TNPSC Thervupettagam

ராஜஸ்தானின் முன்னோடித் தொழிலாளர் சட்டம்

August 17 , 2023 512 days 326 0
  • அமைப்புரீதியாக திரட்டப்படாத, செய்யும் வேலைக்கு பணம் (கூலி) மட்டும் பெறும் தொழிலாளர்களின் நலன் கருதி அசோக் கெலாட் தலைமையில் ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டுவந்திருக்கும், ‘கிக் தொழிலாளர்கள் (பதிவு, நல்வாழ்வு) சட்டம் 2023’ உலகிலேயே இப்படிப்பட்ட தொழிலாளர்கள் நலனில் அக்கறையுடன் கொண்டுவரப்பட்டுள்ள, வரவேற்க வேண்டிய முன்னோடி சட்டமாகும். தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களிலிருந்தும், அவர்களுடைய கூட்டு பேர வலிமைகளிலிருந்தும், கடந்த காலங்களில் தொழிலாளர்களின் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிகளின் அடிப்படையிலும், உலகத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு புதிய விதமான முதலாளி – தொழிலாளி உறவுமுறை அமைப்பில் தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தின் பேரிலும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.
  • ‘கிக்’ (Gig) தொழிலாளர்கள் என்போர், குறிப்பிட்ட ஒரு பணியை மட்டும் கூலிக்காக செய்து தருவோர். நவீன உலகில் உற்பத்தி – சேவை ஆகிய இரண்டிலும் இப்படிப்பட்டவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. சொற்பிறப்பியல்படி ‘கிக்’ என்பது, அமெரிக்க ஆப்பிரிக்க இனத்தவர்களின் ஆரவார இசைக் குழுக்களான ‘ஜாஸ்’ மரபு அளித்த வார்த்தையாகும். ‘கிக்’ என்றால் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு பெரிய இசை நிகழ்ச்சியில் சிறிது நேரம் மட்டும் பாடிவிட்டு அல்லது இசைத்துவிட்டுச் செல்வதாகும்.
  • நவீன முதலாளித்துவமும் குறிப்பிட்ட சில சேவைகள், உற்பத்திகளுக்குக் ‘கிக்’ அடிப்படையில் தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொள்கிறது. இதனால் முதலாளி – தொழிலாளி நிரந்தர உறவோ, கடப்பாடுகளோ, பொறுப்புகளோ முதலாளிகளுக்கு இல்லை. எனவே தொழிலாளர்களின் நலவாழ்வு, அவர்களுடைய குடும்ப நலன், குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவு, பணிக்கொடை, ஓய்வூதியம், போக்குவரத்துச் செலவு, வாடகைப்படி என்று எதைப் பற்றியும் முதலாளிகள் அல்லது நிர்வாகங்கள் கவலைப்படத் தேவையில்லை.

திருப்புமுனை

  • தொழில் – சேவை ஆகிய இரண்டிலும் இப்போது முதலாளிகளின் கூட்டமைப்புதான் வலுவாக இருக்கிறது. எனவே, அவற்றின் விருப்பமே வழிகாட்டும் விதிகளாகிவிட்டது. உதாரணத்துக்கு, வாடகைக்கு கார் அனுப்பும் ஊபர், ஓலா போன்ற போக்குவரத்து நிறுவனங்களை எடுத்துக் கொள்வோம். அவை கார் சேவை தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கும் கார் உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்களுக்கும் இடையே தொடர்பாளர்களாக மட்டும் ‘செயலிகள்’ உதவியோடு சேர்கிறார்கள்.
  • வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை அடையாளம் காட்டி அனுப்பி வைப்பதுடன் அவர்களுடைய வேலை முடிந்துவிடுகிறது. கட்டண அடிப்படையில் அவர்கள் இதற்குத் தரகுத் தொகை பெறுகிறார்கள். எந்தச் சாலையில் செல்ல வேண்டும், எந்த நேரத்துக்கு எவ்வளவு கட்டணம் என்பதையெல்லாம் அல்கோரிதம் மூலம் முடிவுசெய்கிறார்கள். இந்த வருமானத்துக்கு நிறுவனம் வரி செலுத்திவிடுகிறது, லாபத்தை எடுத்துக்கொள்கிறது. ஓட்டுநருக்கு வாகன எரிபொருள் செலவுடன் கூடுதலாக சிறிது தொகை கிடைக்கிறது. அவருக்கு வாடிக்கையாளரைத் தனிப்பட்ட முறையில் தேடிப்போக வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்களுக்கும் வாடகைக் காரை வீதியில் தேட வேண்டியதில்லை.
