ரத்தசோகை பாதிப்பிலிருந்து வளரிளம் பருவத்தினரைப் பாதுகாப்போம்!
- தமிழ்நாட்டில் 10-19 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவத்தினரில் கிட்டத்தட்ட சரிபாதிப் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கவலை அளிக்கிறது. தமிழக அரசின் பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மத்தியில் 2023 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்களைவிட (41%) பெண்களே (54.4%) ரத்தசோகையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
- தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு-5இன் (2019-2021) தரவுகளுடன் ஒப்பிடுகையில், (பெண்கள் 52.9%, ஆண்கள் 24.6%) இது அதிகம். குறிப்பாக, ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்களின் விகிதம் கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரித்துள்ளது. திருச்சி (84%), திண்டுக்கல் (70%), கள்ளக்குறிச்சி (70%), கடலூர் (61%) ஆகிய மாவட்டங்களில் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட வளரிளம் பருவத்தினரின் விகிதம் அதிர்ச்சியளிக்கிறது.
- ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் ரத்தசோகை பாதிப்பு, உலகளாவிய பிரச்சினை என்கிறபோதும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதன் பரவலும் தாக்கமும் தீவிரமாக உள்ளன. தற்போது இந்திய மக்கள்தொகையில் வளரிளம் பருவத்தினரே பெரும்பங்கு வகிக்கின்றனர். எனவே, உலக அளவில் இந்தியக் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் ரத்தசோகை பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். வளர்ச்சிக் குறைபாடு, கவனச் சிதறல், நடத்தைக் கோளாறுகள் போன்றவற்றுக்கு ரத்தசோகை காரணமாக அமையக்கூடும்.
- மத்திய அரசின் ‘அனீமியா முக்த் பாரத்’ திட்டத்தைத் தமிழக அரசு 2018 முதல் செயல்படுத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, ரத்தசோகை பாதிப்பை ஆண்டுதோறும் 3% அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பது இலக்கு. அதையொட்டி ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட 15 – 19 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பெண்களின் விகிதத்தை 2022ஆம் ஆண்டுக்குள் 36 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.
- ஆனால், தற்போதைய ஆய்வு முடிவில் அதைவிட அதிக எண்ணிக்கையில் வளரிளம் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருப்பது, அரசு இது சார்ந்து போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு குறிப்பாக, இரும்புச் சத்துக் குறைபாடு காரணமாகவும் மலேரியா, தொற்றுநோய்கள் காரணமாகவும் ரத்தசோகை ஏற்படுகிறது.
- வளரிளம் பெண்களில் சிலருக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்காலும் ரத்தசோகை ஏற்படுகிறது. எனவே, ரத்தசோகை ஏற்படுவதற்கான மூலக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். கர்ப்பிணிகளுக்கும் வளரிளம் பெண்களுக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுவந்தாலும், அதை நெறிமுறைப்படுத்துவதோடு பரவலாக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது.
- பள்ளி, கல்லூரிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தி, ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கு இரும்புச் சத்து - ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்குவது, குடற்புழு நீக்க மாத்திரைகள் போன்றவற்றைச் சீரான இடைவெளியிலும் போதுமான கால அளவுக்கும் வழங்குவது போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்கள் முழுமையாகவும் முறையாகவும் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்த ஆய்விலும் அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.
- வலுவான மருத்துவக் கட்டமைப்பு கொண்ட தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் ரத்தசோகையைக் களைவதற்கான திட்டத்தை விரைவாகவும் தொய்வில்லாமலும் செயல்படுத்துவது சாத்தியமே. வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியமே, வலுவான எதிர்காலத்துக்கு ஆதாரமாக அமையும் என்பதால், அரசு இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 10 – 2024)