாம். அவை இன்று பல மாநிலங்களில் நகலெடுக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகின்றன.
  • இதன் விளைவாக தமிழ்நாடு அரசின் உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் மிகக் குறுகிய காலத்தில மிகப் பெரும் வெற்றியை அடைந்தது. 2010ஆம் ஆண்டு இதை ஆய்வுசெய்த உலகச் சுகாதார ஆய்வு நிறுவனம் (World Health Organisation - WHO), இதை உலகின் வளரும் நாடுகளுக்கான முன்மாதிரித் திட்டம் எனப் புகழ்ந்தது. இந்தத் திட்டத்தின் வெற்றியை ஆராய்ந்து, அதன் காரணங்களை ஒரு முக்கியமான கட்டுரையாக வெளியிட்டது ‘பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ என்னும் புகழ்பெற்ற மருத்துவ ஆய்விதழ்.
  • தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டம் வெற்றிகரமாக வளர்ந்து 2015ஆம் ஆண்டில், ‘தமிழ்நாடு உறுப்பு மாற்று சிகிச்சை நிறுவனம்’ (Transplantation Organisation Of Tamilnadu - Transtan) ஆக மலர்ந்தது. இதற்கிடையில், ஒன்றிய அரசின் உறுப்பு மாற்றச் சட்டம் – 1994, 2011ஆம் ஆண்டில் மாற்றப்பட்டு அதன் புதிய விதிகள் 2014ஆம் ஆண்டு அமலுக்கு வந்தன. மாற்றப்பட்ட இந்தப் புதிய சட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தது.
  • இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம், தெளிவான பணிகளும், பொறுப்புகளும் வரையறுக்கப்படாமல் ஒன்றிய அரசு புதியதாக உருவாக்கிய ‘தேசிய உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று சிகிச்சை நிறுவனம் (National Organ and Tissue Transplantation Organisation - NOTTO) நிறுவனம் ஆகும்.

இதன் சில ஆட்சேபகரமான பிரிவுகளை இங்கே பார்க்கலாம்:

  • 13c: ஒன்றிய அரசு தேசிய அளவில் இந்த உறுப்புகளை எடுக்கவும், பத்திரப்படுத்தவும் தேவையான ஒரு கட்டமைப்பை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உருவாக்கலாம். அதேபோல பிராந்தியக் கட்டமைப்புகளையும் உருவாக்கலாம்.
  • 13d: தேசிய அளவில் உறுப்பு தானம் செய்பவர்கள் மற்றும் தேவைப்படுவோர் தொடர்பான தகவல்கள் பதிவுசெய்யப்படும்.
  • இந்த இரண்டு பிரிவுகளும், உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை மையப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை. இவற்றை செயல்படுத்தும் விதிகள் கீழே:

31. தேசிய மற்றும் பிராந்திய உறுப்பு மாற்ற ஒருங்கிணைப்பு நிறுவன அமைப்பு மற்றும் செயல்முறைகள்:

  • உறுப்பு மாற்று சிகிச்சைகளை ஒருங்கிணைக்க தேசிய அளவில் ஒரு உயர்நிறுவனம் உருவாக்கப்படும். பிராந்திய அளவிலும், மாநில அளவிலும் ஒருங்கிணைக்கும் நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
  • மாநிலங்களில் இருக்கும் மருத்துவமனைகள் மாநில மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு நிறுவனங்களுடன் இணைக்கப்படும்.
  • மாநில உறுப்பு மாற்று சிகிச்சை நிறுவனங்களும் பிராந்திய மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு நிறுவனங்களுடன் இணைக்கப்படும்.
  • உறுப்புகளை யாருக்குப் பொருத்துவது என்பது தொடர்பான முடிவுகளை மாநில மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் எடுக்கும். (ஒரு தேசம், ஒரு திட்டம் என்னும் கொள்கை நிறைவேற்றப்பட்டால், இம்முடிவுகள் டெல்லியில் மட்டுமே எடுக்கப்படும்).

32. தேசிய உறுப்பு மாற்றுப் பதிவேடுகளில் தானம் கொடுப்போர் மற்றும் பெறுவோர் தொடர்பான தகவல்கள்:

  • உறுப்பு தானம் கொடுப்போர் மற்றும் பெறக் காத்திருப்போர் தொடர்பான அனைத்து தகவல்களும் மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்டு தேசிய பதிவேட்டில் வைக்கப்படும். (இதன் அர்த்தம் என்னவெனில், மாநில அரசுகளைத் தாண்டி, ஒன்றிய அரசு மருத்துவமனைகளில் இருந்து தகவல்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் என்பதுதான். இது தொடர்பாக தேசிய பதிவேட்டுக்குக் தேவையான தகவல்கள் அனைத்தும் மாநில அரசிடம் உள்ளன).
  • இது தவிரவும், பல சர்ச்சைக்குள்ளாகும் வகையிலான விதிகளும் இந்தத் திட்டத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் (அது எந்த நோயாக இருந்தாலும்) அவர்களுடன் வரும் உறவினர்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பான தகவல்கள் சொல்லப்பட்டு, அவர்களது ஒப்புதலோ அல்லது மறுப்போ பெறப்பட வேண்டும் என்பது. நடைமுறையில், இது மூளைச்சாவு அடைந்த நோயாளிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனச் சொன்னாலும், சட்டத்தில் உள்ள இந்தச் சாத்தியம் தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. நீதிமன்றங்களில், சட்டம் மட்டுமே செல்லுபடியாகும்.

