TNPSC Thervupettagam

யார் என்ன எப்படி? - தற்போதைய பேச்சுவார்த்தையின் நிலை என்ன?

October 30 , 2019 1856 days 894 0
  • இந்திய அரசு வரும் அக்டோபர் 31-க்குள் எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு ஒப்பந்தத்தின் கூறுகள் இரு தரப்புகளாலும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது.
  • ஆனால், இதற்கு என்எஸ்சிஎன்-ஐஎம் ஒப்புக்கொள்ளவில்லை. நாகாலாந்துக்கென்று தனிக் கொடியும் தனி அரசமைப்புச் சட்டமும் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது.
  • என்எஸ்சிஎன் - ஐஎம் அமைப்புக்கு எதிரான அமைப்புகள் நாகா தேசிய அரசியல் குழுக்கள் ‘என்என்பிஜி’ என்ற குடையின் கீழ் திரண்டுள்ளன. இவை அரசுடன் சமரசத் தீர்வு காண்பதில் விருப்பமாக உள்ளன.
  • ஒப்பந்தத்தின் கூறுகள் என்ன என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

உச்ச பதற்றத்தில் நாகாலாந்து: பின்னணி என்ன?

  • இதுவரை... பிரிட்டிஷ் இந்திய காலத்தில் ஆரம்பித்த பிரச்சினை இது. 1881-ல் நாகா மலைகள் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டன. வெவ்வேறு பழங்குடியினரின் தொகுதிகளான நாகா மக்கள் இதை விரும்பவில்லை. “பழங்காலத்தில் உள்ளதுபோல எங்களை நாங்களே ஆண்டுகொள்கிறோம் எங்களை விட்டுவிடுங்கள்” என்று 1929-ல் இந்தியா வந்த சைமன் குழுவினரிடம் கூறினார்கள்.
  • பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து விடுதலை பெறுவதற்காக 1946-ல் நாகா தேசிய கவுன்சில் என்ற இயக்கத்தை அங்கமி ஸபு ஃபிஸோ உருவாக்கினார்.
  • 1947 ஆகஸ்ட் 14 அன்று, நாகா பகுதிகள் சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கவும் செய்தார்.
  • இந்தியா விடுதலை பெற்ற பிறகு ஃபிஸோ 1952-ல் நாகா கூட்டாட்சி அரசாங்கம் என்ற தலைமறைவு இயக்கத்தை உருவாக்கினார்.
  • அது ஆயுதக் கிளர்ச்சியாகவும் உருவெடுத்தது. இதனை அடக்க இந்திய அரசாங்கம் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரத்தின் கீழ் படைகளை அனுப்பியது.
  • 1963-ல் நாகாலாந்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. 1970-களின் இடைப்பகுதியில் நாகா தேசிய கவுன்சிலின் ஒரு பகுதி வன்முறைப் பாதையைக் கைவிட்டது.
  • அந்த இயக்கத்திலிருந்து நாகாலாந்து தேசிய சோஷலிஸ கவுன்சில் என்ற இயக்கம் பிரிந்தது.
  • அந்த இயக்கம் மேலும் இரு பிரிவுகளாக 1988-ல் பிரிந்தது. அந்தப் பிரிவுகளுள் ஒன்றுதான் ‘நாகாலாந்து தேசிய சோஷலிஸ கவுன்சில் - ஐஎம்’ (என்எஸ்சிஎன் - ஐஎம்) இந்த இயக்கம்தான் இந்திய அரசுடன் 1997-ல் நாகாலாந்து பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
  • தற்போது அந்த இயக்கம்தான் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை நடத்துவது யார்?

  • நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி. தொடர்புடைய இயக்கங்கள், வெவ்வேறு இனக்குழுக்கள், திருச்சபைகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.
  • பெரும்பாலானோர் தனிக் கொடி, தனி அரசமைப்புக் கோரிக்கையைக் கைவிடவில்லை என்றாலும், ஒப்பந்தம் உருவான பிறகு அவற்றைப் பற்றிப் பேசிக்கொள்ளலாம் என்கிறார்கள்.

அண்டை மாநிலங்களுக்கு என்ன பாதிப்பு?

  • நாகாலாந்துக்காகப் போராடும் இயக்கங்களின் பிரதான கோரிக்கை ‘மாபெரும் நாகாலிம்’. அதாவது, நாகாலாந்து மட்டுமல்லாமல் மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களில் நாகா மக்கள் வசிக்கும் பகுதிகளையும் ஒன்றிணைத்து ‘மாபெரும் நாகாலிம்’ உருவாக்க வேண்டும் என்கிறார்கள்.
  • இதற்கு மணிப்பூர், அசாம் மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
  • அரசு விதித்துள்ள கெடு நெருங்குவதால் மூன்று மாநிலங்களிலும் பதற்றம் நிலவுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (30-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்