‘விரோதி பணியாவிட்டால் என்ன செய்வது
- அழித்தொழிக்க வேண்டியதுதான்’ என்று கோபம் பொங்க எழுதியவர் மக்சிம் கார்க்கி; ஆனால் அவர்தான், ‘யுத்தம் வேண்டாம்’ என்றும் உலகத்து நாடுகளிடம் வேண்டினார். உலக இடதுசாரிகளின் இலக்கிய முகம் அவர். போரினால் ஏற்படும் அழிவைப் பார்த்த பிறகு அவர் விடுத்த கோரிக்கை, வேண்டுகோள், எச்சரிக்கை, அறிவுறுத்தல், படிப்பினை எல்லாம் அந்த இரண்டாம் சொற்களில் அடங்கியுள்ளன. இத்தனைக்கும் அவர் இரண்டாம் உலகப் போரைப் பார்க்காதவர், 1936இல் மறைந்துவிட்டவர்.
- போர் என்னவோ இரண்டு நாடுகளுக்கு இடையில் நடந்தாலும், மடிவது என்னவோ இரண்டு பக்கத்திலும் மக்கள், மக்கள், மக்கள்தாம். பாதிப்போ உலக நாடுகள் முழுமைக்கும். போருக்கான முடிவை எடுக்கும் தலைவர்கள் எப்போதும் மடிவதேயில்லை. இன வெறுப்பு கொண்டோரும், வரலாறு அறியாதவர்களையும் தவிர, வேறு யாரும் போரை ஆதரிக்க மாட்டார்கள். ஆயுதம் தயாரிப்பவர்களையும் தனக்குப் பாதுகாப்பு செய்து கொண்டவர்களையும் இதில் இணைத்துக்கொள்ளலாம்.
போரும் சமூகமும்
- இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு நேரடிப் போர் அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. உள்நாட்டுக் கலகம், சாதி மோதல்களால் நேரும் தற்காலிக அழிவுகள் மட்டும்தாம். எனினும் உலகப் போர் காலத்தில் சென்னை நகரம் போரின் அச்சத்தை எதிர் கொண்டது. முதல் உலகப் போரின்போது, 1914 செப்டம்பர் 22இல் ஜெர்மனியின் எம்டன் போர்க்கப்பல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. அது இன்றுவரை பேசப்படுகிறது.
- இரண்டாம் உலகப் போர்க் காலத்திலும் (1939-45) சென்னையில் குண்டுவீச்சு நடத்தப்பட்டது. உயிர் அச்சம் கொண்டவர்கள் சென்னை நகரைக் காலிசெய்து வெளியேறலாம் என்கிற அறிவிப்பு, 1942 ஏப்ரல் 12 அன்று வந்தது. சென்னையிலிருந்து உள் தமிழ்நாட்டுக்கு மக்கள் இடம் பெயர்ந்தனர். அப்போதைய கணக்குப்படி, அப்படிச் சென்றவர்கள் 5 லட்சம் பேர். போர் அபாயம் முடிந்ததும் பலர் திரும்பினர்; சிலர் அங்கேயே தொடர்ந்தனர்; வேறு சிலரோ அங்கேயே மறைந்தும் விட்டனர். எழுத்தாளர் வ.ரா.
- தன் குடும்பத்தினரை மட்டும் வேலூருக்கு அனுப்பிவைத்தார். 48ஆவது வயதில் மணம் முடித்திருந்த அவருக்கு, இருந்திருந்து பிறந்த ஒரே குழந்தையும் வேலூரில் காலமானது. திருக்கழுக்குன்றம் சென்ற உ.வே.சாமிநாதர் சென்னைக்குத் திரும்பவே இல்லை. அங்கேயே 1942இல் காலமானார்.
- சில பத்திரிகை அலுவலகங்கள் உள் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்தன. சென்னை வானொலி நிலையம் நடத்திய இதழின் (‘வானொலி’) பிரசுரம் திருச்சிக்குச் சென்றது. ‘வானொலி’யின் 1940 ஜூலை மாதத்தின் இரண்டாவது இதழ் அங்கிருந்துதான் வெளியானது. சக்தி காரியாலயத்தின் அச்சு இயந்திரங்கள் புதுக்கோட்டைக்குச் (ராயவரம்) சென்றன. அந்தப் போர்க் காலத்தில் ஏ.ஆர்.பி. (Air Raid Precaution - A.R.P.) என்கிற சுருக்கச் சொல் பிரபலமாக இருந்தது. சென்னையை ஒட்டிய கிழக்குக் கடற்கரைப் பகுதியை வான் வழியாக ஜப்பான் தாக்கிடத் திட்டமிட்டது என்பது பொதுவான ஊகம்.
- அப்படித் தாக்குதல் நடைபெற்றால், மக்கள் எப்படித் தப்பிப்பது என்பதற்கான முன்னெச்சரிக்கைப் பயிற்சியே ஏ.ஆர்.பி.
- “எதுவுமே செய்ய உங்களுக்கு இல்லை என்றால், பயணத்தை மேற்கொள்ளாதீர்கள்” என்று எம்.எஸ்.எம். ரயில்வே விளம்பரமே வெளியிட்டது. அரிசி உள்பட உணவுப் பொருள்களுக்குக் கட்டுப்பாடு வந்தது. உணவுப் பொருளைச் சேமிக்கும் நோக்கத்தில், திருமணத்துக்கு 30 பேரை மட்டுமே அழைக்கலாம் என்ற விதி பிறந்தது.
