TNPSC Thervupettagam

மொழிபெயர்ப்புக் கலையின் கொடுமுடி

April 8 , 2021 1386 days 632 0
  • "இன்னாதம்ம இவ்வுலகம்' என்பதும் "இனிய காணுதல் வேண்டும் இயல்புணர்ந்தோர்' என்பதும் அறிவுக்குப் புலப்படுகின்றன. எனினும் தமிழுள்ளங்கள் ஆறுதல் கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. தமிழ் மண்ணின் பேராளுமை ஒருவர் நேற்று முன்தினம் (ஏப். 6) விடைபெற்றுக் கொண்டார்.
  • உண்மையான வாழ்க்கை, ஒப்பற்ற வாழ்க்கை, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர் டி.என்.ஆர். என்னும் "சேக்கிழார் அடிப்பொடி' தி.ந. இராமச்சந்திரன்.
  • தமிழ்மொழியும், தமிழ்ச் சமுதாயமும் மேம்படத் தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். பரந்த உள்ளம்கொண்ட மாமனிதர்.
  • பாரதியியல், பக்தியியல், மொழிபெயர்ப்பியல் எனப் பன்முகப்பட்ட தமிழியலுக்குச் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் வழங்கியிருக்கும் பங்களிப்பு நிகரற்றது.
  • தஞ்சையில் மையங்கொண்டு தரணி முழுமையும் ஒளிவீசிய தமிழின் மகத்தான அடையாளம் சேக்கிழார் அடிப்பொடி.
  • அவரது முதன்மை முகங்களுள் ஒன்று சைவப் பேரறிஞர் என்பது. இன்னொன்று பாரதியியல் வித்தகர் என்பது. பிறிதொன்று மொழிபெயர்ப்புத்துறையில் வல்லாளர் என்பது.
  • இந்த முப்பரிமாணங்களே முழுப் பரிமாணம் இல்லை என்னும் நிலையில் வரையறுக்க இயலாப் பன்முகப் பரிமாணம்கொண்ட பெரியோர் அவர்.
  • பாரதியியலில் தொ.மு.சி. இரகுநாதன், க. கைலாசபதி, பெ. தூரன், ரா.அ. பத்மநாபன், பெ.சு. மணி, சீனி. விசுவநாதன் ஆகியோரோடு வைத்து எண்ணத்தகு ஏந்தல் அவர்.
  • "வழிவழி பாரதி' உள்ளிட்ட தனித்தன்மை வாய்ந்த பற்பல பங்களிப்புகளால் பாரதியியல் அவரால் பெற்ற வளம் பெரிது. பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வரையத் தகுதிபடைத்தவர்கள் என பாரதியின் தம்பி சி. விசுவநாத ஐயரால் முதலில் எண்ணப்பட்ட இருவரில் ஒருவர் டி.என்.ஆர். (மற்றவர் சீனி. விசுவநாதன்).
  • தமிழிலும் ஆங்கிலத்திலும் துறைபோகிய இந்தப் பேரறிஞரின் பணிகளைத் தமிழகப் பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் முதன்முதலில் அடையாளம் கண்டுகொண்டது இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். அவருக்கு டி.லிட். (முதுமுனைவர்) பட்டத்தை வழங்கிப் பெருமை பெற்றது.
  • "தேவாரம்', "திருவாசகம்', "பெரிய புராணம்' எனப் பக்தியிலக்கியங்களையெல்லாம் ஆற்றல்மீதூர ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
  • பாரதி, பாரதிதாசன், திருலோக சீதாராம், கவி கா.மு. ஷெரிப் எனப் புத்திலக்கியங்களெல்லாம் மொழிபெயர்த்தவர்.
  • சாகித்திய அகாதெமி, தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இவர்தம் நூலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளன.
  • நம் காலத்தின் முதுபெரும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஒருமுறை சேக்கிழார் அடிப்பொடி பற்றி இப்படிக் கவிதையில் பாராட்டிசைத்தார்:
  • சேக்கிழாரடிப்பொடி
  • செந்தமிழ்வாணர்
  • தி.ந. இராமச்சந்திரன் -
  • இவருக்குத்
  • தொழுது படிக்கவும்
  • புத்தகம்தான்
  • பொழுது முடிக்கவும்
  • புத்தகம்தான்.
  • இவர்வீட்டுச்
  • சுண்ணாம்பைச் சுரண்டினாலும்
  • இலக்கியமாய் இலக்கணமாய்
  • உதிரும் என்கின்றனர்.
  • தமிழ்
  • இவருக்குத் தாய்மடி!
  • ஆங்கிலம்
  • எடுபிடி!
  • மொழிபெயர்ப்புக் கலையிலோ
  • இவர் கொடுமுடி!

