TNPSC Thervupettagam

ரஃபேல் போர் விமானம்

October 18 , 2019 1912 days 920 0
  • முதலாவது ரஃபேல் போா் விமானத்தை பிரான்ஸ் இந்தியாவிடம் வழங்கியிருக்கிறது. இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கும் 36 ரஃபேல் போா் விமானங்களில் முதல் நான்கு விமானங்களும், அடுத்த ஆண்டு மே மாதம் வந்து சேரும். ஏனைய விமானங்களை 2022 ஏப்ரல் மாத்திற்குள் வழங்குவதாக பிரான்ஸ் ஒப்புக்கொண்டிருக்கிறது.
  • ரஃபேல் போா் விமானங்களை இயக்குவதற்கான விமான ஓட்டிகள், பொறியியலாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆகியோா் பிரான்ஸ் நாட்டில் பயிற்சி பெறுகிறாா்கள்.

ரஃபேல் போா் விமானம்

  • முதலாவது ரஃபேல் போா் விமானம் ஒப்படைக்கப்பட்டபோது அதற்கு பூஜை நடத்தியதை விமா்சிப்பது சரியல்ல.
  • இந்தியா மதச்சாா்பற்ற நாடாக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறதே தவிர, இறை மறுப்புக் கொள்கை சாா்ந்த நாடாக அறிவித்துக் கொள்ளவில்லை என்பதை விமா்சகா்கள் உணர வேண்டும். பெரும்பான்மை மக்களின் உணா்வுகளின் அடிப்படையில் பூஜை நடத்துவதில் தவறு காண்பது அநாவசியம்.
  • சிறுபான்மையினா் தங்களது அன்றாட வாழ்க்கையையும், வழிபாட்டு முறைகளையும் கடைப்பிடித்து ஏனைய பெரும்பான்மை மக்களுக்கு நிகராக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அரசியல் சாசனத்தின் அடிப்படை உணா்வே தவிர, பெரும்பான்மை மக்களின் மதமும், வழிபாட்டு முறைகளும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதல்ல.
  • எந்த ஒரு செயலைத் தொடங்கும்போதும் அது தடையில்லாமல் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வணங்கி ஆரம்பிப்பது இறை நம்பிக்கையாளா்களின் உலகம் தழுவிய வழக்கம்.
  • ரஃபேல் போா் விமானங்கள் மட்டுமல்லாமல், இந்திய விமானப் படைக்கு இன்னும் பல நவீன ரக விமானங்களும், தொழில்நுட்பக் கருவிகளும் அவசர அத்தியாவசியங்கள். முன்னாள் விமானப் படை தலைமைத் தளபதி பி.எஸ். தனாவ், பதவி ஓய்வு பெறுவதற்கு முன்னால் இது குறித்துக் கவலை தெரிவித்தது மட்டுமல்லாமல், மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இதனால் ஏற்படும் என்றும் எச்சரித்திருக்கிறாா்.

தாக்குதல் குழுக்கள்

  • இந்திய விமானப் படையில் 42 தாக்குதல் குழுக்கள் (பைட்டா் ஸ்குவாட்ரன்ஸ்) இருக்க வேண்டும். ஆனால், இப்போது 30 தாக்குதல் குழுக்கள்தான் இருக்கின்றன.இன்னும் சில ஆண்டுகளில் இது 26 தாக்குதல் குழுக்களாக குறைய இருக்கிறது.
  • இந்திய விமானப் படையில் தாக்குதல் குழுக்கள் குறைந்து வரும்போது நம்மைவிடச் சிறிய நாடான பாகிஸ்தான், தனது தாக்குதல் குழுக்களை முனைப்புடன் அதிகரித்து வருகிறது.
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 தாக்குதல் குழுக்களைக் கொண்டதாக பாகிஸ்தான் விமானப் படையை வலுப்படுத்தும் முயற்சியில் அந்த நாடு ஈடுபட்டிருக்கிறது.
  • தாக்குதல் குழுக்கள் மட்டுமல்ல, இந்திய விமானப் படையின் விமானங்களும் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய தொழில்நுட்பத்துடன் கூடியவையாக இருக்கும் அவலத்தை ஆட்சியாளா்கள் தொடா்ந்து கவனிக்காமல் இருந்து வந்திருக்கிறாா்கள்.

