TNPSC Thervupettagam

யாழ்ப்பாணச் செலவு

September 23 , 2023 463 days 782 0
  • இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கை சென்று திரும்பிய திரு.வி.க. தம் பயண அனுபவத்தை ‘எனது இலங்கைச் செலவு’ என்னும் தலைப்பில் விரிவாக எழுதினார். தமிழ்ப் பயண இலக்கியத்தில் முக்கிய இடம்பெறும் கட்டுரை அது. அதில் ‘ஈண்டுச் செலவு என்னுஞ் சொல்லைப் பொருட் செலவென்னும் பொருளில் பெய்தேனில்லை. தரை – நீர்ச் – செலவு என்னும் பொருளில் அச்சொல்லைப் பெய்தேன்’ (ப.57) என்கிறார்.
  • செலவு என்னும் சொல் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பயின்றுவருகிறது. செல்லுதல் – பயணம் என்னும் பொருளுடையது. தலைவன் பொருள் தேடிப் பிரிந்து செல்லுதலைச் ‘செலவு’ என்றும் தலைவியின் துயர் கண்டு அவன் தம் பயணத்தை நிறுத்திவிடுதலைச் ‘செலவழுங்குதல்’ என்றும் அகப்பொருள் இலக்கணம் கூறும். அச்சொல்லை இப்போது ‘செலவழித்தல்’ என்னும் பொருளில் மட்டுமே பயன்படுத்துகிறோம்.  ‘செங்கோன் தரைச் செலவு’ என்பது மறைந்துபோன தமிழ் நூல்களில் ஒன்று. மரபுத் தொடர்ச்சியாகவும் திரு.வி.க.வின் நினைவாகவும் இக்கட்டுரைக்கு ‘யாழ்ப்பாணச் செலவு’ தலைப்பிட்டுள்ளேன்.

நட்புச் சுற்றுலா

  • டி.எம்.கிருஷ்ணா எழுதி வெளியாகியுள்ள ‘மறைக்கப்பட்ட மிருதங்க சிற்பிகள்: செபாஸ்டியன் குடும்பக் கலை’ என்னும் நூலுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்ததை ஒட்டி இலங்கை செல்லும் வாய்ப்பு அமைந்தது. ஐந்து நாள் பயணம். டி.எம்.கிருஷ்ணா, ஆ.இரா.வேங்கடாசலபதி, கண்ணன், நான் ஆகிய நால்வரும் இணைந்து சென்ற இப்பயணம் நட்புச் சுற்றுலா போலவும் ஆயிற்று. நண்பர்கள் ஏற்கெனவே இலங்கைக்குச் சென்றுவந்துள்ளனர். எனக்கு இது முதல் பயணம்.
  • விமானத்தில் கொழும்புக்குச் சென்று அங்கிருந்து ரயிலிலோ பேருந்திலோ சில மணி நேரம் பயணம் செய்து யாழ்ப்பாணம் செல்லும்படிதான் முந்தைய நிலையிருந்தது. இப்போது யாழ்ப்பாணம் பலாலியில் சிறுவிமான நிலையம் செயல்படுகிறது. சென்னையிலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் அங்கே செல்ல நேரடி விமானம் இருக்கிறது. ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள அவ்விமான நிலையம் தற்போது பொதுவானதாகவும் மாற்றப் பட்டுள்ளது. சென்னையிலிருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து ஒன்றும் எனத் தினம் இருவிமானங்கள் வந்து செல்கின்றன. சென்னையிலிருந்து சென்ற குட்டி விமானத்திலிருந்து இறங்கி யாழ்ப்பாணம் செல்வது வனத்திற்குள் இருந்து வெளியேறுவது போலத் தோன்றியது.
  • நுண்கலைத் துறை 23.08.23 அன்று நடத்திய கருத்தரங்கம் க.கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. அத்துறையில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஓவியக் கலைஞர் த.சனாதனன், கவிஞர் பா.அகிலன் ஆகியோர் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் பணியாற்றிய பல்கலைக்கழகம் அது. கைலாசபதி எழுத்துக்களின் தீவிர வாசகன் நான் என்பதால் அவ்வரங்கம் எனக்கு நெகிழ்ச்சியைக் கொடுத்தது.

