TNPSC Thervupettagam

ரஷியாவில் வாக்னர் குழுவின் ஆயுதக் கிளர்ச்சி

June 28 , 2023 562 days 320 0
  • ரஷிய அதிபர் புதின் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் 36 மணி நேரம் பேரதிர்ச்சியில் உறைந்தது. திடீரென்று ரஷியாவின் ராணுவத் தலைமைக்கு எதிராக, அந்த நாட்டின் துணை ராணுவப் படையான வாக்னர் குழு ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கியது மட்டுமல்ல, எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் வாக்னர் படையினரை மாஸ்கோ நோக்கி முன்னேற ரஷிய ராணுவம் அனுமதித்ததுதான் அதைவிட வியப்பாக இருக்கிறது.
  • தொலைக்காட்சியில் மக்களுக்கு அளித்த உரையில், வாக்னர் படையின் திடீர் தாக்குதலை 1917 ரஷியப் புரட்சியுடன் அதிபர் புதின் ஒப்பிட்டபோது, அவர் நிச்சயமாக பயந்திருக்கிறார் என்பது வெளிப்பட்டது. வாக்னர் படைகளுக்கு ஏன் எந்தவித எதிர்ப்பும் இருக்கவில்லை என்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உக்ரைனின் பாக்முத், சோலெதர் நகரங்களை வென்றெடுத்த வாக்னர் படைகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தடுக்க ரஷியப் படையினர் தயங்கினார்கள் என்று கூறப்படுகிறது.
  • அதுமட்டுமல்ல, வாக்னர் படையினர் உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய ராணுவத் தலைமை மீது எழுப்பி இருக்கும் சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் ரஷிய ராணுவத்தினருக்கும் இருப்பதும் கூடக் காரணமாக இருக்கலாம். வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷினின் குற்றச்சாட்டுக்களில் நியாயம் இருப்பதாக அவர்கள் கருதியிருக்கலாம். தனது எதிர்ப்பு ரஷியாவின் ராணுவ அமைச்சகத்துக்கு எதிரானதுதான் என்றும், ரஷியாவின் அரசியல் தலைமைக்கு (அதிபர் புதினுக்கு) எதிரானதல்ல என்றும் ப்ரிகோஷின் குறிப்பிட்டிருப்பது கவனத்துக்குரியது.
  • முதலில், வாக்னர் படைகள் என்பது என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதைத் துணை ராணுவம் என்று பொதுவாக அழைத்தாலும், அது உண்மையில், ரஷிய அதிபர் புதினால் உருவாக்கப் பட்ட கூலிப்படை என்பதுதான் நிஜம். சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு, மிக அதிக ஆண்டுகள் - கடந்த 23 ஆண்டுகளாக - ரஷியாவை இரும்புக் கரம் கொண்டு ஆள்பவர், முன்னாள் உளவுத்துறை ஏஜெண்டாக இருந்த அதிபர் புதின். ரஷிய ராணுவம் தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதைத் தடுக்க, அதற்கு நிகராக ஒரு தனியார் ராணுவ அமைப்பை - கூலிப்படையை - உருவாக்க முற்பட்டார் அவர்.
  • கூலிப்படை என்பது சட்ட விரோதம் என்பதால், தனியார் ராணுவ நிறுவனமாக 2014-இல் வாக்னர் படை பதிவு செய்யப்பட்டது. வெறும் 250 பேர்களுடன் தொடங்கப்பட்ட வாக்னர் படையின் இன்றைய பலம் அரை லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள். அவர்களில் பெரும்பாலானோர் சிறைக் கைதிகளாக இருந்தவர்களும், கிரிமினல்களும். நேரடியாக ரஷியா தலையிட முடியாத பிரச்னைகளில், அதிபர் புதினின் கண்ணசைவுக்கு ஏற்ப வாக்னர் படைகள் அந்தப் பணியைச் செய்து முடிக்கும். ரஷியா மீது போர்க்குற்றம் சுமத்த முடியாது.
  • 2014-இல் உக்ரைனிலிருந்து கிரீமியாவை ஆக்கிரமித்துப் பிடித்ததிலும், பாக்முத்தில் நடந்த மோதலிலும் ரஷிய ராணுவத்துக்குப் பக்கபலமாக வாக்னர் படைகள் செயல்பட்டன. சிரியாவிலும், லிபியாவிலும், சமீபத்தில் சூடானிலும் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளிலும் ரஷியாவின் மறைமுக ஆதரவுடன் வாக்னர் தனியார் படை களமிறங்கியது. அங்கே எல்லாம் கொலை, பாலியல் வன்கொடுமை, மனித உரிமை மீறல் குற்றங்கள் அதன் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. தனியார் படை என்பதால் சர்வதேச அமைப்புகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
  • வாக்னர் படைகள் கைப்பற்றிய, ரஷிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் எல்லாம் மக்கள் "வாக்னர், வாக்னர்' என்று அவர்களை ஆரவார கோஷமிட்டு வரவேற்றனர். அவர்களுடன் கைகுலுக்கவும், "தற்படம்' எடுத்துக் கொள்ளவும் மக்கள் ஆர்வம் காட்டினர். ராணுவத்தினரேகூட அவர்களை வேடிக்கை பார்த்தனர். ரஷிய மக்களும், ரஷிய ராணுவமும் அதிபர் புதினின் நீண்டுகொண்டே போகும் உக்ரைன் படையெடுப்பால் சலிப்படைந்திருப்பதன் வெளிப்பாடுதான் இவை.
  • பாக்முத் போரின்போதே, ப்ரிகோஷின் ரஷிய ராணுவத் தலைமை மீது குற்றம்சாட்டத் தொடங்கி விட்டார். வாக்னர் படைகளுக்குப் போதிய ஆயுதங்களைத் தராமல் தடுப்பதாகவும், அவர்கள் மீது ரஷிய ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தி பலரைக் கொன்றதாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோய்குவும், ராணுவத் தளபதி வேலரி தெரசிமோவும் அகற்றப்பட வேண்டும் என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
  • 36 மணிநேரம் ரஷியாவை பதற்றத்தில் வைத்திருந்த யெவ்கெனி ப்ரிகோஷினும் அவரது வாக்னர் படைகளும், அதிபர் புதினின் கைப்பாவையான பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகஷென்கோவின் தலையீட்டால், தங்களது புரட்சியைக் கைவிட்டது, அதுவும் ரஷியத் தலைநகர் மாஸ்கோவை நெருங்க வெறும் 200 கி.மீ. தூரம் மட்டுமே இருக்கும் நிலையில்...
  • தனது ராணுவத் தலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க அதிபர் புதின் நடத்திய நாடகமா, இல்லை அதிபர் புதினின் மீது ரஷியாவில் ஏற்பட்டிருக்கும் பரவலான அதிருப்தியின் வெளிப்பாடா என்பதை இப்போதே சொல்ல முடியவில்லை. ஒரு துளி ரத்தம் சிந்தாமல், துப்பாக்கி ரவைகள் வீணாகாமல் "ராணுவப் புரட்சி' நாடகம் அரங்கேறி, அடங்கி இருக்கிறது. முழு உண்மையும் வெளிவரும்வரை, இப்போதைக்கு இடைவேளை!

நன்றி: தினமணி (28  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்