TNPSC Thervupettagam

ரத்தன் டாடா: முன்னுதாரணர்!

October 13 , 2024 94 days 140 0

ரத்தன் டாடா: முன்னுதாரணர்!

  • தொழிலதிபர் ரத்தன் நவல் டாடா (28.12.1937 - 09.10.2024) உலகளவில் பேசப்படும் சாதனைகளைப் புரிந்தவர். ‘டாடா குழுமம்’, ‘டாடா சன்ஸ்’ ஆகிய தொழில் நிறுவனங்களின் நிர்வாகத் தலைவராக (சேர்மன்) 1991 முதல் 2012 வரை சிறப்பாகப் பணியாற்றியவர். பெரும் கொடையாளர். நவீன சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் குழந்தை மனதுடன் வரவேற்று ஊக்குவித்தவர். பத்ம பூஷண் (2000), பத்ம விபூஷண் (2008) விருதுகளைப் பெற்றவர்.

யார் இந்த ரத்தன் டாடா?

  • டாடா குழுமங்களை நிறுவிய ஜாம்ஷெட்ஜி டாடாவின் புதல்வர் ரத்தன்ஜி டாடா. அவர் நவல் டாடாவை சுவீகாரம் (தத்து) எடுத்துக்கொண்டார். நவல் டாடாவின் புதல்வர்தான் ரத்தன் (ரத்தினம்) நவல் டாடா. மும்பையில் பிறந்து பள்ளிக்கல்வியை இந்தியாவில் முடித்த ரத்தன் டாடா, கட்டிடக்கலையில் இளங்கலைப் பட்டப்படிப்பை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கார்நெல் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
  • சிறிது காலம் வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றி அனுபவம் பெற்ற அவரை, 1962இல் டாடா குழுமத்தில் ‘டாடா ஸ்டீல்’ உருக்கு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் அமர்த்தினர். 1991இல் ஜே.ஆர்.டி.டாடா ஓய்வுபெற்றதும் ‘டாடா சன்ஸ்’ குழுமத் தலைவரானார் ரத்தன் டாடா. ரத்தனின் நிர்வாகத்தில்தான் ‘டெட்லே’, ‘ஜாகுவார் லேண்ட் ரோவர்’, ‘கோரஸ்’ ஆகிய வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியது. ரத்தன் டாடா மொத்தம் 30 புத்தொழில் நிறுவனங்களில் (ஸ்டார்ட்-அப்) முதலீடு செய்துள்ளார். அவருக்கே சொந்தமான தனி முதலீட்டு நிறுவனமும் சில புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்தது.
  • டாடாக்கள் அனைவருமே ஈரானிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த பார்ஸி (பாரசீகம்) வம்சாவழியினர். அவர்கள் தீயை வழிபடுகிறவர்கள், ஜோராஸ்டிரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ரத்தனின் பெற்றோர், நவல் – சூனு. ரத்தனுக்கு 10 வயதாக இருந்தபோது அவருடைய பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டது. ரத்தன்ஜி டாடாவின் மனைவியும் ரத்தனின் பாட்டியுமான நவாஜ்பாய் டாடாதான் இளவயது ரத்தனை வளர்த்தார். ரத்தனுக்கு ஜிம்மி என்ற தம்பியும், தந்தை மணம் முடித்த இரண்டாவது தாரம் சிமோன் மூலமாக நோயல் என்ற இன்னொரு தம்பியும் உண்டு.
  • எட்டாம் வகுப்பு வரை மும்பையில் கேம்பியன் பள்ளியில் படித்தார். பிறகு மும்பையிலேயே கதீட்ரல்-ஜான் கானன் பள்ளியிலும், சிம்லாவில் பிஷப் காட்டன் பள்ளியிலும், நியூயார்க் நகரில் உள்ள ரிவர்டேல் பள்ளியிலும் படித்தார். 1955இல் பள்ளிக்கூடப் படிப்பை முடித்த பிறகு கார்நெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பாடப் பிரிவில் சேர்ந்தார். மாணவராக படித்தபோதே குடும்பத்தாரின் அனுமதி பெற்று 5 கோடி டாலரை அந்தக் கல்வி நிறுவனத்துக்கு நன்கொடையாக அளித்தார். அந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றிலேயே அவ்வளவு பெருந்தொகையை யாருமே அளித்ததில்லை.

கட்டிடக்கலை வேலை

  • கார்நெல் பல்கலைக்கழகத்தில் ரத்தன் படித்தபோது ஏ.குவின்சி ஜோன்ஸ் என்ற அந்தக் கால கட்டிடக்கலை நிபுணர் அந்தக் கல்வி நிறுவனத்துக்கு 1961இல் 3 வாரங்கள் வந்திருந்தார். மாணவர்கள் தயாரித்த கட்டிடக்கலை வரைபடங்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள குறை நிறைகளைக் கூறுவார் குவின்சி ஜோன்ஸ். அவருடைய மேதமையால் ஈர்க்கப்பட்ட ரத்தன் பிறகு லாஸ் ஏஞ்செலீஸ் நகரிலேயே இருந்த அவருடைய நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அந்நகரிலேயே தொடர்ந்து தங்கி வேலை செய்ய அவர் நினைத்தபோது, இந்தியா வந்துவிடும்படி பாட்டி அழைத்தார்.

