மோடி அரசுக்கு கவலை தரும் மூன்று!
- எந்தவொரு அரசும் தன்னுடைய எதிர்காலம் குறித்து ஒரேயொரு திட்டத்துடன் நிறுத்துவதில்லை. முதல் திட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றால் இரண்டாவது திட்டம், அதுவும் சரிவர பயனைத் தரவில்லை என்றால் மூன்றாவதாக இன்னொரு மாற்று திட்டம் என்றுதான் அரசுகள் செயல்படும். ஆனால், இந்த விதிக்கு மோடி அரசு விதிவிலக்காக இருக்கக்கூடும். கடந்த மக்களவை பொதுத் தேர்தலில் தங்களுக்கு மேலும் அதிக ஆதரவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடுதான் களமிறங்கியது பாஜக. எனவே, முதல் திட்டத்தோடு நிறுத்திவிட்டது. மோடி தலைமையில் புரட்சியை ஏற்படுத்தி இந்தியாவை அடியோடு மாற்றிவிடலாம் என்று நினைத்தது.
- தன்னுடைய வெற்றி குறித்து மோடி அரசு அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டுவிட்டது, கூட்டணிக்கே நானூறுக்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகள் கிடைத்துவிடும் என்று கணக்கிட்டது. அவர் பெருமையடித்துக்கொண்டதுபோல அவ்வளவு பெரிய வெற்றி கிடைத்துவிடவில்லை. பாஜகவின் முக்கியஸ்தர்கள் என்று கருதும் பலரும் இப்படிப்பட்ட முடிவை எதிர்பார்க்கவில்லை.
- பாஜகவுக்கு ஏற்பட்ட இழப்பை முக்கிய எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டிருந்தவேளையில் பாஜக தலைவர்கள் அவசரமாகக்கூடி, இரண்டாவது திட்டத்தை உருவாக்கினர். அதன்படி ஆந்திர தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் கூட்டணி அரசை அமைத்தனர். மக்களவை பொதுத் தேர்தலில் தங்களுக்கு எதுவுமே தவறாக நடக்காததுபோலவும், எல்லாம் தன்னியல்பாக நடப்பதாகவும் பாவனை காட்டினர்.
- சில தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவுக்கு வந்தனர். ஆதரவாளர்கள் ‘மோடி – மோடி’ என்று தொடர் முழுக்கமிட்டனர். ஒன்றிய அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமே செய்யப்படவில்லை. மக்களவைத் தலைவராக ஓம் பிர்லாவே தொடர்கிறார். கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கோபத்துக்கும் அதிருப்திக்கும் ஆளாகியிருந்தபோதிலும் அவரே மீண்டும் மக்களவைத் தலைவரானார்.
- எல்லாமே வெகு எளிதாக செல்லத் தொடங்கியது. தோழமைக் கட்சிகள், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதிக்கும் என்ற ஊடகங்கள் கற்பனை செய்தபடி நடக்கவில்லை. தங்களுடைய மாநிலத்துக்குத் தேவைப்படும் மிக அதிக நிதியுதவி வழங்கப்படும் என்ற முழு நம்பிக்கையில், தெலுங்கு தேசமும் ஐக்கிய ஜனதா தளமும் பாஜக கூட்டணி அரசின் செயல்திட்டங்களை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டன. (அவர்கள் எதிர்பார்த்தபடியான நிதியுதவி அறிவிப்பும் வெகுகாலம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி அடுத்த நிதிநிலை அறிக்கையிலேயே வெளியாகியும்விட்டது). இருப்பினும், இது இரண்டாவது திட்டம்தான்.
- நாடாளுமன்ற மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் பொதுத் தேர்தல், அனைவருக்கும் பொது சிவில் சட்டம், இன்னும் வெளிப்படையான – வலுவான இந்துத்துவக் கொள்கைகள் அமல் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுவிட்டன. (சுதந்திர தின உரையில் பிரதமர் இவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்). மோடி 3.0 நிச்சயம் ஆட்சியில் தொடரும், ஆனால் இந்தியாவை மாற்றவோ, புதிதாக கட்டமைக்கவோ எதிர்பார்த்தபடி செய்ய முடியாது. நாள்கள் செல்லச் செல்ல, இரண்டாவது திட்டத்தைக்கூட எளிதாக நிறைவேற்றிவிட முடியாது என்பது தெளிவாகிறது.