அற்புதான மாலைப் பொழுது

  • த.சனாதனன் அறிமுகவுரை ஆற்றி நிகழ்வைத் தொடங்கினார். பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்கள் கருத்தரங்கில் பேசினர். க.நவதர்சினி, சுகன்யா அரவிந்தன், இ.இராஜேஸ்கண்ணன், ம.திருவரங்கன் ஆகியோர். “பல்கலைக்கழகப் பேராசிரியர்களில் ஓரிருவர் நன்றாகப் பேசினால் அதிசயம்; எல்லோருமே நன்றாகப் பேசுகிறார்களே, எப்படி இது சாத்தியம்?” என்று சலபதி வியப்புடன் கேட்டார். பேசியோர் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் வெவ்வேறு கோணங்களில் நூலை ஆய்வுசெய்து கட்டுரைகளாக வழங்கினர். நானும் பேசினேன்.
  • ஆங்கிலத்தில் வெளியாகிப் பின்னர் தமிழில் அரவிந்தன் மொழிபெயர்த்த அந்நூலைப் பற்றி இதுவரை மூன்று நான்கு கூட்டங்களில் பேசிவிட்டேன். ஒவ்வொரு முறை பேசும்போதும் புதுப்புது விஷயங்கள் பிடிபடும் அளவுக்குப் பல்வேறு தரவுகளையும் பார்வைகளையும் அந்நூல் கொண்டிருக்கிறது. இசை அனுபவத்தோடு சாதியத்தையும் மனித மனவியல்புகளையும் இயைத்து டி.எம்.கிருஷ்ணா எழுதியிருப்பதால் பலவித வாசிப்புக்கு இடம் கிடைக்கிறது. இசைக்கலை பற்றித் தமிழில் அதிக நூல்கள் இல்லை. அதுவும் அத்துறையின் அகத்தே இருந்து கண்டு எழுதுவோர் அரிது. கர்நாடக இசைத் துறையின் உள்ளிருந்து அனுபவத்தோடும் அறிவோடும் கள ஆய்வுத் தகவல்களோடும் ஆழ்ந்து எழுதிய நூல். வாசிப்பனுவத்தின் ஒரு கோணத்தை முன்வைத்து என் உரை அமைந்தது.
  • நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதிதான் முக்கியமானது. டி.எம்.கிருஷ்ணாவின் ஏற்புரை, கேள்வி பதில், பாட்டு ஆகியவை அப்பகுதியில் அமைந்தன. ஏற்புரையைச் சுருக்கமாக முடித்துக் கேள்விகளை எதிர்கொண்டு நிதானமான தொனியில் விரிவாகப் பதில்கள் சொன்னார். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கேள்விகளைத் தொடுத்துக்கொண்டே இருந்தனர். இறுதியில் ஐந்து பாடல்களைப் பாடினார். பக்கவாத்தியம் ஏதுமில்லாமல் சுருதி மட்டும் இயையத் தழைந்தோங்கிய அவர் குரல் அம்மாலைச் சூழலை அற்புதமாக மாற்றியது.  மூன்று மணி நேரத்திற்கும் மேலும் நடந்த நிகழ்வில் பார்வையாளர்கள் பெருவாரியாக இருந்தனர்.

