- ராணுவத்தில் குறுகிய கால சேவைப் பயிற்சி (எஸ்எஸ்சி) முடித்த பெண்களுக்கும் ஆண்களைப் போலவே நீண்ட காலப் பணி வாய்ப்பும், படைக்குத் தலைமை தாங்கி நடத்தும் பொறுப்புள்ள அதிகாரமும் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்புக்குரியது. இந்தியப் பெண்கள் ஒவ்வொரு துறையாக நுழைந்து ஆண்களுக்கு நிகராகச் சாதித்துவரும் இந்தக் காலத்துக்கேற்ற மிகப் பொருத்தமான தீர்ப்பு.
- இப்படியொரு வாய்ப்பைப் பெண்களுக்கு வழங்குவதாக அரசே 2019 பிப்ரவரி 25-ல் கூறியிருந்தது. ஆனால், ராணுவத் தலைமையகத்திடம் ஆலோசனை பெற்ற பிறகு, மறு யோசனை ஏற்பட்டிருக்கிறது.
போர்க்களத்தில்...
- தூய்மையற்ற நிலையும் ஆபத்துகளும் நிறைந்த போர்க்களத்தில் பணியாற்ற பெண்களின் உடலமைப்பு இடம் தராது என்ற தயக்கத்தால் சமவாய்ப்பு தர முடியாத நிலை இருப்பதாக அரசு தெரிவித்தது. இந்திய அரசமைப்புச் சட்டம் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், பாலினப் பாகுபாடு கூடாது என்று கூறும் நிலையில், அரசின் இந்த விளக்கத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. ஆடவர்களுக்கு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளும் பெண்களுக்கும் விதிக்கப்பட்டு, அதற்கேற்ப பயிற்சியும் முடித்து, குறுகிய கால சேவைக்கும் தயாராக இருக்கும் பெண்களுக்கு ஏன் நிரந்தர, நீடித்த போர்ப்படைத் தலைமை வாய்ப்பு தரக் கூடாது என்று கேட்டிருக்கிறது.
- போர்க்களத்தில் மிகவும் குறைந்தபட்ச வசதிகளுடன்தான் போரிட நேரும் என்பதால், அது பெண்களுக்கு ஏற்றதாக இருக்காது என்று கூறிய அரசுத் தரப்பு, போர்க்களங்களுக்கு 30% பெண் அதிகாரிகள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறியது.
- அரசுத்தரப்பு வாதங்களில் இருந்த இந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், விரும்பும் பெண்களுக்கு நீண்ட காலப் பணி வாய்ப்பையும் படைத் தலைமை வாய்ப்பையும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. ராணுவத்தில் சேர்ந்துள்ள மகளிர் இப்போதே சிறப்பாகச் செயல்படுகின்றனர் என்ற உண்மையும் இந்த வழக்கின் மூலம் வெளியாகியிருக்கிறது.
நிரந்தரத் தலைமைப் பொறுப்பு
- பிரதமர் நரேந்திர மோடி 2018-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது, பெண்களுக்கு நிரந்தரத் தலைமைப் பொறுப்பு அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தபோதிலும், ஏதோ சில காரணங்களால் அது தாமதப்பட்டுக்கொண்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதைச் செயல்படுத்த உதவியிருக்கிறது. 2003 முதலே பெண்கள் இதற்காகச் சட்டப் போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லி உயர் நீதிமன்றம் பத்தாண்டுகளுக்கு முன்னால் அவர்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வழங்கியது. அரசுதான் அத்தீர்ப்பைப் புறக்கணித்துக்கொண்டே வந்தது.
- இந்திய ராணுவத்தில் தலைமைப் பதவியிடங்களில் 10,000-க்கும் மேல் காலியாக உள்ளன. ராணுவத்தில் இப்போது பணியாற்றும் 40,825 அதிகாரிகளில் 1,653 பேர் மட்டுமே பெண்கள். தனது தீர்ப்பை அமல்படுத்த மூன்று மாத காலம் அவகாசம் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதை அரசு உடனே ஏற்று நிறைவேற்றினால்கூட, பயிற்சி முடித்துவரும் பெண் அதிகாரிகள் நீடித்த சேவையில் சேரும் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துவிடப்போவதில்லை. எனவே, ராணுவத் தலைமைப் பதவியிடங்களில் பெண்களை நியமிப்பதை அரசு இனியும் தாமதப்படுத்தக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (24-02-2020)