TNPSC Thervupettagam
July 6 , 2023 508 days 321 0
  • இந்தியா தன்னுடைய சுதந்திரத்தை 1947இல் பிரகடனப்படுத்தி இரண்டாண்டுகளுக்குப் பின்பு மணிப்பூர் தன்னை இந்திய ஒன்றியத்தில் இணைத்துக்கொண்டது. அதுவரை பிரிட்டிஷாரின் ஆளுகைக்குட்பட்ட மன்னராட்சி நிலவும் சமஸ்தானமாக மணிப்பூர் இருந்தது. கடும் எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு இடையில்தான் மணிப்பூரின் கடைசி அரசர் போடோசந்திர சிங் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். நான் மணிப்பூருக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றபோதுகூட அதிகம் எதிர்கொண்ட கேள்வி ‘இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்களா? எங்கள் பிரச்சினைகள் உங்களுக்குப் புரியாதே!’
  • அடர்வனம் நிறைந்த மலைகளும் பள்ளத்தாக்குகளும் சூழ்ந்த மணிப்பூரின் நில அமைப்பைப் போலவே அதன் சமூக அமைப்பும் சிக்கலானது. ஏராளமான பழங்குடிச் சமூகங்களின் கூட்டுக் கலவையான மணிப்பூரின் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிப்பதில் மூன்று சமூகங்கள் பிரதான பங்கை வகிக்கின்றன. மெய்த்திகள், குக்கிகள், நாகாக்கள். மணிப்பூரின் மொத்த நிலப்பரப்பில் 10% சமவெளிப் பகுதி; 90% மலைப் பகுதி. மாநிலத்தின் மக்கள்தொகையில் 57% மெய்த்திகள். 43% குக்கிகள், நாகாக்கள் உள்ளிட்டோர்; குக்கிகள் மட்டும் 30%.
  • இந்திய ஒன்றியத்தின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு, ‘இந்தியர்’  என்கிற தேசவுணர்வு மூன்றாம்பட்சம் என்றால், ‘மணிப்பூரி’ எனும் மாநிலவுணர்வும் இரண்டாம்பட்சம்தான்; உண்மையில் அவரவர் இனவுணர்வே அவர்களுடைய முதன்மை அடையாளம் ஆகும். வடகிழக்கில் பயணிக்கும் ஒருவர் இருவிதப் பிரிவினைக் குரல்களை சகஜமாகக் கேட்க முடியும். தம் இனத்தை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர நாடு அல்லது தம் இனத்தை அடிப்படையாகக் கொண்ட சுயாட்சி மாநிலம். சுதந்திரத்துக்குப் பிந்தைய 75 ஆண்டுகளில் இந்தியாவுடனான முரண்பாடுகளை மணிப்பூர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துவந்தது. அதேபோல, மணிப்பூரில் உள்ள இனக்குழுக்கள் தங்கள் இடையேயான எல்லா வேறுபாடுகளையும் தாண்டி ஒரே மாநிலம் எனும் உணர்வையும் வளர்த்துவந்தனர். ஆயினும், மெய்த்திகளுக்கும் குக்கிகளுக்கும் இடையிலான பிளவு விரிந்துகொண்டே இருந்தது. சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட சட்டங்களும், நிர்வாக ஏற்பாடுகளும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் தவறான புரிதல்களை அப்படியே பிரதிபலித்ததும் மாநிலங்களை அணுகுவதில் பெருமளவில் ஒரே மாதிரியான  குணாதிசய அணுகுமுறையை இந்திய அரசு கைக்கொள்ள முயற்சிப்பதும் முக்கியமான காரணம்.
  • மணிப்பூரைப் பொறுத்த அளவில் மெய்த்திகளுக்கும் குக்கிகளுக்கும் இடையேயான முரண்களில் மூன்று புள்ளிகள் முக்கியமானவை.
