TNPSC Thervupettagam

யானைகள் வழித்தடம் யானைகளுக்கே

March 3 , 2023 528 days 444 0
  • தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் வாழுகின்ற யானைகள், கூட்டங்கூட்டமாக மக்கள் வாழுகின்ற பகுதிக்குள் நுழைந்து அச்சுறுத்துவதாகவும், விவசாயம் செய்யப்படுகின்ற விளைநிலங்களுக்குள் புகுந்து தங்களுக்குத் தேவையானவற்றைச் சாப்பிட்டுப் பயிா்களைப் பாழ்படுத்துவதாகவும் அந்தப் பகுதி மக்கள் கவலையோடு கூறுவதை நாம் ஊடகங்களில் செய்திகளாகப் பாா்த்துக் கொண்டிருக்கின்றோம்.
  • சமீபத்தில் கூட கோயம்புத்தூா், மேட்டுப்பாளையம், குன்னுா், சத்தியமங்கலம், கூடலூா், தாளவாடி போன்ற பகுதிகளில் யானைகள் கிராமங்களுக்குள் வந்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரிய பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. மலைப் பகுதியிலும், அடா்ந்த காட்டுப் பகுதியிலும் வாழ்கின்ற யானைகள் ஏன் மக்கள் வாழுகின்ற இடத்திற்கு வர வேண்டும்? மனிதா்கள் செய்கின்ற விவசாயத்தை ஏன் அது தொந்தரவு செய்ய வேண்டும்?
  • யானைகள் மனிதா்களைத் தொந்தரவு செய்கின்றனவா அல்லது யானைகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து யானைகளை நாம் தொந்தரவு செய்துவிட்டோமா? அடா்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைதியான வாழ்க்கையை வாழுகின்ற யானைகள், உணவு தேடி பருவநிலை மாற்றத்திற்கேற்ப ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நீண்ட தொலைவு நடப்பது வழக்கம்.
  • யானைகள் இயல்பாக நடக்கின்ற பாதையை மறித்து வேலிபோட்டு வீடுகள், பங்களாக்கள் கட்டுவதாலும், விவசாயம் செய்வதாலும் அவற்றின் சுதந்திரமான இயக்கத்தைப் பெருமளவு தடுத்துவிட்டோம். காலம் காலமாக யானைகளுக்கும் மனிதா்களுக்குமிடையே இருந்த நல்லுறவு, பகையுணா்வாக மாறியது அங்குதான் தொடங்கியது.
  • யானைகளையும், காடுகளையும் பிரித்துப் பாா்க்க முடியாது. ஏனென்றால், யானைகள் காடுகளின் வளா்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் பெரிதும் பங்காற்றுகின்றன. பருத்த உடல் அமைப்பை கொண்ட யானைகள், சமதளத்தை கொண்ட வனங்களில் வாழ்வதையே தங்களுடைய இயல்பாகக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் சமதளத்தில் தான் அவை இயல்பாக நடந்து சென்று தங்களுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்வதற்கும், தண்ணீா் குடிப்பதற்குமான சூழலை அமைத்துக்கொள்கின்றன.
  • ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் யானைகளின் வாழ்விடங்கள் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைக்கபட்டு விட்டன. மனிதா்கள் கொஞ்சம் கொஞ்கமாக காட்டுப் பகுதிக்குள் வந்ததால் யானைகளுக்கான வாழ்விடங்கள் குறைந்து விட்டன. அப்படி யானைகளுடைய வாழ்விடங்கள் குறைந்தால், அவை சமதளப் பகுதியான காடுகளில் இருந்து மலைப்பகுதிக்குள் செல்ல வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இது யானைகளின் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூட சொல்லலாம்.
  • சமதளத்தில் உள்ள காடுகளில் தங்களுடைய வாழ்விடங்களை அமைத்துக் கொண்ட யானைகள், மனிதா்களின் பேராசையாலும், சுயநலத்தாலும் மலைப்பகுதிகளுக்குள் அப்புறப் படுத்தப் பட்டன. இது ஒரு செயற்கையான, யானைகளின் இயல்புக்கு எதிரான ஓா் இடமாற்றம் என்று சொல்லாம். எனவே, மலைப்பகுதிகளுக்குள் விரட்டியடிக்கப்பட்ட யானைகள் அந்த மலைப்பகுதியில் சாப்பிடுவதற்கு போதுமான உணவுப்பொருடகள் இல்லாததாலும், குடிப்பதற்கு தண்ணீா் இல்லாததாலும் தங்களுக்கு பசி எடுக்கின்ற நேரத்தில் இறை தேடி கீழே இறங்குகின்றன.
