TNPSC Thervupettagam

ராகுல் பஜாஜ் கதை

February 20 , 2022 897 days 400 0
  • இந்திய மோட்டார் துறையின் பெரும் தூண்களின் ஒருவரான  ராகுல் பஜாஜ் மறைவானது, ஒரு சகாப்தத்தின் முடிவு என்றே சொல்ல வேண்டும். தேச பக்தரும், அறக்கொடையாளரும், தொழிலதிபருமான ஜம்னாலால் பஜாஜுடைய பேரன் இவர். தாத்தாவைப் போலவே சமூகப் பற்று மிக்க தொழிலதிபராக விளங்கிய இவருடைய வாழ்க்கையும் பல வகைகளில் சுவாரஸ்யமானது. 

இளமைப் பருவம் 

  • அன்றைய கல்கத்தாவில் 1938 ஜூன் 30-ல் பிறந்தார் ராகுல் பஜாஜ். தில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியிலும், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்த இவர் அடிப்படையில் எம்பிஏ பட்டதாரி. 1965-ல் நிறுவனத்துக்குள் நுழைந்த அவர், தனது முப்பதாவது வயதில் பஜாஜ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு 1972-ல் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பு ராகுல் பஜாஜை வந்தடைந்தது. 
  • நாட்டின் வளர்ச்சிக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற சமூக உணர்வு ராகுல் பஜாஜுக்கு இயல்பாகவே இருந்தது. அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட காலத்திய தொழில் துறை, தாராளமயத்தால் விடுவிக்கப்பட்ட தொழில் துறை, இரண்டு காலகட்டங்களிலும் கோலோச்சிய தொழிலதிபர் என்று ராகுல் பஜாஜைச் சொல்லலாம். 

விரிவாக்கச் சாதனைகள்

  • ஒரு தொழில் குடும்பத்தில் பிறந்துவிடுவதாலேயே ஒருவருடைய சாதனைகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஏனென்றால், தொழில் துறையானது தொடர் சவால்களை எதிர்கொள்வது. ராகுல் பஜாஜ் அத்தகைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டவர். பஜாஜ் தொழில் குழுமத்தின் தயாரிப்புகளையும் வியாபாரங்களையும் பல மடங்கு விரிவுபடுத்தியவர்.
  • காப்பீடு, முதலீடு-நுகர்வோர் மூலதனம், உருக்கு – சிறப்பு உலோகக் கூட்டுப்பொருள்கள் தயாரிப்பு, வீட்டுத் தேவைகளுக்கான சாதனங்கள், விளக்குகள், மின்சாரச் சாதனங்கள் என்று பல தளங்களிலும் தன் நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். பின்னாளில்,  ‘பஜாஜ் பைனான்ஸ்’, ‘பஜாஜ் ஃபின்சர்வ்’, ‘பஜாஜ் ஆட்டோ’, ‘பஜாஜ் ஹோல்டிங்ஸ் அண்டு  இன்வெஸ்ட்மென்ட்’, ’மகாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ்’ என்றெல்லாம் இப்படி விரிந்த அந்தக் குழுமத்தின் நிறுவனங்கள் இன்று மொத்தம் 8.4 லட்சம் கோடி ரூபாய் சந்தையைக் கொண்டுள்ளன. ஆயினும்ஸ்கூட்டரே ராகுல் பஜாஜின் அடையாளமாக இருந்தது. 

ஸ்கூட்டர் மேன்

  • இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் ‘ஹமாரா பஜாஜ்’ (எங்களுடைய பஜாஜ்) என்று பெருமை பாராட்டிக்கொள்ளும் வகையில் ஸ்கூட்டர்களைத் தயாரித்து, தவணை முறையிலும் அதை வாங்க வழிசெய்து, ஸ்கூட்டர் விற்பனையைப் பெருக்கியதுடன், மோட்டார் வாகனப் பயன்பாட்டை நாட்டின் பட்டிதொட்டிகளுக்கு எல்லாம் கொண்டுசென்ற பெருமை ராகுல் பஜாஜுக்கு உண்டு. 
  • ஸ்கூட்டர் என்றால், ‘வெஸ்பா’  ‘லாம்பிரெட்டா’ என்று பன்னாட்டு ரக பிராண்டுகளுக்குப் பழகியிருந்த இந்தியர்களை, உள்நாட்டிலேயே தயாராகும் ஸ்கூட்டர் மூலம் கவர்ந்தவர் ராகுல் பஜாஜ். பின்னாளில், இந்தியாவில் மேலும் பல மோட்டார் வாகனங்கள் தயாரிக்கப்படவும் விற்கப்படவும் முன்னோடியாக அமைந்தது அதுவே என்பதில் மிகை இல்லை. ஸ்கூட்டர் வேண்டும் என்றால் முன்பணம் செலுத்திவிட்டு மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றியதில் ராகுல் பஜாஜுக்குப் பெரிய பங்கு உண்டு.

