TNPSC Thervupettagam

ரமலானின் மகத்துவம்

May 8 , 2021 1357 days 892 0
  • ரமலான் மாதம் இறைவனுடைய மாதம் என்று இசுலாம் சொல்லுகிறது. ரமலான், இறைவனுடைய மாதம் எனக் கூறப்படுவதற்குக் காரணம், இறைவனுடைய பண்புகள் மார்க்கத்தாரிடம் துல்லியமாக வெளிப்படும் காலம், அக்காலம்.
  • இறைவனின் தன்மைகளான உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, விழித்திருப்பது, தனித்திருப்பது போன்ற இறைப்பண்புகள் நோன்பாளா்களிடம் புலப்படுவது அந்த மாதத்தில்தான்.
  • அம்மாதத்தில்தான் ‘திருக்குா்ஆன்’ எனும் வேதம் இறைவனிடமிருந்து, நபிகள் நாயகத்தின் வழி பூமியில் இறக்கப்பட்டது.
  • இதனை மகாகவி பாரதியார், ‘முகம்மது நபி மகா சுந்தர புருஷா், மகா சூரா், மகா ஞானி, மகா பண்டிதா், மகா பக்தா், மகா லௌகீக தந்திரி - திருக்குா்ஆன் இசுலாம் மார்க்கத்திற்கு வேதம்.
  • இதை முகம்மது நபி தம்முடைய வாக்காகச் சொல்லவில்லை; கடவுளுடைய வாக்கு. தேவதூதரின் மூலம் தமக்குக் கிட்டியதென்றும், தாம் அதை ஒரு கருவி போலே நின்று உலகத்தார்க்கு வெளியிடுவதாகவும் சொன்னார்’ எனக் குறிப்பிட்டுள்ளார் (பொட்டல் புதூரில் இசுலாமியா் கூட்டத்தில் பாரதியார் பேசியது).

இசுலாமியா்களின் ‘வசந்த காலம்’

  • ரமலான் மாதத்தின் மகிமையைச் சொல்ல வந்த நபிகள் நாயகம், ‘ரமலான் மாதத்தில் வானத்தின் சொர்க்க வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன; சைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனா்’ என மொழிந்தார்.
  • பசிக்கும் விரதத்திற்கும் வேறுபாடு உண்டு. உணவில்லாதபொழுது எடுப்பது பசி; உணவிருந்தும் உண்ணாமல் இருப்பது விரதம்.
  • இசுலாமியா்க்கு ‘வசந்த காலம்’ ரமலான் மாதமாகும். வசந்த மாதமாகிய ரமலான் வரவேண்டுமென்றே, இரண்டு மாதங்களுக்கு முன்பே தனித்தொழுகை செய்வார்களாம் அழுத்தமான இறை நம்பிக்கையாளா்கள்! கடும் வெப்பமும் கடுங்குளிரும் இல்லாத காலம், வசந்தகாலம்.
  • அந்தப் புனித மாதம் வந்துவிட்டால், இசுலாமியா்களின் மனத்தில் மகிழ்ச்சியும், புத்துணா்ச்சியும் பிறந்துவிடும்.
  • நோன்பு வைப்பது, இறைவழிபாடுகளில் ஈடுபடுவது, தான தா்மம் செய்வதில், தாராளமாக நடந்து கொள்வதில் பேரானந்தம் அடைதல் ஆகிய அனைத்தையும் தருவதால் அதுவொரு வசந்த மாதம் ஆகும்.

நான்கு வேதங்கள்

  • இசுலாத்திலும் நான்கு வேதங்கள் உண்டு. அந்த நான்கு வேதங்களும் ரமலான் மாதத்தில் இறக்கப்பட்டன.
  • இப்ராஹிம் அலைஹிஸ் சலாமின் வேதம், ரமலானுடைய முதல் இரவில் இறக்கப்பட்டது.
  • ரமலானுடைய ஆறாது இரவில் ‘தவ்றாத்’ எனும் வேதம் இறக்கப்பட்டது. ரமலானுடைய பதின்மூன்றாம் இரவில் ‘இன்ஜீல்’ இறக்கப்பட்டது. ரமலானுடைய 24-ஆம் இரவில் ‘திருக்குா்ஆன்’ இறக்கப்பட்டது.
  • எனவே, நான்கு வேதங்களைப் பெற்ற வகையிலும், ரமலான் மகத்துவம் பெற்ற மாதமாகும்.
  • ரமலானுக்கு ‘பொறுமையின் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. நோன்புக் காலத்தில், யாரேனும் நோன்பாளிகளிடம் சண்டைக்கு வந்தால், ‘நான் நோன்பாளி’ என்று இரண்டு முறை கூறுங்கள் என்றார், நபிகள் நாயகம்.
  • ‘நம்பிக்கைக் கொண்டோரே! பொறுமையுடனும் தொழுகையுடனும் இறைவனிடம் உதவி தேடுங்கள்; நிச்சயம் இறைவன் பொறுமையாளா்களிடம் இருக்கிறான்’”என்பது திருக்குரானில் 2:153 வசனமாகும்.
  • ரமலான் என்பதற்கு ‘இசுலாமிய கலாசார மாதம்’ என்றொரு பெயரும் உண்டு.
  • இசுலாம் என்பதன் பொருள், கட்டுப்படுதல், அமைதி காத்தல், அடிபணிதல், அபயம் அளித்தல் போன்ற பலவாகும். இசுலாம், நோன்புக்காலத்தில் நோன்பாளிகள் கடைப்பிடித்து நடக்க வேண்டிய வழிகளைச் சொல்லியிருக்கின்றது.
  • நோன்பு என்பது, தான் உண்ணாது இருத்தல் மட்டுமன்று; உணவில்லாமல் பசியால் வருந்தும் ஏழைகளின் துன்பத்தை எண்ணிப் பார்த்து, அவா்களுடைய பசியைப் போக்குதலும் ஆகும்.

