- இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற ஒருசில ஆண்டுகளிலேயே, மொழிவழி மாநிலம் கேட்டு ஆங்காங்கே போராட்டங்கள் எழுந்தன.
- இது தொடர்ந்தால், பாகிஸ்தான் பிரிவினையைப் போலப் பல்வேறு சிறுசிறு நாடுகளாக இந்தியா சிதறிவிடும் என்று அஞ்சிய நேரு, நிலவழி மாநிலங்களை உருவாக்க நினைத்தார்.
- இதற்கிடையில், பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தது உள்ளிட்ட பெரும் போராட்டங்களின் காரணமாக, 1953-ல், அன்றைய மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் முதல் மொழிவழித் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.
- ஆனால், அப்போது மொத்த இந்திய நாட்டையும் கிழக்கு, மேற்கு, மத்திய, உத்தர, தெட்சிணப் பிரதேசங்களாகப் பிரிக்க எண்ணம் கொண்டிருந்தார் நேரு. பட்டேல் முதலான தலைவர்களிடம் இதற்கான ஒப்புதலைப் பெற்ற பின் அவர் ‘தெட்சிணப் பிரதேசம்’ வந்தார்.
- கன்னட, மலையாளப் பகுதிகளின் காங்கிரஸ் தலைவர்கள் ‘தெட்சிணப் பிரதேச’த்துக்கு ஒப்புதல் அளித்த நிலையிலும், அந்த யோசனையை ஏற்க மறுத்தார் காமராஜர்.
- இதனால், நிலவழி மாநிலப் பிரிவினை யோசனையை நேரு கைவிட நேர்ந்தது. அதற்குச் சில முக்கியக் காரணங்கள் உண்டு: பெரியார் தலைமையில் திராவிடர் கழகமும், அண்ணா தலைமையில் திமுகவும், ஜீவா, பி.ராமமூர்த்தி ஆகியோரின் தலைமையில் கம்யூனிஸ்ட் இயக்கமும், ம.பொ.சிவஞானம் தலைமையிலான தமிழரசுக் கழகமும் ஏற்கெனவே இங்கு ‘தமிழ்நாடு தனி மாநிலம்’ அமைக்க வேண்டிப் பிரச்சாரம் நடத்திவந்தனர்.
- இதனால்தான் காமராஜர் நேருவிடம் தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்தார்.
கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு
- மதராஸ் மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர்சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து, 1956 ஜூலை 27-ல் விருதுநகர் அருகில், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய சங்கரலிங்கனார், ஆகஸ்ட் 13-ல் மரணமுற்றார்.
- ஆந்திரத் தனி மாநிலக் கோரிக்கைக்காக உயிர்த்தியாகம் செய்த பொட்டி ஸ்ரீராமுலுவைப் போலவே சங்கரலிங்கனாரும் காந்தியவாதிதான் என்றாலும், தான் இறந்த பின் தனது உடலைப் பொதுவுடைமைக் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் எழுதிவைத்திருந்தார்.
- அக்கட்சியின் அன்றைய தலைவர்களான கே.டி.கே. தங்கமணி, ஜானகியம்மாள் ஆகியோரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டு, மதுரை தத்தனேரியில் எரியூட்டப்பட்டது.
- மொழியை முதன்மைப்படுத்தி அரசியல் நடத்திய திராவிடக் கட்சிகள் இருக்க, பொதுவுடைமைத் தலைவர்களிடம் தனது உடலை ஒப்படைக்கும்படி தியாகி சங்கரலிங்கனார் எழுதிவைத்ததற்கும் காரணங்கள் உண்டு.
- கம்யூனிஸ்ட் கட்சி, 1951-ல் நடத்திய அகில இந்திய மாநாட்டில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, மாநிலங்களிலும் அதற்கான இயக்கங்களை நடத்தியது.
- ஆந்திர மாநில கம்யூனிஸ்ட் தலைவர் பி.சுந்தரய்யா, ‘விசால ஆந்திரா’ எனும் நூலையும், கேரளத் தலைவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு ‘நவகேரளம்’ எனும் நூலையும், தமிழகத் தலைவர் ப.ஜீவானந்தம் ‘ஐக்கியத் தமிழகம்’ எனும் நூலையும் எழுதியதோடு, இம்மாநிலங்களில் பெரும் பிரச்சாரமும் நடத்தினர். நாடு முழுவதும் ‘மாநில உரிமைக் குரல்’ அந்தந்த மொழிகளில் எழுந்தது.
மக்கள் கருத்துக்கு மதிப்பு
- நிலவழி மாநிலம் எனும் தனது கருத்துக்கு மாறாக இருந்தபோதும், மக்களின் மொழிவழி மாநில உரிமைக் குரலுக்கு மதிப்பளித்த அன்றைய பிரதமர் நேரு, ‘மாநில மறுசீரமைப்புச் சட்ட’த்தை இயற்றினார்.