‘நெல்கோ’ மீட்பு

  • டாடா குழுமத்தில் நிர்வாகியாக 1970இல் ரத்தன் பதவிவகித்தார். அப்போது டாடா குழுமத்தின் துணை நிறுவனமான ‘நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ்’ (நெல்கோ) நிறுவனத்தை முன்னணி நிறுவனமாக்கினார். (பின்னர் பொருளாதார தேக்கநிலையின்போது அது மீண்டும் தொய்வடைந்தது). 1991இல் ஜே.ஆர்.டி.டாடாவுக்குப் பிறகு ‘டாடா சன்ஸ்’ குழுமத் தலைமை நிர்வாகியாக ரத்தன் பொறுப்பேற்றபோது, அந்தக் குழுமத்தின் வெவ்வேறு துணை நிறுவனங்களின் தலைவர்களிடமிருந்து பல விஷயங்களில் பலத்த எதிர்ப்புகளும், கருத்து மோதல்களும் ஏற்பட்டன.
  • எல்லோருமே மறைந்த ஜே.ஆர்.டி காலத்தில் இருந்ததைப் போல தங்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று விரும்பினர். உலக அளவில் டாடா குழுமம் தலையெடுக்க அதை வலுப்படுத்துவதும் விரிவுபடுத்துவதும் அவசியம் என்று உணர்ந்த ரத்தன், குழுமத்தின் அதிகாரம் முழுக்க தனக்குக் கிடைக்கும் வகையில் புதிய கொள்கைகளை அறிவித்தார்.

புதிய கொள்கைகள்

  • டாடா குழுமத்தில் பணியாற்றும் அனைவருக்கும் ஓய்வுபெற வேண்டிய வயது எது என்று நிர்ணயிக்கப்பட்டது. துணை நிறுவனங்கள் அனைத்தும் குழுமத்தின் தலைமை அலுவலகத்துக்குத் தங்களுடைய செயல்பாடு குறித்த அறிக்கைகளை நேரடியாக அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டது. துணை நிறுவனங்களின் லாபத் தொகை டாடா குழுமத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது.
  • டாடா நிறுவனங்களின் உற்பத்திகளில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஊக்குவிப்பும் முக்கியத்துவமும் தரப்பட்டு, இளம் தலைமுறையினருக்கு நிறுவனத்தில் அதிகப் பொறுப்புகள் அளிக்கப்பட்டன. அவருடைய தலைமையின் கீழ், துணை நிறுவனங்கள் சில, ஒரே மாதிரியான தயாரிப்புகளையும் வேலைகளையும் செய்வது நீக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அதுவரை டாடா குழுமம் முயன்று பார்த்திராத துறைகளிலும் உற்பத்தி, முதலீடு தொடங்கப்பட்டது. அதன் மூலம் நிறுவனம் உலகளாவியதாக மாறியது.

வருமானம் - லாபம் உயர்வு

  • ரத்தன் டாடா தலைமையில் டாடா குழுமத்தின் வருமானம் 40 மடங்கும் லாபம் 50 மடங்கும் அதிகமானது. டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் பதவியேற்றபோது அதன் விற்பனையில் பெரும்பகுதி மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளாக இருந்தன. அவர் ஓய்வுபெற்றபோது டாடா குழுமத்தின் விற்பனையில் பெரும்பகுதி அந்த நிறுவனத்திலேயே அதன் ‘பிராண்டு’ பெயரிலேயே உற்பத்தியானவை.
  • அவருடைய நிர்வாகத் திறமையால்தான் டாடா டீ நிறுவனம் டெட்லே நிறுவனத்தையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தையும் டாடா ஸ்டீல் நிறுவனம் கோரஸ் நிறுவனத்தையும் வாங்கியது. இந்த நிறுவனங்களை வாங்கிய பிறகு இந்தியத் தொழில் குழுமமாக மட்டுமே அறியப்பட்டிருந்த டாடா, பன்னாட்டு நிறுவனமானது, அதன் வருமானத்தில் 65% வெளிநாடுகளிலிருந்து கிடைத்தன.