  • முதலாவது புள்ளி, மக்கள்தொகை வேறுபாடு. மெய்த்திகளின் மக்கள்தொகை சன்னமாகக் குறைந்துவருகிறது. மாறாக, குக்கிகளின் எண்ணிக்கை சன்னமாக உயர்ந்துவருகிறது. மெய்த்திகளில் இந்துக்கள் பெரும்பான்மையினர் என்பதும் குக்கிகள் உள்ளிட்ட ஏனைய குழுக்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினர் என்பதும் இந்த எண்ணிக்கை வேறுபாடு மீதான வெறுப்புக்கு மதத்தூபத்தையும் வீசுகிறது. 1961இல் மாநிலத்தில் 62% ஆக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 2011இல் 41% ஆகிவிட்டதையும், அப்போது 19%ஆக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 49%ஆக உயர்ந்திருப்பதையும் மாநிலத்தில் உள்ள இந்து அமைப்புகள் ஒரு பிரச்சினையாக வளர்த்தெடுத்திருக்கின்றன.
  • இரண்டாவது புள்ளி, நிலவுரிமையில் வேறுபாடு. மாநிலத்தின் மக்கள்தொகையில் சரிபாதிக்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் மெய்த்திகள் மாநிலத்தின் நிலப்பகுதியில் 10% ஆக இருக்கும் சமவெளியில் வசிக்கின்றனர். மாறாக, மாநிலத்தின் 90% நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் மலைப் பகுதிகளில் குக்கிகள் உள்ளிட்ட ஏனைய சமூகங்கள் வாழ்கின்றன. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்த ஏழு தசாப்தங்களில் மணிப்பூரின் மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இடநெருக்கடி ஒரு பிரச்சினையாக உணரப்படுகிறது. மலைகளில் உள்ள குக்கிகள் சமவெளியில் சாதாரணமாக நிலம் வாங்க முடியும். சமவெளியில் உள்ள மெய்த்திகள் மலைகளில் நிலம் வாங்க சட்டரீதியான கட்டுப்பாடுகள் உண்டு. இது நிலவுடைமை சார்ந்த பிரச்சினையாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.
  • மூன்றாவது புள்ளி, சுதந்திரத்துக்குப் பின் குக்கிகளுக்கு வழங்கப்பட்ட பழங்குடியின அங்கீகாரம். இதன் வாயிலாகப் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அரசு இயந்திரத்தில் கணிசமான அதிகாரிகள் பதவியை குக்கிகள் கைப்பற்றிவிட்டதான பார்வை மெய்த்திகளிடம் இருக்கிறது. தாங்களும் பூர்வத்தில் பழங்குடிகளாக இருந்ததால் தங்களுக்கும் பழங்குடியினர் அங்கீகாரம் வேண்டும் என்ற குரல் மெய்த்திகளிடம் ஒலிக்கிறது.
  • மேலோட்டமாக அணுகும்போது குக்கிகள் ஏதோ குறைந்த எண்ணிக்கையில் இருந்துகொண்டு மேலாதிக்கம் செய்வதான தோற்றத்தை உருவாக்கினாலும், பிரச்சினைகளை ஆழமாக அணுகும்போது மேற்கண்ட குரல்களில் ஏராளமான கோளாறுகள் இருப்பதை உணர முடிகிறது.
  • முதலாவது, குக்கிகளின் மக்கள்தொகை அதிகரித்திருக்கிறது என்றாலும், அதை ஏதோ ஒரு சதிபோலக் காண்பதற்கான நியாயங்கள் ஏதும் இல்லை. மேலும்மியான்மரிலிருந்தும் மிசோரம், நாகாலாந்திலிருந்தும் வெவ்வேறு இனமோதல்களின்போது அகதிகளாக வந்தவர்கள், மாற்றுச் சமூகங்கள் எல்லோரையும் குக்கிகளோடு இணைத்துப் பார்ப்பதும், குக்கிகளை ஒட்டுமொத்தமாக வந்தேறிகள் என்று சாடுவதும் மெய்த்தி குழுக்களின் உளச்சிக்கல். அதேபோல, மதம் மாறுதலும் பழைய மரபுக்குத் திரும்புதலும் பழங்குடிச் சமூகங்களில் நிலவும் தொடர் போக்கு. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு மெய்த்திகளில் கணிசமானோர் மதம் மாறுவதும் ஒரு காரணம்.
  • இரண்டாவது, ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் கணக்கிடுகையில் 90% மலைப் பகுதி என்றாலும் சமவெளியைப் போல மலைகளிலும் வனங்களிலும் எல்லா இடங்களும் மனிதர்கள் வசிப்பதற்கு உகந்தவை அல்ல. சமவெளியைப் போலவே மலைப் பகுதியிலும் இட நெருக்கடி நிலவுகிறது என்கின்றனர் குக்கி குழுக்கள்.
