TNPSC Thervupettagam

மைய அதிகாரக் குவிப்புக்கு மகத்தான அடி

May 22 , 2023 598 days 407 0
  • துரதிருஷ்டங்கள் எப்போதும் தனித்தனியாக வருவதில்லை என்பார்கள். இந்த ஆண்டு மே 7 தொடங்கிய வாரம், பாரதிய ஜனதாவுக்கு மிகவும் கொடூரமானதாகிவிட்டது. மே 11இல் உச்ச நீதிமன்றம் இரண்டு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியது. அந்த இரண்டுமே அரசமைப்புச் சட்ட (ஐந்து நீதிபதிகள்) அமர்வுகளால் வழங்கப்பட்டதாகும்; இரண்டுமே அரசமைப்புச் சட்டத்தின் முக்கியமான கூறுகளைத் தெளிவாக விளக்கியுள்ளன. அந்த இரண்டுமே ஒன்றிய அரசின் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்ட இரண்டு அறைகளாகும். இவை போதாதென்று, கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிவுகளும் மே 13இல் வெளிவந்தன.
  • மிகவும் மோசமான பாதிப்புகள் நேரும்போதெல்லாம் பாஜக அரசுகள் மௌனமாகிவிடும். எப்போதும் தன்னம்பிக்கை பொங்கப் பேசும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, தங்கு தடை ஏதுமின்றிக் கருத்தைத் தெரிவிக்கும் முன்னாள் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவோ கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து வாயையே திறக்கவில்லை.

அரசமைப்புச் சட்ட அத்துமீறல்கள்

  • தில்லி மாநில அரசில் யாருக்கு அதிக அதிகாரம் என்ற வழக்கில், மிகவும் எளிதான அரசமைப்புச் சட்டத்தின் 239ஏஏ பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் 2018லேயே விளக்கம் அளித்திருந்தது; பொது அமைதி (சட்டம் - ஒழுங்கு), காவல் துறை, நிலம் ஆகியவை தவிர பிற நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி மாநில அமைச்சரவைக்கு உரியன, மாநில துணை நிலை ஆளுநர் அந்த அமைச்சரவையின் ஆலோசனைப்படியும் உதவிகளைப் பெற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருந்தது.
  • தில்லி மாநில அரசு அதிகாரிகளை அதிகாரம் செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு, மாநில அமைச்சரவைக்கா – துணை நிலை ஆளுநருக்கா என்பது தொடர்பான சந்தேகம் நீடித்தது. அந்தச் சந்தேகத்துக்கும் உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு மே 11 தீர்ப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ‘அரசு நிர்வாகம்’ மீது மாநில அமைச்சரவைக்கே அதிகாரம் என்று தீர்ப்பளித்துவிட்டது.
  • 2014க்குப் பிறகு தில்லியில் துணை நிலை ஆளுநராகப் பதவி வகித்த அனைவருமே, ஜனநாயகத்தின் தன்மையையும் கூட்டரசின் நிர்வாக அமைப்பு முறையையும் மதிக்காமல் நடந்துகொண்டதற்காக பழிக்கப்பட வேண்டியவர்களாகிறார்கள்.

கட்சித்தாவல் தடைச் சட்டம்

  • இரண்டாவது வழக்கு மிகவும் சிக்கலானது. அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள பிரிவுகள் குறித்து திட்டவட்டமாகவும் தெளிவாகவும் இதுவரை எந்த வழக்கிலும் தீர்ப்புகள் வழங்கப்பட்டதில்லை. கட்சித்தாவலைத் தடை செய்யும் நோக்கில் பத்தாவது அட்டவணைக்கு 2004இல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவைக் கட்சியில் பிளவு என்ற கருத்தாக்கம் அதில் ஏற்கப்படவில்லை. ஒன்று அல்லது இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்தால் மட்டுமே அது கட்சித் தாவல் இல்லை என்று ஏற்கும் விதிவிலக்கை பத்தாவது அட்டவணை அனுமதிக்கிறது:
  • ஓர் அரசியல் கட்சி (தாய் அமைப்பு) இன்னொரு அரசியல் கட்சியுடன் இணைந்தால் – சட்டப் பேரவையில் அக்கட்சிக்குள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு மடங்கினர் அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையுள்ளவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே – அது இணைப்பாகக் கருதப்பட வேண்டும்.
  • அல்லது அப்படிப்பட்ட இணைப்பை ஏற்காமல், சட்டப்பேரவையில் தனிக் குழுவாகவே தொடர்ந்து செயல்படுவது என்று தீர்மானித்தால் அதைத் ‘தாவல்’ என்று கருதத் தேவையில்லை. இவ்விரு நிலைகளும் ஏற்கப்படாத பட்சத்தில், கட்சித் தலைமைக்கு எதிரான முடிவை எடுக்கும் உறுப்பினர்கள், அதே தாய்க் கட்சியிலேயே நீடிப்பதாகத் தொடர்ந்து கருதப்பட்டு, கட்சித் தலைமை பிறப்பிக்கும் கொறடாவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள் என்கிறது கட்சித்தாவல் தடைச் சட்டம்.

