TNPSC Thervupettagam

ராகிங் : மீறப்படும் மனித மாண்புகள்

February 5 , 2024 341 days 223 0
  • ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கல்லூரிகளில், மேற்கத்தியத் தாக்கத்தின் விளைவாகவே ராகிங் முறை உருவானது. கல்லூரிக்குச் சென்று கல்வி கற்றவர்கள் பெரும்பாலும் உயர் வர்க்கத்தினராகவும் பொருளாதாரரீதியாகப் பலம் பெற்றவர்களாகவும் இருந்தார்கள். படிப்படியாகவே அனைத்து சாதியினரும் உயர் கல்வி பெற கல்லூரிகளுக்குள் நுழைந்தார்கள். இந்தச் சாதியப் பின்புலங்களில் வேற்றுமைகள் சிறிது நுழைந்தாலும்கூட, அப்போது அது பெரிதுபடுத்தப்படவில்லை.
  • கிறிஸ்துவ மிஷினரிகள் நடத்திய கல்விக்கூடங்களில் மிகக் கடுமையான ஒழுக்க நியதிகள் மாணவர்களை ஒரே நேரலையில் சீராகப் பயணிக்கவைத்தன. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அங்கு அதிகம் பயின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. சாதிரீதியான வேற்றுமைகள் இருந்தாலும், கல்லூரி வளாகங்களுக்குள் அதை வெளிப்படுத்த முடியாத சூழலும் இருந்தது.
  • சீனியர்’, ‘ஜூனியர்என்கிற சொல்லாடல்களும் கல்லூரிக்குள் இந்த இருதரப்பினர் இடையே ஏற்படும் சிறுசிறு சீண்டல்களும் (ராகிங்) சச்சரவுகளும் தவிர்க்க முடியாதவை. ஆனால், அவை எல்லாம் குறிப்பிட்ட சில கால இடைவெளிக்குள் முடிந்து, பரஸ்பர அறிமுகமும் நட்புணர்வும் உண்டான பின், காற்றில் கரைந்த கற்பூரமாய் மாறிவிடும். நட்புணர்வு மேலோங்கும். சீனியர்-ஜூனியர் பேதங்கள், உயர்வு-தாழ்வு நிலை அனைத்தும் மாறி ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைத்துக்கொள்ளும் நிலை ஏற்படும்.
  • இதுதான் இயல்பும் நடைமுறையும். இந்தச் சீண்டல் தொடர்பான கசப்புணர்வும் வெறுப்புணர்வும் பெரிதாக இவர்கள் நட்பைப் பாதிப்பதில்லை. கல்லூரிப் படிப்பையும் வாழ்க்கையையும் அனுபவித்த, கொண்டாடிய அவ்வளவு தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை இது. சாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து கொண்டாடிய உன்னதத் தருணம் அது.

ராகிங்கின் தொடக்கப் புள்ளிகள்

  • மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும்தான் ராகிங் அதிகம் நிலவியது; பின்னர் கலைக் கல்லூரிகளுக்கும் இடம்பெயர்ந்தது. கல்லூரி என்றாலே ராகிங் கண்டிப்பாக இருந்தாக வேண்டும்என்பதுபோலவே மாணவர்களும் நடந்துகொண்டார்கள்.
  • சீனியர்கள் ஜூனியர்களைச் சீண்டுவதும் தொடர ஆரம்பித்தது. அதனால் மாணவர்கள் உளரீதியான பாதிப்புகளை எதிர்கொண்டாலும், அதே ஜூனியர் மாணவர்கள் சீனியராகும்போது அதே நடைமுறையைத் தாங்களும் தொடரவே செய்தார்கள். இது ஏறக்குறைய மாமியார்மருமகள் உறவு முறையின் நடைமுறையை ஒத்தது.
  • புதிதாகக் கல்லூரிக்குள் நுழையும் மாணவர்களின் மிரட்சியைப் போக்கவும் மாணவர்களிடையே ஓர் அறிமுகத்தையும் இணக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளவும் ராகிங் உதவியது என்று பல முன்னாள் மாணவர்கள் கூறினாலும், இப்போதைய சூழலில் இது எந்த அளவுக்கு ஏற்புடையது என்பது கேள்விக்குறியே!