  • மூன்றாவது, குக்கிகளுக்கான இடஒதுக்கீடு அங்கீகாரம் அரசு இயந்திரத்தின் அவர்களுக்கு ஒரு முன்னகர்வைத் தந்திருக்கிறது என்றால்மக்கள்தொகையில் மெய்த்திகள் வகிக்கும் பெரும்பான்மையானது, அரசியலில் அவர்களுக்கு முன்னகர்வைத் தந்திருக்கிறது. மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 இடங்கள் மெய்த்திகள் பெரும்பான்மை வகிக்கும் சமவெளிப் பகுதிகளிலேயே இருக்கின்றன. எஞ்சிய 20 தொகுதிகளில் 10 தொகுதிகளே குக்கிகள் பெரும்பான்மை வகிக்கும் தொகுதிகளில் உள்ளன. விளைவாக அரசியலில் மெய்த்திகளே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றனர். 
  • சமூகங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் பகைமைக்கான பல காரணங்கள் நிர்வாகக் கோளாறுகளால் உருவாகியிருக்கிறது. ஒரு நல்ல அரசியல் தலைமை, அனைத்துச் சமூகங்களையும் ஒருசேர இணைக்கும் சமூக இயக்கங்களுக்கான வெற்றிடம் நீண்ட காலமாக மணிப்பூரில் நிலவுகிறது. ஆயினும், இவ்வளவு தீவிரமான வெறுப்பரசியலும் கலவரங்களும் மணிப்பூரில் இல்லை. பாஜகவின் பைரன் சிங் ஆட்சியின் மோசமான நிர்வாகம் இதற்கான உந்துவிசை ஆகியிருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நாள் வரை மணிப்பூரில் கிட்டத்தட்ட 300 ஊர்கள் கடும் தாக்குதலை எதிர்கொண்டிருக்கின்றன; 3,500க்கும் மேற்பட்ட வீடுகள் எரித்தழிக்கப்பட்டிருக்கின்றன; நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்; பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் ஊரைக் காலிசெய்துவிட்டு பாதுகாப்பான இடம் தேடி ஓடியிருக்கிறார்கள். அரசு அமைத்திருக்கும் முன்னூறுக்கும் முகாம்களிலேயே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
  • இரு சமூகங்கள் சார்ந்தும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் சாலையில் வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன. அரசுக் கணக்கின்படியே 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் அரசுப் படையினரிடமிருந்தும் காவல் துறையினரிடமிருந்தும் இந்தக் குழுக்களால் பறிக்கப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு உள்நாட்டுப் போர் மணிப்பூரில் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
  • மெய்த்தி சமூகத்தின் ஆட்சியாகவே அரசை மாற்றிவிட்டார் பைரன் சிங் என்கிறார்கள் குக்கிகள். பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 குக்கியின சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என்கிறார்கள். மெய்த்திகள் மத்தியிலும் நிதானப் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் பைரன்சிங்கைக் குற்றம்சாட்டுகின்றனர். “பொறுப்பற்ற அரசு இது, தன்னுடைய கையாலாகாததனத்தால் இன்னும் பல தலைமுறைகளுக்கு ஒன்றிணைய முடியாத அழிவுகளையும் வெறுப்பையும் இரு சமூகங்களிடையே உருவாக்கிவிட்டது” என்கிறார்கள்.
  • அண்டை நாடான மியான்மருடன் 400 கி.மீ. எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மணிப்பூரில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகம்; வனப்பகுதியில் அபினி உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்ளே நுழைந்த அரசு நிர்வாகம் ஏராளமான கிராமங்களைக் காலி செய்தது; சாமானிய குக்கிகளும் இதில் பாதிக்கப்பட்டதோடு, குக்கிகள் என்றாலே போதைப்பொருள் கடத்துபவர்கள், வந்தேறிகள் எனும் வெறுப்புப் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் முடுக்கிவிடப்பட இது வழிவகுத்தது. இதன் விளைவாக எழுந்த எதிர்ப்பை சரியான முறையில் பைரன் சிங் நிர்வாகம் கையாளவில்லை. கலவரங்கள் வெடித்தபோது காவல் துறை பெருமளவில் வேடிக்கை பார்த்தது. இத்தனைக்கும் இந்தியாவிலேயே அதிகமான போலீஸாரைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். மாநிலத்தின் கணிசமான பகுதிகள் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுபவை.