நானும் வேங்கடாசலபதியும்

  • அடுத்த நாள் (24.08.23) அன்று ‘புனைவும் வரலாறும்’ என்னும் தலைப்பில் நானும் ஆ.இரா.வேங்கடாசலபதியும் உரையாற்றினோம். அந்நிகழ்வுக்கு யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலர் வந்திருந்தனர். பா.அகிலன் அறிமுகவுரையில் இத்தலைப்பைக் குறித்து விவரித்துச் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். புனைவுக்கும் வரலாற்றுக்கும் என்ன தொடர்பு, புனைவு வரலாறு ஆகுமா, வரலாறு புனைவு ஆகுமா, புனைவை வரலாற்றுத் தரவாகப் பயன்படுத்துதல், வரலாற்றைப் புனைவுக்குத் தரவாகப் பயன்படுத்துதல் ஆகிய பல கோணங்களில் கேள்விகளை எழுப்பிக்கொள்ள முடியும் என்று சொல்லி அவற்றில் சில பிரச்சினைகளை மையப்படுத்தி என் உரை அமைந்தது.
  • தொடர்ந்து பேசிய ஆ.இரா.வேங்கடாசலபதியின் உரை வேறொரு கோணத்தில் இருந்தது. நவீன கால வரலாற்றாசிரியராகிய அவர், புனைவுகள் வரலாற்றுக்குப் பயன்படும் விதம் குறித்து மட்டுமல்ல, வரலாற்றாசிரியர்களைவிடப் புனைவாசிரியர்கள் முன்னால் செல்கிறார்கள் என்பதை எடுத்துரைத்தார். வரலாற்றாசிரியர்களுக்குப் புனைவுகளை வாசிக்கும் பழக்கம் இருக்க வேண்டியது எத்தனை அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியது மகிழ்ச்சி கொடுத்தது. புனைவுகளை வரலாற்று நோக்கில் அணுகுதல் பற்றிய அறிவார்ந்த உரையாக அது அமைந்தது. அதன் காரணமாகவோ என்னவோ நிகழ்வு முடிவில் அவரை நோக்கியே கேள்விகள் பலவும் வந்தன. சிறப்பான பதில்களைக் கொடுத்தார்.
  • பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுவதை அறிந்தேன். முந்நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் இலக்கியம் படிக்கிறார்கள். அங்கே தமிழ், வரலாறு, பொருளியல், நுண்கலை உள்ளிட்ட கலைப்பாடங்கள் அனைத்தும் உயர்கல்வி வரையில் தமிழ் வழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. அறிவியல் பாடங்களுக்கு ஆங்கில வழிக் கல்வி. ஒருகாலத்தில் அங்கே மருத்துவப் படிப்பும் தமிழ் வழியில் இருந்ததை அறிந்திருக்கிறேன். அங்கே தமிழில் வெளியிட்ட மருத்துவ நூல்கள் இப்போதும் இணையத்தில் கிடைக்கின்றன. இப்போது மருத்துவம், பொறியியல் ஆகியவை ஆங்கில வழிக் கல்வியாகவே இருக்கின்றன.