வதம் செய்வதில் முடிந்த ராகிங்

  • 1996இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் நாவரசு (சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரின் மகன்), ஜான் டேவிட் என்கிற சீனியர் மாணவரால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கொடூரத்துக்குப் பின் அனைத்தும் மாறியது. அதுவரை ராகிங் என்பது சீண்டலாக, கேலியாக இருந்த நிலை வதையாகவும் வதமாகவும் மாறியது, ஒட்டுமொத்தச் சமூகத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராகிங் நடைமுறைகளும் கேள்விக்குள்ளாகின.
  • 1997இல் இந்தியாவின் முதல் ராகிங் தடுப்புச் சட்டம் தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கேரளம், கோவா போன்ற பல மாநிலங்களிலும் ராகிங் தடைச் சட்டம் அமலில் உள்ளது. கல்லூரி வளாகங்களுக்குள் ராகிங் தடுப்பு நடவடிக்கைக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • 2016இல் யூஜிசி ஒழுங்குமுறைகளில், ‘நிறம், இனம், மதம், சாதி, பாலினம் (மூன்றாம் பாலினத்தவர் உள்பட) பாலின நோக்கு நிலை, தோற்றம், தேசியம் போன்றவற்றின் அடிப்படையில் மற்றொரு மாணவரை () மாணவியை இலக்காகக் கொண்டு உடல் அல்லது மனரீதியாக அத்துமீறக் கூடாது.
  • பிறந்த இடம், வசிப்பிடம், பொருளாதாரப் பின்னணி, மொழியியல் அடையாளம், பகுதிவாரியான தோற்றம் இவை எது குறித்தும் இழிவுபடுத்தக் கூடாதுஎன்பன உள்ளிட்டவை - மூன்றாவது திருத்தத்தின் மூலம் - அறிவிக்கப்பட்டன. கல்லூரிகளுக்குள் ராகிங் தடை குறித்த சட்டங்களும் நடைமுறைகளும் அமலுக்கு வந்த பின், ராகிங் நடைமுறைகள் வெகுவாகக் குறைந்தன. ஆனால், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உயர் கல்வி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் அதிகரித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

மனித உரிமைக்கு எதிரான செயல்கள்

  • தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள்சிலவற்றில் ராகிங் மீண்டும் நடைபெற ஆரம்பித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. குழுவாகச் சேர்ந்து சக மாணவனுக்கு மொட்டை அடிப்பது, காலணியை நக்கும்படிவலியுறுத்துவது, குளிர்பானத்தில் சிறுநீரைக் கலந்து கொடுப்பது, சக மாணவியை முத்தமிட நிர்ப்பந்திப்பது, அரை நிர்வாணமாக்கி உலவவிடுவது, முழு நிர்வாணமாக்கி அதைக் காணொளியாக்கி மிரட்டிப் பணம் பறிக்கநினைப்பது என இதன் எல்லைகள் மனித உரிமைகள், மாண்புகள் அனைத்தையும் கடந்து வரைமுறையற்று நீள்கின்றன.
  • இதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இந்தியா முழுமையுமே இவை நடைபெறுகின்றன என்னும்போது அயர்ச்சியே மேலெழுகிறது. பள்ளிகளிலேயே இத்தகைய மோதல் போக்குகள், வன்முறைச் சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்ட நிலையில், கல்லூரி மாணவர்களிடையே நிகழ்வது குறித்து யாரை நோவது? இவற்றின் பின்னணியில் சாதிய மனோபாவமும், சாதிரீதியிலான அடக்குமுறைகளும் இருப்பதை மறுப்பதற்கில்லையே! கல்லூரி வளாகங்களில் கண்டிப்புடன்தான் மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால், பலன் என்னவாக இருக்கிறது

  • மாணவர் விடுதிகளில் ராகிங் நடைமுறையும் சாதிப் பாகுபாடுகளும் காலம் காலமாகத் தொடரத்தான் செய்கின்றன. வெறும் சட்டங்களாலும்கட்டுப்பாடுகளாலும் ஒழுக்க நியதிகளாலும் மட்டுமே இளையசமுதாயத்திடம் மாற்றத்தை விதைத்துவிட முடியுமா? அவர்கள் மட்டும்தான் குற்றவாளிகளா? ஒட்டுமொத்தச் சமூகமுமே சாதி உற்பத்தி மையமாகவும் அதைப் பரப்புரை செய்யும் கிடங்காகவும் அல்லவா இருக்கிறது?

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்