- சினிமாக்காரர்களுக்கு 11 ஆயிரம் அடிக்குமேல் படம் எடுக்க அனுமதி இல்லை. செப்பு உலோக உற்பத்தி தடைப்பட்டதால், செப்புக் காசுகளில் ஓட்டை போட்டு செப்பின் பயன்பாட்டைக் குறைத்தனர்; ஓட்டைக் காலணாக்கள் பிறந்தன. மாத இதழ்களுக்கு (நூல்களுக்கு அல்ல) காகிதம் வழங்குவது குறைக்கப்பட்டது அல்லது நிறுத்தப்பட்டது.
- சென்னையில் விழுந்த குண்டு
- இந்தியர்களைக் கேட்காமல் அவர்களைப் போரில் ஈடுபடுத்தியதை காந்தி கண்டித்தார். நேச நாடுகள், அச்சு நாடுகள் என இரண்டு தரப்புகளாக உலகம் பிரிந்து அப்போது மோதிக்கொண்டது. நேச நாடுகளின் தலைமை பிரிட்டனிடம் இருந்தது. பிரிட்டன் அதன் காலனி நாடான இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தியது. ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாணம் உள்பட காங்கிரஸின் பல மாகாண அரசுகள் ராஜினாமா செய்தன.
- ‘ஜப்பான் வருவானா?’ என்கிற தலைப்பில் சிறு நூலை எழுதி அச்சமயம் அச்சம் போக்க வ.ரா. முயன்றார். ஜப்பான் வரமாட்டான் என்பது வ.ரா-வின் எண்ணம், கருத்து; இன்னும் தெளிவாகச் சொன்னால் ஆசை. ஆனால், ஜப்பான் ஒருநாள் வந்துவிட்டான். இத்தனை முன்னெச்சரிக்கைகள், களேபரங்களுக்கு இடையில் ஜப்பான் விமானம், 1943 அக்டோபர் 11 அன்று காக்கிநாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் குண்டை வீசிவிட்டுச் சென்றது; சென்னையிலும் தான். ஆனால், மூன்று நாள்கள் கழித்துத்தான் அது அறிவிக்கப்பட்டது; பெரிதாய் நஷ்டமில்லை.
- இந்த வரலாற்றுத் துயரம், கலை-இலக்கியங்களில் மிகக் குறைவாகவே பதிவாகியிருக்கின்றது. ‘பராசக்தி’ படம் இரண்டாம் உலகப் போர், பர்மா பின்னணியில் உருவானது நினைவில் இருக்கலாம். பர்மாவிலிருந்து நடந்தே இந்தியா வந்த வெ.சாமிநாத சர்மா அதைப் பதிவாக்கியுள்ளார். பர்மாவிலிருந்து திரும்பிவந்த பலர் தமிழ்நாட்டுக்குள் பரவி வாழ்ந்தனர்.
- அவர்கள் வீடு ‘பர்மா வீடு’ என்று அழைக்கப்பட்டது. ‘பினாங்கு அம்மா’ என்று ஒரு அம்மையார் எங்கள் ஊரில் வாழ்ந்தார். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தங்கள் சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு, தாய்நாட்டுக்குத் திரும்பினர். சொத்துக்களை மீட்பதற்கான முயற்சிகள் 80 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்னமும் தொடர்கின்றன.
- போர் உதவி நிதி சேகரித்துப் பெரியார் கொடுத்தார். மக்களின் பணத்தில் வாங்கப்பட்ட விமானங்களுக்கு அந்தந்த ஊர்ப் பெயரைக்கூட அரசு வைத்தது. யுத்த சஞ்சிகை ஒன்றும் வெளிவந்தது. அவ்விதழிலும் வானொலியிலும் ஜப்பான் தொடர்பான எழுத்துகள், பேச்சுக்கள் அதிகம் இடம்பெற்றன. அத்தகைய ஒரு வானொலிப் பேச்சின் தலைப்பு 'டோக்கியோவின் பாதைகள்' - பி.டி.ராஜன் அந்த உரையை நிகழ்த்தினார். இரண்டாம் உலகப் போர் நினைவுகள் குறித்து, தமிழில் சிறு நூல்கள் வந்திருக்கக்கூடும்.
- என்.டி.வரதாச்சாரி என்கிற மயிலாப்பூர் வக்கீல், தன் நாள்குறிப்பில் இரண்டாம் உலகப் போரின் தினசரி நிகழ்வுகளை எழுதி வந்துள்ளார்; ‘காசி டைரி’ (Kasi Diaries, 2004) என ஆங்கிலத்தில் அது நூலானது. எம்டன் வக்கீல் என்று புகழ்பெற்றவர் அவர். எம்டன் என்பது அப்பெயர் கொண்ட கப்பலிலிருந்து உயர் நீதிமன்றக் கட்டிடம் அருகே வீசப்பட்ட குண்டை நினைவு படுத்துவது. ‘எம்டன்’ முதல் உலகப் போரின் சென்னையின் நினைவுச் சின்னம்!
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 10 – 2023)