TNPSC Thervupettagam

யுனெஸ்கோவின் உலகப்பாரம்பரிய இயற்கைப் பகுதிகள்- II

December 30 , 2017 2550 days 2667 0
யுனெஸ்கோவின் உலகப்பாரம்பரிய இயற்கைப் பகுதிகள்- II

- - - - - - - -  - - - - - -

1. காஸிரங்கா, அஸ்ஸாம் ,1985

  • காஸிரங்கா, வடகிழக்கு இந்திய மாநிலமான அஸ்ஸாமில், அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பிரம்மபுத்திரா ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.
  • இந்தப் பூங்காவானது, அதிக அளவிலான எண்ணிக்கையைக் கொண்ட புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பு இந்தியக் காண்டாமிருகங்களுக்கு பூர்வீகமாகத் திகழ்கிறது.

2. மனாஸ் வனவிலங்கு சரணாலயம், அஸ்ஸாம் 1985

  • மனாஸ் வனவிலங்கு சரணாலயம், பூடானின் எல்லைப் பகுதியில், இமயமலை அடிவாரத்தில் ஓடும் மனாஸ் நதியின் சமவெளிப்பகுதியில் அமைந்துள்ளது. (மனாஸ் வனவிலங்கு சரணாலயத்தின் தொடர்ச்சியானது பூடானில் அமைந்துள்ளது).
  • இங்கு அழியும் தருவாயில் விலங்கினங்கள் பட்டியலைச் சேர்ந்த புலி, காட்டு எருமை (இந்தியாவில் உள்ள ஒரே கலப்பில்லாத எருது இனம்). இந்தியக் காண்டாமிருகம், இந்திய யானைகள், தங்கக் குரங்குகள் மற்றும் பெங்கால் ஃபுளோரிகான் ஆகிய மிருகங்கள் காணப்படுகின்றன.

3. நந்தா தேவி மற்றும் மலர்கள் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, உத்தரகாண்ட், 1988,2005

  • நந்தா தேவி மற்றும் மலர்கள் பள்ளத்தாக்கு தேசியப்பூங்காவானது மேற்கு இமாலயத்தின் உயர் பகுதியில் அமைந்துள்ளது.
  • இந்த வளமான உயிர் பன்முகத்தன்மை கொண்ட பகுதியானது ஆசியக் கருங்கரடி, பனிச் சிறுத்தை, பழுப்புக்கரடி, நீலநிற செம்மறி ஆடு போன்ற அரிய மற்றும் அழியுந் தருவாயில் உள்ள விலங்குகளுக்கு பூர்வீகமாக விளங்குகிறது.
  • இது 1982ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று தேசியப் பூங்காவாக நிறுவப்பட்டது. இருப்பினும் ஆரம்பத்தில் 1939ஆம் ஆண்டு ஜனவரி 7ல் ஒரு விளையாட்டு சரணாலயமாக நிறுவப்பட்டதாகும்.

