TNPSC Thervupettagam

ரவி – ஸ்டாலின்: இருவரைத் தாண்டி சிந்திப்போம்

May 26 , 2023 549 days 358 0
  • தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றில் முக்கியமான பத்து நிகழ்வுகளில் ஒன்றாக அது இருக்கும். முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய தந்தை கருணாநிதியைப் போலவே சில நிகழ்வுகளைத் திட்டமிட்டு உருவாக்குகிறார். மாநில அரசின் பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கிவிட்டு முதல்வர் பொறுப்பில் அந்தப் பதவியைக் கொண்டுவரும் வகையில் 2022இல் அவர் நிறைவேற்றிய தீர்மானம் அப்படியானது. சட்டமன்றம் நிறைவேற்றிய அந்தத் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் இன்னமும் அது நிறைவேறவில்லை. அரிதான சில தருணங்களில் வரலாறே வாசல் தேடி வந்து வாய்ப்பை வழங்கும். 2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பானது அப்படியானது. 
  • வழக்கமாக சட்டமன்றக் கூட்டத்தின் ஆரம்பத்தில் ஆளுநர் உரையாற்றுவது ஒரு மரபு. ஆளுநரால் வாசிக்கப்பட்டாலும் அந்த உரை என்னவோ மாநிலத்தை ஆளும் அரசின் குரலையே பிரதிபலிக்கும். இப்படி, “மாநில அரசால் தயாரிக்கப்படும் உரையைத்தான் ஆளுநர் வாசிக்க வேண்டும்; அவர் தன்னிச்சையாக ஓர் உரையை வாசிக்கக் கூடாது” என்றெல்லாம் அரசமைப்புச் சட்டத்தில் வரையறை எதும் இல்லாவிட்டாலும் அதுதான் மரபு. 
  • எந்த ஒரு நாட்டிலும் ஆட்சி நிர்வாகமானது சட்ட விதிகளால் மட்டுமல்லாது மரபார்ந்த நடைமுறைகளும் சேர்த்தே மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டின் ஆளுநரான ஆர்.என்.ரவி அப்பட்டமாக இந்த மரபை உடைத்தார்.
  • தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, முன்கூட்டி தன்னால் ஒப்புதலும் அளிக்கப்பட்ட உரையிலிருந்து சில பகுதிகளை வேண்டும் என்றே நீக்கியும் சேர்த்தும் வாசித்தார் ஆளுநர் ரவி. இந்த நீக்கம் – சேர்க்கைக்குப் பின் ஆளுநரின் மோதலுணர்வு அப்பட்டமாக வெளிப்பட்டது.
  • முன்னதாக இந்தச் சட்டமன்றக் கூட்டமே பரப்பரப்பான சூழ்நிலையிலேயே கூடியது. “தமிழ்நாடு என்பதற்கு மாறாக தமிழகம் என்று மாநிலத்தின் பெயரைப் பாவிக்க வேண்டும். தமிழ்நாடு என்ற சொல்லாடல் பிரிவினையைத் தூண்டுகிறது” என்று அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ரவி பேசியிருந்தார்.
  • தமிழ் மக்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்த சொல் தமிழ்நாடு. தமிழகம் என்பதும் தரக் குறைவானது இல்லை; தமிழுக்கு என்று ஓர் ஆன்மா; தனி அகம் இருக்கிறது; இந்த நிலத்தின் அகம் தனித்துவமானது என்று பொருள்படும் சொல்.
  • ஆளுநர் ரவி இரண்டு பெயர்களையும் எதிரெதிரே நிறுத்தியபோது தமிழகம் தன்னியல்பாக ‘என் முதன்மைப் பெயர் தமிழ்நாடு’ என்று முழங்கியது. சமூக வலைதளங்கள் அந்த நாளில் ஆளுநருக்கு எதிராகக் கோபத்தீயை உமிழ்ந்தன.
  • இந்திய ஒன்றியத்தில் தமிழ் நிலமானது, ‘தமிழ்நாடு’ எனும் பெயரைச் சூட்டிக்கொள்ளவே நெடிய போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது. தமிழ் அமைப்புகள், திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் தவிர தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியினர் என்று பல தரப்பினரும் இணைந்து முன்னெடுத்த இயக்கம் அது. 1956 மொழிவழி மாநிலங்கள் பிரிவினைக்குப் பிறகு, ‘தமிழ் மக்கள் வாழும் நிலத்துக்குத் தமிழ்நாடு எனும் பெயர் வேண்டும்’ என்ற குரல் ஓங்கி ஒலிக்கலானது. 1957 ஜூலை 27இல் தன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த காந்தியரும் மொழிப் போராளியுமான சங்கரலிங்கனார் 77 நாள் போராட்டத்தின் முடிவில் உயிர் நீத்தபோது தமிழ் மக்கள் கொந்தளித்தனர். இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகும் அரசியல் களத்தில் நீடித்த தொடர் போராட்டங்களின் விளைவாக 1969இல் ‘தமிழ்நாடு’ எனும் பெயர் அமைந்தது.    
  • ஆளும் திமுகவிற்கு இது கூடுதல் உரிமை சார்ந்தது. திராவிடக் கட்சிகளின் பிதாமகனான அண்ணாவின் மகத்தான சாதனை ‘தமிழ்நாடு’ எனும் பெயரைத் தாய்மண்ணுக்கு அவர் சூட்டியது ஆகும்.
