- மிகச் சாதாரணமான செயல்பாடுகளில்கூட உச்சநீதிமன்றம் தலையிட்டாக வேண்டும் என்கிற நிலை காணப்படுவது வருத்தம் அளிக்கிறது.
- உச்சநீதிமன்றத்தில் ரத்த வங்கிகளின் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும் என்கிற மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்ற பிரச்னைகளும் குறைபாடுகளும் புதிதொன்றுமல்ல. அவற்றை அகற்றுவதற்கு மனுதாரர்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளும் புதிதல்ல.
ரத்த தானம்
- இந்தியாவில் ரத்த தானம் வழங்கும் பழக்கம் கடந்த அரை நூற்றாண்டு காலமாகப் படிப்படியாக அதிகரித்து வருவது என்னவோ உண்மை. ஆனால், இன்னும்கூட அது ஓர் இயக்கமாக உருவாகவில்லை என்பதால், தேவையைவிடக் குறைவான அளவு ரத்தம்தான் கிடைக்கிறது. தேவையைவிட 1% அதிகமான அளவில் ரத்த வங்கிகள் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எல்லா நாடுகளையும் வலியுறுத்தி வருகிறது. அப்படியிருந்தும், இந்தியாவில் நமது தேவையைவிட 25% குறைவான அளவில்தான் சிகிச்சைக்கு ரத்தம் கிடைக்கிறது.
- இந்தியாவின் மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க ரத்த வங்கிகளின் மூலம் பெறப்படும் ரத்தத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. ஆனால், அதைவிட அதிகமான அளவு ரத்தம் தேவைப்படுகிறது. எல்லா ஆண்டுகளிலும் சில மாதங்களில் ரத்தத்தின் பற்றாக்குறை கடுமையாக அதிகரிக்கும்போது, அதை ஈடுகட்ட முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்கிற கொடூரமான உண்மை வெளியில் தெரிவதில்லை.
- இந்தியாவில் ரத்த தானம் வழங்குபவர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஆண்களைவிட பெண்கள்தான் மிக அதிகமாக ரத்த தானம் வழங்குகிறார்கள். உலகில் உள்ள பல நாடுகளில் பொதுமக்கள் தன்னிச்சையாக ரத்த தானம் செய்ய முன்வருகிறார்கள். அதனால் வளர்ச்சி அடைந்த பல நாடுகளில் பல்வேறு ரத்தப் பிரிவுகளைச் சேர்ந்த தேவையான அளவு ரத்தம் எப்போதும் கையிருப்பில் காணப்படுகிறது.
- இந்தியாவைப் பொருத்தவரை, ரத்த தானம் என்பது பெரும்பாலும் குடும்பத்தினராலும், நண்பர்களாலும் தேவை ஏற்படும்போது வழங்கப்படுவதாக இருக்கிறது. அவசரச் சூழலில் மட்டும்தான் ரத்த தானம் வழங்கப்பட வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள்.
- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் ரத்தம் தேவைப்படும் தருணம்தான் என்று நம்மில் பலரும் உணர்வதில்லை.
அடிப்படை சக்தி
- ரத்தம் என்பது உடலின் அடிப்படை சக்தி என்றும், தானமாக அதை வழங்குவதால் ஆற்றல் குறைந்து உடல் நலம் குன்றுவதாக ஒரு தவறான கருத்தாக்கம் நம்மிடையே காணப்படுகிறது. ரத்தம் வெளியேறினால் , அடுத்த சில மணி நேரத்தில் புதிதாக ரத்தத்தை சமன் செய்துகொள்ளும் ஆற்றல் உயிரினங்களுக்கு உண்டு என்கிற அறிவியல் உண்மை பலருக்கும் தெரிவதில்லை. தொடர்ந்து ரத்த தானம் வழங்குவதால் ஒருவருடைய உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
- அரசும், மருத்துவச் சங்கங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ரத்த தானம் குறித்த தவறான புரிதல்களை அகற்றிப் பொதுமக்களுக்கு ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பல முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. ஏனைய மாநிலங்களைவிட தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சற்றுக் கூடுதலாகவே ரத்த தானம் பெறப்படுகிறது. ரத்த தானம் செய்யும் வழக்கம் இன்னும்கூட கிராமப்புறங்களையும் சிறு நகரங்களையும் சென்றடையவில்லை என்கிற உண்மையை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை.
- அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், ரத்த வங்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்கிற திட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழியப்பட்டும்கூட இந்தியாவின் 81 மாவட்டங்களில் ரத்த வங்கி இல்லை என்கிற அவலத்தை என்னவென்று சொல்வது? 10 லட்சம் பேருக்கு அதிகபட்சமாக மூன்று பதிவு செய்யப்பட்ட ரத்த வங்கிகள்தான் இருப்பதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
நவீன கட்டமைப்பு வசதிகள்
- அப்படியே ரத்த வங்கிகள் இருந்தாலும் அவை போதுமான நவீன கட்டமைப்பு வசதிகளுடனும், பயிற்சி பெற்ற ஊழியர்களுடனும் செயல்படுவதில்லை. தேசிய ரத்த வங்கி கவுன்சிலின் வழிமுறைகளை, ரத்தம் பாதுகாக்கும் அமைப்புகள் பின்பற்றுவதில்லை.
- பல தனியார் ரத்த வங்கிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. அவற்றில் பல பதிவு செய்யப்படாதவை. அவற்றின் சேவையும், அவை வழங்கும் ரத்தத்தின் தரமும் திருப்திகரமாக இல்லை. மிக அவசரமான தருணங்களில், வேறுவழியில்லாமல் தேடி வரும் நோயாளிகளை அவை கசக்கிப் பிழிகின்றன. இடைத்தரகர்களும் கொழிக்கிறார்கள். சில மருத்துவர்களும், தனியார் மருத்துவமனைகளுமேகூட அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், போதுமான அளவில் அரசுத் தரப்பில் ரத்த வங்கிகள் இல்லாமல் இருப்பதும், கிராமப்புறங்கள் வரை தேவைப்படும் ரத்தம் வழங்கப்படாமல் இருப்பதும்தான்.
- ஆரோக்கியமான ஆண்களும் பெண்களும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை அரசு மருத்துவமனைகளுக்கு வலியச் சென்று ரத்த தானம் வழங்குவதற்கு முன்வர வேண்டும். அவர்களை "அரசுத்துறை மனப்பான்மை இல்லாமல்' அவர்களின் நோக்கத்தைப் புரிந்து வரவேற்று அரசு மருத்துவமனைகள் கெளரவப்படுத்த வேண்டும்.
- ரத்த தான முகாம்கள் அதிக அளவில் நடத்தப்படுவது, ரத்தம் சேகரிப்பதற்கான அமைப்புகளை மேம்படுத்துவது, ரத்தத்தை சேமித்து வைப்பதற்கான கட்டமைப்பை உறுதிப்படுத்துவது, தேவைக்கேற்ப ரத்தம் கிடைப்பது - இவை அனைத்துமே அவசர அத்தியாவசியத் தேவை. இதற்கெல்லாம் கூடவா உச்சநீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருப்பது?
நன்றி: தினமணி (21-02-2020)