4. சுந்தரவன தேசியப்பூங்கா, மேற்குவங்கம்: -1987

  • சுந்தரவன தேசியப்பூங்கா, உலகின் மிகப்பெரிய சதுப்புநில கழிமுகப் பகுதியாகும் (Largest Estuarine mangrove Forest). இது ஓர் தேசியப்பூங்காவாகவும் புலிகள் காப்பகமாகவும் யுனெஸ்கோ உலகப்பாரம்பரியப் பகுதியாகவும் மற்றும் உயிர்க்கோளக் காப்பகமாகவும் (Biosphere Reserve), விளங்குகிறது. இது மேற்கு வங்கத்தில், வங்காள விரிகுடாவின் எல்லையைச் சுற்றியுள்ள சுந்தரவன கங்கை நதியின் டெல்டாப் பகுதியில் அமைந்திருக்கிறது.
  • இது யுனெஸ்கோவின் உலக உயிர்க்கோள காப்பு வலையமைப்பில் ஒர் அங்கமாகவும் உள்ளது.
  • இது ஆற்று கழிமுகப் பகுதியின் (டெல்டா) வடிநிலத்தில் சங்கமிக்கும் மூன்று பெரிய நதிகளான கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா போன்றவைகளின் வண்டல்களிலிருந்து உருவான 80,000 ச.கி.மீ பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய ஆற்றுக் கழிமுகப் பகுதியுடன் (டெல்டா) ஒருங்கிணைந்ததாகும்.
  • இந்த ழுமு வடிநிலமும், குறுக்கும் நெடுக்குமாக ஒன்றோடொன்று இணைந்த சிக்கலான நீர்வழிப் பாதைகளை கொண்டு அமைந்துள்ளது.
  • இந்தப் பகுதியானது, சதுப்புநிலக் காடுகளால் அடர்த்தியாக சூழப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வங்காளப் புலி காப்பகங்களுள் ஒன்றாகும்.
  • இது உவர்நீர் முதலைகள் உட்பட பல்வகை பறவை, ஊர்வன மற்றும் முதுகெலும்பில்லாத இனங்கள் போன்றவைகளுக்கும் பூர்வீகமாகத் திகழ்கிறது.

5. மேற்குத்தொடர்ச்சி மலைகள், 2012

  • சஹ்யாத்திரி மலைகள் என்றும் அறியப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையானது இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் மலைத் தொடராகும்.
  • கேரளா மாநிலத்தில் 20, கர்நாடகாவில் 10 தமிழ்நாட்டில் 5 மற்றும் மஹாராஷ்டிராவில் 4 என மொத்தம் 39 இடங்கள் (தேசியப் பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், காப்புக் காடுகள் உள்ளடங்கிய) உலக பாரம்பரியத் தளங்களாக குறிப்பிடப்படுகின்றன.
  • துணைக் குழுமங்கள் ஆவன
    • அகஸ்திய மலை துணைக் குழுமம்
    • பெரியார் துணைக் குழுமம்
    • ஆனைமலை துணைக் குழுமம்
    • நீலகிரி துணைக் குழுமம்
    • தலைக்காவிரி துணைக் குழுமம்
    • குதிரேமூக் துணைக் குழுமம்
    • சஹ்யாத்திரி துணைக் குழுமம்

6. பெரிய இமாலய தேசியப் பூங்கா, இமாச்சலப் பிரதேசம், 2014

  • இப்பூங்கா, இமாலயப் பிரதேசத்தின் குலு மலைப் பகுதியில் அமைந்துள்ளது. உயர்ந்தோங்கிய பனிசூழ் சிகரங்கள், பனிசூழ் புல்வெளிகள் ஆற்றோரக் காடுகளையும் இது உள்ளடக்கியது.
  • சுமார் 90,540 ஹெக்டேர் அளவு கொண்ட இந்தப் பூங்காவானது உயர்மலைகளின் பனிப் பாறைகள், பனியிலிருந்து உருகி வரும் தண்ணீரை மூலமாகக் கொண்ட பல நதிகள் மற்றும் இலட்சக்கணக்கான கீழ்நிலை பயனர்களுக்கு மிக முக்கியமாகப் பயன்படும் நீர்த்தேக்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • இது இமாலய உயிர்பன்மயப் பகுதியின் ஓர் பகுதியாகும். இதில் 25 வகைக் காடுகளும், எண்ணற்ற அழிவுநிலை விலங்கினச் சிற்றினங்களும் உள்ளன.

