TNPSC Thervupettagam

மொழிய மொழிய வளரும் மொழி

January 9 , 2022 938 days 499 0
  • ஒரு சொல், ஒற்றைச் சொல் மட்டுமல்ல. ஓராயிரம் சொற்களை விளைவிக்க வல்ல நெல்மணி ஒத்தது. களஞ்சியத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு, களத்தில் விதைக்கப்படும் ஒரு தானிய மணி, உரிய முறையில் விளைந்து, ஓராயிரம் தானிய மணிகளை எவ்வாறு உருவாக்கித் தருமோ, அப்படிப்பட்டதுதான், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும்.
  • நெல்மணிகளை மண்ணில் விதைப்பதுபோல, சொல்மணிகளை மனங்களில் விதைக்க வேண்டும். அதற்கேற்ற கழனிகள் நிகர்த்தவை, மழலைகள் ஆகிய பிள்ளைகள். அவர்கள் மனங்களில், தானே விழுந்து முளைப்பவையும் உண்டு. அவை கவையாகிக் கொம்பாகிப் பயன்தரும் பழமரங்களாகப் பரிணமிக்கும் ஆற்றல் உடையவை; சுவையாகிப் பின்னர் கேட்போர்க்குச் சுவைக்கத் தருகிற தேன்நிறை இசையாக மலர்கிற அழகும் உடையவை; மனம் நிறைக்கும் மணமும் தருபவை.
  • பொருள் அறிந்தோ அறியாமலோ முதன்முதலில் தன் செவியில் விழுந்த சொல்லைப் பலபட நாவசைத்துச் சொல்லிப் பார்க்கும் மழலை, அதற்கு இனமான எதுகைகளையும் மோனைகளையும் இணைத்துச் சொல்லும்; இணைச் சொற்களையும் எதிர்ச்சொற்களையும் தானே உருவாக்கிக் கொள்ளும். "வைக்காதே' என்று கட்டளையிடும் சொல்லுக்கு எதிராக, "நான் அப்படித்தான் வைப்பேன்' என்று உறுதிபட மொழிய நினைக்கும் குழந்தை, "வைக்கேன்' என்பதுண்டு. "கிடையாது' என்பதற்கு மழலை மொழியின் எதிர்ச்சொல், "கிடையும்'.
  • கொஞ்சம் நேரம் ஒதுக்கி, அவரவர் தத்தம் குழந்தைகளிடம் கொஞ்சிப்பார்த்தால், இப்படிப் புதிய புதிய சொற்களைச் செவிமடுக்கலாம். அவை, அவரவர்க்கே உரிய குரல்களில் இசையொழுங்கோடு பிறப்பதையும் கேட்டு அனுபவிக்கலாம்.
  • ஒரு சொல்லை, எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி சொல்வது இல்லை. ஒவ்வொன்றுக்கும் சுருதி பேதம் உண்டு. அவை அபசுருதியாகாமல் சுபசுருதியாக மலர்வதைக் கேட்பது சுகம். பத்துக் குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துப் பாடம் சொல்லிக்கொடுக்கிறபோது இந்தச் சுகத்தை நான் மிகமிக அனுபவித்து மகிழ்ந்திருக்கிறேன். அப்போது, எனக்குள் ஆயிரம் சிந்தனைப் பூக்களைச் செந்தேன் சுவையுடன் மலர்த்தித் தந்தது, இந்தத் திருக்குறள்.
  • குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
  • மழலைச் சொற் கேளாதவர்
  • குழலும் யாழும் கருவிகள். அவை உயிரற்றவை. அவற்றுக்கு உயிரளிப்பது வாசிப்பவர்களின் உணர்வு. முன்னதாய்ச் சொல்லப்படும் கருவியை முத்தமிட்டு முத்தமிட்டு உயிர்மூச்சை உட் செலுத்தினால் உண்டாவது இசை. குழல் நமது ஆதிக் கருவி. புல் இனத்து மூங்கிலை வண்டு துளைத்துவிட, இளம் காற்று உள்புகுந்து முன்மொழியத் தோன்றிய இசையைக் கண்டு எடுத்த முதற் கலைஞன் யாரோ, அவன்தான் புல்லாங்குழலை இயற்கையிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். அது புல் ஆம் குழல்.
  • அசையும் மூங்கிலில் துளைக்கப்பட்டு விளங்கும் துளைவழியாக உள் சென்று வெளிவந்த கோடையாகிய மேற்காற்று குழல் இசையைக் கொடுக்கின்றது. இது இயற்கை விளைத்த இசைக்கருவி. இதை, அகநானூற்றுப் பாடல் ஆக்கி இசைக்கிறார் கபிலர்.