நகரங்களில் வெள்ள அபாயம்
- இதன் தொடக்கப் புள்ளியாக, ‘உலக தரத்திலான அரசு நிர்வாகம்’ என்ற பாராட்டும், வாரா வாரம் அடிவாங்கத் தொடங்கியிருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் பெருநகரங்களுடன் நம் நாட்டு அடித்தளக் கட்டமைப்புகளை ஒப்பிட்டுப் பேசுகிறோம். ஆனால், மழைக் காலங்களில் இந்தியாவின் எல்லாப் பெரிய பெருநகரங்களிலும் வெள்ளப் பெருக்கால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. வெள்ள நீர் வடியாமல் குடியிருப்புகளைச் சூழ்ந்துவிடுவதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க நேர்கிறது.
- போக்குவரத்து, அன்றாட வாழ்க்கை ஆகியவை மிகவும் பாதிப்படைகிறது. இந்த நிலைமைக்குக் காரணம் அந்தந்த மாநில அரசுகளும் உள்ளாட்சி மன்றங்களும்தான் என்று கூறுவதில் உண்மை இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்திய பெருநகரங்கள் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என்றே வெளிநாட்டவரால் கூறப்படும். ‘புதிய பாரதம் எழும்’ என்று நாம் கூறும்வேளையில், மழை நீரிலும் சாக்கடை நீரிலும் பெருநகரங்கள் மூழ்குகின்றன.
ரயில் விபத்துகள்
- ரயில் விபத்துகள், ரயில்கள் தடம் புரள்வது ஆகியவையும் இந்திய நிர்வாகத்தின் குறைகளாகவே பார்க்கப்படும். ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதும், தடம் புரள்வதும் கடந்த ஆண்டுகளைவிடக் குறைவு என்று அரசு புள்ளி விவரங்களைக் கொண்டு வாதிடலாம், ஆனால் வாரத்துக்கு ஒரு பெரிய விபத்தாவது தலைப்புச் செய்தியாகிவிடுகிறது.
வெளியுறவுக் கொள்கை
- அடுத்து வெளியுறவுக் கொள்கை. கடந்த பத்தாண்டுகளாக மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை சிறப்பானது என்றே பாராட்டப்பட்டது. ஆனால், இன்றைக்கு இந்தியாவின் ஒரே நட்பு நாடாக பூடான் மட்டுமே மிஞ்சுகிறது. நமக்கு மிகவும் ஆபத்தான எதிரிகள் பலர் ஏற்பட்டுவிட்டனர். சீனம் நம்முடைய பெரும் பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது, அதைத் திருப்பித் தரும் எண்ணமும் அதற்கில்லை.
- பாகிஸ்தான் மீண்டும் ஜம்முவிலும் காஷ்மீரிலும் விஷம வேலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்தியாவைச் சுற்றியுள்ள இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுடனும் நமது உறவு நல்ல நிலையில் இல்லை. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தால், ‘இந்துக்களின் காவலர் மோடி’ என்ற புகழுக்கு மேலும் களங்கம் ஏற்பட்டுவிடும்.
ஆபத்தான 3 களங்கள்
- மோடி அரசுக்கு ஆபத்தான மூன்று களங்கள், காத்திருக்கின்றன.
- முதலாவது, அதன் ஒடுக்குமுறை அதிகாரங்கள். சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) உள்ளிட்ட அதிகாரங்கள் மூலம் தங்களுடைய அரசியல் எதிரிகளைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவும், கைதுசெய்துவிடப்போவதாக அச்சுறுத்தி அடக்கிவைக்கவும் முடிந்தது. விசாரணையின்றி ஆண்டுக் கணக்கில்கூட சிலர் சிறையில் வாட நேர்ந்தது.