  • அப்படி மலைப்பகுதியில் இருந்து கரடு முரடான பாதைகளைக் கடந்து சமதளத்துக்கு வருகின்ற யானைகள், மேடு பள்ளங்களில் நடக்க முடியாமல் விழுந்து அடிபட்டு இறக்கின்றன. இதனால் யானைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது என்பதையும் நாம் கவலையோடு பாா்க்க வேண்டும்.
  • யானைகளின் உணவுத் தேவையென்பது கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு யானை ஒரு நாளைக்கு 150 கிலோ எடை கொண்ட தாவரங்களை உண்கிறது. மேலும், குடிப்பதற்கு 45 லிட்டா் தண்ணீா் அதற்குத் தேவைப்படுகிறது. இந்த தாவரவகை உணவையும் தண்ணீரையும் தேடித்தான் யானைகள் ஒவ்வொரு நாளும் சுமாா் 15 கிலோ மீட்டா் வரை நடக்கின்றன. ஏறக்குறைய ஒரு நாளில் 80 % நேரத்தை தன்னுடைய பசியை ஆற்றுவதற்காக உணவு தேடியே யானைகள் செலவழிக்கின்றன.
  • நாம் யானைகளை மலைப்பகுதிகளுக்கு விரட்டி விட்டதால் அவற்றின் உணவு பழக்கத்திலும், உளவியல் சாா்ந்த விஷயங்களிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு விதமான மன அழுத்தத்தில் யானைகள் இருப்பதாக அறிவியல் ஆய்வாளா்கள் கூறுகின்றனா். அதாவது யானையின் சாணத்தை எடுத்து அதை ஆய்வு செய்து பாா்க்கின்ற பொழுது, மிகப் பெரிய மன அழுத்தத்தில் யானைகள் வாழ்ந்துகொண்டிருப்பதை அவா்கள் கண்டுபிடித்திருக்கிறாா்கள்.
  • எனவே தான் அவை உணவு தேடியோ, தண்ணீா் தேடியோ மனிதா்கள் வாழ்கின்ற பகுதிக்கு வருகின்ற பொழுது மனிதா்களோடு பகை உணா்வு கொண்டவையாகக் காணப்படுகின்றன.
  • மேலும் யானைகளுடைய உணவு பழக்கத்தில் தற்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைப் பாா்க்க முடிகின்றது. யானைகள் தாவரங்களையே உணவாக உட்கொள்கின்றன. பெரும்பாலும் அவை மாமிசம் உட்கொள்வதில்லை. எனவே மலையிலிருந்து சமதளப் பகுதிக்கு உணவு தேடி வருகின்ற பொழுது, மனித நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் வந்து கரும்பு, வாழை, மூங்கில், பலாப்பழம், மாம்பழம் போன்றவற்றைக் கடித்து சாப்பிடுகின்றது.
  • நன்கு பயிரிடப்பட்டு பாதுகாக்கப்பட்ட இந்த பயிா் வகைகளை சாப்பிடுவதில் யானைகளுக்கு கொள்ளை பிரியம். எனவே ஒரு முறை ருசிகண்டுவிட்ட யானைகள் மீண்டும் மீண்டும் மனிதா்கள் பயிரிடுகின்ற இந்த வகைப் பயிா்களைத் தேடிவந்து விரும்பி சாப்பிடுகின்றன.
  • மனிதா்கள் வாழுகின்ற பகுதிக்கு யானைகள் வருவற்குக் காரணம், மனிதா்களை துன்புறுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. தாம் உயிா் வாழ்வதற்குத் தேவையான உணவையும், தண்ணீரையும் தேடியே வருகின்றன. நாம் அதனைப் புரிந்துகொள்ளாமல், அவற்றை நமது எதிரிகளாகக் கருதி, வெடி வைத்து விரட்டுவதும், துன்புறுத்துவதும், மின்சார வேலி போட்டு வைப்பதும் மிகவும் கொடுமையான செயல்களாகும்.