புணேயைத் தொழில் நகரமாக்கியவர்

  • கொல்கத்தாவில் பிறந்து, தில்லியில் படித்து, மும்பையில் தொழிலதிபராக வாழ்க்கையை நடத்திய ராகுல் பஜாஜ், மகாராஷ்டிரத்தின் புணே நகரையொட்டிய அகுர்தி என்ற இடத்தில் ஸ்கூட்டர், ஆட்டோ ரிக்ஷா தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்க உரிமம் பெற்றார். இத்தாலியின்  ‘பியாஜியோ’ நிறுவனத்துடன் இணைந்து  ‘வெஸ்பா’ ஸ்கூட்டரைத் தயாரிக்கத்தான் முதலில் உரிமம் கிடைத்தது.
  • அதையே தங்களுடைய நிறுவனப் பெயரில் தனி வாகனமாக வேறு வடிவில் தயாரித்து உலகப் புகழ்பெற்ற வாகனம் ஆக்கிவிட்டார். மிகவும் பின்தங்கிய பகுதியான அகுர்தி இப்போது மிகப் பெரிய மோட்டார் வாகனத் தயாரிப்பு நகரமாகிவிட்டது. டாடாவின் ‘டெல்கோ’ நிறுவனமும் அங்கே மிகப் பெரிய தொழிற்சாலையை அமைத்திருக்கிறது. 
  • அரசின் கட்டுப்பாடுகள் நிரம்பிய 1970-கள், 1980-கள்; தாராளமயமாக்களுக்குப் பிந்தைய 1990-கள், 2000-கள், 2010-கள் என்று அரை நூற்றாண்டு காலம் பஜாஜ் நிறுவனத்தை முன்னணியிலேயே வைத்திருந்த பெருமை ராகுல் பஜாஜுக்கு உண்டு. இதற்கு காரணம் அவருடைய உலகலாவியப் பார்வையும் தொலைநோக்கும்!
  • உலகமயமாக்கல் காலகட்டத்துக்கு நெடுங்காலம் முன்னரே சர்வதேச போக்கை உற்று கவனித்துவந்தவர் அவர். ஆண்டுதோறும் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டுக்குத் தவறாமல் சென்று வருவார். அங்கே சக தொழிலதிபர்களிடம் மனம்விட்டுப் பேசுவார். பஜாஜ் ஸ்கூட்டர்களும் ஆட்டோக்களும் லட்சக்கணக்கில் விற்பனையாகின. இந்தியாவில் மட்டுமல்லாமல், பக்கத்தில் உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள், வங்கதேசம் ஆகியவற்றிலும் பஜாஜ் ஓட்டம் நீண்டது.
  • சுதேசி உணர்வை உற்பத்தியில் வெளிப்படுத்தியது மாதிரியே சந்தைப்படுத்துதலிலும் வெளிப்படுத்தியவர் ராகுல் பஜாஜ்.  ‘புலந்த் பாரத் கீ – புலந்த் தஸ்வீர் ஹமாரா பஜாஜ்’ என்ற விளம்பர வாசகம் 1989-ல் அறிமுகமானது. ‘லிண்டாஸ்’ விளம்பர நிறுவனம் அதை உருவாக்கியது. அந்த வாசகம் ‘நம்முடைய பஜாஜ், வலிமையான நம்முடைய பாரத பஜாஜ்’ என்ற சுதேசி பெருமிதத்தை வியாபாரமாக மாற்றியது.