டாடா இன்டிகா - நானோ

  • டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும் டாடா இன்டிகா கார் தயாரிப்புக்கு மூலக் காரணமே ரத்தன்தான். அதேபோல நடுத்தர குடும்பங்கள் ஆட்டோவில் போவதைவிட பாதுகாப்பாகவும் விலை குறைவான வாகனத்திலும் செல்ல வேண்டும் என்பதற்காக ‘டாடா நானோ’ என்ற பிராண்டில் சிறிய கார் உற்பத்தியில் ஈடுபட்டது. அந்த நிறுவனத்தை மேற்கு வங்கத்தில் அமைக்க முயன்றபோதுதான் மம்தா பானர்ஜி அதை எதிர்த்து பெரிய கிளர்ச்சியைச் செய்து, அந்தக் கார் உற்பத்தி நிறுவனத்தைக் குஜராத்துக்கு இடம்பெயரவைத்தார். ஆனால், அந்தக் காரை சந்தைப்படுத்தவிடாமல் இதர மோட்டார் கார் தயாரிப்பாளர்கள் பல்வேறு ஆட்சேபங்களை எழுப்பி தடுத்துவிட்டனர்.
  • ‘ஒரு லட்ச ரூபாய் விலையில் கார்’ என்ற முழக்கத்துடன் ரத்தன் டாடா தொடங்கிய ‘நானோ’ கார், இவ்வாறாக தடைகளால் வெளிவர முடியாமல் தடுக்கப்பட்டுவிட்டது. இப்போது அந்தக் காரை மின்சாரத்தில் ஓடும் காராக மாற்றியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், காரின் விலையை இனியும் ஒரு லட்சத்துக்குள் கட்டுப்படுத்த முடியாது.
  • இந்த முயற்சியில் ரத்தன் டாடாவின் இரண்டு அரிய குணங்களே வெளிப்படுகின்றன. நடுத்தர மக்களும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் அதிக செலவில்லாமலும் பயணிக்க வேண்டும் என்பது முதலாவது. லாப நோக்கமின்றி மக்களுக்காகவே பொருள்களை உற்பத்திசெய்வது தொழில் நிறுவனங்களின் சமுதாயக் கடமை என்பது இரண்டாவது. (இதேபோலத்தான் பஜாஜ் நிறுவனத்தின் ‘குவாட்ரி சைக்கிள்’ என்ற 4 சக்கர வாகனமும் பெரிய எதிர்ப்புகளுக்கு ஆளாகி முடக்கப்பட்டது).

சொந்தப் பணத்தில்

  • தன்னுடைய சொந்தப் பணத்தை பல்வேறு புதிய தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்தார் ரத்தன். அவை வருமாறு: ‘ஸ்நாப் டீல்’ - மின்வணிக நிறுவனங்களில் முன்னணியில் இருப்பது. ‘டீ பாக்ஸ்’ – இணைய வணிகத்தில் முன்னணி தேயிலை விற்பனையாளர், ‘கேஷ்கரோ.காம்’ – தள்ளுபடி கூப்பன்கள் மூலமும் ‘கேஷ்-பேக்’ மூலமும் விற்பனை செய்யும் இணையதளம்.
  • ‘ஓலா கேப்’ நிறுவனத்தில் 0.95 கோடி ரூபாய் (ஒரு கோடிக்கும் குறைவு) முதலீடு செய்தார். ‘ஜியோமி’ என்ற சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தில், ‘நெஸ்டவே’ என்ற மனை-வணிக இணையதள விற்பனை நிறுவனத்தில், மூத்த குடிமக்கள் சேர்ந்து வாழ ‘குட்ஃபெல்லோஸ்’ என்ற புத்தொழில் நிறுவனம் ஆகியவற்றிலும் முதலீடு செய்தார்.

சீக்கியர்களுக்கு லாரி

  • 1984இல் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு, சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்தச் செய்திகளால் மிகவும் வேதனையடைந்த ரத்தன், சீக்கிய குடும்பங்கள் அதிர்ச்சியிலிருந்து மீள உதவிசெய்ய முடிவுசெய்தார். வன்முறை கும்பல்களால் எரிக்கப்பட்டு தங்களுடைய லாரிகளை (டிரக்) இழந்த சீக்கியர்களுக்கு டாடா நிறுவனத்தின் லாரிகளை இலவசமாகவே அளித்தார். இதனால் ஏராளமான சீக்கியர்கள் புதுவாழ்வு பெற்றனர். இந்த ஒரு காரணத்துக்காகவே சீக்கிய டிரைவர்கள் பஞ்சாபிலும் பிற மாநிலங்களிலும் சொந்தமாக லாரிகளை வாங்குவதென்றால் டாடா நிறுவனத்தின் லாரிகளையே வாங்குவது என்று தீர்மானித்துவிட்டனர்.
  • குடிநீர் வசதியின்றி தவிக்கும் பகுதிகளுக்குத் தூய்மையான குடிநீர் வழங்கும் நியூசவுத்வேல்ஸ் பல்கலைக்கழக பொறியியல் துறை திட்டத்துக்கு ரத்தன் டாடா பெரும் நிதியைக் கொடையாக வழங்கினார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்காக சான்டியோகா நகரில் 2018 நவம்பரில் திறக்கப்பட்ட நவீன ஆய்வுக்கூடத்துக்கு 7 கோடி டாலர்களைக் கொடையாக அளித்தார் ரத்தன். அதனால் அந்த அரங்குக்கு ‘டாடா டிரஸ்ட்ஸ்’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. அங்கே மரபணு ஆராய்ச்சி நடக்கிறது.

நன்றி: அருஞ்சொல் (13 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்