  • ஆடமைக்குயின்ற அவிர்துளை மருங்கின்
  • கோடை அவ்வளி குழல் இசையாக (அகம்-82)
  • கண்டு, எடுத்துக் காலகாலத்திற்கும் இசைக்கிற கருவியாய் ஆக்கிக் கொடுத்தவன் இறை நிகர்த்தவன். மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தவனுக்கும், காடுஉடைய முல்லை நிலத்தவனுக்கும் சொந்தமானது குழல். குழல் உடைய முருகனைக் குழலன் என்று "திருமுருகாற்றுப்படை' குறிக்கிறது. மாயவனாகிய கண்ணனுக்கு இசைந்த கருவியாய்க் குழலைக் கொடுத்தவை, நமது இலக்கியங்கள். இதற்கு மூச்சுக் காற்றே முதல். முத்தமிடும் குழந்தை, இரகசியமாகச் செவிக்கு அருகில் செந்தேன் சொரியச் சொல்லும் அனுபவத்தை, இந்த இசையோடு ஒப்பிட்டுப் பார்த்து உணரலாம். அப்போது அது மொழியும் உறவுச் சொல், உயிர்ச்சொல்லாய்ப் பரிணமிக்கும் அற்புதம், எழுதி மாளாது.
  • அடுத்ததாய்ச் சொல்லப்படும் கருவி யாழ். நரம்புகளால் யா()க்கப்பட்டமையால், இது யாழ். நரம்புக்கருவிகளுக்கெல்லாம் ஆதிக் கருவி இது.வேட்டைக்குப் பயன்படுத்திய வில்லையே யாழாகப் பயன்படுத்தியவனின் உள்ளத்து இசைதான் இதன் முதல் மெல்லிசையாக ஒலித்திருக்க வேண்டும். வில்யாழில் இருந்துதான் விதவிதமான யாழ்கள் தோற்றம் கொண்டன. இதனை, ஆரத் தழுவி அணைத்து மெல்விரல் கொண்டு மீட்டுவதால் உருவாவது நல்லிசை. ஓடிவந்து தோள் தழுவி இறுக அணைத்துக் கொள்ளும் குழந்தையை மடியில் கிடத்திய பிறகு, அது சொல்லத் தொடங்கும் அனுபவங்களைச் செவிமடுத்தால் அதனைவிட அதிசய இராகம் வேறு ஏது?
  • இந்த மழலை அவரவர் தாம் பெற்ற சொந்த மழலையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சொந்தம் என்று சொல்லிக் கொள்ளாமலேயே பந்தமாகிவிடுகிற பாசத்தால் உருவாகிற தன்மை உடையவை. தாய் மாமனை விடவும் தாங்கிக் கொள்கிற வாடகைக்கு வந்து குடியிருக்கும் புதுமாமன் குழந்தையின் நேசத்துக்கு உரியவன். தாய்ச்சொல்லைக் கூடத் தவிர்த்துவிடும் குழந்தை, அது பயிலும் வகுப்பு "மிஸ்' சொல்லை, "மிஸ்' பண்ணுவதே இல்லை.
  • நாவொடு நவிலா நகைபடு
  • தீம் சொல்,
  • யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை, (அக
  • நானூறு: மருதம்: 16)
  • வாரியணைத்த பெண்ணொருத்தியைப் பார்த்து, "நீயும் தாயை இவற்கு' எனக் கூறிய மருதநிலத்தாய் சங்க இலக்கியத்தில் இன்னும் வாழ்கிறாள்.
  • இப்போதிருக்கும் அவசர யுகத்தில் பெற்ற பிள்ளைகளைக் கொஞ்சும் நேரம் பெற்றோர்க்கு வாய்ப்பதில்லை. தத்தம் பிள்ளைகளைக் கொஞ்சமுடியாத குறையைப் பேரக்குழந்தைகளைக் கொண்டு தீர்த்துக் கொள்கிறார்கள் பெரியவர்கள். அதுவும் இந்த பொதுமுடக்கக் காலத்தில், கேட்டு மகிழ்ந்த மழலைச் சொற்கள் மிகமிக அதிகம். திட்டப் பயன்படுத்திய சொற்களைக் கூட, திகட்டாத அமுதமாகத் திருப்பி வழங்கிய குழந்தைகள் பலர். இந்தப் பின்புலத்தோடு திருக்குறளை இணைத்துப் பார்த்தால், அது மழலையிசையின் மாண்பை, விரித்துக்கொண்டே செல்வதை அனுபவித்து உணரலாம்.
  • குழலையும் யாழையும் கொண்டுவந்து இசைத்துக் காட்டி, குழந்தையின் மழலைக் குரலுக்கு இவை இணையில்லை என்று மூடிவைக்கிற அழகில்தான், திருக்குறள் இசைநூலைவிடவும் இனிமையாகிறது.