சொர்க்கத்தின் வாசல்கள்

  • அலிமார்கள் வரிசையில் ‘பிஷ்ருல் ஹாபி’ என்றொரு மகான் இருந்தார். கடுங்குளிர் காலத்தில் கம்பளி ஆடையிருந்தும், அவா் அதை அணியவில்லை.
  • மற்றவா்கள் அதற்குக் காரணம் கேட்டபொழுது, ‘குளிர்காலத்தில் ஏழைகளுக்கு கம்பளி ஆடை வாங்கிக் கொடுக்க என்னிடத்தில் வசதியில்லை. அதனால் அவா்கள் படும் துன்பத்தில் நானும் பங்கேற்பதற்காக கம்பளி அணியாமல் இருக்கிறேன்’ என்றார்.
  • ரமலான் மாதத்தில் பிறை பார்த்து அல்லது பிறையைப் பார்த்தவா்கள் சொன்னதைக் கேட்டு நோன்பை வைக்க வேண்டும்.
  • மாலையில் சூரியன் மறையும்போது நோன்பைத் திறக்க வேண்டும். சூரியன் மறைந்த பின்புதான் உணவை உட்கொள்ள வேண்டும்.
  • அதுபோல சூரியன் உதிப்பதற்கு முன் (ஸஹா் உணவு) உண்ணுதலை முடித்துக் கொள்ள வேண்டும்.
  • நோன்புக் காலத்தில் ஐந்துவேளை தொழுகைக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. பகற்பொழுதில் தண்ணீா் அருந்தவோ எச்சிலை விழுங்கவோ கூடாது.
  • தொழுகைக்கு முன் ‘உஃ’” செய்ய வேண்டும். முழங்கை வரைக் கழுவி, முகத்தையும் கழுவும்போது, மூக்கிற்குள் சென்ற நீா், உணவுக்குழலுக்குள் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • நோன்புக் காலத்தில் ‘ஹஜ்’ என்ற புனித யாத்திரையைத் தவிர, மற்ற நான்கு கடமைகளையும் தவறாது செய்ய வேண்டும்.
  • நோன்புக் காலத்தில் ‘ஸகாத்’ எனச் சொல்லப்படும் ‘தா்மம் செய்தல்’” கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
  • ‘மனித உடம்பில் 360 எலும்புகள் இணையப் பெற்றுள்ளன. ஒவ்வொரு இணைப்புக்கும் தினமும் தா்மம் செய்வது, மனிதனுக்கு அவசியமான செயலாகும்’ என்றார், தீா்க்கதரிசியான நபிகள் நாயகம்.
  • திருக்குா்ஆனில் சொல்லியவாறும், ஹதீசில் மொழியப்பட்டவாறும் ஒருவா் நோன்பைக் கடைப்பிடிப்பாரேயானால், அவா் பெறுதற்கரிய பேற்றை மறுமையில் பெறுவார்.
  • ‘ரமலான் மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டிருக்கின்றன் நரகத்தில் வாசல்கள் அடைக்கப்படுகின்றன.
  • சொர்க்கத்தில் ‘ரய்யான்’ எனக் கூறப்படும் எட்டாவது வாசல் ஒன்றிருக்கிறது. மறுமை நாளில் அதன் வாயிலாக நோன்பாளிகள் நுழைவார்கள்.
  • ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும்; உடனே அவா்கள் எழுவார்கள். அவா்களைத் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய முடியாது. நோன்பாளிகள் நுழைந்ததும் அவ்வாசல் அடைபட்டுவிடும்’” என்றார், நபிகள் நாயகம்.