வெளிப்படைப் பேச்சாளர்

  • தனிப்பட்ட முறையில் ராகுல் பஜாஜ் எளிமையானவர், வெளிப்படையாகப் பேசும் நேர்மையாளர். நிறுவனத்தின் அதிகாரி சொல்வதையும் கவனமாகக் கேட்பார்; தொழிலாளியின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பார். ஒவ்வொரு பிரிவிலும் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவர்களுடன் பழகினார். நிறுவனத்தின் எந்த வேலையையும் நேர்மையாகச் செய்ய வேண்டும் என்றே விரும்புவார்.
  • பல சமயங்களில் தனது மனதுக்கு சரியென்று பட்டதை ராகுல் பஜாஜ் சொல்லத் தயங்குவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் படித்து முடிக்கப்பட்டதும் தொழிலதிபர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் கூட்டத்தில், உங்களுடைய கருத்து என்ன என்று கேட்பார்கள். ராகுல் பஜாஜ்தான் முதலில் பேசுவார். அவர் பேசிய பிறகு உற்சாகம் அடைந்து மற்றவர்களும் அச்சம் நீங்கி தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பார்கள். அமைச்சர்கள், அதிகாரிகளால் தொழிலதிபர்கள் சந்திக்கும் இன்னல்களையும் சோதனைகளையும் அவர் விவரிப்பார். அரசை மட்டும்தான் குறை சொல்வார் என்றில்லை, இனி ஸ்கூட்டர்களைத் தயாரிப்பதில்லை என்று தன்னுடைய மகன் முடிவுசெய்தபோது அதையும் வெளிப்படையாக விமர்சித்தவர்தான் ராகுல் பஜாஜ்.
  • அவுரங்காபாதில் உள்ள பஜாஜ் ஆலையை ஒருசமயம் ஒன்பது மாதங்களுக்கு மூட நேர்ந்தது. அப்போது அந்த ஆலையிலிருந்து வருமானம் ஏதும் இல்லை. இடைநிலை நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய ராகுல் பஜாஜ், “அந்த ஆலைக்குப் பொருள்களைத் தரும் சப்ளையர்களுக்கு நிலுவை இருக்கிறதா?” என்று கேட்டார். “ஆமாம் நமக்கு வருமானம் வராததால் நிலுவை வைத்திருக்கிறோம்” என்றனர்.
  • “முதலில் அவர்களுக்குச் சேர வேண்டியதைக் கையிருப்பிலிருந்து கொடுங்கள், ஆலை திறக்கும்வரை அவர்களைக் காக்க வைக்க வேண்டாம், அவர்களுடைய தொழில் நலிவடையாமல் பார்த்துக்கொள்வதும் நம்முடைய கடமை” என்று அறிவுறுத்தினார். ஆலையின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மட்டுமல்ல; ஆலைக்குள் நடக்கும் விவகாரங்களிலும் அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பார்; தொழிற்சங்கங்களின் கருத்துகளை அலட்சியம் செய்யக்கூடாது என்று கூறுவார்.
  • இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) போன்ற தொழிலதிபர்களின் சங்கங்களின் வளர்ச்சியிலும் ராகுல் பஜாஜுக்குப் பங்கு உண்டு.  அரசும் அதிகாரிகளும் அவற்றின் கருத்தைக் கேட்கும் வகையில் மதிப்புமிக்க அமைப்புகளாக்கினார். 
  • 1970-71-ல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியில் இருந்தது. ‘பர்மிட்-லைசென்ஸ்-கோட்டா’ ராஜ்யமாக அது திகழ்ந்தது. ஸ்கூட்டர் தயாரிப்புக்கு விதிக்கப்பட்ட அளவுக் கட்டுப்பாடுகளை எதிர்த்து பஜாஜ் கடுமையாக வாதாடினார். அதிக எண்ணிக்கையில் ஸ்கூட்டர் தயாரிக்கத் தங்கள் நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இருபதாண்டுகளுக்கும் பிறகும் ராகுல் பஜாஜ் தன்னுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
  • 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தத்துக்குப் பிறகு, தாராளமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதாக அரசு  அறிவித்தாலும், பல சந்தர்ப்பங்களில் அதிகார வர்க்கம் முட்டுக்கட்டைகளைப் போடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தது. சீர்திருத்தம் என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கதவுகளைத் திறந்துவிடும் அதே வேளையில், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்கள் அவர்களுடன் போட்டி போடுவதற்கு சம வாய்ப்புள்ள களத்தை ஏற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார் ராகுல் பஜாஜ். உலக அளவில் தயாரிப்பில் ஈடுபடும் பகாசுர நிறுவனங்களுடன், எப்போதும் குட்டியே வளர்க்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் போட்டி போடுவது கடினம் என்பதைத்தான் அப்படி அவர் சுட்டிக்காட்டினார்.
  • மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு சில ஊடகங்களைத் தவிர மற்றவை அரசை விமர்சிக்கும் தன்மையையே இழந்துவிட்டன.  இந்த நிலையில், ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழ் நடத்திய கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் பஜாஜ், மத்திய அரசில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் மூத்த அமைச்சர்கள் மேடையில் இருக்கும்போது அவர்களை நோக்கி வெளிப்படையாகப் பேசினார்.
  • "அரசின் கொள்கைகளை தொழிலதிபர்கள் வெளிப்படையாக விமர்சித்துப் பேசும் நடைமுறையை ஊக்குவிப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டு தொழில் வளர்ச்சிக்கு உதவ முடியும். நியாயமான விமர்சனங்கள், எதிர்வினைகளைக்கூடக் கடுமையாகக் கருதுவதும் பதிலுக்குக் கோபத்தில் வெடிப்பதும், முத்திரை குத்துவதும் சரியல்ல" என்றார். அவரைப் போல துணிச்சலாகப் பேச முடியாத பிற தொழிலதிபர்கள் உடனே பலத்த கரகோஷம் செய்து, அவர் சொல்வது முழுக்க முழுக்க உண்மைதான் என்பதை வெளிப்படுத்தினர். 

