TNPSC Thervupettagam

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

May 9 , 2019 2026 days 9161 0
இளமைக்காலம் மற்றும் குடும்பம்
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 02 அன்று குஜராத்தில் உள்ள போர்பந்தரில் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
  • இவரின் தந்தை போர்பந்தர் அரசின் திவானாக பணிபுரிந்தார்.
  • 1883 ஆம் ஆண்டில் 13 வயதான காந்தி 14 வயதுடைய கஸ்தூரிபாய் மகஞ்சி கபாடியாவை மணம் புரிந்தார்.

  • இந்தியாவில் ஆரம்பக் காலக் கல்வியைப் பயின்ற பின்னர் இங்கிலாந்து சென்ற இவர் 1891 ஆம் ஆண்டு பாரீஸ்டர் பட்டம் பெற்றார்.
  • இவர் உயர்கல்விக்காக இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக 1888 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று இவரின் மூத்த மகன் ஹரிலால் பிறந்தார்.
  • 1892 ஆம் ஆண்டு அக்டோபர் 28 அன்று அவரின் இரண்டாவது மகனான மணிலால் பிறந்தார்.
  • 1897 ஆம் ஆண்டு ஜனவரி 02 அன்று அவரின் மூன்றாவது மகனான ராம்தாஸ் பிறந்தார்.
  • 1900 ஆம் ஆண்டு மே 22 அன்று அவரின் நான்காவது மகன் தேவ்தாஸ் பிறந்தார்.
  • ராஜகோபாலச்சாரியின் மகளான லக்ஷ்மியை தேவ்தாஸ் மணந்தார்.
  • 2004 முதல் 2009 வரை மேற்கு வங்காளத்தின் 23வது ஆளுநராக இருந்த கோபால கிருஷ்ண காந்தி, இவர்களுக்குப் பிறந்தவராவார் (காந்தி மற்றும் ராஜாஜிக்கு பேரன்).

 

தென்னாப்பிரிக்காவில் ஆரம்பகால போராட்டங்கள்
  • வணிகரான தாதா அப்துல்லாவின் வழக்கிற்கான வழக்குரைஞராக 1893 ஆம் ஆண்டில் காந்தி தென் ஆப்பிரிக்கா சென்றார்.
  • 1893 ஆம் ஆண்டு ஜுன் 07 அன்று “வெள்ளையருக்கு மட்டும்” என ஒதுக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த காரணத்தால் தென் ஆப்பிரிக்காவின் பீட்டர்மாரிட்ஸ்பெர்க் நிலையத்தில் அவர் இரயிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
  • தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு எதிராக போராட “நடால் இந்திய காங்கிரஸை” 1894 ஆம் ஆண்டு நிறுவினார்.
  • “இந்தியன் ஒப்பீனியன்” எனும் பெயரில் செய்தித்தாள் ஒன்றை 1903 ஆம் ஆண்டு ஜுன் 06 அன்று தென்னாப்ரிக்காவில் நிறுவினார்.
  • நடால் இந்திய அவசர கால உதவிப் படையை காந்தி உருவாக்கினார். இப்படை இரண்டாம் போயர் போரின் போது படுக்கையைச் சுமப்பவர்களாக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது.

  • 1906 ஆம் ஆண்டு செப்டம்பரில் உள்ளூர் வாழ் இந்தியர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட டிரான்ஸ்வால் ஆசிய அவசரச் சட்டத்தினை எதிர்த்து முதல் சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தை அவர் தொடங்கினார்.
  • மீண்டும் 1907 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கருப்புச் சட்டத்திற்கு எதிராக சத்தியாக்கிரகத்தினை அவர் நடத்தினார்.
  • மேலும் இவர் 1913 ஆம் ஆண்டு கிறிஸ்தவரல்லாதோரின் திருமணங்களை ரத்து செய்யும் சட்டத்திற்கு எதிராகவும் போராடினார்.
  • இரண்டாம் போயர் போரின் போது இந்தியர்களின் அவசரகால உதவிப் பிரிவை உருவாக்கியதற்காக அரசால் காந்திக்கு 1914 ஆம் ஆண்டில் கெய்சர்-இ-ஹிந்த் எனும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
  • ஆனால் இந்த விருதானது 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குப் பின்னர் நடைபெற்ற ஒத்துழையாமை போராட்டத்தின் போது திருப்பி காந்தியால் அளிக்கப்பட்டது.
  • இவரின் தென் ஆப்பிரிக்க வாழ்நாளின் போது நீதிமன்றத்தில் காந்தியின் மொழிபெயர்ப்பாளராக ரெட்டைமலை சீனிவாசன் செயல்பட்டார்.
  • திருக்குறளின் மகத்துவத்தை புரிந்துகொள்ள இவரிடம் இருந்து காந்தி தமிழ்மொழியை கற்றார்.
  • மேலும் அவரிடம் இருந்து “மோ.க. காந்தி” என்று தமிழ் மொழியில் கையெழுத்திடவும் காந்தி கற்றுக் கொண்டார்.
  • தில்லையாடி வள்ளியம்மை எனும் தென்னாப்பிரிக்க வாழ் தமிழ்ப் பெண் காந்திக்கு தமிழ் மொழியை கற்பித்துக் கொடுத்தார்.
  • காந்தியின் அரசியல் வாழ்க்கையானது தென்னாப்பிரிக்காவில் குடியேறிய ஆசிய மக்களுக்கு எதிரான மோசமான நடத்தைகளை எதிர்த்துத் தொடங்கிய சட்டமறுப்பு இயக்கத்தின் மூலம் ஆரம்பித்தது.
  • 1910 ஆம் ஆண்டில் காந்தி அவரின் நண்பரான ஹெர்மன் கல்லென்பேக்கின் உதவியுடன் ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகில் தனது தென்னாப்பிரிக்க நடவடிக்கைகளின் செயற்பாட்டுத் தளமாக டால்ஸ்டாய் தோட்டத்தினை நிறுவினார்.
  • லியோ டால்ஸ்டாயின் “இறைவனுடைய அரசு உனக்குள் இருக்கிறது” (The Kingdom of God is Within You’) எனும் புத்தகத்தின் வழியாக காந்தி பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதுவே இவரின் ஆழ்மனதின் குரல் பற்றிய பேச்சிற்க்கும் எளிமையான வாழ்வை வாழ்வதற்கும் காரணமானது.