  • எதைத் தொட்டால் நிலம் தகிக்கும் என்ற திட்டமிடலுடனேயே ஆளுநர் ரவி இப்படி ஒரு விவகாரத்தை உருவாக்கினார் என்று சொல்ல வேண்டும். திமுக என்னவோ பெரிய எதிர்வினை ஆற்றாமல் இந்த விவகாரத்தைக் கடக்க முற்பட்டது. நேரெதிராக சட்டமன்ற விவகாரத்தில் அதிரடியான எதிர்வினையை மிக வேகமாக திமுக அரங்கேற்றியது.
  • ஆளுநர் ரவி தன் உரையில் விளையாட்டு காட்டுகிறார் என்பதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின், அந்த இடத்திலேயே ஆளுநருக்குப் பதிலடி கொடுக்க முடிவெடுத்தார். ‘முன்னதாக தயாரிக்கப்பட்ட அதிகராபூர்வ உரையே சட்டமன்ற ஆவணப் பதிவில் இடம்பெறும்; ஆளுநரின் தன்னிச்சையான சேர்க்கைகள் – நீக்கங்கள் செல்லாது’ என்ற அறிவிப்பின் வழி ஆளுநர் ரவியை ஸ்டாலின் ஸ்தம்பிக்க வைத்தார். இதைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிய ஆளுநர் ரவி சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார். ஆளுநரின் வெளிநடப்பு இந்தியா முழுவதும் பேசப்படும் செய்தியானது.
  • சர்ச்சைக்குரிய வகையில் செயல்படுவதை ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்தே ரவி திட்டமிட்டு அரங்கேற்றுகிறார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் அரசின் பரிந்துரையை நிராகரித்ததில் ஆரம்பித்தது அவருடைய மோதல். பங்கேற்கும் கூட்டங்களில் சர்ச்சையாக எதையேனும் பேசுவதன் வழியாகவும், சட்டமன்றம் நிறைவேற்றும் சட்ட முன்மொழிவுகளை அவ்வப்போது கையெழுத்திடாமல் நிறுத்திவைப்பதன் வழியாகவும் சர்ச்சைகள் தீர்ந்திடாமல் அவர் பார்த்துக்கொள்கிறார்.
  • ஆளுநர் ரவி தனித்த ஒருவர் இல்லை என்பதே இங்கே கவனம் அளிக்கப்பட வேண்டிய முக்கியமான விவகாரம். பாஜக ஆட்சியில் இல்லாத பெரும்பான்மை மாநிலங்களில் முதல்வர்கள் இன்று ஆளுநர்கள் வழி இத்தகைய சங்கடத்தை எதிர்கொள்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஆளுநர்களின் அதிகார எல்லையைச் சுட்ட வேண்டியிருந்தது. வங்கம், மகாராஷ்டிரம், கேரளம் மூன்றும் ‘பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசின் கீழ் முழுமையாகக் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று தீர்மானம் கொண்டுவர ஆளுநருடனான மோதலே காரணமாக இருந்தது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் “மாநிலங்களின் அதிகாரத்தை மையப்படுத்தியதாக இந்திய அரசமைப்பு திருத்தியமைக்கப்பட வேண்டும்” என்று வெளிப்படையாகப் பேச ஆளுநருடனான மோதலும் ஒரு காரணமாக இருந்தது. கேரள ஆளுநராக இருக்கும் ஆரிஃப் முஹம்மது கான் பொதுவெளியில் அந்த மாநில அரசை மிரட்டும் தொனியில் பேசுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார். இவர்கள் எல்லோருமே டெல்லியிலிருந்து இதற்கான உயிர்சக்தியைப் பெறுகின்றனர்; முந்தைய காலத்தில் காங்கிரஸும் இதே அசிங்க ஆட்டத்தை ஆடியது என்பது இங்கே முக்கியமானது ஆகும்.
  • ஆக, தமிழ்நாடு - ரவி எனும் எல்லைகளைக் கடந்து ‘ஆளுநர்’ எனும் பதவிக்கான தேவை என்ன என்பதை இந்தியா ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டம் இன்று உருவாகியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை, அரசமைப்புரீதியிலான பதவியின் வழி ஒரு தனிநபர் சீண்ட அனுமதிக்கும் இப்படியான ஒரு பதவிக்குத் தேவை என்ன என்ற கேள்வி ஜனநாயகத்தில் முக்கியமானது. இந்தியா முழுவதும் உள்ள ராஜ் பவன்கள் இதுநாள்வரை செலவிட்டிருக்கும் தொகை, ராஜ் பவன்கள் வழி நடந்திருக்கும் அத்துமீறல்கள் இவற்றோடு ஒப்பிட்டால் ஆளுநர்கள் பதவி வழி மக்களுக்கு நடந்திருக்கும் நன்மைகள்தான் என்ன?
  • மாநிலத்தில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் பணியைத் தேர்தல் ஆணையத்திடமும், அமைச்சரவைப் பதவியேற்பை நடத்திவைக்கும் பொறுப்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளிடமும் ஒப்படைக்க முடியும். சட்டமன்றத்தில் அரசு சார்பில் ஆளுநர் வாசிக்கும் உரைகளை முதல்வர்களைக் கொண்டே வாசிக்க வைக்கலாம். சம்பிரதாய நிமித்தமான இந்த மூன்று காரணங்களை அன்றி ஆளுநர் பதவி நீடிப்பதற்கு ஒரு தேவையும் இல்லை. ஆளுநர் பதவி ஏன் தேவையற்றது என்பதைத் தீவிரமாக விவாதிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்! 

நன்றி: அருஞ்சொல் (26 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்