  • இங்கே சேவையில் குறைபாடு இருந்தால் அந்த ஓட்டுநரை மேற்கொண்டு அழைக்காமல் சில காலம் நிறுத்திவைத்தோ, நீக்கியோ நிறுவனம் நடவடிக்கை எடுக்கிறது. வாடிக்கையாளர்களை ஒருபுறமும் ஓட்டுநர்களை மறுபுறமும் திரட்டி சேவையை நடத்துவதால் இந்த நிறுவனங்கள் ‘திரட்டி’ (அக்ரகேட்டர்) என்று அழைக்கப்படுகின்றன. ஓட்டுநர்கள் தங்களுக்குக் கீழே வேலை செய்யும் ‘தொழிலாளர்கள்’ அல்ல என்றும் தங்களுடன் இணைந்து தொழில் செய்யும் ‘கூட்டாளிகள்’ என்றும் அந்த நிறுவனங்கள் அழைக்கின்றன. இந்தக் கௌரவத்தோடு சரி, ஓட்டுநர்களின் இதர தேவைகள் பிரச்சனைகள் குறித்து நிறுவனங்கள் அக்கறை காட்டுவதே இ்லலை. அந்த நிறுவனம் சம்பாதிக்கும் வருமானத்திலும் அடையும் லாபத்திலும் இந்தக் கூட்டாளிகளுக்கு பங்கு தரப்படுவதும் இல்லை.
  • உலகம் முழுவதுமே இதையே புதிய நடைமுறையாக்கிய முதலாளித்துவம், அமைப்பு சாராத இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் உழைப்புநிலை தொடர்பாகக்கூட எந்தப் பொறுப்பும் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டன. எனவே தொழிலாளர்கள், இந்தத் தொழிலதிபர் கூட்டமைப்பின் கருணையை எதிர்பார்த்தே காலம் தள்ள வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட தொழிலாளர்கள் சில நாடுகளில் சில துறைகளில் ஏற்படுத்திக்கொண்ட தொழிற்சங்க அமைப்புகளால்கூட முதலாளிகள் அமைப்பை அசைத்துப் பார்க்க முடிவதில்லை.
  • எனவே, தொழிலாளர்கள் ஒன்றுபட்டு கூட்டு பேரம் நடத்தினால்கூட முதலாளிகள் மசிவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் தொழிலாளர்களின் நிலைகண்டு அரசுதான் அவர்களுக்கு ஆதரவாக சட்டங்களை இயற்ற வேண்டும். பெரும்பாலான அரசுகளுக்குத் தொழிலாளர்கள் மீது அப்படிப்பட்ட கரிசனமும் கிடையாது, தார்மிக அடிப்படையிலாவது பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வும் கிடையாது.
  • இந்த நிலையில்தான் ராஜஸ்தான் அரசு கொண்டுவந்துள்ள சட்டம் சிறந்த முன்மாதிரியாகவும் திருப்புமுனையாகவும் சாதனையாகவும் திகழ்கிறது. தொழிலாளர்கள், அவர்களுடைய இளம் தொழிற்சங்கங்கள், மக்கள் அமைப்புகள், மக்கள் குழுக்கள் ஆகியவை தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தெரிவித்த கருத்துகளும் முன்வைத்த கோரிக்கைகளும் முதலாளிகளால்கூட நிராகரிக்கப்பட முடியாதவையாகிவிட்டன. தங்களுடைய நலனில் அக்கறை கொண்டு சட்டம் இயற்றுவதுடன் தங்களுடைய நல்வாழ்க்கைகாக்க நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தங்களுக்கு சமூக பாதுகாப்பு உரிமைகள் தரப்பட வேண்டும் என்றனர். தொழிலாளர்களுக்குச் சமூக பாதுகாப்புத் தேவை என்பதை முதலாளிகள் தரப்பும் ஏற்றது. தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ பணிக்காலத்தில் இறப்பு ஏற்பட்டாலோ இழப்பீடு வழங்க தாங்களே காப்புறுதி திட்டங்களை நடத்துவதாகவும் சில நிறுவனங்கள் கூறின.