யாழ்பாணத்தைச் சுற்றுதல்

  • பல்கலைக்கழக நிகழ்வுகள் தவிர மீதமிருந்த நாட்களையும் நேரத்தையும் இலக்கிய நண்பர்களைச் சந்திக்கவும் யாழ்ப்பாணப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்கவும் பயன்படுத்திக்கொண்டோம். யாழ்ப்பாணப் பகுதிகளின் வீடுகள் கேரளத்தை நினைவுபடுத்தின. சுற்றிலும் வேலியும் மரங்கள் நிறைந்த தோட்டமும் கொண்ட தனிவீடுகள். பனையோலை, தென்னங்கீற்றுகளால் ஆன வேலிகளுடன் தற்போதைய தகர அட்டைகள் கட்டியவையும் கணிசமாக இருந்தன. நெரிசலற்ற சாலைகள். வாகனங்கள் குறைவு. மக்கள்தொகையும் குறைவு.
  • கடற்கரைப் பகுதிகள் மிக அழகானவை. அங்குள்ள கிராமங்களில் பனைத் தொகுதிகள் நிறைந்திருந்தன. பனை சார்ந்த பண்பாடும் மிகுதி. தமிழ் இலக்கணத்தில் ‘பனாட்டு’ என்னும் சொல்லைப் பற்றித் தனி நூற்பாவே உண்டு. அப்பகுதியை நடத்தும்போது ‘பனை வெல்லம் என்னும் கருப்பட்டி’தான் அது என்று ஆசிரியர்கள் சொல்வது வழக்கம். பனம்பழச் சாறு பிழிந்து செய்யும் இனிப்புப் பண்டம் என்பதையும் அது இலங்கையில் இப்போதும் இருக்கிறது என்பதையும் சில ஆண்டுகளுக்கு முன் அறிந்தேன். அந்தப் ‘பனாட்டு’ எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆவல் யாழ்ப்பாணச் சந்தையில் தீர்ந்தது. உண்டு பார்த்துக் கொஞ்சம் விலைக்கும் வாங்கிக்கொண்டோம்.
  • பனம்பழத்தைச் சுரண்டிப் பழக்கூழ் போன்ற அதன் சாறெடுத்து ஓலைத் தடுக்கில் ஊற்றிக் காயவைத்தால் அடை போல ஆகிறது.  துண்டுகளாக நறுக்கி அதைப் பொட்டலம் கட்டி விற்பனை செய்கிறார்கள். அதைச் செய்வதில் அங்கங்கே சிறுசிறு வித்தியாசங்கள் உள்ளன. பனைகள் மிகுந்த எங்கள் ஊரிலோ தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலோ இல்லாத இந்தப் பதார்த்தம் இலங்கையில் இப்போதும் பரவலாக இருப்பது வியப்பான செய்தி.
  • தொல்காப்பியம் இந்தச் சொல்லைப் பதிவு செய்திருக்கிறது என்றால் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட உணவு இது எனத் தெரிகிறது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் இது வழக்கில் இருந்து பின்னர் மறைந்து போய்விட்டதா? பனைகள் இப்போதும் நிறைந்திருக்கும் நாட்டில் எப்படி ஓர் பண்டம் மறைந்து போகும்? இலங்கை வழக்கைக் கருத்தில் கொண்டே இந்நூற்பாவைத் தொல்காப்பியர் எழுதியிருக்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களின் தொன்மைக்கு இச்சொல்லும் ஒரு சான்றாகக் கூடும் எனத் தோன்றியது.
  • கேரளத்தைப் போல வீடுகள் மட்டுமல்ல, சில உணவு வகைகளும் அங்குள்ளன. குறிப்பாகப் புட்டு. புட்டு அவிப்பதற்கான தனிவகைப் பாத்திரங்களையும் கண்டோம். அரிசியிலும் கேரளத்துச் சாயல். செந்நிறத்தில் கொட்டை அரிசிச் சோற்றின் சுவை அருமை. வெறுஞ்சோற்றை அள்ளி உண்டாலே வாய் மணக்கிறது. தேங்காய் எண்ணெய் சமையலுக்குப் பயன்படுகிறது. மீன் குழம்பும் பொரித்த மீனும் நன்றாகக் கிடைக்கின்றன. நல்ல தேநீரைத்தான் எங்குமே குடிக்க இயலவில்லை. எத்தனை சொன்னாலும் பால் வண்ணத்திலேயே தேநீர் தருகிறார்கள்.