  • தென்னாப்ரிக்காவில் இந்தியர்களின் உரிமையைப் பெறுவதற்காக 1913 ஆம் ஆண்டின் நவம்பரில் பெரிய நடைபயணமொன்றை காந்தி தொடங்கினார்.

 

இந்தியாவிற்குத் திரும்புதல்
  • F. ஆண்ட்ரூஸ் என்பவர் மூலம் தெரிவிக்கப்பட்ட கோபால கிருஷ்ண கோகலேவின் கோரிக்கையை ஏற்று 1915 ஆம் ஆண்டு ஜனவரி 09 அன்று காந்தி இந்தியாவிற்குத் திரும்பினார். இத்தினமானது பிரவாசி பாரதிய திவாஸ் என ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.

 

காந்தியின் அடைமொழிகள்
  • CF ஆண்ட்ரூஸ் என்பவருக்கு “தீனபந்து” (ஏழைகளின் நண்பர்) எனும் பட்டத்தை காந்தி வழங்கினார்.
  • காந்தியின் அரசியல் குரு கோபாலகிருஷ்ண கோகலே ஆவார்.
  • ரவீந்திரநாத் தாகூர் 1915 ஆம் ஆண்டு அவரின் சுயசரிதையை எழுதும் போது “மகாத்மா” எனும் பட்டத்தை காந்திக்கு வழங்கினார்.
  • தாகூரை “குருதேவ்” என காந்தி அழைத்தார்.

 

பிராந்திய அளவிலான போராட்டம்
  • 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள் பீகாரில் உள்ள சம்பாரன் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் காந்தி கலந்து கொண்டார்.
  • சம்பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த குத்தகைதாரர்கள் அவர்களது நிலத்தின் பெருமுதலாளிகளுக்காக நிலத்தின் ஒவ்வொரு இருபது பாக பரப்பின் மூன்று பாகங்களிலும் இண்டிகோ செடியை (அவுரி) சாகுபடி செய்ய வேண்டும் என்ற தின்கத்தியா முறையை ஒரு சட்டத்தின் கீழ் கட்டாயப் படுத்தப்பட்டதை எதிர்த்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

  • பிராஜ் கிஷோர் பிரசாத், ராஜேந்திர பிரசாத், அனுகிரஹ நாராயண் சின்ஹா ராம்நவமி பிரசாத் மற்றும் J.B. கிருபாளினி ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட இதர பிரபலமான தலைவர்களாவர்.
  • இதுவே காந்தி இந்தியாவில் மேற்கொண்ட முதல் சத்தியாக்கிரக பரிசோதனையாகும்.
  • பின்னர் காந்தி அதற்கான விசாரணைக் குழுவிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
  • தின்கத்தியா முறையை ஒழிக்கும்படி காந்தி பரிந்துரை செய்தார்.
  • 1917 ஆம் ஆண்டு ஜுன் 17 அன்று சபர்மதி ஆற்றங்கரையில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.
  • 1918 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் அகமதாபாத் பருத்தி ஆலைக்கு எதிரான போராட்டத்தை காந்தி தலைமையேற்று நடத்தினார்.
  • இது ஆலை முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்குமிடையே ஏற்பட்ட பிளேக் நோய்க்கான ஊக்கத் தொகை குறித்த கருத்து வேறுபாட்டால் நடைபெற்றதாகும்.
  • இது காந்தி மேற்கொண்ட “முதல் உண்ணாவிரதப் போராட்டமாகும்”.
  • முன்னணி ஆலை உரிமையாளர்களில் ஒருவரான அம்பாலால் சாராபாயின் சகோதரியான அனுசுயா பென் காந்தியின் இந்தப் போராட்டத்தில் அவரது பிரதானமான தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கினார்.
  • தீர்ப்பாயமானது தொழிலாளர்கள் கோரிய 35% ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்ட பின்னர் இந்த போராட்டமானது திரும்பப் பெறப்பட்டது.
  • 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேதா மாவட்ட விவசாயிகளின் விவகாரத்தை கையிலெடுத்த காந்தி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.
  • சர்தார் வல்லபாய் படேல், இந்துலால் யாக்னிக், சங்கர்லால் பங்கர், மகாதேவ் தேசாய், நர்ஹாரி பாரிக், மோகன்லால் பாண்டியா மற்றும் ரவிசங்கர் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட இதர தலைவர்களாவர்.
  • காந்தி தொடங்கிய “முதல் ஒத்துழையாமை இயக்கம்” இதுவேயாகும்.

 

- - - - - - - - - - - - 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்