TNPSC Thervupettagam

ராஜஸ்தான் தேர்தல் சமமான இருமுனைப் போட்டி

November 24 , 2023 368 days 253 0
  • பரப்பளவில் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான ராஜஸ்தான் நாளை (நவம்பர் 25) சட்டமன்றத் தேர்தலைஎதிர்கொள்கிறது. காங்கிரஸும் பாஜகவும் நேரடியாக மோதிக் கொள்ளும் மாநிலங்களில் ஒன்றானராஜஸ்தானில் 1998 தேர்தலுக்குப் பிறகு, எந்தத் தேர்தலிலும் ஆளுங்கட்சி வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதில்லை. 25 ஆண்டுகளாகத் தொடரும் இந்தப்போக்கை முறியடிக்கத் துடிக்கிறார் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்.
  • மறுபுறம், பாஜகவின் செல்வாக்கு மிகுந்த இந்தி மண்டலத்தின் முதன்மை மாநிலமான ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியமைக்கத் தீவிர முனைப்புக் காட்டுகிறது பாஜக. இந்தத் தேர்தல் வெற்றி 2024 மக்களவைத் தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடும் என்பதால், பிரதமர் மோடி ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிறுத்தப்படுகிறார். ஐந்து பொதுக்கூட்டங்கள், இரண்டு பேரணிகளில் அவர் பங்கேற்றிருக்கிறார். ஆக, ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் கெலாட்டுக்கும் மோடிக்குமான நேரடி யுத்தமாகவே பார்க்கப்படுகிறது.

கெலாட்டின் செல்வாக்கு

  • 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 101 இடங்கள் தேவை. 2018 தேர்தலில் காங்கிரஸ் 100 தொகுதிகளில் வென்றுவிட்டது. ஆனால், காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான். காங்கிரஸ் நூலிழையில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததற்கு அசோக் கெலாட்டின் நீண்டகால அரசியல் அனுபவமும் ராஜதந்திரமும் முக்கியப் பங்குவகித்தன. முதலமைச்சராகும் கனவில் இருந்த இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 2020இல் 35 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றபோது, அதை வெற்றிகரமாக முறியடித்தவர் கெலாட். இன்றைக்கும், கெலாட்டின் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி குறைவு என்றே களநிலவரங்கள் சுட்டுகின்றன. குறிப்பாக, அவருடைய தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. அவரது பிரச்சாரக் கூட்டங்களுக்குத் திரளும் பெருங்கூட்டமே அதற்குச் சான்று. காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது என்னும் பாஜகவின் விமர்சனத்தை ஆமோதிக்கும் இந்து வாக்காளர்கள்கூட கெலாட்டின் ஆட்சியைச் சாதகமாகவே மதிப்பிடுகிறார்கள்.

பாஜகவின் வியூகம்

  • இரண்டு முறை ராஜஸ்தான் முதலமைச்சராகப் பதவிவகித்த வசுந்தரா ராஜேவும் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர்தான். ஆனால், இந்த முறை அவருக்கான முக்கியத்துவத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது பாஜகவின் தேசியத் தலைமை. 2018 சட்டமன்றத் தேர்தலைக் காங்கிரஸ் வென்றிருந்தாலும், 2019 தேர்தலில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 24இல் பாஜக வென்றது. இதன் மூலம் உள்ளூர் தலைவர்களைவிடப் பிரதமர் மோடியும் மத்திய அரசின் திட்டங்களுமே வெற்றிவாய்ப்பை உறுதிசெய்வார்கள் என்று அக்கட்சி கருதுவதை, அதன் தற்போதைய தேர்தல் வியூகங்கள் உணர்த்துகின்றன. வேட்பாளர் தேர்வில் தேசியத் தலைமையின் ஆதிக்கம் ஓங்கியிருக்கிறது. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தியா குமாரி, பாலக் நாத், கிரோடி லால் மீனா என இந்நாள், முன்னாள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாஜகவின் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, அக்கட்சியின் நடப்பு எம்எல்ஏக்கள் பலருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதிருப்தியாளர்கள் பலர், கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.