அரசமைப்புச் சட்ட முரண் அரசு

  • மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனைக் கட்சியில் புதிய சூழ்நிலை ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சியின் 16 உறுப்பினர்கள் பிரிந்து சென்றனர்; அவர்களுடைய தாய்க் கட்சி அன்றைய நாளில் (இப்போதும்கூட) வேறு எந்தக் கட்சியுடனும் இணைந்துவிடவில்லை. பத்தாவது அட்டவணை சுட்டிக்காட்டும் எந்தவித அசாதாரணச் சூழலும் நிலவவில்லை. எனவே, தாய்க் கட்சியின் முடிவுக்கு எதிராகத் தனியாகப் பிரிந்து சென்றவர்கள் கட்சியின் ‘கொறடா’ கட்டளையை ஏற்று வாக்களிக்க சட்டப்படி கடமைப்பட்டவர்கள். 2022 ஜூன் 21இல் அப்படியொரு ‘கொறடா’ ஆணை பிறப்பிக்கப்பட்டது.
  • அந்த ஆணையை மீறி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சட்டப்பேரவை சிவசேனை உறுப்பினர்கள் பாரதிய ஜனதாவுடன் கைகோத்து அரசமைத்தனர். சட்டப்பேரவையில் தனக்கு பெரும்பான்மை வலு இருக்கிறது என்பதை நிரூபிக்குமாறு அன்றைய முதல்வர் உத்தவ் தாக்கரேவை, எந்தவிதக் காரணமும் இன்றியே (உச்ச நீதிமன்றமும் இவ்வாறே கருதுகிறது), ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கட்டளையிட்டார். உத்தவ் தாக்கரே (திறனற்ற ஆலோசனையின் பேரில்), சட்டப்பேரவையைச் சந்திக்காமலேயே தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். உடனே ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்து ஷிண்டே தலைமையிலான குழுவும் பாஜகவும் இணைந்து புதிய அரசு அமைக்க வழிசெய்தார் ஆளுநர். தங்களுடைய ‘கொறடா’ உத்தரவை மீறி வாக்களித்த 16 பேரவை உறுப்பினர்களின் பதவி செல்லாது என்று அறிவிக்குமாறு சட்டப்பேரவைத் தலைவரை, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை வலியுறுத்தியது. பேரவைத் தலைவர் அந்தக் கோரிக்கை மீது முடிவெடுக்காமலேயே இருக்கிறார் (இது பல சட்டப்பேரவைகளில் நடைமுறையாக தொடர்கிறது).
  • ‘கொறடா உத்தரவு’ என்பது அரசியல் கட்சியால் நியமிக்கப்படும் ‘நப’ரைப் போன்றது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் அந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (தாய் கட்சி). சட்டப்பேரவை கூட வேண்டும் என்றோ, பேரவையில் உங்களுக்குள்ள பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்றோ ஆளுநர் ஆணையிட்டிருக்கவே வேண்டியதில்லை என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. அத்துடன் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 16 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது விரைந்து முடிவெடுக்குமாறும் பேரவைத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
  • அரசமைப்புச் சட்டப்படி பதவியில் இருப்பவர்களின் நடவடிக்கைகள் குறித்த கவலையையே நான் இக்கட்டுரையில் வலியுறுத்த விரும்புகிறேன். மகாராஷ்டிர விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டிருக்கிறார், பேரவைத் தலைவரோ தனக்குள்ள அதிகார வரம்புக்குட்பட்டு செயல்படாமலேயே காலம் தள்ளுகிறார். இருவருமே தங்களுடைய கடமைகளைச் செய்யத் தவறியவர்களாகிறார்கள். அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக ஒரு கூட்டணி அரசு மகாராஷ்டிரத்தில் 2022 ஜூன் முதல் பதவி வகிக்க இருவருமே உடந்தையாக இருக்கிறார்கள்.

