- ஒரு பெண்ணின் சந்தேகத்துக்குரிய மரணத்தையொட்டி சட்டென்று கட்டியெழுப்பப்படுகிற புனித பிம்பம், பெரும்பாலானோரை வாயடைக்கச் செய்துவிடுகிறது. ரூப் கன்வர் மரணத்தில் நடந்ததும் அதுதான். பம்பாய் பத்திரிகையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மீனா மேனன், கீதா சேஷு, சுஜாதா ஆனந்தன் ஆகிய மூவரும் ரூப் கன்வரின் கிராமத்துக்குச் சென்று தகவல்களைச் சேகரித்து வெளியிட்ட ஆய்வறிக்கையும் அதைத்தான் வழிமொழிகிறது.
- ரூப் கன்வரின் மரணத்தில் பலரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னபோது, வெகு சிலர் அந்த நிகழ்வை அளவுக்கு அதிகமாகப் புனிதப்படுத்திப் பேசியுள்ளனர். 1987 செப்டம்பர் 4 அன்று ரூப் கன்வர் ‘சதி’க்குப் பலியானதைத் தொடர்ந்து இந்த மூன்று பெண் பத்திரிகையாளர்களும் தியோராலா கிராமத்துக்குச் சென்றனர். ரூப் கன்வர் தீயில் பொசுங்கிய இடம் அவர்கள் சென்றபோது ‘சதி தலமா’க மாற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றுக்கொண்டு இருந்திருக்கிறது. செங்கற்களால் சிறிய மேடை எழுப்பப்பட்டு அதன் மேல் காவி வண்ணத் துணி போர்த்தப்பட்டு இருந்ததாம். ஆட்டோ, கார், பேருந்து, ஒட்டகம் என வெவ்வேறு வாகனங்களில் வெளியூர் மக்கள் ‘சதி தல’த்தைப் பார்வையிட வந்தவண்ணம் இருந்தனர். ஏழு ராஜபுத்திர இளைஞர்கள் கையில் வாளோடு அந்தச் செங்கல் அமைப்பைச் சுற்றி வலம்வந்தபடி இருந்தனர்.
வாக்குமூலங்கள் பலவிதம்
- தியோராலா கிராமத்தில் இருந்து இரண்டு மணி நேரப் பயணத் தொலைவில் ரூப் கன்வரின் பிறந்த வீடு இருந்தபோதும் அவர்களுக்கு ஏன் ரூப் கன்வரின் ‘சதி’ முடிவு குறித்துத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதும், ரூப் கன்வரின் கணவன் மால் சிங்கை அருகில் உள்ள ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் ஏன் சிகாருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதும் பத்திரிகையாளர்களின் சந்தேகத்தை வலுப்படுத்தின. இது குறித்து அவர்கள் கிராம மக்களிடம் விசாரித்தபோது ஒருவர்கூட வாய் திறக்கவில்லை. சம்பவம் நடந்தபோது ஊரில் இல்லாத காங்கிரஸ் கட்சி ஊழியர் ஒருவர் தன் உறவினர் சொன்னதாக ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார். “மால் சிங்கின் உடல் வீட்டுக்கு எடுத்துவரப்பட்டதும் ‘சதி’ குறித்து அவருடைய பெற்றோர் பேசியிருக்கின்றனர். அதைக் கேட்ட ரூப் கன்வர் பயந்துபோய் வீட்டுக்கு அருகில் இருந்த வைக்கோல் போருக்குள் சென்று ஒளிந்துகொண்டார். பிறகு அவரை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுவந்து ‘சதி’ சடங்கை நிறைவேற்றியிருக்கிறார்கள்.” உள்ளூர்ப் பத்திரிகையாளராகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர், ‘சிதையைவிட்டு ரூப் கன்வர் வெளியேறிவிடாத வகையில் சிதையைச் சுற்றி ராஜபுத்திர இளைஞர்கள் காவலுக்கு நின்றிருந்ததாகத் தெரிவித்தார். மற்றொரு இளைஞரோ ரூப் கன்வரின் வாயில் நுரை தள்ளியிருந்ததாகச் சொன்னார்.
- தர்க்கபூர்வமாக விளக்க முடியாத எதையுமே கேள்விக்கு அப்பாற்பட்ட கடவுளோடு முடிச்சுப்போட்டுவிட்டால் யாரும் அதை எதிர்க்க மாட்டார்கள் என்பது ரூப் கன்வர் விஷயத்திலும் உறுதிபடுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநில ஜனதா கட்சித் தலைவர் கல்யாண் சிங் கால்வி இது குறித்துப் பெண் பத்திரிகையாளர்களிடம் உணர்வுபொங்கப் பேசியிருக்கிறார். “சதி சடங்கை நிறைவேற்றுவது என ரூப் கன்வர் முடிவெடுத்ததுமே அவர் உடலே சுடர்விடுவதுபோல் அனல் வீசியது. அவரை நெருங்குவதற்கே பலரும் தயங்கினர். அவருடைய உறவினர் ஒருவர் ரூப் கன்வரைத் தொட முயன்றபோது அவரது கை தீ பட்டதுபோல் ஆனதாம்” எனச் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.