மதரீதியான பிளவுகள்

  • தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பாஜக பிரதானமாக முன்வைக்கிறது. முதலமைச்சரின் மகன் வைபவ் கெலாட், பிரதேச காங்கிரஸ் தலைவர் கோவிந்த் தோதஸ்ரா ஆகியோர் மீதான அமலாக்கத் துறை சோதனைகள் காங்கிரஸ் ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கின்றன. காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர்மோடி நேரடியாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
  • காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிரானது; இஸ்லாமியர்களுக்கு ஆதரவானது என்னும் பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகிறது. ராஜஸ்தானில் முக்கிய இந்து மத விழாக்கள் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் இல்லாமல் நடப்பதில்லை என்றும் மோடி விமர்சித்திருக்கிறார். இஸ்லாமியர்கள் எம்எல்ஏக்களாக இருக்கும் தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் ஆட்சி மீது அதிருப்தி அடையாவிட்டாலும், உள்ளூர் எம்எல்ஏக்கள் இஸ்லாமியர்களின் நலன்களுக்கேமுன்னுரிமை அளிப்பதாக இந்து வாக்காளர்கள் நம்புகிறார்கள். பாஜக அதைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையில், மதரீதியிலான பிளவுகள் சில தொகுதிகளிலேனும் தாக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னிலை பெறும் வாக்குறுதிகள்

  • இந்தத் தேர்தலில், மக்கள் நலத் திட்டத்துக்கான வாக்குறுதிகளே முதன்மை பெற்றிருக்கின்றன. ஒரு கோடிப் பேருக்கு மாதம் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு அளிக்கப்படும்; 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்குள் 2.5 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள், உஜ்வலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.450க்குச் சமையல் எரிவாயு சிலிண்டர், பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்கிறது பாஜக. கூடவே, கரோனா நோய்த்தொற்றுக் காலத்தின்போது அறிவிக்கப்பட்ட இலவச உணவு தானியத் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்திருப்பது பலன் தரும் என்று பாஜக நம்புகிறது.

மகளிருக்கான வாக்குறுதிகள்

  • ராஜஸ்தான் வாக்காளர்களில், கிட்டத்தட்ட சரிபாதி எண்ணிக்கையில் பெண்கள் உள்ளனர். எனவே, பெண் வாக்காளர்களைக் கவர்வதற்கான வாக்குறுதிகளை இரண்டு கட்சிகளும் அள்ளிவீசியிருக்கின்றன. குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 மதிப்பூதியம், இலவச பஸ் பாஸ், மாதவிடாய் விடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளைக் காங்கிரஸ் அளித்துள்ளது. 12ஆம் வகுப்பை நிறைவு செய்யும் பெண்களுக்கு இருசக்கர வாகனம், ஏழைக் குடும்பங்களின் பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான சேமிப்புப் பத்திரம், பெண்களுக்கான பிரத்யேக ‘பிங்க்’ பேருந்துகள், காவல் துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 50%ஆக அதிகரிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளைப் பாஜக அளித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு வாக்குறுதிகளை இரண்டு கட்சிகளும் அளித்துள்ளன.

பிற கட்சிகள்

  • ராஜஸ்தான் மக்கள்தொகையில் 21.9% அங்கம் வகிக்கும் பட்டியல் சாதி வாக்காளர்களின் வாக்குகளைக் கவர அரசியல் கட்சிகள் போட்டிபோடுகின்றன. 25 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ராஜஸ்தானில் தனது வெற்றி எண்ணிக்கையைத் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சி, கடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் வென்றது. ஆனால், அவர்கள் ஆறு பேரும் 2019இல் காங்கிரஸில் இணைந்துவிட்டதால், அக்கட்சி மீதான நம்பிக்கை கடுமையாகச் சரிந்துள்ளது. இளம் தலித் போராளியாக உருவெடுத்தவரும் பீம் ஆர்மியை நிறுவியவருமான சந்திரசேகர ஆஸாத் தொடங்கிய ஆஸாத் சமாஜ் கட்சி ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் களம் காண்கிறது. அவருக்குத் தலித் இளைஞர்களிடையே கணிசமான செல்வாக்கு இருக்கிறது. தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 17, இந்திய கம்யூனிஸ்ட் 9, சமாஜ்வாதி 5 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி கட்சியும் 86 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இது இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஒற்றுமை, கூட்டணியின் நிலைத்தன்மை குறித்த விமர்சனங்களுக்கு வலுசேர்த்துள்ளது.

வெற்றி யாருக்கு

  • சம பலத்துடன் மோதிக்கொள்ளும் காங்கிரஸ்-பாஜக கட்சிகளுக்குப் பிரத்யேகமான சாதக பாதகங்கள் இருக்கின்றன. இரண்டு கட்சிகளும் கணிசமான அதிருப்தி எம்எல்ஏக்களால் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். எல்லாவற்றையும் தாண்டி, இந்தியாவின் மாநிலத் தேர்தல்களில் முதன்மை பெறுவது உள்ளூர் பிரச்சினைகளா ஒட்டுமொத்த தேசத்தையும் பாதிக்கும் பிரச்சினைகளா என்பதை, ராஜஸ்தான் தேர்தலின் முடிவு தெளிவாக உணர்த்திவிடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்