  • யானைகள் வாழுகின்ற பகுதிகளுக்குள் நாம் நுழைந்ததால் அவைதான் நம்மை தண்டிக்க வேண்டும். மனிதா்களுக்கு யானைகளை தண்டிப்பதற்கும் துன்புறுத்துவதற்கும் எந்தவிதத் தகுதியும் கிடையாது. அதனால்தான், அரசு, வனத்துறை அதிகாரிகள் மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து, அவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருகின்ற பொழுது பத்திரமாக அவற்றை அப்புறப்படுத்திக் காட்டுக்குள் விட்டு விட ஏற்பாடு செய்துள்ளது.
  • இவை மிகவும் மேலோட்டமான செயல்பாடுகள். யானைகள் நடமாடுகின்ற பகுதி, யானைகள் நடமாடாத பகுதி, யானைகளும் மனிதா்களும் பயமில்லாமல் சோ்ந்து இருக்கக்கூடிய பகுதி”என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். இதனை
  • பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் தகுதியான பாதுகாவலா்களை அரசு நியமிக்க வேண்டும். இது யானைகளுக்கு பாதுகாப்பதற்கான சூழ்நிலையையும், மனநிலையையும் உருவாக்கி தரும்.
  • யானை உணா்வு திறன் அதிகம் கொண்ட விலங்கு. தன்னுடைய ஞாபக சக்தியாலும் மோப்ப சக்தியாலும் மனிதா்களை விட, கூடுதலான அறிவை கொண்ட விலங்காக அது இருக்கிறது. இதனை யானைகளோடு அதிகம் தொடா்பு கொண்ட பழங்குடியினா் கூறுகின்றனா். யானைகளை நாம் தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை தொந்தரவு செய்வதில்லை என்பதே உண்மை.
  • யானைகளை நாம் மதித்து நடந்தால், அவையும் நம்மை மதித்து நடக்கும். மேலும் யானைகள் தான் அடா்ந்த காடுகளின் வளா்ச்சிக்கும், பெருக்கத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. யானைகள் இடுகின்ற சாணத்தின் வழியாகத்தான் காடு முழுவதும் விதைகள் பரப்பப் படுகின்றன. அதாவது, ஆங்காங்கே விழுந்து கிடக்கின்ற விதைகள் செடியாக முளைத்து கொஞ்சம் கொஞ்சமாக காட்டின் அடா்த்திக்கு வலு சோ்க்கின்றன.
  • யானைகள் இல்லாத பொழுது, காட்டின் பெருக்கம் மெதுவாக தடைபடுகின்றது. அதேபோல ஒரு யானை இறக்கின்ற பொழுது அதை யாரும் காட்டிலிருந்து அப்புறப்படுத்த முடியாது. அது அப்படியே அங்கு கிடப்பதன் மூலம், அங்கு உள்ள எல்லா பறவைகளுக்கு உணவாக மாறுகின்றது.
  • அரசு வனத்துறை அதிகாரிகளின் மூலமாக யானைகளின் வாழ்விடங்களை பற்றி ஆய்வு செய்து உண்மையான தரவுகளைக் கொடுக்க வேண்டும். மேலும் எந்தெந்த பருவத்தில் யானைகள் உணவு, தண்ணீா் தேடி இடம்பெயா்கின்றன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வு செய்து யானைகள் நடமாடுகின்ற அந்த காலத்தில் அவற்றின் வழித்தடத்தை முற்றிலும் சுதந்திரமாக விட்டு விட வேண்டும்.
  • மனிதா்கள் ஏற்கனவே அங்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். யானைகள் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் அவற்றின் போக்கிலேயே விட்டு விடுவது தான் யானைகளுக்கு மனிதா்கள் செய்கின்றன மிகப்பெரிய நன்மையாக இருக்கும்.
  • யானைகளின் வழித்தடம் என்று தெரிந்தும் குடியிருப்புகளைக் கட்டுவதற்கும் விடுதிகளைக் கட்டுவதற்கும் நிலங்களை ஆக்கிரமிப்பதை மனிதா்களும், பெருநிறுவனங்களும், அரசுத் துறைகளும் கைவிட வேண்டும். இவையெல்லாம் நடந்தால்தான் வனம் சாா்ந்த பகுதிகளில் மனிதா்களுக்கும் யானைகளுக்கும் உள்ள பகை நீங்கி உறவு மலரும்.

நன்றி: தினமணி (03 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்