  • சமூக நலப் பாதுகாப்பு என்பது தொழிலாளர்களுக்கு மிகவும் அவசியம்; முதுமை காரணமாக வேலை செய்ய முடியாதுபோனாலோ, நோய்வாய்ப்பட்டாலோ, விபத்தில் சிக்கி ஊனம் அடைந்தாலோ, தொழில் துறையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் திடீரென வேலை வாய்ப்பை இழந்தாலோ, அல்லது முக்கிய வேலைக்காக நீண்ட நாள் விடுப்பு தேவைப் பட்டாலோ வருமானம் இன்றி தவிக்க நேரும். வாடகைக் கார் ஓட்டுநர்கள் போன்ற தொழிலாளர்கள் இப்போதெல்லாம் காலவரம்பின்றி வாரம் முழுக்கவே வேலை வாங்கப் படுகிறார்கள். ஓய்வு ஒழிச்சலின்றி வேலை செய்கின்றனர்.
  • தொழிலாளர்களுடைய வீடுகளில் பிரச்சினை ஏற்பட்டாலும் சமுதாயத்தில் பிரச்சினை என்றாலும் இழப்புகள் தொழிலாளர்களுக்குத்தான். தொழிலாளருக்கு உடல் நலம் குன்றினாலும் வேலைக்கு உதவும் செயலி, ஏதோ காரணத்தால் செயலிழந்தாலும், இணைய தளத் தொடர்பு அறுந்தாலும் மீண்டும் நிலைமை சரியாகும் வரை அவர்களுக்கு ஊதியத்துக்கு வழியில்லை.
  • அதேசமயம், அவர்களை வேலைக்குப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தொழிலாளர்களிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, குறைந்த வாடகைக்கு அல்லது வருமானத்துக்கு வாகனத்தை ஓட்ட வருவோரைப் பதிவுசெய்துகொண்டு வேலைகளை அவர்களுக்குத் திருப்பிவிட்டு, வர மறுப்போரை பணிய வைக்கின்றன. அமைப்பு ரீதியாக திரட்டப்படாத தொழிலாளர்களின் எதிர்காலத்துக்காக இப்படியொரு சட்டத்தை ராஜஸ்தான் அரசால் எப்படிச் சிந்தித்து இயற்ற முடிந்தது?
  • ஹமால்முன்மாதிரி
  • சரக்கு மூட்டைகளை முதுகில் சுமந்து செல்லும் சுமைதூக்கும் தொழிலாளர்களை ‘ஹமாலா’ என்றும் அந்த முறையை ‘ஹமால்’ என்றும் மகாராஷ்டிரத்தில் அழைப்பார்கள். தங்களுடைய ஊதியம் தொடர்பாகவும் இதர கோரிக்கைகளுக்காகவும் அத்தொழிலாளர்கள் தங்களிடையே உருவாக்கிக்கொண்டதுதான் ‘ஹமால் பஞ்சாயத்து’.
  • மூட்டை தூக்குபவர்களுக்கு வேலை செய்ய ஒரே இடம் கிடையாது, முதலாளியும் ஒருவரே என்பதில்லை. எனவே யார், எங்கு அழைத்தாலும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ள நாம் நமக்கென்று பொதுவான விதிகளை உருவாக்க சங்கம் வேண்டும் என்று ஹமால் பஞ்சாயத்தை ஏற்படுத்தினார்கள். இவர்களுக்கு வேலை கொடுப்பவர்கள் வியாபாரிகள். இந்தத் தொழிலாளர்களோ மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் பட்டியல் இனத்தையும் சேர்ந்தவர்கள், கிராமங்களிலிருந்து வந்தவர்கள்.