பழஞ்சொற்கள்

  • கன்னியாகுமரித் தமிழோடு ஒப்பிடத்தக்க பேச்சு மொழி. கடைப் பலகைகளில் புழங்கும் தமிழில் சம்ஸ்கிருத வாடை மிகுதி. தமிழ்நாட்டில் 1950களுக்கு முன் வழங்கிய பல சொற்கள் யாழ்ப்பாணத்தில் இப்போதும் உள்ளன. பல்கலைக்கழகத்தில் ‘சிரேஷ்ட விரிவுரையாளர்’ என்று பதவிப் பெயர். ஞாபகார்த்தம், பிரவேசித்தல் முதலிய சொற்கள் இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. திராவிட இயக்கம் தமிழாக்கிய பல சொற்கள் தமிழ்நாட்டில் வழக்கிற்கு வந்துவிட்டன. அத்தாக்கத்தை யாழ்ப்பாணத்தில் அவ்வளவாகக் காண முடியவில்லை. ஆங்கிலச் சொற்களின் தமிழ்ப்படுத்தலும் பல இடங்களில் புரியவில்லை. ஷாப் என்பதை ‘சொப்’ என்று எழுதியுள்ளார்கள். ஸ்டோர்ஸ் என்பது ‘ஸ்ரோர்ஸ்’ என்றுள்ளது. இப்படிப் பல.
  • இரண்டு முருகன் கோயில்களுக்குச் சென்றோம். நல்லூர் கந்தசாமி கோயிலில் வேல் மட்டுமே மூலவராக விளங்குகிறது.  எந்நேரமும் அலங்காரத்தில் காட்சியளிப்பதால் ‘அலங்கார முருகன்’ என்று பெயர்.  விஸ்தாரமான பிரகாரம் கொண்ட பெருவளாகம்.  பக்தர் கூட்டம் அலைமோதியது. அச்சூழலில் பரவசமாகி டி.எம்.கிருஷ்ணா பாடத் தொடங்கிவிட்டார். பெரியசாமித் தூரன் இயற்றிய ‘முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்’ பாடலையும் ‘கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்க் காட்சியளிப்பது பழனியிலே’ பாடலையும் பாடினார்.  ‘பழனியிலே’ என்பதை ‘நல்லூரிலே’ என மாற்றிக்கொண்டார். பக்தர் கூட்டம் மெய்மறந்து கேட்டது. கோயில் இசைவாணர்கள் அவரை அடையாளம் கண்டு வந்து பேசி மகிழ்ந்தார்கள்.
  • ‘செல்வச் சந்நிதி’ என்னும் இன்னொரு முருகன் கோயிலுக்கும் சென்றோம். அங்கே ஏராளமான அன்னதான மடங்கள் உள்ளன.  எந்நேரமும் அன்னதானம் நடைபெறுகிறது. ஒருவருக்கு வீட்டில் ஏதேனும் பிரச்சினை என்றால் கோபத்தில் வெளியேறி இக்கோயிலுக்கு வந்து வழங்கும் அன்னத்தை உண்டு கொண்டு சிலநாள் தங்கியிருக்கும் வழக்கம் உண்டாம்.  ‘அன்னதான முருகன்’ என்று அழைக்கப்படுகிறார். அது திருவிழா சமயம்.  காவடியாட்டமும் கண்டோம். பூசை செய்வோர் கரையாளர்கள் என்பது இச்சந்நிதியின் சிறப்பு. கடவுளை நெருங்கி வழிபட இயலவில்லை. தூரக் காட்சிதான்.
  • அங்கே பழமையான இருகிணறுகளையும் கண்டோம். வாளி கொண்டு தண்ணீர் சேந்துவதற்கு ஏற்றத்தைப் போன்ற அமைப்பு கிணற்றில் இருந்தது. தமிழ்நாட்டில் சிறுதெய்வங்களுக்குப் பூசை செய்யும்போது வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக்கொள்ளும் வழக்கம் உண்டு. அங்கே முருகனுக்குப் பூசை செய்கையில் வாயைக் கட்டிக்கொள்ளும் வழக்கம் உள்ளது. அலங்கார முருகனும் அன்னதான முருகனும் ‘வேல்’ வடிவிலேயே காட்சி தருகிறார்கள். தமிழ்நாட்டிலும் சிறுதெய்வம் ஒன்றின் உருவகமாக ஆயுதத்தை வைத்து வழிபடும் வழக்கம் உண்டு. சிறுதெய்வ வழிபாட்டுக் கூறுகள் பல யாழ்ப்பாண முருக வழிபாட்டில் இன்றும் நிலவுவது கருத்தில் கொள்ளத்தக்கதாகத் தோன்றியது.