- ரூப் கன்வர் சிதையிலிருந்து விழுந்து “காப்பாற்றுங்கள்” என்று அலறியதாகச் சிலர் சொல்ல, “இல்லை. அவர் மம்மி, டாடி என்றுதான் அலறினார்” என்று மற்றொரு தரப்பு வாதிட்டது. ரூப் கன்வரின் புகுந்தவீடோ, “என்னை மன்னித்துவிடுங்கள். உங்களுக்குச் சேவை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டேன்” என்று அவர் சொன்னதாகத் தெரிவித்தது. “ரூப் கன்வர் படித்த பெண் என்பதால் தன் மாமனார், மாமியாரைத்தான் டாடி, மம்மி என விளித்திருப்பார்” என கல்யாண் சிங் கால்வி அப்போது தெரிவித்திருந்தார்.
கொல்வது குற்றமே
- ஆனால், இது வரதட்சிணையை மையமாகக் கொண்ட கொலையாக இருக்கக்கூடும் என ராஜஸ்தான் மாநிலத்தின் அன்றைய காவல்துறைத் தலைவர் குமார் தெரிவித்திருந்தார். “ராஜபுத்திரர்களின் வழக்கப்படி வாரிசு இல்லாத நிலையில் ஓர் ஆண் இறந்தால் அவருடைய மனைவி தான் கொண்டுவந்த நகைகளோடு பிறந்த வீட்டுக்குச் செல்லலாம். ரூப் கன்வர் அதிக நகைகளோடும் வீட்டு உபயோகப் பொருள்களோடும் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அதனாலேயே அவர் அவசர அவசரமாகச் சிதையில் தள்ளப்பட்டிருக்கலாம். ‘சதி’யைக் குற்றமென்று சட்டத்தில் நேரடியாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் அந்த நடைமுறைக்கு ஒரு பெண்ணைப் பலிகொடுப்பதே குற்றம்தான்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
- ரூப் கன்வரின் மரணத்தோடு தொடர்புடையவர்கள் என ஆறு பேர் மீது உடனடியாக வழக்குப் பதியப்பட்டது. பிறகு கொலையைத் தடுக்காதவர்கள் அல்லது அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என 32 பேர் மீதும், ‘சதி’யைப் புனிதப்படுத்தியதாக ஓராண்டு கழித்து 45 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். போதுமான சாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லாத நிலையில் 1996ஆம் ஆண்டு சிலரும் 2004இல் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர். இதுதான் ரூப் கன்வரின் மரணத்துக்கு நாம் அதிகபட்சமாக வழங்கிய நீதி!
- தலைமுறை தலைமுறையாக இவ்வளவுக்குப் பிறகும் ரூப் கன்வரின் வீட்டை இன்றைக்கும் பலர் தரிசித்துவிட்டுச் செல்கிறார்கள். விதவிதமான கதைகள் ரூப் கன்வரைச் சுற்றி அரண்களாக எழுப்பப்பட்டு அவரது தெய்விக அந்தஸ்து காக்கப்படுகிறது. சிறு வயது முதலே தெய்வ பக்தி கொண்ட ரூப் கன்வர், போலியோவையும் கண் நோய்களையும் தீர்த்ததாகப் பல கதைகள் அங்கே வலம்வருகின்றன. ஏழு மாத கர்ப்பிணி ஒருவர் ரூப் கன்வர் இறந்த இடத்துக்கு பல கி.மீ., பயணம் செய்து வந்து அவரை ‘சதி மாதா’வாக வணங்கிச் செல்வது எதனால்? காலம் காலமாக நம் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கும் பிற்போக்குச் சிந்தனைகளால். ‘கணவனை இழந்த பெண்களுக்கு அந்த உறவை வேறு யாராலும் நேர்செய்துவிட முடியாது’ என்று பெண்களுக்கு வெகு எளிதாகப் போதிக்கிற நம்மால், மனைவியை இழந்த கணவனைப் பார்த்து இப்படியான கருத்துகளை ஏன் சொல்ல முடிவதில்லை? ஆணாதிக்கம் வெல்வதும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதும் இந்தப் புள்ளியில்தான்.
- ரூப் கன்வரின் மரணம் இந்தத் தலைமுறை வரைக்கும் வெவ்வேறு வடிவங்களில் சிலவற்றைக் கடத்திய படியே இருக்கிறது. பெண்கள் தங்களைமாய்த்துக்கொண்டு தங்களது புனிதத்தை நிரூபிக்கும் சடங்கின் வடிவம் காலந்தோறும் மாறக்கூடும். ஆனால், பெண்கள் எப்போதும் யாரிடமாவது தங்களை நிரூபித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும் என்பதைப் பொதுவிதியாக்கி அதைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தியும்வருகிறார்கள். ரூப் கன்வரின் மரணத்துக்கும் புகுந்த வீட்டினரால் இன்றைக்குக் கொல்லப்படும் பெண் களுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை.
- குடும்ப அமைப்புக்குள் பெண் களுக்கு இந்த நிலை என்றால் போர்க்களத்திலும் அந்நிய நாட்டு ஆதிக்கத்திலும் அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? கொரியா, சீனாவைச் சேர்ந்த பெண்களின் துயர்மிகு கதையே அதற்கு நேரடி சாட்சி. என்ன கதை அது? அடுத்த வாரம் பார்க்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 01 – 2024)