சமூகப் பொறுப்பாளர்

  • பொருள்களைத் தயாரித்தோம், விற்றோம் என்பதுடன் திருப்தி அடையாமல் தன்னையும் தன் நிறுவனத்தையும் வளர்த்தெடுத்த சமூகத்துக்கு லாபத்திலிருந்து கணிசமாக செலவிட்டார். மகாராஷ்டிரத்தில் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் நலனில் அக்கறைக் கொண்டு பல நிறுவனங்களை ஏற்படுத்தினார். ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளை மூலம் பல நன்மைகளைச் சமுதாயத்துக்குத் தொடர்ந்து செய்தார்.
  • மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்குவது, உதவித் தொகை தருவது, மேல்படிப்புச் செலவுகளை ஏற்பது என்று பலவிதங்களில் செயல்பட்டார். தொழிலாளர் குடும்பங்களின் நல்வாழ்வுக்கும் உரிய அக்கறை செலுத்தினார். பல தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லங்களில் அவர்களுக்குத் தொழில்திறன் பயிற்சிகளை வழங்கினார். இதை அவர் விளம்பரப்படுத்திக்கொள்ளாததால் பலருக்கும் தெரியாது. 
  • தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தொழில் நிர்வாகப் பயிற்சி தந்ததுடன், அவர்கள் கேட்கும் முன்னரே பொறுப்புகளை அவர்களிடம் அளித்து, ஆலோசகர் பொறுப்புடன் ஒதுங்கிக் கொண்டவர் ராகுல் பஜாஜ்.  தன்னுடைய நிறுவனம் என்று மட்டுமில்லாமல் பிற தொழிலதிபர்களுக்கும் உற்ற நண்பராகவும் ஆலோசகராகவும் இருந்தார். 
  • 'பிராண்ட் இந்தியா', 'ஆத்மநிர்பார்' என்றெல்லாம் இப்போது புதிய நாமகரணம் சூட்டிக்கொண்டுள்ள, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ கொள்கையை பஜாஜ் வாகனங்கள் மூலம் செயல்படுத்திக் காட்டியவர் ராகுல் பஜாஜ். எல்லோரும் அவர் தயாரித்த ‘சேட்டக்’ ஸ்கூட்டர்களையும், இன்றைய இளம் தலைமுறையினர் அவருடைய நிறுவனத்தில் ‘பல்ஸர்’ பைக்குகளையும் கொண்டாடினாலும் இன்னமும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நம்பகத்தன்மையுடன் பெரியளவில்  விற்பனையாகிறவை பஜாஜ் ஆட்டோ ரிக்ஷாக்கள்.
  • பெட்ரோலில் ஓடும் ஆட்டோக்களுடன் இப்போது கேஸ் ஆட்டோக்களையும் பஜாஜ் தயாரித்து விற்கிறது. மழைக்காலம், குளிர்காலம், மேடு-பள்ளம் என்று எதற்கும் சளைக்காத வண்டி பஜாஜ் ஆட்டோ என்று வாகன ஓட்டிகளால் நம்பகமாக வாங்கப்படுகிறது. 
  • இதற்கு சாமனிய மக்கள் மீதான ராகுல் பஜாஜின் அக்கறைக்கு முக்கியமான பங்கு உண்டு.  ஸ்கூட்டர் தயாரிப்பில் புதுமை செய்து, லட்சக்கணக்கானவர்களை வாகன உரிமையாளராக்கிய காலகட்டத்திலேயே அவருக்கு இன்னொரு கனவுத் திட்டம் இருந்தது. ‘பஜாஜ் குவாட்ரிலேட்டர்’ எனும் நான்கு சக்கர வாகனம்தான் அது. அதை அனுமதிக்காமல் சக இந்திய மோட்டார் வாகனப் போட்டியாளர்கள் தடுத்துவிட்டனர் என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. அதுவும் சாமானிய மக்கள் நலனை இலக்காகக் கொண்டதுதான். சோதனை ஓட்டங்கள், சோதனைச் சாலை ஆய்வுகள் ஆகியவற்றோடு அந்த வாகனம் காற்றில் கரைந்துவிட்டது.   
  • ஒரு பிராண்டை வாடிக்கையாளர்களும் தன்னுடைய பிராண்டாக வரித்துக்கொள்ள வைக்கும் செயல்பாடு மிகச் சவாலானது; ‘ஹமாரா பஜாஜ்’ என்று விளம்பரப்படுத்தியதுபோலவே ராகுல் பஜாஜ் அதை வெற்றிகரமாகவே செயல்படுத்திக்காட்டினார்!

நன்றி: அருஞ்சொல் (20 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்