அனைத்துக்கும் மேலான இலக்கு

  • ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் மாற்றுக் கட்சியினரை கூண்டோடு விலகச் செய்யும் இழிவான அரசியல் தந்திரம் பல மாநிலங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது; உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில், தவறு செய்தவர்கள் என்று அரசு கருதுவோரின் வீடுகளையும் உடமைகளையும் புல்டோசர்களால் இடித்துத்தள்ளி உடனடியாக நீதி வழங்கப்படுகிறது; எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி கடுமையான வழக்குகள் உடனுக்குடன் பதிவாகின்றன; காஷ்மீருக்கு தனி அந்தஸ்தை மறுக்க அரசமைப்புச் சட்டம் 370க்குக் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள், தேர்தல் நன்கொடை பத்திர சட்டம் போன்றவை அரசமைப்புச் சட்டமாகுமா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன; அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் (மக்கள் உரிமைகள்) சட்டம் கொண்டுவரப்படும் என்று அச்சுறுத்தப்படுகிறது; அன்னியர்களைக் கண்டுபிடித்து வெளியேற்றுவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும் என்றும் மிரட்டப்படுகிறது; பொது அதிகாரப் பட்டியலில் உள்ளவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி - கல்வி தொடர்பான - மாநிலங்களின் உரிமைகள் மீறப்படுகின்றன; பொது சரக்கு, சேவை வரி சட்டம் மூலம் மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரங்கள் கைப்பற்றப்படுகின்றன; இவை மட்டுமல்லாமல் இன்னும் வேறு பல நடவடிக்கைகள் மூலம் ‘அனைத்துக்கும் மேலான ஒரு லட்சிய’த்தை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன – அது, நாட்டின் 140 கோடி மக்களையும் ஒரே குடையின் கீழ் எங்கும் நிறைந்துள்ள – எங்கும் ஊடுருவக்கூடிய ஒன்றிய அரசால் ஆள வேண்டும் என்பதே அந்த முயற்சி. இதை ‘மையவாதம்’ என்றும் ‘மையத்தில் அதிகாரத்தைக் குவிக்கும் சர்வாதிகாரப் போக்கு’ என்றும் கூறுவார்கள். இப்படிப்பட்ட மைய அதிகாரக் குவிப்பு நாடுகளாக சீனம், ரஷ்யா, துருக்கி போன்றவை இருக்கின்றன.
  • மையவாத அரசாக மாறிவிடாமல் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய இரண்டு தீர்ப்புகள் தடை விதித்துள்ளன. மாநிலத்திலும் ஒன்றியத்திலும் ஒரே அரசியல் கட்சி ஆட்சி செய்தால்தான் நிர்வாகம் சீராகவும் விரைவாகவும் நடைபெறும் என்ற தவறான வாதத்துக்கு கர்நாடக தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ‘மையவாதம்’ செல்வாக்கு பெற்றுவிடாமல் தடுப்பதற்கான தடுப்பூசியாக, அரசியல் களமும் தேர்தல் களமும் தொடர வேண்டும். மாநிலங்களில் பல்வேறு கட்சிகளும் ஒன்றிய அரசை ஆள குறைந்தபட்சம் இரண்டு அரசியல் கட்சிகளும் போட்டிபோட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் இரு வெற்றிகளும் கர்நாடகத்தில் மேலும் ஒரு வெற்றியும் கிடைத்திருந்தாலும், ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் முழுமையாக மீட்க இன்னும் பல களங்கள் காத்திருக்கின்றன.

நன்றி: அருஞ்சொல் (22 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்