  • இந்தத் தொழிலாளர்கள் உடலில் வலிமையும் நல்ல பிராயமும் இருக்கும் வரையில் நகரங்களில் இந்த வேலைகளைச் செய்வார்கள். நோய்வாய்ப்பட்டாலோ உடல் தளர்வடைந்தாலோ கிராமங்களுக்குத் திரும்பிப் போய்விடுவார்கள். இப்படி நோய்வாய்ப்பட்டாலோ, விபத்தில் சிக்கிக் காயம் அடைந்தாலோ, முதுமை வந்தாலோ கஞ்சி குடிப்பதற்குக்கூட வழியில்லாமல் குடும்பத்தின் மற்றவர்களை எதிர்பார்ப்பார்கள் அல்லது பட்டினியால் வாடுவார்கள்.
  • அமைப்பு சாராத பிற தொழிலாளர்களைப் போலவே அவர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், நோய்வாய்ப்பட்டால் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, குழந்தைகளின் கல்விக்கு உதவித் தொகை, உடல்நலம் இன்றிப் படுத்தால் சிறப்பு மருத்துவ சிகிச்சை என்று எந்தப் பாதுகாப்புமே கிடையாது. அவர்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகளுக்காக வாதாட எதிர்தரப்பில் பொது முதலாளிகள் அமைப்பும் கிடையாது.

பாபா ஆதவ்

  • பாபா ஆதவ் (94) என்ற தன்னலமற்ற தொழிற்சங்கத் தலைவர் தலைமையில் அவர்கள் ஒன்று திரண்டுப் போராடி, தங்களுக்கென்று ‘மாத்தாடி வாரியம்’ என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டனர். பாபா ஆதவ் இன்றும் வாழ்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இந்த அமைப்பில் மூட்டை தூக்க வரும் தொழிலாளியும், அவர்களை வேலைக்கு அமர்த்தும் வியாபாரிகளான கடைக்காரர்களும் உறுப்பினர்கள். தொழிலாளர் தூக்கும் ஒவ்வொரு மூட்டைக்குமான தொகையை வியாபாரி அந்த வாரியத்திடம் செலுத்திவிடுவார். மாதத்துக்கு ஒருமுறை, தொழிலாளர் தூக்கிய மூட்டைகள் அடிப்படையில் அவருக்குண்டான ஊதியத்தை வாரியம் அளித்துவிடும். இந்த ஊதியத்துடன் வழங்கப்படும் கூடுதல் தீர்வைத் தொழிலாளர்களின் சமூகநலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டங்களை வாரியமே தயாரித்து நிர்வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பணிக்கொடை அல்லது கருணைத் தொகை, கல்வி உபகாரச் சம்பளம், மருத்துவச் செலவுக்கான தொகை ஆகியவற்றை வாரியம் தந்துவிடும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இதையெல்லாம் பெற்றுத் தருவது அல்லது அவர்களே பெறுவது இயலாது என்றே கருதப்படும் நிலையில் மகாராஷ்டிரத்தில் இது வெற்றிகரமாக அமலாகிறது.
  • இந்தச் சட்டம் நன்றாகச் செயல்படுத்தப்படுவதால் ஹமால் பஞ்சாயத்து தனக்கென்று தனி வங்கியும், வீடுகட்டித் தரும் திட்டங்களும், பள்ளிக்கூடங்களும் வைத்திருக்கிறது. ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், கழிவுச் சாமான்களைத் திரட்டுவோருக்கும் இந்த அமைப்பே தொழிற் சங்கங்களை அமைத்திருக்கிறது. அமைப்பு சாராத தொழிலாளர்களை வாரியம் ஒன்று திரட்டுகிறது, சட்டம் அவர்களுக்கு கூட்டாக அங்கீகாரமும் பாதுகாப்பும் வழங்குகிறது.