சேக்கிழார் அடிப்பொடி

  • திருலோக சீதாராமோடு நெருங்கிப் பழகியவர் டி.என்.ஆர். திருலோகம் மறைந்தபோது டி.என்.ஆரைத் தேற்றுவதற்காகவே எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தன் அவர் அருகிலிருந்தார் என்பது வரலாறு.
  • பாரதிதாசனால் எந்தச் சாமிப்பிள்ளையும் இவருக்கு ஈடில்லை என்று போற்றப்பட்ட பள்ளியகரம் நீ. கந்தசாமிப்பிள்ளையால் பாராட்டப்பெற்றவர் டி.என்.ஆர். நூற்கடல் தி.வே. கோபாலையரால் சீர்த்தி இசைக்கப்பெற்ற சிறப்பும் இவருக்குண்டு.
  • பழந்தமிழில் படிந்து பக்தி இலக்கியத்தில் திளைத்து ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மெளனி தொடங்கி அப்துல் ரகுமான், மீரா, இன்குலாப், தமிழன்பன், சிற்பி எனப் புத்திலக்கியங்களிலும் புகுந்து புறப்பட்டவர் இவர்.
  • தமிழ்ச் சமூகத்தில் கம்பன் அடிப்பொடி உண்டு. சேக்கிழார் அடிப்பொடி உண்டா? உண்டு என்பதற்கு ஒருபெரும் உதாரண அறிஞர் டி.என்.ஆர்.
  • வேதாந்தம் பயிலும் மரபில் தோன்றிச் சித்தாந்தத்துள் ஆழ்ந்த இவர் தருமபுர ஆதீனத்தின் அனைத்துலகச் சைவ சித்தாந்த ஆய்வு நிறுவனத்தின் மதிப்புறு இயக்குநராக மாண்புறத் திகழ்ந்தார் என்பதும் வரலாறு.
  • வருவாயும் புகழும் குவிந்துகொண்டிருந்த வளமார்ந்த சூழலில் வழக்குரைஞர் தொழிலிலிருந்து நமக்குத் தொழில் பக்தி இலக்கியம், மொழிபெயர்ப்பியல் என்று மடைமாற்றம் கொண்டார் என்பதும் இவரது சரிதத்தின் ஒரு பக்கம்.
  • பாரதியைக் கொண்டாடுபவர்கள் பாரதிதாசன்மீது பாராமுகம் கொள்வதுண்டு. பாரதிதாசனின் முழுமையையும் அறிந்து உரிய நிலையில் போற்றியவர் டி.என்.ஆர்.
  • பாரதிதாசனுக்கு என்றே தன் வாழ்வை அர்ப்பணித்த என் பேராசிரியர் தனித்தமிழ் இயக்க அறிஞர் இரா. இளவரசு ஒருமுறை டி.என்.ஆரை சந்தித்ததை என்னிடம் பின்னாளில் நினைவுகூர்ந்தார் "இலக்கியத்துக்காகவே, இலக்கியமாகவே வாழும் மாந்தர் தி.ந. இரா.' என.
  • மறைமலையடிகள், ராகவையங்கார் முதலியோரால் எல்லாம் பாராட்டப்பட்ட இசுலாமியப் பெரும்புலவர் அப்துல் கபூர் என்பார் டி.என்.ஆர். மீது சித்திரகவி நூல் ஒன்றைப் படைத்தார்.
  • அவர் தமிழுக்கு இவர் தமிழுள்ளம் ஒரு வீட்டையே பரிசளித்தது என்பது இவர் கொடை உள்ளத்தின் ஒரு கீற்று. எண்ணற்ற நூல்களைத் தன் சொந்தச் செலவில் வெளியிட்டு நூல்களுக்கும் இவர் வாழ்வளித்திருக்கின்றார்.
  • பெரியபுராணம், கம்பராமாயணம், சைவ சித்தாந்தம், மில்டனின் காவியங்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள் முதலியன குறித்தெல்லாம் அவர் நடத்திய வகுப்புகளில் பெரும்பேராசிரியர்களும் அறிஞர்களும் மாணவர்களாக அமர்ந்து இலக்கியம் பயின்றிருக்கின்றனர்.
  • உலகளாவிய அயல்மொழி அறிஞர்களும், கரண் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களும், கா. சிவத்தம்பி முதலிய ஈழத்தமிழறிஞர்களும் டி.என்.ஆர். இல்லம் வந்து கலந்துரையாடி மகிழ்ந்திருக்கின்றனர்.
  • சமகாலத் தலைமுறையும் இளந்தலைமுறையும் இவரது அன்பில் தழைத்து வழிகாட்டுதலில் சிறந்து அளப்பரும் பணிகளை ஆற்றத் தூண்டுகோலாகவும் இவர் திகழ்ந்திருக்கின்றார்.
  • அறிஞர் அண்ணாவின் உண்மைத் தொண்டர் வழக்கறிஞர் வீ.சு. இராமலிங்கம், இசையியல் அறிஞர் பி.எம். சுந்தரம், கல்வெட்டியல் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம், மொழிபெயர்ப்பியல் அறிஞர் அ. தட்சிணாமூர்த்தி, துணைப் பதிவாளர் சுப்பராயலு என்று நீளும் இத்தகையோர் நிரல் மிகுதி.
  • தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம் இவரைப் பயன்கொண்டு பல்கலைக்கழகத்தை மேம்படுத்திய நிகழ்வுகள் ஏராளம்.
  • தனித்தன்மை வாய்ந்த துணைவேந்தர் ம. இராசேந்திரன் பார்வைபெற்றுத் தழைத்த "கணையாழி' இதழில் இவரது திருவுருவம் வாழும் காலத்திலேயே அட்டைப்படமாக வெளியிட்டுப் போற்றப்பட்டது என்பது ஒரு வரலாற்று நிகழ்வு.
  • "சம்ஸ்கிருதம் தேவ பாஷை தமிழோ மகா தேவ பாஷை' என்பது இவருடைய மதிப்பீடும் முழக்கமும். இதுவும் "கணையாழி' இதழில் இடம்பெற்றிருந்தது.