யாழ்ப்பாண நூலகம்

  • யாழ்ப்பாணத்தைச் சுற்றிச் செல்லுகையில் இது பிரபாகரன் ஊர் (வல்வெட்டித் துறை), இது கா.சிவத்தம்பி ஊர் (கரவெட்டி) என்றெல்லாம் நண்பர்கள் சுட்டிக்காட்டினர். சி.வை.தாமோதரம் பிள்ளையின் சிறுபிட்டிக்கு விரும்பிச் சென்றோம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கலித்தொகை, சூளாமணி முதலிய பழந்தமிழ் இலக்கிய நூல்களையும் தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம் ஆகிய இலக்கண நூல்களையும் பதிப்பித்த முன்னோடியாகிய சி.வை.தாமோதரம் பிள்ளைக்கு 2018ஆம் ஆண்டில் அவ்வூரில் சிலை நிறுவியுள்ளனர்.  ‘சி.வை.தாமோதரம் பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றம்’ அமைத்துள்ள அச்சிலை சாலையோரத்தில் உள்ளது. பெரிதாகப் பராமரிப்பு இல்லை எனினும் கம்பீரமாகவும் பொலிவுடனும் அவர் நிற்பதைப் பார்க்கப் பரவசமாகவே இருந்தது.
  • யாழ்ப்பாண நூலகம் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. உள்ளே சென்று பார்க்க இயலவில்லை. வெவ்வேறு ஊர்களில் புதிதாகக் கட்டப்பட்ட நூலகங்களைக் கண்டோம். பழைய நூலகங்கள் சில புதுப்பிக்கப்பட்டும் இருந்தன. நாங்கள் தங்கியிருந்தது பழைய வீடு ஒன்றைப் புதுப்பித்துத் தங்கும் விடுதியாக்கிய இடம். பழமையையும் புதுமையையும் இணைத்து அழகாகப் பராமரிக்கப்படுகிறது.
  • அதன் உரிமையாளர் வசீகரன் வாசிப்பில் நல்ல ஈடுபாடு கொண்டவர். அவர் ஓர் புத்தக விற்பனை நிலையம் நடத்துகிறார். இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை விற்க இருபத்தைந்துக்கும் மேலான புத்தகக் கண்காட்சிகளை இதுவரை நடத்தியிருக்கிறார். ஐயாயிரத்திற்கும் அதிகமான நூல்கள் விற்றுள்ளன என்று சொன்னார். ஒருநாள் இரவு உணவை அவர் வழங்கினார். என் ‘கூளமாதாரி’ நாவல் பிரதியைக் கொண்டுவந்து கையொப்பம் பெற்றுக்கொண்டார். ‘யாழ்ப்பாண நூலகம்’ என்னும் நூலைப் பரிசளித்தார். அவரைச் சந்தித்ததும் பேசியதும் மகிழ்ச்சியாக இருந்தது.
  • பருத்தித் துறையில் வசிக்கும் குலசிங்கம் அவர்களின் இல்லத்திற்கு ஒருநாள் மதிய உணவுக்குச் சென்றோம். தமிழ் நூல் விற்பனையாளராக ஒருகாலத்தில் திகழ்ந்த அவர் இப்போது முதுமையால் அதை விட்டுவிட்டார். ஓர் அறையில் பெரிய நூலகம் வைத்துள்ளார். தமிழ் நூல்களில் பரந்த வாசிப்பும் விரிந்த அறிவும் கொண்டவர். இலக்கியம் பற்றிப் பேசுவதில் சலிப்பில்லாதவர். அவர் வீட்டில் வயிற்றுக்கு உணவும் செவிக்கு உணவும் கிடைத்தன. பருத்தித் துறையைச் சேர்ந்த நண்பர்கள் சிலரும் எங்களைக் காண வந்திருந்தனர்.  ‘வைத்தியக் கலாநிதி’ எம்.கே.முருகானந்தன் வந்திருந்தார்.