  • இந்தத் தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்களுடைய எதிர்கால நலனுக்காக தாங்களாகவே புதிய சமூகநல திட்டங்களைச் சிந்தித்துக்கொண்டுவந்து அமல் செய்கிறார்கள். இந்த ஏற்பாட்டுக்குப் பிறகு ஒரு வியாபாரியும் எந்த வகையிலும் துயரமும் அடையவில்லை, தொழிலையும் விட்டுப்போகவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வாரியம் இணக்கமாகவே செயல்படுகிறது.
  • அரசு, வியாபாரிகள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் என்று முத்தரப்பும் அடங்கிய குழு, எந்தப் பிரச்சினைக்கும் சுமுகமாகவும் நீண்ட பலனைத் தரும் வகையிலும் தொழில் அமைதியைக் காக்கும் வகையிலும் கருத்தொற்றுமை அடிப்படையிலேயே தொடர்ந்து செயல்படுகிறது. புணே நகரைச் சேர்ந்த சங்கம்தான் இத்துறை தொடர்பாக எதையும் தீர்மானிக்கிறது. இதில் 250 தொழிற்சங்கங்களும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உறுப்பினர்கள்.

ராஜஸ்தான் ஊக்கம் பெற்றது

  • மகாராஷ்டிரத்தில் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அமைப்பும் சட்டமும்தான் ராஜஸ்தான் அரசின் புதிய சட்டத்துக்கு முன்னோடி எனலாம். தொழிலாளர்களின் நலனுக்காக இப்படியொரு வாரியம் அமைப்பதும் ஒவ்வொரு பரிமாற்றத்தின்போதும் கூடுதல் தொகையை வசூலித்து அதை அவர்களுடைய நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதும் நன்மை பயக்கும் என்று ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் தலைமையையும் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான மாநில அரசு நிர்வாகத்தையும் தொழிலாளர்கள் அமைப்பு ஏற்க வைத்தது. பாரத் ஜோடோ யாத்திரைக்கு வந்த ராகுல் காந்தியிடமும் இந்தத் திட்டம் விளக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதையடுத்தே சட்டம் இயற்றப்பட்டு வாரியமும் அமைக்கப் பட்டுள்ளது.
  • மகாராஷ்டிரத்தின் மாத்தாடிச் சட்டத்தின் அத்தனை அம்சங்களும் அப்படியே இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் துறையில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும் சேவைகளைப் பயன்படுத்துவோரும் உறுப்பினர்களாகப் பதிவுசெய்துகொள்வது கட்டாயம். இதில் உள்ள இணையதள வசதி மூலம் ஒவ்வொரு தொழிலாளியும், தான் ஈட்டிய வருவாய் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். தொழிலாளர்கள் தங்களுடைய குறைகளை, கோரிக்கைகளை வாரியத்திடம் முறையிட்டு நிவாரணம் பெறலாம்.
  • நியாயமான வேலை, சரியான சமூகப் பாதுகாப்பு என்பதை இந்தச் சட்டம் உத்தரவாதப் படுத்துகிறது. இந்தியாவின் இதர மாநிலங்களிலும் உலகின் பிற நாடுகளிலும்கூட அமைப்பு சாராத தொழிலாளர்களின் நலனில் சமூகப் பாதுகாப்புக்கு இந்தச் சட்டத்தையே முன்மாதிரியாகக் கொள்ளலாம். அமைப்பு சாராத தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் குறிப்பிட்ட உரிமைகளுக்காகவும் திட்டங்களுக்காகவும் நல வாரியங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • சமூகப் பாதுகாப்புக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் இது திருப்புமுனைச் சட்டம் ஆகும். செயற்கை நுண்ணறிவு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்தும் வரும் நிலையில் எல்லாத் துறைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள், பணியாளர்களின் நலனுக்கு இந்த மாதிரி மிகவும் அவசியமாகிவிடும். அரசின் முடிவெடுத்தலில் நீதி வழங்கல், சமத்துவம் ஆகிய ஜனநாயகக் கொள்கைகள் உயிர்ப்புடன் இருக்கும் வரையில், செயற்கை நுண்ணறிவு மிக்க இயந்திரங்கள் மனிதர்களுக்கு ‘மாற்’றாகப் பயன்படுத்தப்படாமல், மனிதர்களுக்கு ‘உதவி’யாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (17  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்