- நீதித் துறையும் மோடி அரசுடன் மோத நினைக்காமல், பிணை விடுதலை தர மறுத்தே வந்தது. அனைத்துவிதச் சுதந்திரத்தையும் அரசமைப்புச் சட்டம் அளிக்கிறது என்று பேசிக்கொண்டே, அரசு தொடுக்கும் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை விடுதலை தராமல் நீட்டித்துக்கொண்டேவந்தது உச்ச நீதிமன்றம். இப்போது அந்த நிலை லேசாக மாறிக்கொண்டிருக்கிறது.
- டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கீழமை நீதிமன்றம் பிணை விடுதலை வழங்கியிருக்கிறது. அதே குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வேறொரு சட்டம் மூலம் அவரைத் தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முயல்கிறது அரசு. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது அவருக்கு பிணை விடுதலை கிடைப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.
- டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு பிணை விடுதலை வழங்கிய நீதிமன்றம், சிறை என்பது விதிவிலக்காகவும் பிணை விடுதலை என்பது விதியாகவும் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. இன்னும் சில காலம் கழித்து கீழமை நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றத்தைப் பின்பற்றத் தொடங்கிவிடும். எனவே, அரசியல் எதிரிகளைக் கைதுசெய்துவிடுவேன் என்று மோடி அரசால் இனி அச்சுறுத்த முடியாது.
அதிருப்தியில் நடுத்தர வர்க்கம்
- அடுத்தது நடுத்தர வர்க்கம். பாஜகவைத் தொடர்ந்து ஆதரித்துவருவது நடுத்தர வர்க்கம்தான். சரியோ தவறோ இந்த வர்க்கத்துக்குப் பொருளாதார எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளை இந்த அரசு தொடர்ந்து புறக்கணித்துவருகிறது, அதிலும் குறிப்பாக நிதிநிலை அறிக்கையில் நடுத்தர வர்க்கத்துக்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
- பண விஷயத்தில் நடுத்தர வர்க்கம் அரசிடமிருந்து மிகப் பெரிய சலுகையையோ, வெகுமதிகளையோ எதிர்பார்ப்பதில்லை. இந்த நடுத்தர வர்க்கம் விரும்பும் மிகச் சிறிய எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வது மிகவும் எளிது. வருமான வரிவிலக்கு வரம்பு உயர்வு, மூலதன ஆதாய வரிச் சலுகை அதிகரிப்பு அல்லது ரத்து ஆகியவற்றில் அரசு அதிகாரிகள் சொல்படிதான் அரசு நிர்வாகம் செல்கிறது. பாஜக ஆதரவாளர்கள்கூட ‘வரி பயங்கரவாதம்’ என்ற கருத்தை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
- தனிநபர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும், ஊதிப் பெருக்கப்பட்ட வரி டிமாண்டு நோட்டீஸ்களை அனுப்புவதுடன் அதை முழுதாக செலுத்தினால்தான் முறையீடு பரிசீலிக்கப்படும் என்று இரக்கமற்ற வகையில் மிரட்டல்கள் விடப்படுகின்றன. பெரும்பாலான நோட்டீஸ்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அதில் கேட்கப்படும் தொகை குறைக்கப்படுகிறது அல்லது நோட்டீஸே விலக்கப்படுகிறது. நிதியமைச்சகம் மீது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியலர்களுக்குக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை, எல்லாம் அதிகாரிகள் வைத்த சட்டமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.
- நடுத்தர மக்கள் ஏற்கெனவே நன்றாக இருக்கிறார்கள், ஏழைகளுக்குப் பணப் பயன்களை வழங்குவதைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று இதற்கு எதிர்வாதம் வைக்கப்படுகிறது. ஏழைகளுக்குச் சலுகைகளை அளிப்பதையோ பணப் பயன் வழங்குவதையோ நடுத்தர வர்க்கம் எதிர்ப்பதில்லை. பெரும்பணக்காரர்களுக்குச் சலுகை மேல் சலுகையாக வழங்கப்படுவதைத்தான் நடுத்தர வர்க்கம் விரும்பவில்லை. அரசின் தலைவர்களுக்கு நெருங்கிய ஒட்டுண்ணித் தொழிலதிபர்கள் கொழிக்கவும் மேலும் செல்வம் பெருக்கவும் பெருந்திட்டங்கள் தீட்டப்படுவதையே அவர்கள் வெறுக்கின்றனர்.