தீவுகள்

  • நண்பர்கள் த.சனாதனன் இல்லத்தில் ஒருநாள் இரவுணவும் பா.அகிலன் வீட்டில் காலையுணவும் உண்டோம். ஓவியர்களான கேதாரினாதன், கைலாசனாதன் ஆகியோர் வீட்டிற்குச் சென்று தேநீர் அருந்தி வந்தோம். கைலாசனாதனின் அருமையான ஓவியங்கள் பலவற்றையும் பார்த்து மகிழ்ந்தோம். இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நல்ல வாசிப்பாளர். மதுரையைச் சேர்ந்த கவிஞர் ந.ஜெயபாஸ்கரன் அவர்களின் மகன். அவர் இல்லத்திற்கு ஒருநாள் இரவுணவுக்குச் சென்றோம். கவிஞரும் அவர் மனைவியும் அங்கிருந்தனர். அவர்களுடன் அளவளாவியது மகிழ்ச்சி கொடுத்தது. எங்கும் நல்ல உபசரிப்பு. அ.யேசுராசா, நிலாந்தன் உள்ளிட்ட எழுத்தாளர்களைச் சந்திக்கவும் முடிந்தது. சனாதனனும் அகிலனும் திட்டமிட்டு வழிகாட்டினர். ‘காலச்சுவடு’ கண்ணன் எங்களுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
  • யாழ்ப்பாணத்தை ஒட்டிக் கடலுள் இருக்கும் சிறுதீவுகள் பலவற்றைத் தூர இருந்து கண்டோம். இரு தீவுகளுக்கு மட்டும் சென்றோம். கைவிடப்பட்ட பல வீடுகளைக் கொண்ட ஒரு தீவில் ராணுவம் நடத்தும் உணவகத்தில் சாப்பிட்டோம். அத்தீவுகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் படகுகளில் மக்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு தீவையும் சென்று காணும் விருப்பம் இருப்பினும் கால அவகாசமில்லை. கருத்தரங்கம் முடிந்த நாளிரவில் பேராசிரிய நண்பர்களுடன் சென்று உண்ட உணவகத்தில் பதுங்கு குழிகளைப் பார்த்தோம். இப்போது ஓவியங்களை வைத்துக் கண்காட்சிச் சாலையாக ஆக்கியுள்ளனர்.
  • இலங்கையில் மதுபானத்திற்குத் தடையேதுமில்லை. வெளிநாட்டு மதுவகைகளைவிடவும் தாராளமாக உள்நாட்டு மதுவகைகள் கிடைக்கின்றன. இலங்கையில் இருவகைச் சாராயங்கள் உண்டு. பனஞ்சாராயம் ஒன்று; தென்னஞ்சாராயம் ஒன்று. இரண்டும் தரமான தயாரிப்பில் நல்ல போத்தல்களில் விற்பனையில் உள்ளன. கள் விற்கும் கடைகளையும் கண்டோம். தமிழ்நாட்டிலும் ஊறலுக்குப் பனங்கள்ளையோ தென்னங்கள்ளையோ பயன்படுத்தி இவ்வகைச் சாராயங்கள் தயாரிக்கும் வழக்கம் உண்டு. உள்நாட்டுப் பானங்களுக்குத் தடை என்பதால் இவை இப்போது கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாட்டின் பண்பாட்டிலும் உள்ளூர் மதுபானங்களுக்கு முக்கியமான இடமுண்டு. நமக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லை.

நன்றி: அருஞ்சொல் (23 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்