நினைவைப் போற்றி

  • முகநூல் பதிவில் ஆய்வறிஞர் பொ. வேலுசாமி எழுதியிருந்தார், "பேராசிரியர் சிவத்தம்பியோடு சென்று நான் சந்தித்த டி.என்.ஆர். எனக்கு இரண்டாவது பேராசிரியராக மாறிப்போனார்' என.
  • மூத்த பேராசிரியர் பா. மதிவாணன் எழுதியிருந்தார், "தஞ்சை செல்வம் நகர் இல்லத்தில் - ஒரு பல்கலைக்கழகம்' என. உண்மைத் தமிழ் உணர்வாளர்களாலும் அறிஞர்களாலும் பேதமின்றிப் போற்றப்பட்ட பெற்றியர் டி.என்.ஆர். ஆவார்.
  • ஏறத்தாழக் கால் நூற்றாண்டாகத் தமிழியல் ஆய்வுக்குக் கதவு திறந்துள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் கால்கொள்ளக் காரணமானவர்களுள் டி.என்.ஆர்.
  • முதன்மையானவர். ஒருமுறை நூலொன்றில் நான் எழுதியிருந்தேன்: "தஞ்சையின் தரிசிக்கத்தக்க தலங்கள் பெரியகோயில்; சரசுவதி மகால் நூலகம்; தமிழ்ப் பல்கலைக்கழகம்; டி.என்.ஆர். இல்லம்' என.
  • இல்ல நூலகம் சில நாள்களுக்குமுன் இடம்பெயர்ந்திருக்கிறது; இல்ல நாயகரும் இப்போது மண்ணுலக வாழ்வினின்று இடம்பெயர்ந்திருக்கின்றார்.
  • அவர் நினைவுகளாலும் நூல்களாலும் நாமும் தமிழும் நிறைந்திருக்கின்றோம்.
  • நேற்று அவரது உடலம் அமரர் ஊர்தியில் புறப்பட்டது. அந்தத் தருணத்தில் வான்தொட ஓங்கி ஒலித்தது தேவாரமும் திருவிசைப்பாவும் பெரியபுராணமும்.
  • ஓங்கி ஒலித்தவர்களுள் முதன்மை பெற்றது ஒரு பெயரன் குரல். அந்தப் பக்தித் தமிழில் என்றென்றும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பார். நிறைவாழ்வு வாழ்ந்த பெருமகன் நினைவைப் போற்றி நன்றி செலுத்தட்டும் தமிழ்கூறு நல்லுலகு.

நன்றி: தினமணி  (08 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்