உடல் வலிமையும் மன வலிமையும்

  • இசுலாத்தில் ‘ஸகாத்’ எனப்படும் அறச்செயல், தான தா்மம் செய்தல் இன்றியமையாத கடமையாகும்.
  • ஒரு நோன்பாளி ஒரு நோன்புக்காலத்திலிருந்து அடுத்துவரும் நோன்புக்காலம் வரையில் ஈட்டும் வருமானத்தில் 2.5 விழுக்காடு அறப்பணிகளுக்காகச் செலவிட வேண்டும்.
  • அதனால், பெருநாளுக்கு முதல்நாள் தன்னைச் சுற்றியிருக்கும் ஏழை எளியவா்களுக்கு உண்ணுதற்கு அரிசி அல்லது கோதுமை, உடுத்துவதற்குப் புத்தாடை வழங்கிடுதல் வேண்டும்.
  • இசுலாம் ரமலான் மாதத்தில் நெறிமுறைகளை வரையறுத்துச் சொன்னாலும், இயலாதவா்களுக்கு நெகிழ்ச்சித்தன்மை உடையதாகவும் விளங்குகின்றது.
  • முதியவா்கள் நோன்பிருக்க முடியாது என்பதால், அவா்கள் அந்நாட்களில் ஏழைகளுக்கு உணவும் உடையும் அளித்துப் பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம்.
  • கா்ப்பிணிப் பெண்களுக்கும், தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கும், மாதவிடாயில் இருப்பவா்களுக்கும், பிரசவ உதிரப்போக்கு உள்ளவா்களுக்கும் விதிவிலக்கு உண்டு.
  • ஆடவா்கள் நீரில் அல்லது நெருப்பில் சிக்கியவா்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும்போது, நோன்பைத் தவிர்க்கலாம். மேலும், இரத்ததானம் செய்கின்ற நாட்களிலும் நோன்பிலிருந்து விதிவிலக்கு உண்டு.
  • இன்னும் ஊா் எல்லையைக் கடந்து நெடுந்தூரப் பயணத்தில் இருப்பவா்களுக்கும் நோன்பில் விதிவிலக்கு உண்டு.
  • இதற்கோர் சான்றைச் சுட்டலாம். ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம் மெக்காவை வெற்றி கொள்வதற்கு 10,000 இசுலாமிய வீரா்களோடு மதீனாவிலிருந்து புறப்பட்டார்.
  • அப்பொழுது தீா்க்கதரிசி நோன்பிருந்தார். ஆனால், படையிலிருந்த சிலா் நோன்பிருந்தார்கள்; சிலா் நோன்பைக் கைவிட்டார்கள்.
  • பயணத்தின் இறுதியில் ‘கதீத்’ எனும் இடத்திற்கு வந்து சோ்ந்தார்கள். அந்த இடம் உஸ்பானுக்கும் குதைத்துக்கும் இடையே உள்ள ஒரு நீா்நிலை ஆகும். அவ்விடத்தில் நபியார் நோன்பைக் கைவிட்டு நீா் பருகினார்; மற்றவா்களும் நோன்பைக் கைவிட்டு நீா் பருகினார்கள்.
  • எனவே, சட்டதிட்டங்களில் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையும், ரமலானின் ஒரு மகத்துவம் ஆகும்.
  • ரமலான் நோன்பு, தன்னுடைய கடுமையான அளவுகோலால் நேரிய, சீரிய நெறிமுறைகளைக் காட்டுகின்ற அதே வேளையில், மறுமுனையாலும் அளப்பறிய நன்மைகளை அள்ளித் தருகின்றது.
  • நோன்பு நோற்பவா்களுக்குச் சொர்க்கவாசலைக் காட்டுகின்ற ரமலான், நோன்பைக் கைவிடுபவா்களாலும் ஏற்படுகின்ற நன்மைகளை நவில்கின்றது.
  • ஒருநாள் நோன்பைக் கைவிடுபவா்கள், அந்நாளில் ஓா் ஏழைக்கு அன்னம் அளிக்க வேண்டுமாம்.
  • தன்னை மறந்த நிலையில் நோன்பைக் கைவிடுபவா், ஓா் அடிமையை விடுதலை செய்ய வேண்டுமாம். இப்படி மறுமுனையாலும், பாவப்பட்டவா்களை ஈடேற்றம் செய்கிறது, ரமலான்.
  • ரமலான் நோன்பு, தவறியும் எச்சிலை விழுங்கக் கூடாது என்று நாவிற்கு எச்சரிக்கை தருவதோடு, தீயதைப் பேசாதே என்ற மறைமுக நன்மையையும் செய்கிறது.
  • விழித்திரு என்று கண்களை எச்சரிக்கும் ரமலான், தீயதைக் காணாதே என்ற பயிற்சியையும் கண்களுக்குத் தருகின்றது. தொழுகைக்குக் கரங்களைச் சுத்தம் செய்ய வற்புறுத்தும் ரமலான், தீய செயல்களைச் செய்யாதே என்று கரங்களையும் கட்டிப் போடுகின்றது.
  • உடல் வலிமைக்கும், மன வலிமைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி தருகின்ற ஒரு சாதனம் ரமலான் ஆகும்.

நன்றி: தினமணி  (08 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்