  • இதற்கு உரையெழுதிய காலிங்கர், "பரதம் பற்றிய குழலின் ஓசையும் பண்ணினைப் பற்றிய யாழின் ஓசையும்' எனக் குறித்துள்ளார். குழல் நாட்டியத்திற்கு உரியது. அதாவது பரதத்திற்குப் பக்கவாத்தியம் (வங்கியம்). யாழ் இசைக்குரிய துணை வாத்தியம். இதனை இன்னும் நயம்பட விளக்குவார் தண்டபாணி தேசிகர். "யாழோசை போல மழலைச் சொல் மனம் ஒன்றச் செய்வது எனவும், பரதத்திற்குத் துணையான குழலோசை போல மழலை சுவைத்து மெய்ப்பாட்டால் ஆடவும் செய்வது எனவும் அறிய உதவுகிறது' என்பது அவர்தம் விளக்கம்.
  • ஆட முடியாத பாட்டியை ஆட்டுவிப்பதும், பாட முடியாத பாட்டனைப் பாட்டுவிப்பதும் இந்த மழலைகள் அல்லாமல் வேறு யார்? தங்களை முதுகில் சுமக்கும் யானைகளாய்ப் பெரியவர்களை ஆக்கிவிடுவதில் இவர்களுக்கு நிகர் எவர்? "ஆனை ஆனை ஐயா யானை' என்று தானே பாடும் குழந்தைதானே, பின்னர் கவிஞனாகிறது.
  • இவ்வாறு, பேசுமொழி யாவும் ஆசுகவி ஆகவிடாமல் அதட்டி, ஆங்கிலம் புகட்டப்படுவதால்,அவர்கள் இதழ்களில், தானே உதயமாகும் தாய்மொழி மறுக்கப்படுவதால், அனேகக் குழந்தைகள் தத்தம் மழலைமையை இழக்கிறார்கள் என்பதை மீளவும் வலியுறுத்துகிறது, இந்தக் குறள்.
  • மழலை மிழற்றும் அமுத மொழி "தமிழ்' என்று சொல்வதில் தயக்கம் தேவையில்லை. இதைத்தான் "தென்றலுடன் பிறந்த பாஷை' என்று மொழிகிறார் மகாகவி பாரதி.
  • "திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்' என்று பாடினார் பாரதிதாசன். வாயைத் திறந்ததும் வருகிற காற்றில் ஒலியாய் விளைவது மொழி. மொழியப்படுவதால்தான் மொழி.
  • திருவள்ளுவர் காட்டும் மழலைச் சொல் எந்த மொழிக்கு உரியது? அவரவர்தம் சொந்த மொழிகளுக்கெல்லாம் உரியது. அது எது? அவரவர்தம் பெற்றோர் பேசும் மொழி. அதனால்தான், "தம்மக்கள்' என்ற தனிச்சொல்லை, மழலைக்கு முன்னர் வைக்கிறார் அவர். அது தாய்மொழியாகவும் இருக்கலாம்; தந்தை மொழியாகவும் இருக்கலாம். தாயும் தந்தையும் வெவ்வேறு மொழிக்காரர்களாய் இருந்தால், பேசப்படும் மொழி, இரண்டுக்கும் உரியதாகத்தானே இருக்கும்? அண்டை வீட்டார் இரண்டு மொழிகளும் அறியாதவர் ஆயின், அவர்வீட்டு மொழியையும், குழந்தை, தானே கற்றுக் கொள்ளும் என்பதே நடைமுறை உண்மை.
  • ஐய! காமரு நோக்கினை, "அத்தத்தா'
  • என்னும் நின்
  • தே மொழி கேட்டல் இனிது (கலித்தொகை: 80)
  • என்கிறார் மருதனிளநாகனார்.
  • மேலும், இந்தக் குறள் இன்னொரு நுட்பத்தையும் எடுத்து விளக்கக் காணலாம், மழலையின் இனிமைக்கு உவமையாக எடுத்துச் சொல்லி, விளக்கிக் காட்டிப் பின்னர் விலக்கவும் படுகிற இக்கருவிகள் இரண்டும் நம் ஆதிக்கருவிகள். எடுத்தவுடன் இக்கருவிகள் பாடலைத் தருவது இல்லை. சற்றே சரிசெய்யும் வரை, அவை தன் போக்கில்தான் ஒலியெழுப்பும். மழலை மொழியின் மாண்பும் அத்தகையதுதான்.
  • புத்தம்புது இராகங்கள் இந்தக் கருவிகளில் இருந்து புறப்படுவதுபோல, புத்தமுதச் சொற்களை விளைக்கும் உயிர்த்தன்மை, மழலைக்கு உண்டு. கவனித்துப் பார்த்தால், அகராதிகளில் அகப்படாத பல புதிய சொற்களை, குழந்தைகளின் குரல்வழியாகச் செவிமடுக்கலாம்.
  • ஆக, மழலை தன் நாவில் மிழற்றும் மொழி அமுதம் ஆகிறது. மொழிய மொழியத்தான் வளரும் மொழி. பெரியவர்கள் பேசுவதைவிடவும் பிஞ்சுமழலைகள் பேசும்போதுதான், மொழிக்கு உயிராற்றல் வருகிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

நன்றி: தினமணி (09 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்