7. கேவலாதேவ் தேசியப் பூங்கா, ராஜஸ்தான், 1985

  • பரத்பூரில் உள்ள கேவலாதேவ் தேசியப் பூங்காவானது சிந்து-கங்கை பருவக்காடு உயிர்ப்புவிப் பரப்பு மாகாணத்திற்குள் அமைந்திருக்கிறது.
  • இது 1982-ல் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இது 1900-களில், பரத்பூர் மகாராஜாவின் வாத்து வேட்டையாடும் காப்புப் பகுதியாக இருந்தது.  பின்னர் 1956-ல் பறவைகள் சரணாலயமாக ஆன போது 1972ஆம் ஆண்டு வரை மஹாராஜாக்கள் வேட்டையாடும் உரிமைகளைப் பயன்படுத்தி வந்தனர். பின்னர் 1981-ல் ராம்சார் சதுப்புநிலப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.
  • இந்த சதுப்புநிலப்பகுதி பூங்காவானது, வருடத்தின் பெரும்பாலான பகுதிகளில், 1000 ஹெக்டேர் (சுமார் 2500 ஏக்கர்கள்) பரப்பளவாக சுருங்கி இருக்கும்.
  • இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பாகும்.
  • இதன் கரை அமைப்புகள் 10 யூனிட் அலகுகளாக பிரிக்கப்பட்டு, இதன் தண்ணீரின் அளவு நிர்வகிக்கப்படுகிறது.
  • இந்தப் பூங்கா, தொலைதூர நாடுகளிலிருந்து பெருமளவில் வருகின்ற 364 வகை குளிர்கால பறவைச் சிற்றினங்களுக்குப் பெயர் பெற்றது. ஆப்கானிஸ்தான், துர்க்மேனிஸ்தான், சீனா, மற்றும் சைபீரியப் பகுதிகளில் இருந்து பறவைகள் வந்து செல்கின்றன.
  • இது பரத்பூர் நகரம் மற்றும் 17 கிராமங்களால் சூழப்பட்டுள்ளன.

கலப்பு உலகப் பாரம்பரியத் தலம்

கஞ்சன்ஜங்கா தேசியப்பூங்கா

  • சிக்கிமில் உள்ள கஞ்சன்ஜங்கா தேசியப்பூங்கா, இந்தியாவின் முதல் கலப்பு உலகப் பாரம்பரியப் பகுதியாக யுனெஸ்கோவால் 2016ல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இது இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத் தலமாக பரிந்துரைக்கப்பட்டு அதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • இது இமாலயத் தொடரின் இருதயப்பகுதியில் அமைந்துள்ளது. இது தனித்த உயிர் பன்முகத்தன்மை பெற்ற சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஏரிகள், பனியாறுகள் (இதில் 26 கி.மு அளவுள்ள ஜெமு பனியாறும் உட்பட்டது) மற்றும் பன்முகத் தன்மை உடைய வியக்கத்தக்க பழங்காலக் காடுகளைக் கொண்ட பனிசூழ்ந்த மலைகள், உலகின் 3-வது உயர்ந்த சிகரமான கஞ்சன்சங்கா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

  • மூன்று முக்கிய வேறுபாட்டு அம்சங்கள் 
  1. முதலாவதாக, சிக்கிம் முழுவதுமாக பரவி இருந்தாலும் கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்காவின் மையப் பகுதியில் அமைந்துள்ள பெயூல் அல்லது மறைக்கப்பட்ட (ரகசிய) புனித நிலமானது திபெத்திய புத்த மதத்தில் முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது.
  2. இரண்டாவதாக, கஞ்சன்ஜங்காவின் பல்அடுக்கு புனித நிலப்பகுதியும் கலாச்சார மற்றும் மதத் தொடர்புடைய மறைநிலமும் (திபெத்தி புத்தமதத்தில் உள்ள பெயூல் மற்றும் லெப்சா மரபில் உள்ள மேயல் லயாங்) சிக்கிமுக்கு பிரத்யேகமான பகுதியாகும். இது பல்வேறு சமய மரபுகள் மற்றும் மக்களுக்கு இடையில் ஒற்றுமை மற்றும் பரிமாற்றத்திற்கான ஒரு தனிப்பட்ட எடுத்துக்காட்டாகும்.
  3. மூன்றாவதாக, சூழியல் மற்றும் உள்ளூர் தாவரங்களின் குறிப்பிட்ட பண்புகள் தொடர்பான உள்நாட்டு மத மற்றும் கலாச்சார நடைமுறைகளானது பாரம்பரிய அறிவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

- - - - - - - -  - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்