ட்ரான்ஸ்டானும் நோட்டோவும்

  • ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட உறுப்பு மாற்றுச் சட்டம் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதை அமல்செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து அழுத்தம்கொடுக்கப்பட்டுவந்தது. தமிழ்நாடு அரசு, புதிய சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்குச் சரியான விளக்கங்கள் கிடைக்காததால், புதிய சட்டத்தை அமல்செய்வதைத் தள்ளிப்போட்டுக்கொண்டேவந்தது.
  • தமிழ்நாடு அரசின் உறுப்பு மாற்று நிறுவனம் ‘ட்ரான்ஸ்டான்’ (Transtan), 2015ஆம் ஆண்டு வாக்கில், ஒன்றிய உறுப்பு மாற்று நிறுவன அதிகாரிகளையும், ஒன்றிய சுகாதாரத் துறை அதிகாரிகளையும் அழைத்து இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. பேச்சு வார்த்தையின் இறுதியில், தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்ட மாற்றங்களைப் பரிசீலித்து பதில் சொல்கிறோம் எனச் சொல்லிச் சென்றார்கள். ஆனால், அதற்கான பதில் இன்றுவரை வரவில்லை.
  • இதற்கிடையில், ஒன்றிய உறுப்பு மாற்று நிறுவனமான நோட்டோ (Notto), தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு, நேரடியாக மருத்துமனைகளுடன் தொடர்புகொண்டு, ‘உறுப்பு மாற்று சிகிச்சைகள் செய்ய வேண்டுமெனில், எங்களிடம் நேரடியாகப் பதிவுசெய்துகொள்ளவும்’ எனக் கடிதம் அனுப்பினார்கள். இது மாநில உரிமைகளுக்கு எதிரான செயல் என்று தமிழ்நாடு அரசு மிகக் கடுமையான ஒரு கடிதத்தை எழுதி, இந்த விதிமீறலை நிறுத்தியது.
  • ஆனாலும், ஒன்றிய அரசு, புதிய சட்டத்தைத் தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து அழுத்தம்கொடுத்துவந்தது. 2010 மார்ச் 24, அதிமுக அரசின் இறுதி சட்டமன்ற கூட்டத்தின் இறுதி நாளன்று மாலை 4 மணிக்கு, இதுபற்றிய விவாதங்கள் எதுவும் இல்லாமல் ஒன்றிய அரசின் மாற்றப்பட்ட சட்டத்தைத் தமிழ்நாடு அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. இதன் மூலம், உறுப்பு தானத் திட்டத்தின் அதிகாரங்கள் ஒன்றிய அரசின் நோட்டோ நிறுவனத்துக்குச் சென்றுவிட்டன.

ஒன்றிய அரசின் நோக்கம் என்ன?

  • தமிழ்நாடு உறுப்பு தானத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அது மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் என்பதே. 2008ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் மக்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள், தன்னார்வல நிறுவனங்கள் எனத் திட்டத்தின் பங்குதாரர்கள் (stakeholders) அனைவருடனும் வெளிப்படையான கலந்துரையாடல் வழியே உருவாக்கப்பட்டது. இதனால், இந்தத் திட்டம் தொடர்பான அறிதலும், பங்கேற்பும் சமூகத்தில் மிக இயல்பாக உருவாகி, இது வெற்றிபெற முக்கியமான காரணியாக இருந்தது. அரசு மருத்துவ நிபுணர்களின் பொறுப்பில், மருத்துவ அறிவியலின் வளர்நுனியில் உருவாகிய திட்டம் என்பதால், பல தொடர் மாறுதல்களின் வழியே வளர்ந்து செழுமையுற்றது.
  • இது அன்றைய முதல்வர்களின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. ஒவ்வொரு முறை உறுப்பு தான சிகிச்சைகள் நிகழும்போதும், அது தொடர்பான தகவல்கள், இந்தத் திட்டத்தின் பொறுப்புக் குழுவில் இருந்த மருத்துவ நிபுணர்களுக்கும், பொதுச் சுகாதாரத் துறைச் செயலர் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கும், முதல்வருக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டன.
  • தேவைப்படும் மாற்றங்கள் உடனுக்குடன் செய்யப்பட்டன. வழக்கமான அரசுத் திட்டங்களில் உள்ள இறுக்கங்கள் இல்லாமல், ஒரு நெகிழ்வுத்தன்மையுடன், மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலில் இருந்தமையால் தேவைப்பட்ட தொடர் மாற்றங்களை மருத்துவத் துறை நிபுணர்கள் மிக விரைவாகவும் எளிதாகவும் இதை மேற்கொண்டனர். இந்த வேகமும், தொடர் மாற்றங்களுமே தமிழ்நாடு உறுப்பு தானத் திட்டத்தைப் பெருவெற்றியடையச் செய்தது என்றால் அது மிகையாகாது.
  • ஆனால், 2015ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட ஒன்றிய அரசின் நோட்டோ நிறுவனம், மாநில அரசுகளை ஒதுக்கிவிட்டு, மாநிலத்தில் உள்ள எல்லா அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, உறுப்பு தானத் திட்டத்தில் பங்குபெற ஒன்றிய அரசின் நிறுவனத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என அனுப்பிய கடிதம் ஒன்றிய அரசின் நோக்கங்கள் தொடர்பான சந்தேகங்களை எழுப்புகின்றன.