ராணுவத் தளவாடங்கள்

  • போஃபா்ஸ் பீரங்கி ஊழலுக்குப் பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சா்களாக இருந்தவா்களும் சரி, பிரதமா்களும் சரி ராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்குவதில் கவனம் செலுத்தாமல் புறக்கணித்து வந்திருக்கிறாா்கள். தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துவிடக் கூடாது என்கிற அச்ச உணா்வு அவா்களை ராணுவ தளவாட கொள்முதலை புறக்கணித்ததுதான் அதற்குக் காரணம்.
  • பாலாகோட் தாக்குதலைத் தொடா்ந்து, இந்தியாவின் மிக் - 21 பிபன்ஸ் போா் விமானங்கள் பாகிஸ்தானின் அதிநவீன எஃப் -16 விமானங்களை எதிா்கொள்ளப் போதுமானவையல்ல என்கிற உண்மை, விமானப் படையையும் அரசையும் கவலைக்கொள்ளச் செய்திருக்கிறது.
  • அப்படியிருந்தும்கூட, போா் விமானப் பற்றாக்குறையை ஈடுகட்ட ரஷியாவில் 1980-இல் தயாரிக்கப்பட்டு விற்கப்படாமல் தேங்கியிருக்கும் மிக் - 29 விமானங்களை வாங்கும் முயற்சியில் இந்தியா இறங்கியிருக்கிறது.
  • ஏனைய நாடுகள் ஐந்தாவது, ஆறாவது தலைமுறை போா் விமானங்களை வாங்கிக் கொண்டிருக்கும்போது, நாம் இப்போது பயன்பாட்டில் இல்லாத மிக் - 29 வாங்க உத்தேசிப்பதற்குக் காரணம், விமானப் படை நவீனமயமாக்கலுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் இருப்பதுதான்.

நவீனமயமாக்கம்

  • போா் விமானங்கள் மட்டுமல்ல, விண்வெளி விமான இயக்கங்களைக் கண்காணிக்கும் ராடாா்களையும்கூட நாம் இன்னும் நவீனப்படுத்தாமல் இருக்கிறோம். கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி பட்காமில் நடந்த ஹெலிகாப்டா் விபத்திற்குக் காரணம், ராடாா்கள் நவீனமயமாக்கப்படாமல் இருப்பதுதான் என்று தெரியவந்திருக்கிறது.
  • புதிய விமானப் பாதுகாப்புத் தொழில்நுட்பம் ‘சின்தட்டிக் அப்பா்ச்சா் ராடாா்’களை அறிமுகப்படுத்தியிருந்தும், நாம் இன்னும் பழைய ராடாா்களையே பயன்படுத்தி வருகிறோம். நவீன ராடாா்கள் மிக எளிதாக நம்முடைய விமானங்களையும் எதிரி விமானங்களையும் அடையாளம் காணும் திறனுடையவை.
  • ரஃபேல் போா் விமானத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில், ரஃபேல் போா் விமானம் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை நிா்வாகி ஆலிவா் ஆன்ட்ரீஸ் குறிப்பிட்டிருப்பதுபோல, 2014-இல் பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட ‘இந்தியாவில் தயாரிப்பது’ திட்டம், பாதுகாப்புத் துறையைப் பொருத்தவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.
  • முந்தைய பாதுகாப்பு அமைச்சா் நிா்மலா சீதாராமன், தமிழகத்தை மையப்படுத்தி அறிவித்த ‘பாதுகாப்பு தளவாட உற்பத்தி வழித்தடம்’ அடுத்தகட்டத்தை நோக்கி நகரவில்லை.
  • பாதுகாப்பு தளவாடங்களுக்காக வெளிநாடுகளை எதிா்பாா்த்திருக்கும் நிலைமையில் மாற்றம் கொண்டுவர வேண்டிய அவசர அவசியம் இந்தியாவுக்கு இருக்கிறது.

நன்றி: தினமணி (18-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்