- ஆரம்ப காலத்தில் தொழில்கள் வளர்வதையும் தனியார் தொழிலதிபர்கள் வளம் பெறுவதையும் நடுத்தர வர்க்கம் மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொண்டது. தொழில் வளர்ந்தால்தான் வேலைவாய்ப்பு பெருகும், நாடு வளம்பெறும் என்று ஆதரித்தது. ஆனால், இப்போது தனியார் நிறுவனங்களும் அதன் அதிபர்களும் பல மடங்காக சொத்துகளைப் பெருக்கிக்கொண்டுவருவதைப் பார்த்ததும்தான் நடுத்தர வர்க்கத்துக்கு அரசின் நோக்கம் குறித்தே சந்தேகங்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. மாத சம்பளம் வாங்கும் மக்களை இந்த அரசு மறந்துவிட்டதா, கோடியில் புரளும் தொழிலதிபர்களுக்குச் சாதகமாகவே செயல்படுகிறதே ஏன் என்று கேட்கின்றனர்.
- நடுத்தர வர்க்கத்தின் இந்தக் கண்ணோட்டம் அரசுக்கு ஆபத்தாக முடியும். எதிர்க்கட்சிகள் இதைக் கருத்தில் வைத்துக்கொண்டு அரசை அன்றாடம் தாக்கிப் பேசுகின்றன. ஆயினும் கட்சியிலோ ஆட்சியிலோ மேலிடத்தில் உள்ளவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதைப் போலத் தெரியவில்லை. கோடீஸ்வர நண்பர்களுடன் பிரதமர் குலாவுகிறார், அதிகார வர்க்கமும் அவர்களுடைய தேவை என்ன என்று கேட்டு செயல்படுவதற்காக காத்திருக்கிறது.
- ‘செபி’ அமைப்பின் தலைவர் மாதவிக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இந்த அரசின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துமா என்பதை இப்போதே கணிக்க முடியாது. ஆனால், இந்த அரசு பணக்காரர்களுக்கும் பெருந்தொழில் அதிபர்களுக்கும் சாதகமாகவே செயல்படுகிறது என்ற எண்ணம் மக்களிடையே நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது. இதனால் அரசுக்கு எந்த நன்மையும் கிடையாது.
- அரசின் முதல் இரு திட்டங்களும் தோற்றுவிட்டதால் மூன்றாவதாக, வக்ஃப் நிலங்கள் நிர்வாக சீர்திருத்த மசோதாவைக் கொண்டுவந்து புதிய பிரச்சினையைப் புகுத்தியிருக்கிறது அரசு. உத்தர பிரதேசத்தில் இந்துக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகக் கொண்டுவந்ததாகக் கருதப்படும் வக்ஃப் சொத்துகள் சீர்திருத்த மசோதா, நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
ஒலிபரப்பு மசோதா
- துருவ் ரத்தி போன்ற அரசு விமர்சகர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட கருத்துரிமை தொடர்பான ஒலிபரப்பு மசோதாவும், கடும் எதிர்ப்பு காரணமாக கடைசி நேரத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. அனைத்து தரப்பின் கருத்தையும் கேட்டு புதிய மசோதாவைக் கொண்டுவருவதாக கூறியிருக்கிறது அரசு.
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசுக்கு இருந்த பிடிமானமும் தளர்ந்துவிட்டது. மக்களவையில் எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து அடக்கிவருகிறார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ஆயினும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. மாநிலங்களவையில் ஜகதீப் தன்கருக்கும் ஜெயாவுக்கும் (பச்சன்) இடையில் வாக்குவாதம் முற்றியது சமீபத்திய உதாரணம்.
- வக்ஃப் சொத்து தொடர்பான மசோதா போன்ற மூன்றாவது திட்டம், நிலைமையைக் குழப்ப இப்போதைக்குப் பயன்படலாம், ஆனால் அதுவும் முதல் இரு திட்டங்களைப் போலவே பயன்படாமல் போய்விடும்.
நன்றி: அருஞ்சொல் (18 – 08 – 2024)