- அதன்படி, 1956 நவம்பர் 1-ல் இந்தியா, 14 மாநிலங்களாகவும் 6 ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டது. தமிழகம் சென்னை மாநிலம் என்றும், கர்நாடகம் மைசூர் மாநிலம் என்றும் கேரளம் தனியாகவும் நவம்பர்-1, 1956-ல் தனித்தனி மாநிலங்களாகின.
- நவம்பர் 1-ம் தேதியை, ‘மொழிவழி மாநில உரிமை நாளாக’ கர்நாடக மாநில அரசு விடுமுறையோடு கொண்டாடுகிறது. கேரளமும் இதைக் கொண்டாடிவருகிறது.
- தமிழக அரசு 2019-ல்தான் முதன்முதலாக அரசு விழாவாகக் கொண்டாடியது. இந்த நேரத்தில், தமிழகத்தின் நிலப்பகுதியைப் பாதுகாப்பதற்காகப் போராடிய தலைவர்களையும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
- ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தலைவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தால்தான் வடக்கே திருத்தணியும், தெற்கே குமரியும் தமிழ்நாட்டோடு இணைந்தன.
- 1956 மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, தமிழ்மொழி வளர்ச்சிக்காக காமராஜர் அரசு 27.12.1956 அன்று ‘தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்’ நிறைவேற்றியது. காமராஜரை அடுத்து பக்தவத்சலம் மாநில முதல்வராக இருந்த ஆண்டுகளில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு’ மாநிலப் பெயர் மாற்றத் தீர்மானங்களை திமுக முன்மொழிந்தது என்றாலும் அவை வெற்றிபெறவில்லை.
- 1967 தேர்தலில், தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றது. தமிழகத்தில் வென்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, ‘சென்னை மாநிலம்’ எனும் பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றச் சட்டம் இயற்றியது.
- 18.07.1967 அன்று, சட்டமன்றத் தீர்மானத்தில், ‘தமிழ்நாடு’ என்று பெயர்மாற்றிய நிகழ்வை, “தன் தாயின் பெயரைத் தனயன் மீட்டளித்த நாள்” என்று குறிப்பிட்டார் அண்ணா.
மொழியே ஆதாரம்
- இதே நாளில், இன்றைய அரசியல் சூழல் சார்ந்தும் சில சிந்தனைகள் நினைவில் கொள்ளப்பட வேண்டியவை. மொழியை அடிப்படையாக வைத்துப் பிரிக்கப்பட்ட மாநிலங்களான ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், மராட்டியம், குஜராத், வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றன.
- மாறாக, நிலத்தை அடிப்படையாக வைத்துப் பிரிக்கப்பட்ட உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பெரிய மாநிலங்கள் இன்றும்கூட வளர்ச்சியில் பின்தங்கியே இருக்கின்றன. மொழிவழி மாநில வளர்ச்சியே ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியாகும்.
- மாநிலங்கள் தமது பண்பாட்டு, அரசியல் அதிகாரங்களில் சுயமாக இயங்க வேண்டும். ஆனால், இப்போது நடந்துகொண்டிருக்கும் பல நிகழ்வுகள் மாநில அரசுகளைப் பலவீனப்படுத்துவதாகவே இருக்கின்றன.
- அரசமைப்புச்சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளில் இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்தி, அதைத் தாய்மொழியாகக் கொள்ளாத மக்களின் மீது திணிக்கும் வேலையை காங்கிரஸ் தொடங்கியது, பாஜக அதைத் தொடர்கிறது.
- ஒற்றைத் தன்மையை முன்னிறுத்தி, மாநில மொழிவழியான பண்பாட்டை மறுத்து, பன்முகத்தன்மை நொறுக்கப்படுகிறது. பொருளாதாரமும்கூட விதிவிலக்கு அல்ல.
- மாநிலங்களின் வரி ஆதாரங்களைப் பிடுங்கிக்கொண்டு, அதை நாங்கள் எங்கள் வசதிப்படி திருப்பித் தருவோம் என்கிற ஒன்றிய அரசின் போக்கு அதற்கான ஓர் உதாரணம்.
- எந்த நோக்கத்துக்காக நவம்பர்-1 அன்று மொழிவழி மாநிலப் பிரிவினை நடந்ததோ அந்த நல்ல நோக்கத்தைப் புரிந்துகொண்டு, மொழிவழி மாநிலங்களைச் சுயமாக வளரவிட்டால்தான் ஒன்றிய அரசு வலுப்பெறும்.
- “மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில், முகலாய சாம்ராஜ்யத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால், இன்று அந்த சாம்ராஜ்யங்கள் எங்கே? நாட்டுப் பாதுகாப்புத் தவிர, மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திப்போம்.
- மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக்கொள்ளட்டும், பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகிற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும்!” என்கிற அண்ணாவின் வாசகங்கள் இன்றும் அர்த்தம் நிறைந்தவை!
நன்றி : இந்து தமிழ் திசை (02-11-2020)