  • இன்று ‘இனியும் இணைந்திருக்க முடியாது; குக்கிகளுக்கென்று தனி மாநிலம் வேண்டும்’ என்ற குரல் குக்கிகளிடமும் ‘மணிப்பூரை எக்காரணத்தைக் கொண்டும் பிரிக்க முடியாது; மாறாக குக்கிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நில உரிமையும் பழங்குடி அங்கீகாரமும் மெய்த்திகளுக்கும் வேண்டும்’ என்ற குரல் மெய்த்திகளிடமும் ஒலிக்கிறது. குக்கிகள்-மெய்த்திகள் இரு தரப்பிலும் உள்ள முக்கியமான ஆளுமைகள், அறிவுஜீவிகள் எவ்வளவோ அமைதிக்கான குரல் கொடுத்தும் சீந்துவாரில்லை. ஒரு பிரதமராக உள்ள இயல்பான பொறுப்புணர்வோடு, மாநிலத்தை ஆளும் பாஜகவின் தலைமைப் பீடத்தைக் கையில் வைத்திருப்பவர் எனும் பொறுப்பையும் சுமக்கும் மோடியை மணிப்பூரைச் சமாதானக் குழுக்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பல முறை சந்திக்க முயற்சித்தும் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. மாநிலமே எரிந்துகொண்டிருக்கும் சூழல் ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கும் சூழலிலும்பிரதமர் மோடியிடமிருந்து மணிப்பூரைப் பற்றி ஒரு வார்த்தை வரவில்லை.
  • மோடி அரசின் தோல்விகளில், பிரதான இடத்தில் மாநிலங்களுடனான அவருடைய அணுகுமுறை இருக்கும் என்றால், அவரால் கடும் சேதம் உருவாக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் காஷ்மீருக்கு அடுத்த இடத்தில் மணிப்பூர் இருக்கும். மோடியினுடைய அவமானகரமான மௌனமானது தேர்தல் பலன் சார்ந்து பாஜகவுக்கு வெற்றியைத் தரலாம்; ஒரு நாட்டின் தலைவராக மேலும் ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறார் மோடி.
  • மணிப்பூரில் உள்ள சாமானியர்களின் மனசாட்சியை எழுத்தாளர் பினாலெக்ஷ்மி நெப்ரத்தின் வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன. கரன் தாப்பருக்கு அளித்த காணொலிப் பேட்டியில் பினாலெக்ஷ்மி கண்ணீர் மல்க பிரதமர் மோடிக்கு விடுத்த செய்தி இது: “ஒரு நாட்டின் பிரதமர் என்பவர் அதன் தாய் தந்தையருக்குச் சமம். உங்கள் சொந்தக் குழந்தைகள் செத்து மடியும்போது, கொல்லப்படும்போது, வெட்டிச் சாய்க்கப்படும்போது, கும்பல்களால் படுகொலை செய்யப்படும்போது, உயிரோடு எரித்துக் கொல்லப்படும்போது, எப்படி உங்களால் மௌனமாக இருக்க முடியும் திருமிகு பிரதமர்? எப்படி உங்களால் மௌனமாக இருக்க முடியும்? மணிப்பூரின் பெண்களாகிய நாங்கள் கதறியழுகிறோம், எங்கள் அழுகுரல்கள் பலவீனத்தின் குரல்கள் அல்ல; பிரமதர் பொறுப்பில் இருப்பவர் இப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான எங்களின் சங்கற்பம். சொல்லப்போனால் மணிப்பூரில் நடப்பதற்கு தார்மிகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நீங்கள் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்றும், எல்லா ஜனநாயகங்களின் தாயகம் என்றும் நாமெல்லோரும் கனவுகண்ட இந்தியா இதுவல்ல. 1949இல் இந்தியாவின் பகுதியாக மணிப்பூர் ஆக்கப்பட்டபோது மணிப்பூரின் தனித்துவ அடையாளமும் மணிப்பூரின் நில எல்லையும் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த இந்தியா இதுவல்ல!’
  • தாங்கள் கைவிடப்பட்டிருப்பதாக மக்கள் உணர்வதைவிடவும் மோசமான தோல்வி தலைவர்களுக்கு இல்லை!

நன்றி: அருஞ்சொல் (06 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்