மையப்படுத்துதல் சரியா?

  • உறுப்பு தானத் திட்டம் மையப்படுத்தப்பட்டால், இதன் செயல்பாடுகள், நிர்வாகம், அதிகாரம் என அனைத்துமே மாநில அரசின் கைகளிலிருந்து ஒன்றிய அரசின் கீழ் சென்றுவிடும். இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான தேவைகளான விரைந்து செயல்படும் தன்மை, தேவைப்படும் தொடர் மாற்றங்களை உள்ளூர் களநிலவரத்துக்கேற்ப உடனுக்குடன் மாற்றும் அதிகாரம், வெளிப்படைத்தன்மை முதலியன பலியாகிவிடும்.
  • இதற்கு ஒரு உதாரணமாக அண்மையில் மையப்படுத்தப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடுகளைச் சொல்லலாம். குஜராத் மற்றும் பிஹார் மாநிலங்களில், நீட் தேர்வின் கேள்வித்தாள் வெளியானதும், தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததும் பத்திரிகைகளில் செய்திகளாக வெளியாகின. பெருமளவு முறைகேடுகள் நடக்கவில்லை என ஒன்றிய அரசு விளக்கமளித்து அதைச் சமாளித்தாலும், இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடக்கும் சாத்தியங்கள் உள்ளன என்று கல்வித் துறையில் இயங்கிவரும் கேரியர் 360 நிறுவனத்தின் தலைவர் பெரி மகேஷ்வர் போன்றவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
  • இந்த முறைகேடுகளில், நீட் தேர்வு எழுதும் 23 லட்சம் பேரில் 100 பேர் பயன்பெறுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்த 100 பேர் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்று, இந்தியாவின் உயர் மருத்துவக் கல்லூரிகளான டெல்லி எய்ம்ஸ் போன்ற கல்லூரிகளில் மற்ற மாநில மாணவர்கள் எவருமே பங்குபெற முடியாத ஒரு அவலநிலை ஏற்படும். குஜராத் மாநிலத்திலும், பிஹார் மாநிலத்திலும் முறைகேடுகள் நடந்து, அதனால், தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டால், அதற்கான நிவாரணத்தை யாரிடம் கேட்டுப்பெறுவது?

விழிப்போடு இருப்பது நலம்!

  • நாளை இதுபோன்ற ஒரு முறைகேடு நடந்து, தமிழ்நாட்டின் நலன் பாதிக்கப்பட்டால், மாநில மக்களுக்கான நிவாரணம் எப்படிக் கிடைக்கும்? தமிழ்நாட்டில் முறைகேடுகளே நடக்காதா? எனக் கேள்வி எழலாம். நியாயமான கேள்விதான்!
  • வாதத்துக்காக, சென்னையில் உறுப்பு மாற்றுத் திட்டத்தில் முறைகேடு நிகழ்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த முறைகேடு வெளியில் வரும்போது, தமிழ்ச் சமூகம் எதிர்வினையாற்றும். தமிழ்நாடு அரசின் அதிகாரிகளும், அமைச்சர்களும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். ஆனால், மத்திய பிரதேசத்தில் முறைகேடு நடந்து, தமிழ்நாட்டில் இருந்து உறுப்புகள் அங்கே எடுத்துச்செல்லப்பட்டு, முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டில் உறுப்புகள் தேவைப்பட்டுக் காத்திருக்கும் நோயாளிகளுக்கு யார் நிவாரணம் அளிப்பார்? தமிழ்நாடு அரசா, மத்திய பிரதேச அரசா?
  • மாநிலங்களின் பட்டியலில் வரும் மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பான எல்லா முடிவுகளையும் டெல்லியில் அமர்ந்திருக்கும் ஒரு குறுங்குழுதான் தீர்மானிக்கும் / நிர்வகிக்கும் என்றால், மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் எதற்கு? இது இந்திய அரசமைப்புச் சட்டம் உருவகிக்கும் மூன்றடுக்கு (ஒன்றிய, மாநில, உள்ளாட்சி) நிர்வாக அமைப்புக்கே எதிரானது அல்லவா?
  • ஒன்றிய அரசின் ‘ஒரு நாடு ஒரு செயல்திட்டம்’ என்னும் இந்த அணுகுமுறை உறுப்பு தானத் திட்டத்துக்குச் சரியானதா, இல்லையா என்பது பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இன்று விட்டுவிட்டு, எதிர்காலத்தில் புலம்பிப் பயனில்லை.

நன்றி: அருஞ்சொல் (08 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்